நூலக மனிதர்கள் 4 புத்தகத் திருடன்

“உனக்கு அறிவில்லையா.. நீ எல்லாம் ஏன்யா லைப்ரரிக்கு வர்றே“ என்று நூலகர் சப்தமாகக் கேட்டபோது அங்கிருந்த அனைவரும் திரும்பிப் பார்த்தோம்.

நூலகர் கோபத்துடன் கத்திக் கொண்டிருந்தார். அவர் முன்னால் முப்பது வயது ஆள்  ஒருவன் தலைகவிழ்ந்து நின்று கொண்டிருந்தான். அவனைச் சுற்றி நூலகப் பணியாளர்கள் நின்றிருந்தார்கள்.

“இந்த ஆளை போலீஸ்ல ஒப்படைச்சிர வேண்டியது தான்“ என்று நூலகர் கோபமான குரலில் சொன்னார்

படித்துக் கொண்டிருந்த எல்லோரும் நூலகரின் மேஜையை ஒட்டித் திரண்டு நின்றோம்.

தலைகவிழ்ந்து நின்ற ஆள் இரண்டு புத்தகங்களைத் திருடிச் சட்டைக்குள் வைத்து வெளியே எடுத்துப் போக முயன்று பிடிபட்டிருக்கிறான். அவன் திருடிய இரண்டு புத்தகங்களும் மேஜையின் மீது இருந்தன.

ஒன்று மனம் போல வாழ்வு என்ற ஜேம்ஸ்ஆலன் புத்தகம். இரண்டாவது எம்.எஸ்.உதயமூர்த்தி எழுதிய எண்ணங்கள். இரண்டும் சுயமுன்னேற்றம் தொடர்பான நூல்கள். இது போன்ற நூல்களைப் படிப்பவர்கள் ஏராளம். புத்தகம் முழுவதும் அடிக்கோடு போட்டிருப்பார்கள்.

அந்த ஆள் ஏன் இந்த இரண்டு புத்தகங்களையும் திருடினான் என்று தெரியவில்லை. ஆனால் புத்தகம் திருடி பிடிபட்ட ஒருவனை அன்று தான் முதன்முதலாகப் பார்த்தேன். வேலையில்லாமல் இருப்பவனின் தோற்றம். அழுக்கடைந்து போன பேண்ட். முழுக்கைச் சட்டை. ஆறடியை தொடும் உயரம். ரப்பர் செருப்புகள்.

“எத்தனை நாளா இப்படிப் புக் திருடிகிட்டு இருக்கே“ என்று நூலகர் விசாரணை செய்து கொண்டிருந்தார்.

நூலக வாசகர்களில் ஒருவர் “இந்த மாதிரி ஆளை சும்மா விடக்கூடாது சார் நாலு அடி போடணும் “என்று கறாராகப் பேசினார்.

பிடிபட்டு நின்றவன் பதில் சொல்லவில்லை. அவன் இதற்கு முன்பு என்ன புத்தகங்களை இரவல் பெற்றுச் சென்றிருக்கிறான் என்று பேரேடில் பார்த்துக் கொண்டிருந்தார்கள். முகவரியில் இருந்த தகவலின் படி அவனது வீடு புறநகர்ப் பகுதியிலிருந்தது. அங்கிருந்து நூலகத்தில் படிப்பதற்காக வருபவன் என்று தெரிந்தது.

“நாட்டில கோடி கோடியா திருடுற ஆட்களை விட்ருங்க. இந்த மாதிரி அப்பாவியைப் பிடிச்சி கேள்வி மேல் கேள்வி கேளுங்க சார்“ என்று ஒருவர் நூலகரைப் பார்த்துச் சொன்னார்

அவரை முறைத்தபடியே நூலகர் சொன்னார்

“புத்தகம் திருடுபோன நான் கையிலிருந்து பணம் கட்டணும். அது உங்களுக்குத் தெரியுமா. திருட்டில் சின்னத் திருட்டு பெரிய திருட்டு எல்லாம் ஒண்ணும் தான்“

நூலகர் சொன்னது உண்மை. நூலகத்திலிருந்து காணாமல் போன, திருடு போன புத்தகங்களுக்கு நூலகர் தான் பணம் கட்ட வேண்டும் . ஆண்டு இறுதியில் புத்தகக் கணக்கெடுப்பு நடக்கும் போது பத்தாயிரம் இருபதாயிரம் நூலகர் கட்டவேண்டிய நெருக்கடி உருவாகும். அது போன்ற சமயங்களில் புரவலர்களின் உதவியை நாடுவார்கள். அல்லது கைப்பணத்தைக் கட்டுவார்கள். சில நேரம் பாதிப் புத்தகங்கள் கிழிந்து போய்விட்டதாகக் கணக்கு காட்டுவார்கள். எப்படியும் கையிலிருந்து பணம் கட்டாமல் தப்பிக்க முடியாது.

அந்தக் கோபம் நூலகரிடம் எதிரொலித்தது

“எப்படி சார் இந்த ஆள் புக் திருடுனதை கண்டுபிடிச்சீங்க“ என்று ஒருவர் சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்

“நம்ம கணபதி இந்த ஆளை வாட்ச் பண்ணிகிட்டே இருந்திருக்கிறார். புக்கை நைசா எடுத்து சட்டைக்குள்ளே மறைச்சி வச்சிட்டு வெளியே போக டிரை பண்ணினவுடனே பிடிச்சிட்டோம் “

இந்த மாபெரும் துப்பறியும் பணியைச் செய்த கணபதி ஒரு நூலகப் பணியாளர். அவர் யார் எந்த அடுக்கில் புத்தகம் எடுத்துக் கொண்டிருந்தாலும் கண்டிப்பான குரலில் இதெல்லாம் லெண்டிங் கிடையாது என்பார். எப்படி அதை முடிவு செய்கிறார் என்று ஒருமுறை அவரோடு சண்டை போட்டிருக்கிறேன். புக் விலை ஜாஸ்தி, அதை லெண்டிங் தர முடியாது என்பார்.

புத்தகத் திருடனை எப்படித் தண்டிப்பார்கள். போலீஸ் ஸ்டேஷனில் எந்தச் செக்சனில் வழக்குப் பதிவார்கள். அவன் திருடிய இரண்டு புத்தகங்களுக்கும் சேர்ந்து நூறு ரூபாய் விலை இருக்கும். அதையும் கைப்பற்றிவிட்டார்கள். திருட முயற்சி செய்தான் என்று தானே புகார் செய்ய முடியும். இதுவரை இப்படி ஏதாவது புத்தகத் திருடன் தண்டிக்கப்பட்டிருக்கிறானா என்று மனதில் ஏதேதோ எண்ணங்கள் ஒடிக் கொண்டிருந்தன.

அந்த ஆள் எவரது கேள்விக்கும் பதில் சொல்லவில்லை. போலீஸில் புகார் கொடுத்து பயனில்லை என்று நூலகரும் உணர்ந்திருந்தார். ஆகவே அந்தத் திருடனிடம் எழுதி வாங்கிக் கொள்வது என்று முடிவு செய்தார்.

இதற்காக ஒரு வெள்ளைக் காகிதத்தினை அவனிடம் கொடுத்து “எழுதிக் கொடு“ என்று கோபமான குரலில் சொன்னார்

அவன் “முடியாது“ என்று தலையாட்டினான்.

“அப்போ போலீஸ் ஸ்டேஷனுக்குப் போக வேண்டியது தான்“ என்று நூலகர் உறுதியான குரலில் சொன்னார்

நூலக வாசகர்களில் சிலர் அந்தத் திருடனிடம் எழுதித்தரும்படி வற்புறுத்தினார்கள். அவன் பதில் சொல்லாமல் நின்றிருந்தான்.

“புக்கை வாங்கிட்டு அனுப்பி வையுங்க சார். பாவம்“ என்று ஒருவர் மட்டும் சொன்னார்

“இவன் ஒரு ஆள் இல்லை சார். தினம் நாலைந்து பேர் புக் திருடிட்டு போயிடுறாங்க. இவன் ஒருத்தன் இன்னைக்கு மாட்டிகிட்டான்“. என்று வேறு ஒரு நூலகப் பணியாளர் சொன்னார்

நூலகம் மூடியபிறகு அவனைக் காவல் நிலையத்திற்கு அழைத்துக் கொண்டு போவது என்று முடிவு செய்தார்கள். அவன் சுவரோரமாகப் போய் நின்று கொண்டான்.

புத்தகம் வாங்க முடியாத அவனின் நிலை தான் திருட வைத்திருக்கிறது. அது தவறு தான் என்றாலும் திருடிப்படிக்கும் அளவு அவனுக்கு வாசிப்பில் விருப்பமிருப்பதை யோசிக்க வேண்டியிருந்தது.

எத்தனையோ பேர் நூலகத்தில் புத்தகம் இரவல் எடுத்துக் கொண்டு போய்த் திரும்பக் கொடுப்பதேயில்லை. கேட்டுக் கடிதம் எழுதினாலும் பதில் தர மாட்டார்கள். ஆள் விட்டு விசாரித்தாலும் சண்டை போடுவார்கள். புத்தகத்திற்கு உரியத் தொகையைச் செலுத்த மாட்டார்கள். அவர்களை நூலகரால் என்ன செய்துவிட முடியும்.

ஒருமுறை அரசியல்வாதி ஒருவர் ஆள் அனுப்பிப் பத்து பதினைந்து புத்தகங்களை எடுத்துக் கொண்டு போய்விட்டார். அதை நூலகரால் திரும்பிக் கேட்க முடியவேயில்லை. அதைப் பற்றி அடிக்கடி நூலகர் புலம்பிக் கொள்வதைக் கேட்டிருக்கிறேன்.

நூலகரே ஒரு காகிதத்தில் நடந்தவற்றை எழுதி அவனைக் கையெழுத்துப் போடும்படியாகச் சொன்னார். அந்த ஆள் தயக்கத்துடன் கையெழுத்துப் போட்டான். ஆனால் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று அவன் வாசித்துப் பார்க்கவில்லை. தனது வேலை முடிந்துவிட்டதைப் போலப் பழையபடி சுவரோரமாக நின்று கொண்டான்.

இந்த நிகழ்விற்குச் சாட்சியாக மூன்று பேரைக் கையெழுத்துப் போடச் சொன்னார்கள். நான் கையெழுத்துப் போட மறுத்துவிட்டேன். புத்தகத் திருடன் மீது எனக்குப் பரிவு தான் ஏற்பட்டது.

இனி அவன் புத்தகம் இரவல் எடுக்க அனுமதியில்லை என்று சொல்லி அவனை வெளியே அனுப்பி வைத்தார்கள். அவன் மெதுவாக நூலகத்தை விட்டு வெளியேறிப் போனான்.

அதன் பிந்திய நாட்களில் அவன் எப்போதும் போல நூலகத்திற்கு வருவான். கையெழுத்துப் போடுவான். நாளிதழ்கள் வாசிக்கும் இடத்திற்குப் போய்ப் படிப்பான். நூல்களை இரவல் எடுக்க அனுமதிக்கப்படவேயில்லை. தான் செய்தது குற்றம் என அவன் நினைக்கவில்லை.

ஆனால் நூலகப் பணியாளர்கள் காவலர்களைப் போலவே அவனைக் கண்டதும் முறைப்பார்கள். சுட்டிக்காட்டிப் பேசுவார்கள். ஏதாவது புத்தகத்தைக் காணவில்லை என்று தேடினால் அவன் தான் திருடியிருப்பான் என்று சொல்லுவார்கள்.

புத்தகத் திருட்டு நடக்காத நூலகமேயில்லை. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் எங்கள் அரங்கிற்கு ஒருவன் வருகை தந்து எனது உப பாண்டவம் நாவலைத் திருடிக் கொண்டு போனதோடு அப்படித் திருடி வந்ததாகப் பத்திரிக்கை ஒன்றில் பேட்டியும் கொடுத்திருந்தான். இப்படியான வாசகர்களும் இருக்கத்தானே செய்வார்கள்

புத்தகங்களைச் சொந்தமாக்கிக் கொள்வதில் அடையும் மகிழ்ச்சி அபூர்வமானது. அதை எளிதாக விளக்கிச் சொல்லிவிட முடியாது. சிலர் புத்தகத்தை இரவல் தரவே மாட்டார்கள். அது புரிந்து கொள்ளவேண்டிய விஷயம். சிலரோ புத்தகத்தைக் கடனாக வாங்கிச் சென்றால் ஒரு போதும் திருப்பித் தர மாட்டார்கள். இப்படி அரிய நூல்களை நானே பறிகொடுத்திருக்கிறேன்.

ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழ் ஒன்றில் இப்படி நூலகங்களிலிருந்து புத்தகங்களைத் திருடிச் சேகரித்து ஒருவன் தனக்கெனச் சிறிய நூலகம் ஒன்றை அமைத்துக் கொண்டது பற்றிய செய்தியைப் படித்திருக்கிறேன். அது தான் உலகின் விசித்திரமான நூலகம்.

இரண்டு புத்தகங்களைத் திருடியதற்காகத் தண்டிக்கப்பட்ட அந்த ஆள் அதன்பிறகு நூலகத்திற்கு வராமல் போயிருக்கலாம். எது அவரைத் திரும்பவும் நூலகத்திற்கு வரவழைத்தது. எது மௌனமாகப் புத்தகம் எடுத்துப் போகிறவர்களை வெறித்துப் பார்க்கச் செய்தது. இந்த நூலகம் இல்லாவிட்டால் வேறு நூலகம் இருக்கிறதே. அங்கு ஏன் போகவில்லை.

திருடி ஒளித்த நூல்களில் அந்த மனிதன்  என்ன கண்டுகொண்டிருந்தான். ஏன் அதைப் பலமுறை படிக்க வேண்டும் என்று ஆசை கொண்டான்.

வறுமையின் காரணமாக விரும்பிய புத்தகங்களை வாங்க முடியாமலும் படிக்க முடியாமலும் போய்விடுவது எளிதான விஷயமில்லை. அது ஆறாதுயரமே.

இன்று இணையத்தில் திருட்டுத்தனமாகப் புத்தகங்களைத் தரவிறக்கம் செய்து கொள்வதை எவரும் குற்றமாகக் கருதுவதில்லை. எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் வயிற்றில் அடிக்கிறோம் என்ற உணர்வே பலருக்கும் வருவதில்லை.

நூறு பக்கமுள்ள ஆங்கில நூலின் விலை 300 ரூபாய் ஆனால் அதே அளவு பக்கமுள்ள தமிழ்ப் புத்தகம் நூறு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதிலும் பத்து முதல் இருபது சதவீதம் வாசகருக்குத் தள்ளுபடி தருகிறார்கள். புத்தக விற்பனையாளருக்கு முப்பது சதவீதம் தள்ளுபடி கொடுக்கிறார்கள். எழுத்தாளரின் ராயல்டி வெறும் பத்துச் சதவீதம் தான். அதையும் இணைய திருடர்கள் கள்ள பிரதிகள் மூலம் காலி செய்து விடுகிறார்கள். இதில் எழுத்தாளரிடமே உங்கள் புத்தகத்தின் பிடிஎப் அனுப்பித் தாருங்கள் என்று கேட்பது உச்சபட்ச கொடுமை.

உண்மையில் ஆயிரக்கணக்கான நூல்கள் இணையத்தில் இலவசமாகப் படிக்கவும் தரவிறக்கம் செய்யவும் கிடைக்கின்றன. அதைப் படிக்கவே ஒரு ஆயுள் போதாது. எந்தப் புத்தகம் கிடைத்தாலும் அவசரமாகத் தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்பவரால் ஒரு நாளும் எதையும் படிக்க முடியாது. புத்தகம் படிப்பது ஒரு பேஷனில்லை. படிப்பது போல வெளிவேஷமிடுகிறவர்கள் தற்போது அதிகமாகி வருகிறார்கள்.

ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்கு அம்மா உணவகத்தில் சாப்பாடு தருகிறார்கள். மலிவு விலையில் ரேஷன் கடையில் அரிசி பருப்புத் தருகிறார்கள். காய்கறி மருந்து மாத்திரைகள் கூட இப்படிக் குறைந்த விலையில் அரசே முன்வந்து வழங்குகிறது ஆனால் புத்தக அங்காடிகளை அரசே உருவாக்கி மலிவு விலையில் நல்ல புத்தகங்களைத் தரலாம் தானே. ஒரு ஊருக்கு ஒரு புத்தக அங்காடியை அரசே நடத்தினால் எத்தனை பதிப்பாளர்களுக்கு உதவியாக இருக்கும். அந்த ஊரிலுள்ள மாணவர்கள். போட்டி தேர்வுக்குத் தயார் ஆகிறவர்கள். பொதுமக்கள் எவ்வளவு பயன்பெறுவார்கள். புத்தக அங்காடிகளை ஏன் அரசு துவங்கக் கூடாது.

அரசிடம் ஏற்கனவே Text Book Society இருக்கிறது. நிறைய நூல்களை வெளியிட்டிருக்கிறார்கள். பாடநூல்களை அச்சிட்டு விநியோகம் செய்கிறார்கள். அவர்களே இது போன்ற புத்தக அங்காடியை துவக்கி அதில் அரசு வெளியீடுகள். பல்கலைக்கழக வெளியீடுகள் மற்றும் பிற பதிப்பாளர் நூல்களைப் பெற்றுச் சலுகை விலையில் விற்பனை செய்யலாம் தானே

கேரளாவில் எழுத்தாளர்களுக்கான கூட்டுறவுச் சங்கமிருக்கிறது. அவர்களே நூல்களை வெளியிடுகிறார்கள். மாவட்ட நூலகங்களே தனக்குத் தேவையான நூல்களை வாங்கிக் கொள்கிறார்கள். புத்தகக் கடையில்லாத கோவில் வளாகமேயில்லை. ஆனால் தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் துவங்கி ஐநூறுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒன்றில் கூடப் புத்தக அங்காடி கிடையாது.

இணையத்தில் உலவும் சிலர் புத்தகத் திருட்டைத் தனது உரிமையாக நினைக்கிறார்கள். கள்ளப் பிரதிகளைச் சுற்றுக்கு விடுகிறார்கள். புத்தகங்களைத் திருடி பதிவேற்றம் செய்வதைப் பற்றிப் பெருமை பேசிக் கொள்கிறார்கள். இந்தச் சூழலில் இரண்டு சிறிய புத்தகங்களைத் திருடித் தலைகவிழ்ந்து நின்ற நபரை நினைத்துப் பார்க்கிறேன். அவர் குற்றவாளியில்லை என்றே தோன்றுகிறது

••

0Shares
0