ஒரு நாவலுக்குள் ஆயிரம் பிரச்சனைகள். கஷ்டங்கள், தோல்விகள் வரலாம் ஆனால் கதையின் முடிவு எப்போதும் சுபமாக இருக்க வேண்டும் என்ற ஆழமான நம்பிக்கை வாசகர்கள் மனதில் இருக்கிறது.
காரணம் சிறுவயது முதல் கேட்டு வளர்ந்த எல்லாக் கதைகளின் முடிவும் சுபமானதே. அரக்கனால் தூக்கிச் செல்லப்பட்ட இளவரசியை ஏழு கடல் ஏழு மலை தாண்டி எப்படியாவது இளவரசன் போராடி வெற்றிபெற்றுவிடுவான். எவ்வளவு மோசமான அழிவு கொலை தீமை செய்யும் ஆட்களாக இருந்தாலும் காமிக்ஸ் கதைகளின் நாயகன் முடிவில் அவர்களை வென்றுவிடுவான். சாபத்தால் கற்சிலையாக மாறிய அரசன் முடிவில் உயிர்பெற்றுவிடுவான்.
இப்படிச் சந்தோஷமான முடிவு தான் காலம் காலமாக எழுதப்பட்டும் சொல்லப்பட்டும் வருகிறது
சுபமான முடிவு இல்லாத கதைகளை வாசகர்கள் விரும்புவதில்லை. காதல் கதையாக இருந்தால் மட்டும் துயரமான முடிவு ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
கதைகளைப் போல வாழ்க்கையில்லை என்று வாசகர்களுக்குத் தெரியும். ஆனால் வாழ்வில் கிடைக்காத மகிழ்ச்சி கதைகளில் கிடைக்கட்டும் என நினைக்கிறார்கள். அது தவறில்லை. ஆனால் எல்லாக் கதைகளுக்கும் சுபமான முடிவை எழுத முடியாது, நிஜம் அப்படியில்லையே.
வெற்றியிலிருந்து கற்றுக் கொள்வதை விடத் தோல்வியிலிருந்தே அதிகம் கற்றுக் கொள்கிறோம்.
நாவல்களை மட்டுமே வாசிக்கும் ஒருவரை நான் அறிவேன். ஐம்பது வயதிருக்கும். நடுத்தரமான உயரம். ஒரு சாயலில் டி.எஸ். பாலையா போன்ற தோற்றமிருக்கும். அவசர அவசரமாகத் தான் நூலகத்திற்கு வருவார். அவர் நூலகத்திற்கு வந்தால் வேறு பகுதிக்குப் போகவே மாட்டார். நாவலை மட்டும் தான் எடுத்துப் போவார். படித்து முடித்துவிட்டுத் திருப்பித் தரும் போது புத்தகத்தில் ஆங்காங்கே அடிக்கோடிட்டு அவரது கருத்தை கோபமாக எழுதியிருப்பார். அவருக்கு நாவல் சுபமாக முடிய வேண்டும். இல்லாவிட்டால் அதைக் கடுமையாக விமர்சித்து எழுதிவிடுவார். எழுத இடமில்லை என்றால் அந்தக் கடைசிப்பக்கத்தைக் கிழித்துவிடுவார். இது அவரது வழக்கம்.
இதன் காரணமாக நூலகர் அவருடன் சண்டைபோடுவதைக் காண வேடிக்கையாக இருக்கும்
“புக்கோட கடைசிப் பக்கத்தைக் கிழிச்சிட்டா மற்றவர்கள் எப்படிச் சார் படிப்பாங்க“
`முடிவு சரியில்லை சார். எழுத்தாளர் வேண்டும் என்றே சோகமான முடிவை எழுதியிருக்கிறார். என்னாலே அதை ஏத்துகிட முடியாது“
“அதுக்காகப் புக்கை கிழிப்பீங்களா“
“நான் கதையைச் சொல்றேன். நீங்களே அந்த முடிவு சரியானு சொல்லுங்க“
“அது எழுத்தாளரோட விருப்பம். நாம என்ன செய்ய முடியும்“
“இப்படி ஒரு முடிவே இல்லாமல் போகட்டும் சார். படிக்கிறவனுக்கு ஒரு முடிவை வச்சிகிட தெரியாதா“
“இப்படி செய்தா இனிமே உங்களுக்குப் புக் கொடுக்க முடியாது“
“அந்த எழுத்தாளர் அட்ரஸ் இருந்தால் குடுங்க. அவருக்கு ஒரு போஸ்ட்கார்டு போட்டுக் கேட்கிறேன். படிக்கிறவன் என்ன முட்டாப்பயலா“
இப்படிப் பேசுவதைக் கேட்க நூலகருக்கு எரிச்சலாக இருக்கும். வேறுவழியின்றி அவரை எச்சரித்து அனுப்பி வைப்பார்.
நாவலின் பக்கங்களில் அவர் எழுதியிருக்கும் கோபமான எதிர்வினைகளைப் படிப்பதற்காகவே அவர் திருப்பித் தரும் நாவலைப் புரட்டிப் பார்ப்பேன்.
ஒரு நாவலில் ரவி என்ற கதாநாயகன் அவசரமாக ரயில் நிலையத்திற்குப் போகிறான். அந்த இடத்தில் அடிக்கோடு போட்டு அவசரமா போய் என்ன செய்யப்போறே. மைதிலி தான் தஞ்சாவூர் போயிட்டாளே என்று அந்த வாசகர் ஒரு குறிப்பு எழுதியிருந்தார். நாவலின் கதாபாத்திரத்துடன் அவர் பேசுகிறார். திட்டுகிறார். ஆலோசனைகள் சொல்கிறார் என்பது வேடிக்கையானது.
இன்னொரு நாவலில் உயில் எழுதியதை பற்றி இருவர் பேசிக் கொள்கிறார்கள். அங்கே இப்படி எல்லாம் கதைவிடாதீங்க. யாராவது வக்கீலைக் கேட்டு ஒழுங்கா எழுதுங்கள் என்று எழுத்தாளருக்கு அறிவுரை வழங்கியிருந்தார்
வேறு ஒரு நாவலில் வசந்தி ஒழிக. இவளைப் போல மோசமான பெண்ணைப் பார்த்தது கிடையாது. இவள் என் மனைவியாக இருந்தால் வீட்டை விட்டு ஓடிப்போயிருப்பேன் என்று எழுதியிருந்தார்
இப்படிச் சுவாரஸ்யமான எதிர்வினைகள். ஏன் அந்த மனிதர் தான் படித்த நாவலின் கதாபாத்திரங்களுடன் சண்டைபோடுகிறார். ஆலோசனை சொல்கிறார்.
அவருக்கு நாவல் என்பது வெறும் கதையில்லை. குடும்பத்து மனிதர்களைப் போல நிஜமானவர்கள். அவர்களுக்கு நடக்கிற சுகதுக்கங்களை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. கதாபாத்திரங்களுக்கு முடிவில் நல்லது நடக்கும் போது அது தனக்கே நடப்பது போல நினைத்துக் கொள்கிறார்
நல்லது நடக்க வேண்டும் என்ற நம்பிக்கை மனித மனதில் ஆழமாகப் பதிந்து போயிருக்கிறது. அதுவும் கதைகளில் நல்லது நடக்காத போது அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கிராமத்தில் நடக்கும் பாவைக்கூத்தில் கூட ராமாயணம் பட்டாபிஷேகத்துடன் முடிந்துவிடும். சீதையை ராமன் சந்தேகம் கொண்டு காட்டிற்கு அனுப்பியதோ, லவகுசர்களின் கதையோ சொல்லமாட்டார்கள் பாரதம் படிப்பவர்களும் போருக்குப் பிறகு பாண்டவர்களின் ராஜ்ஜிய பதவியோடு முடித்துக் கொள்வார்கள். சொர்க்கம் போவது கிடையாது.
நாவல்களில் மட்டுமில்லை சினிமாவிலும் இது போலச் சோகமான முடிவைப் பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இது ஒரு பண்பாட்டுப் பிரச்சனை. அபூர்வமான சில படங்களில் தான் சோகமான முடிவு வெற்றிபெறுகிறது.
சிறியதோ பெரியதோ வெற்றி தான் வாழ்க்கை. எது வெற்றியின் அடையாளம் என்பது வேறுபடக்கூடும். ஆனால் தோல்வியோடு முடிந்து போனால் இவ்வளவு உழைப்பும் முயற்சியும் வீணாகிவிட்டதே என்ற வருத்தம் மேலோங்கிவிடும். அதை வாழ்க்கையில் மட்டுமில்லை கதையிலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதே நேரம் பொருந்தாமல் சுபமான முடிவு எழுதப்பட்டிருந்தாலும் வாசகர் ஏற்றுக் கொள்வதில்லை.
படித்த புத்தகங்களில் அந்த மனிதர் ஏன் தீர்ப்பு எழுதுகிறார் . காரணம் புத்தகம் கையில் இருக்கும் வரை அது அவருக்கு மட்டுமே உரியது. கையில் கிடைத்த பொம்மையை ஒரு சிறுமி தண்ணீரில் முக்கி எடுப்பதில்லையா. தலையைத் திருகி கோபத்தைக் காட்டுவதில்லையா. அப்படித்தான் நாவலையும் வாசிக்கிறார். கோபம் அடைகிறார். எதிர்வினை புரிகிறார்
உருதுக் கதை ஒன்றில் இரண்டு கதாபாத்திரங்கள் கதையிலிருந்து வெளியேறிப் போய்த் திருமணம் செய்து கொள்கின்றன. ஒரு நாள் அந்த எழுத்தாளரைப் பஜாரில் சந்தித்து நீங்கள் எங்களைக் கவனிக்கவேயில்லை. கதாநாயகன் மட்டுமே காதலிக்கிறான். திருமணம் செய்து கொள்கிறான். பணியாளரான இருந்த எங்கள் காதலை நீங்கள் ஏற்றுக் கொள்ளவேயில்லை. ஆகவே உங்கள் கதையை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருக்கிறோம் என்கிறார்கள்.
இது மிகை கற்பனை போலத் தோன்றினாலும் கதாபாத்திரங்களுக்கெனத் தனியே ஒரு வாழ்க்கை இருக்கிறது. எழுத்தாளன் எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் நியாயம் செய்வதில்லை என்பது உணர்த்தப்படுகிறது.
ஆறு கதாபாத்திரங்கள் ஒரு எழுத்தாளனைத் தேடி வருவதாகப் பிராண்டலோ ஒரு நாடகம் எழுதியிருப்பார். மகாபாரதத்தினை வியாசர் தான் எழுதுகிறார். அவரே அதன் கதாபாத்திரமாகவும் மாறிவிடுகிறார்.
ஒரு நாவல் எழுதும் போது எழுத்தாளனின் விருப்பத்தை மீறி சில கதாபாத்திரங்கள் வளர்ந்துவிடுவது உண்டு. சில கதாபாத்திரங்களை எழுத்தாளன் கவனமேயில்லாமல் கைவிட்டும் விடுவதும் நடக்கும்.
ஒரு நாவலில் எந்த இரண்டு கதாபாத்திரங்கள் சந்தித்துக் கொள்வதில்லை என்பது பற்றி ஒரு நாள் கவிஞர் தேவதச்சன் பேசிக் கொண்டிருந்தார். இப்படி நாவலை வாசிப்பவர்களும் இருக்கதானே செய்கிறார்கள்.
ஐரோப்பிய நாவல்களை வாசித்தால் அதில் பக்கத்துக்குப் பக்கம் கதாபாத்திரங்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்று விரிவாக எழுதப்பட்டிருக்கும். படிக்கும் நமக்கே எச்சில் ஊறும். உணவின் நறுமணம் நாசியில் ஏறும். டால்ஸ்டாய் நாவலில் இப்படி விதவிதமான உணவு வகைகளை எழுதியிருக்கிறார். தமிழ் எழுத்தாளர்கள் நாவலில் அபூர்வமாகவே கதாபாத்திரங்கள் என்ன சாப்பிட்டார்கள் என்பது விரிவாக எழுதப்பட்டிருக்கிறது
ஆனி எர்னாக்ஸ் என்ற பிரெஞ்சு எழுத்தாளர் ஒரு கட்டுரையில் ஆண் எழுத்தாளர்கள் தனது நாவலில் தன் மனைவிக்குக் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை. அவன் மகிழ்ச்சியாக உணர்ந்தான் என்று எழுதிப் போய்விடுகிறார்கள். ஆனால் பிரசவிக்கும் பெண்ணின் குருதிப்போக்கினையோ, வலியில் அவள் கண்ணீர் மல்கப் போராடுவதையோ, கத்தியால் உடலைக் கிழித்துக் குழந்தையை வெளியே எடுப்பதையோ, தொடைகள் நடுங்க அந்தப் பெண் வேதனையில் துடிப்பதையோ ஒரு வரி எழுதுவதில்லை. பிரசவம் என்பது அவர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம். ஆனால் பெண்களுக்கு அது பெரும் வேதனை. தாங்கமுடியாத உடல்வலி. ஆண்களில் பலரும் பிரசவக் காட்சியை நேரில் கண்டதில்லை. அந்தக் குருதியோட்டத்தின் பிசுபிசுப்பைத் தொட்டு உணர்ந்ததில்லை. பின்பு எப்படி அவர்களால் அதை எழுத முடியும். ஒரு பெண்ணாக நான் அதையே எழுதுகிறேன் என்கிறார்.
ஒரு நாவலை ஆண் வாசிப்பதற்கும் பெண் வாசிப்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. பெண்கள் நாவலில் உள்ள சின்னஞ்சிறு விஷயங்களைக் கூட நுட்பமாகக் கவனிக்கிறார்கள். ரசிக்கிறார்கள். அதே நேரம் சுபமான முடிவு தான் கதையில் இடம்பெற வேண்டும் என்று கறாராகச் சொல்வதில்லை. பெண்களின் வாழ்க்கையில் சுபமும் சந்தோஷமும் அரிதானது . ஆகவே அவர்கள் கதையில் வரும் கஷ்டங்களை ஒரு பெண் எப்படி எதிர்கொள்கிறாள். எவ்வாறு எதிர்வினை புரிகிறாள். எந்த இடத்தில் அவள் அங்கீகரிக்கப்படுகிறாள். எவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறாள் என்பதையே கவனிக்கிறார்கள். நாவலில் தனக்குப் பிடிக்காத விஷயங்களைக் கடந்து போய்விடுகிறார்கள். நாவலின் முடிவுக்கு அப்பாலும் கதையிருக்கிறது என்று அவர்களுக்குத் தெரிகிறது.
தேர்ந்த வாசகன் நாவலின் கதையை மட்டும் படிப்பதில்லை. கதை வழியாக எவையெல்லாம் பேசப்படுகின்றன என்பதையும் படிக்கிறான். நாவலில் எது மறைமுகமாகப் பேசப்படுகிறது. எதை எழுத்தாளன் அடையாளம் காட்டுகிறான் என்பதைக் கண்டறிந்து கொள்கிறார்கள். ஒரே நாவலைத் திரும்பத் திரும்ப படிப்பதன் வழியே கதையைக் கடந்து நாவலின் நுட்பங்களை, உள்தளங்களை அறிந்து கொள்கிறார்கள்.
நாவலின் கடைசிப்பக்கத்தே கிழிக்கும் அந்த வாசகர் தன் சொந்த வாழ்க்கையில் எந்த எதிர்வினையும் செய்யமாட்டார். அடுத்த வீட்டில் இப்படி ஒரு தவறான விஷயம் நடந்தால் கண்டுகொள்ளவே மாட்டார். எந்தச் சமூகப்பிரச்சினையும் அவர் கண்ணில் படாது. ஆனால் நாவலிடம் மட்டும் ஏன் கோபத்தைக் காட்டுகிறார்.
காரணம் நாவலின் கதாபாத்திரங்கள் அவரது கட்டுப்பாட்டில் இருப்பவர்கள். அவரது குடும்ப மனிதர்களைப் போல. ஆகவே தன் அதிகாரத்தை அவர்கள் மீது காட்டுகிறார். குடும்ப உறவுகள் போலவே கதாபாத்திரங்களும் அவரது முடிவைக் கோபத்தைப் பொருட்படுத்துவதில்லை. தன் இயல்பிலே மௌனமாகக் கடந்து போய்விடுகிறார்கள்
நூலகத்திலிருந்த நாவலின் கடைப்பக்கத்தைக் கிழித்துவிட்டால் நாவலின் முடிவு மாறிவிடும் என அவர் நம்பியிருக்கக்கூடும். பாவம் அந்த மனிதர். ஒரு நாவல் எழுதி முடிக்கப்பட்டவுடன் அதன் விதி முடிந்துவிடுகிறது. பின்பு அது எல்லாக் காலத்திற்கும் அதே முடிவோடு தானிருக்கும். எழுத்தாளனே விரும்பினாலும் மாற்ற முடியாது. அப்படிச் சில எழுத்தாளர்கள் வெளியான நாவலின் முடிவை மாற்றியிருக்கிறார். ஆனால் வாசகர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
நாவலின் கடைப்பக்கத்தைக் கிழிக்கும் மனிதருக்கு வாழ்க்கையில் இவ்வளவு பேரைச் சந்திக்கவும் அவர்களுடன் உறவாடவும் வாய்ப்பு கிடைத்திருக்காது. நாவல் தான் அவருக்குப் பெரிய உலகை அடையாளம் காட்டியது. சின்னஞ்சிறு ஊர்களில் வாழுபவர்களுக்குப் பெரிய உலகம் புத்தகம் வழியே தான் அறிமுகமாகிறது.
இன்றைக்கும் நாவலை மட்டுமே வாசிக்கும் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்குப் புத்தகம் என்றாலே நாவல் தான். போர்முனையில் பதுங்கு குழியிலிருந்தபடியே நாவல் வாசித்த ராணுவ வீரர்களைப் பற்றிப் படித்திருக்கிறேன். அவர்கள் நாவல் முடியக்கூடாது என்று ஆசைப்படுவார்களாம்.
புத்தகத்தோடு ஒருவன் கொள்ளும் உறவு விசித்திரமானது. ஆழமானது. அதனால் தான் எழுத்தாளனிடம் வாசகன் கோபமாகப் பேசும் போதும், கடுமையாக விமர்சனம் எழுதும் போதும், உரிமையாகக் கண்டிக்கும் போதும் புன்முறுவலுடன் ஏற்றுக் கொள்கிறார்கள். வாசகனை ஒரு போதும் எதிரியாக நினைப்பதில்லை.
புத்தகங்களிடம் வாசகர் காட்டும் எதிர்வினை என்பது இயல்பானது தான் என்று நூலகர்களும் அறிந்திருக்கிறார்கள். அந்த எதிர்வினை வரம்பு மீறும் போது தான் எச்சரிக்கிறார்கள்.
எதன் மீது தான் மனிதர்கள் கோபம் கொள்ளவில்லை. புத்தகம் மட்டும் விதிவிலக்கா என்ன.
••