மல்லாங்கிணர் நூலகத்தில் முதன்முறையாக வார இதழ்களுக்கு நடுவே ஒரு கையெழுத்துப் பத்திரிக்கையைப் பார்த்தேன். பாலைவனச்சோலை என்ற பெயரில் வெளியாகியிருந்த அந்தக் கையெழுத்து பத்திரிக்கையை உள்ளூர் நண்பர்கள் சிலர் சேர்ந்து உருவாக்கியிருந்தார்கள்.
இப்படி ஒரு பத்திரிக்கையைக் கையெழுத்திலே தயாரித்து வெளியிடலாம் என்பது புதுமையான விஷயமாகத் தோன்றியது. ஆசிரியர் குழுவிலிருந்தவர்களே கவிதைகள் எழுதியிருந்தார்கள். ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. பொது அறிவு தகவல்கள். நிறையப் பொன்மொழிகள் இடம்பெற்றிருந்தன. கடைசி இரண்டு பக்கங்களை வாசகர் கருத்துகள் எழுதுவதற்காக இடம் விட்டிருந்தார்கள்.
கிராம நூலகத்தில் இப்படியான கையெழுத்துப் பத்திரிக்கைகள் வருவது அபூர்வம். பொதுவாக மாத வார இதழ்களுக்குள் இவற்றை யார் படிப்பார்கள் என்றே நினைத்தேன். ஆனால் இருபது பேர்களுக்கும் மேலாகச் சிறப்பாக உள்ளது என்று பாராட்டி கடைசிபக்கத்தில் எழுதியிருந்தார்கள்.
அது போல நானும் ஒரு கையெழுத்து பத்திரிக்கையை உருவாக்கலாமே என்று தோன்றியது. பத்திரிக்கைக்கு ஒரு பெயர் வேண்டும். அத்தோடு அவர்கள் உருவாக்கிய இதழ் போல இருக்கக் கூடாது என்பதால் விதவிதமான பெயர்களை யோசித்தேன். சலனம் என்ற பெயர் பிடித்திருந்தது. 24 பக்கங்கள் கொண்ட இதழாக அதை உருவாக்க நினைத்து வெள்ளைப்பேப்பரை இரண்டாக மடித்து நடுவில் தையல் போட்டேன். டிராயிங் வரைவதற்கான போர்டில் அட்டை ஒன்றை உருவாக்கினேன். ஸ்பான், சோவியத் லிட்ரேச்சர், யுனெஸ்கோ கூரியர், மாஷா போன்ற இதழ்கள் வீட்டிற்கு மாதந்தோறும் வருவதுண்டு. அந்த இதழ்களில் வெளியான படங்களைக் கத்தரித்து அதை உள்ளே ஆங்காங்கே ஒட்டி வைத்தேன்.
ஆசிரியர் குழு ஒன்று வேண்டுமே. அப்படி யாரைப் போடுவது எனக் குழப்பமாக இருந்தது. ஆசிரியர் என்று ஒருவர் பெயரை மட்டுமே போடுவோம் என்று முடிவு செய்து கொண்டேன். கார்க்கியின் சிறுகதை ஒன்றிலிருந்து எனக்குப் பிடித்தமான பத்திகளை அந்த இதழில் வெளியிடுவதற்காக எழுதினேன். பாரதியாரின் கவிதைகள். பிரேம்சந்த் பற்றிய குறிப்பு, எனது சிறுகதை, நாமக்கல் கவிஞர் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி என்று இருபத்திநான்கு பக்கங்களையும் நிரப்பி வைத்தேன். கறுப்பு மை பேனாவில் எழுதிய பக்கங்களைச் சுற்றிலும் ஸ்கெட்ச் பேனால் கட்டம்போட்டு வைத்திருந்தேன். பின் அட்டை காலியாக இருந்தது. ஆகவே அதில் மாஷா இதழில் வெளியான ஒரு கேலிச்சித்திரத்தை வெட்டி ஒட்டினேன். கையெழுத்துப் பத்திரிக்கை தயாராகிவிட்டது.
அதை நூலகத்தில் போடுவதற்கு முன்பாக நானே திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்தேன். பிறகு நூலகரிடம் எடுத்துச் சென்று காட்டினேன்
“அப்படி எல்லாம் கையெழுத்து பத்திரிக்கையைப் போட முடியாது. அதற்கு அனுமதி வாங்க வேண்டும்“ என்றார்
“அனுமதி வாங்குவதற்கு என்ன செய்ய வேண்டும்“ என்று கேட்டேன்.
“ஒரு காகிதத்தில் விண்ணப்பம் எழுதித் தரச் சொன்னார். அத்தோடு இந்த இதழில் வெளியாகியுள்ள விஷயங்களுக்கு நானே பொறுப்பு “என்று எழுதச் சொன்னார். அவர் சொன்னபடியே விண்ணப்பம் ஒன்றை எழுதி அவரிடம் கொடுத்தேன். படித்துப் பார்த்துவிட்டு கையெழுத்துப் போட்டார். பின்பு என் கையில் வைத்திருந்த இதழை வாங்கிக் கொண்டார்
“டேபிள்ல போட்டிரவா சார்“ என்று தயக்கத்துடன் கேட்டேன்.
“நான் படிச்சி பார்த்து முடிவு செய்த பிறகு தான் போடணும்“ என்று கறாரான குரலில் சொன்னார்
அவரிடம் எனது கையெழுத்து பத்திரிக்கையை ஒப்படைத்துவிட்டு மௌனமாக வீடு திரும்பினேன். அடுத்த நாள் போன போது அந்தக் கையெழுத்துப் பத்திரிக்கை நூலகரின் மேஜை மீதே கிடந்தது. அடுத்த நாள் நூலகம் விடுமுறை. நான்கு நாட்களுக்குப் பிறகு அவரிடம் “எனது கையெழுத்து பத்திரிக்கையைப் போட வேண்டாம். திரும்பக் கொடுத்துவிடுங்கள்“ என்று கோபமாகச் சொன்னேன்.
அவர் ஒரு புரட்டிப் புரட்டிவிட்டு “நீயே மேஜையில் போட்டுவிடு“ என்றார்
மேஜையில் கிடந்த வார இதழ்களுக்குள் மேலாக எனது கையெழுத்து பத்திரிக்கையைப் போட்டேன். யாராவது படிப்பார்களா என்று பார்ப்பதற்காக ஓரமாக உட்கார்ந்து கொண்டு மேஜையைக் கண்காணித்தபடியே இருந்தேன். வார இதழ்களைத் தேடும் ஒருவர் கூட அதைப் பொருட்படுத்தவில்லை.
இரண்டு நாட்கள் ஆகியும் ஒருவரும் அதைக் கையால் தொடவேயில்லை. மிகுந்த மனவருத்தமாக இருந்தது. ஏன் என்னுடைய இதழைப் படிக்க மறுக்கிறார்கள் என்று கோபமாகவும் வந்தது.
ஒரு நாள் மாலை நூலகத்திற்குப் போன போது எனது கையெழுத்து பத்திரிக்கையின் கடைசிப்பக்கத்தில் சிறப்பாக உள்ளது வாழ்த்துகள் என்று எழுதப்பட்டிருந்தது. அதை எழுதியவர்கள் பாலைவனச் சோலை இதழை வெளியிட்ட நண்பர்கள். சக பத்திரிக்கைக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்கள். அது சந்தோஷமாகவே இருந்தது.
ஒரு வாரம் முடிந்தவுடன் நூலகர் பழைய இதழ்களை அள்ளி உள்அறையில் போட்டுவிடுவார். நான் கெஞ்சி கேட்டதன் காரணமாக எனது இதழை மேஜையிலே போட்டிருந்தார்
அந்த வாரம் எதிர்பாராத மாற்றம் உருவானது. ஆறு பேர் அதை வாசித்திருக்கிறார்கள். அத்தனை பேரும் மறக்காமல் பாராட்டி எழுதியிருந்தார்கள். அதில் ஒருவர் அரைப்பக்கம் அளவு பாராட்டி எழுதியிருந்தார். அந்தச் சந்தோஷத்தைச் சொல்லவே முடியாது. இன்னொரு வாசகர் அடுத்த இதழ் எப்போது என்று வேறு கேட்டிருந்தார். நான் நூலகரிடம் அந்தப் பின்னோட்டங்களைக் காட்டினேன். அவர் பெரிதாகக் கண்டுகொள்ளவேயில்லை.
அந்த வாரம் வியாழன் அன்று நூலகர் என்னை அழைத்துக் கையெழுத்து பத்திரிக்கையை எடுத்துக் கொள்ளும்படி சொன்னார். நானே வீட்டிற்கு எடுத்துக் கொண்டு போய்விட்டேன்.
அன்று மாலை ஒருவர் என்னைப் பார்ப்பதற்காக ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார். அவர் பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்தவர். விவசாயச் சங்கத் தலைவர். அவர் தான் அரைப்பக்கம் பாராட்டி எழுதியவர்.
வீடு தேடி வந்து அந்த இதழில் வெளியான விஷயங்களைப் பாராட்டி பேசியதோடு நம்ம ஊரைப் பற்றியும் எழுதுங்கள் என்று உற்சாகப்படுத்தினார்.
அத்தோடு “நாலு பக்கம் காலியாக விட்டா என்னை மாதிரி ஆட்கள் அதில் கவிதைகள் எழுதுவோம்“ என்று ஆலோசனையும் சொன்னார். ஒரு கையெழுத்து பத்திரிக்கையைப் படித்துப் பாராட்டி ஆலோசனை சொல்வதற்கு ஒருவர் வீடு தேடி வருகிறார் என்றால் அவரது மனது எவ்வளவு பெரியது என்று தோன்றியது.
அங்கீகாரம் தான் ஒருவரை எழுத வைக்கிறது. அவர் கொடுத்த உற்சாகத்தில் அடுத்த இதழைத் தயாரிக்க ஆரம்பித்தேன். அதன் பிறகு அவரை நூலகத்தில் பார்க்கும் போது அவருடன் இருந்தவரிடம் “இவர் ஒரு எழுத்தாளர். பத்திரிக்கை நடத்துகிறார்“ என்று அறிமுகம் செய்து வைத்தார். அதைக் கேட்கக் கூச்சமாக இருந்தது. ஆனால் எவ்வளவு பெரிய அங்கீகாரம்.
அவருடன் இருந்தவரும் கிராமத்து விவசாயி. ஆகவே எங்களைப் பற்றியும் எழுதுங்கள் என்று சொன்னார்.
விவசாயிகளுக்கு மின்சாரத் தட்டுப்பாடு அதிகமான காலம். எப்போது மின்சாரம் வரும் என்று தெரியாது. ஆகவே அவர்கள் தண்ணீர் பாய்ச்சுவதற்காக நிலத்திலே தங்கியிருப்பார்கள். வேப்ப மரத்தடியில் கட்டிலைப் போட்டுப் படுத்துக் கொண்டு அந்த விவசாயி நூலகத்திலிருந்து எடுத்துப் போன புத்தகங்களைப் படித்துக் கொண்டிருப்பார். பெரும்பாலும் அவர் வரலாற்றுப் புத்தகங்களைத் தான் படிப்பார். கஷ்டமான விவசாய வாழ்க்கைக்கு இடையிலும் அவருக்குப் படித்து உலகை அறிந்து கொள்ள வேண்டும் என்ற தேடல் இருந்தது. படிப்பு அவருக்குப் புதிய சிந்தனையை உருவாக்கியது. சமூக அக்கறை கொள்ள வைத்தது.
கிராம நூலகங்கள் இவரைப் போல எத்தனையோ எளிய மனிதர்களுக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றன
இரண்டாவது இதழ் தயாரித்துக் கொண்டு போவதற்குள் நூலகர் மாறுதலாகி வேறு ஊர் சென்றுவிட்டிருந்தார். தற்காலிக நூலகராக ஒருவரை நியமித்திருந்தார்கள். அவர் கையெழுத்துப் பத்திரிக்கைகளைப் போடக்கூடாது என்பதில் கறாராக இருந்தார்.
தயாரித்த இதழை என்ன செய்வது என்று தெரியாமல் அந்த விவசாயச் சங்க நண்பரைத் தேடிக் கொண்டு போய்ப் படிக்கக் கொடுத்தேன். அவரே நாலைந்து நண்பர்களைப் படிக்க வைத்தார். இரண்டு இததோடு அந்த முயற்சி நின்று போனது.
ஆனால் எழுத்தாளராக வர விரும்பும் ஒருவரை வீடு தேடி வந்து பார்த்துப் பாராட்டிய அவரது பெருந்தன்மையை மறக்க முடியவேயில்லை. கையெழுத்துப் பத்திரிக்கை என்றாலும் அச்சு இதழ் என்றாலும் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பது தான் முக்கியம் என அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. கிராமத்திலிருந்து இப்படியான படைப்பு முயற்சிகள் உருவாகும் போது பாராட்ட வேண்டும் என்ற மனதிருக்கிறது.
கிராமப்புற நூலகங்களை பற்றி யாரும் கவலைப்படுவதேயில்லை. பெரும்பான்மை ஒரு நபர் பணியாற்றும் நூலகங்கள். நூலகர் விடுப்பு எடுத்துக் கொண்டால் அன்று நூலகம் செயல்படாது. அவர் மாறுதலாகிப் போய்விட்டால் அடுத்தவர் வரும்வரை நூலகம் திறக்கப்பட மாட்டாது. நூலகத்திற்கென கட்டிடம் கிடையாது. பராமரிப்பு செய்ய வசதிகள் கிடையாது. மிக அவலமான நிலையில் தான் இன்றுமிருக்கின்றன.
அருமைச் சகோதரர் தங்கம் தென்னரசு அவர்கள் கல்வி அமைச்சராக இருந்த போது மல்லாங்கிணர் கிராம நூலகத்திற்காக புதிய கட்டிடம் கட்டிச் சிறப்பான வசதிகள் செய்து கொடுத்திருக்கிறார். அது மிகுந்த பாராட்டிற்குரிய விஷயம்.
இன்றுவரை எழுத்தாளர்களின் விருப்பத்தின் பெயரிலே சிறுபத்திரிக்கைகள் நடத்தப்படுகின்றன. எழுத்தாளர் சி.சு.செல்லப்பா தனது மனைவியின் நகைகளை விற்று தான் எழுத்து என்ற சிறுபத்திரிக்கையை நடத்தினார். அவரைப் போல எத்தனையோ பேர் கைப்பணத்தைச் செலவு செய்து சிறுபத்திரிக்கை நடத்தியிருக்கிறார்கள். சிறுபத்திரிக்கைகளில் தான் முக்கியமான எழுத்தாளர்கள் கவிஞர்கள் எழுதினார்கள். நிறைய நல்ல மொழிபெயர்ப்புகள் வெளியாகின. சர்வதேச இலக்கியம், அரசியல் பற்றிப் பேசப்பட்டது. எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் சிறுபத்திரிக்கை நடத்தி கடனாளியாகி அதைக் கட்டமுடியாமல் தனது பைக்கை விற்றதை அறிவேன்.
நானும் அட்சரம் என்ற சிற்றிதழை நடத்தினேன், நண்பர்கள் உதவியால் ஒன்பது இதழ்கள் வெளியானது. பத்தாவது இதழுக்கு அச்சகத்திற்குப் பணம் தரமுடியவில்லை. அவர்கள் அச்சடித்த இதழைத் தர மறுத்துவிட்டார்கள். அத்தோடு இதழ் நின்று போனது.
வே. சபாநாயகம் ’தடம் பதித்த சிற்றிதழ்கள்’என்றொரு கட்டுரைத் தொகுப்பு எழுதியிருக்கிறார். அதில் சிற்றிதழ்களின் வரலாறு விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது
இன்று வலைப்பக்கங்களில், முகநூலில் யார் வேண்டுமானாலும் உடனே தான் எழுதியதை வெளியிட்டு விடலாம். விருப்பமானவர்கள் வாசித்துவிடுவார்கள். பாராட்டும் கிடைத்துவிடும்.
ஆனால் முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு சின்ன கிராமத்தில் வசித்தவர்களுக்கு நூலகம் ஒன்று தான் சாளரம். என்னைப் போலப் பலரும் அவரவர் ஊர்களில் கையெழுத்து பத்திரிக்கைகளை நடத்தியிருக்கிறார்கள். அதிலிருந்தே எழுத்தாளர்கள் கவிஞர்கள் உருவானார்கள். என்னைத் தேடி வந்து பாராட்டிய விவசாயியைப் போல எல்லா ஊரிலும் யாரோ ஒருவர் படைப்பாளியை அடையாளம் கண்டு பாராட்டவே செய்கிறார். அந்த ஒரு வாசகரின் அன்பும் பாராட்டுமே புதிய எழுத்தாளரை உருவாக்குகிறது. அதற்காகக் கிராம நூலகத்திற்கு என்றும் நன்றி சொல்வேன்
•••
6.11.20
.