1992ன் துவக்கத்தில் அண்ணாசாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் நூலகத்தில் அவர்கள் இருவரையும் பார்த்திருக்கிறேன். மோகன் என்ற பார்வையற்ற நபரைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வருவார் ஒரு இளைஞர். அவரது பெயர் செல்வம். மோகனுக்கு இருபத்தைந்து வயதிருக்கக் கூடும் .செல்வமும் அதே வயது தான். மோகனை விடவும் செல்வம் ஆள் குள்ளம். பெரிய காதுகள் கொண்டவர்.
அவர்கள் முகத்தில் தனியான மகிழ்ச்சியிருக்கும். பொதுவாகப் பார்வையற்றவர்கள் குறித்த பொதுப்புத்தி அவர்கள் எப்போதும் சோகமாகவும் வருத்தமாகவும் இருப்பார்கள் என்றிருக்கிறது. அது உண்மையில்லை. பார்வையற்றவர்கள் எப்போதும் உற்சாகமாகவே இருக்கிறார்கள். நம்பிக்கையுடன் பேசுகிறார்கள். பார்வையின்மை என்பது ஒரு குறைபாடு மட்டுமே. மற்றபடி அவர்களின் கேலியும் கிண்டலும், புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் ஆர்வமும், புத்தகங்களை நேசிக்கும் விதமும் அபூர்வமானது.
நூலகத்தின் படிக்கட்டில் ஏறி வரும் போது கூட அவர்கள் ஏதோ பேசிச் சிரித்துக் கொண்டேதான் வருவார்கள். சில நேரம் அவர்களின் சப்தமான உரையாடலை வைத்து நூலகத்திற்குள் வந்திருப்பதை உணர்ந்து கொள்வேன். நானாக அவர்களிடம் ஒரு நாள் அறிமுகம் செய்து கொண்டேன். அதன்பிறகு என்னுடைய சிறுகதைகள் இதழ்களில் வெளியாகும் போது படித்து விட்டுப் பாராட்டுவார்கள்.
மோகன் எப்போதும் நூலகத்தில் புதிய புத்தகங்களைத் தான் கேட்பார்.
“பழைய புத்தகங்கள். பழைய சினிமா எதுவும் பிடிக்காது. எல்லாம் சுடச்சுட இருக்கணும். புதுப்படம் ரிலீஸ் ஆனா பர்ஸ்ட் ஷோ பாக்குறதில்லையா. அது மாதிரி தான் புத்தகமும். ஐம்பது வருஷத்துக்கு முந்திய புத்தகம் எல்லாம் ஜனங்க படிச்சி முடிச்சி கடந்து போயிட்டாங்க . எனக்கு எல்லாமே புதுசா வேணும், புதுப் புத்தகம்கிறது வெறும் புத்தகமில்லை. அது புது நம்பிக்கை. புதுப் பார்வை, புது வெளிச்சம். புதுசை நாம தானே கொண்டாணும்… என்ன சார் சொல்றீங்க. “ என்பார் மோகன்
அவரது பேச்சில் இருந்த உற்சாகம் எவரையும் தொற்றிக் கொள்ளும். கடந்தகால வாழ்க்கை பற்றியோ, பழைய நினைவுகளைப் பற்றியோ கவலை கொள்வதில்லை. நிகழ்காலத்தைச் சந்தோஷமாக அமைத்துக் கொள்கிறார்கள். சிறப்பான எதிர்காலம் பற்றிக் கனவு காணுகிறார்கள்.
அவர்கள் இருவரும் பட்டாபிராமிலிருந்து மின்சார ரயில் பிடித்துச் சென்டரலில் வந்து இறங்கி அங்கிருந்து பேருந்தில் அண்ணாசாலை வந்து சேருவார்கள். நூலகத்தில் சென்று படிப்பதற்காகவே இவ்வளவு தூரம் வருகிறார்கள் என்பதை ஒருநாள் அறிந்து கொண்டேன்.
“டிரைன்ல படிப்பீங்களா மோகன்“ என்று ஒருமுறை கேட்டேன்
“டிரைன்ல நிறையப் பிரண்ட்ஸ் இருக்காங்க. அரட்டை அடிச்சிட்டு வருவோம். ஜாலியா இருக்கும். ஒரு அக்கா எங்களுக்காக தினம் ஸ்வீட் எல்லாம் கொண்டு வருவாங்க. எலக்ட்ரிக் டிரைன் ஒரு சொர்க்கம் சார் என்றார் மோகன்
அவரும் செல்வமும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். மோகன் புத்தகங்கள் வாசிப்பதற்குச் செல்வம் தான் உதவி செய்கிறார். ஆனாலும் இவருக்கும் ஒரே ரசனை கிடையாது. செல்வத்திற்குப் பிடித்தமான கதைகளை மோகன் கேலி செய்வார். செல்வத்தின் தந்தை இஸ்திரி போடுகிறவர் என்பதால் மற்ற நேரங்களில் அவர் தந்தையின் வேலைக்கு உதவி செய்வதாகச் சொன்னார். அவர்கள் இருவரையும் பிரித்துப் பார்க்கவே முடியாது
“டெய்லி காலையில ஏழு மணிக்கெல்லாம் மோகன் என்னைத் தேடி வீட்டுக்கு வந்துருவான். எங்க வீட்லயே சாப்பிட்டு ஒண்ணா டிரைன்ல கிளம்பி வந்துருவோம். மதியம் வரைக்குக் கூடவே இருப்பேன். அப்புறம் மோகனை அவன் வீட்ல விட்டுட்டு இஸ்திரி பண்ண போயிடுவேன். மோகன் பயங்கர அறிவாளி சார் “என்பார் செல்வம்.
புத்தகம் படிப்பதற்கு இப்படி ஒருவர் கூடவே இருந்து உதவி செய்வது மிகுந்த சந்தோஷமாக இருந்தது.
அவர்கள் நூலகத்திலிருந்து புத்தகம் எடுத்துக் கொண்டு பக்கத்திலுள்ள சப்வே ஒன்றினுள் போய் உட்கார்ந்து கொள்வார்கள். செல்வம் நூலகத்தில் எடுத்த புத்தகத்தை வாசிப்பார். மோகன் அதைக் கேட்டுக் கொண்டிருப்பது வழக்கம். இருபது முப்பது பக்கம் படித்துமுடித்தபிறகு இருவரும் பக்கத்து டீக்கடையில் போய் டீ குடிப்பார்கள். பிறகு நடந்து ரயில் நிலையம் நோக்கிப் போவார்கள். காலியாக உள்ள இருக்கையில் உட்கார்ந்து கொண்டு மதியம் வரை படிப்பார்கள். பிறகு ரயிலேறி வீடு போய்ச் சேர்ந்துவிடுவார்கள்
ரீடர் என்ற வார்த்தை பொதுவாக வாசகரைக் குறிப்பதாக மட்டுமே நம்பியிருந்தேன். ஆனால் பார்வையற்றவர்களுடன் பழகிய பிறகு தான் அது தனக்காகப் புத்தகம் வாசிக்கும் நபரைக் குறிக்கும் சொல் என்பதை அறிந்து கொண்டேன்.
பார்வையற்றவர்களுக்காகப் பாடப்புத்தகங்கள். போட்டி தேர்விற்கான புத்தகங்கள், கதை கட்டுரைப்புத்தகங்களை வாசித்துக் காட்டும் பலர் இருக்கிறார்கள். அவர்கள் தன்னார்வ சேவையாக இதைச் செய்கிறார்கள். அவர்களைத் தான் ரீடர் என அழைக்கிறார்கள். இந்த வாசிப்பாளர்கள் பாடப்புத்தகங்களை, கதைகளைப் பேசிப்பதிவு செய்து ஆடியோவாகக் கொடுத்துவிடுகிறார்கள். ஒரு சில குரல்களைப் பார்வையற்றவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது. ஆகவே அவர்கள் குரலில் கதைகேட்க ஆசைப்படுகிறார்கள்.
ஆண்டுக்கு ஒரு முறை பார்வையற்றவர்கள் ஒன்று கூடி இது போன்ற ரீடர்களுக்குப் பாராட்டு விழா ஒன்றை நடத்துகிறார்கள்.
அப்படி ஒரு விழாவிற்கு நான் சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டிருந்தேன். அபிநயா என்ற பார்வையற்ற தோழி அழைத்திருந்தார்.
அன்று எண்பது வயதைக் கடந்த ஒரு பெண்மணி இவர்களுக்குப் புத்தக வாசிப்புச் செய்து வருவதைக் கண்டேன். ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், இல்லத்தரசிகள், கல்லூரி மாணவர்கள் எனப் பலரும் இப்படித் தன்னார்வமாகப் புத்தகங்களை வாசித்து உதவிசெய்து வருகிறார்கள். சிலர் பார்வையற்ற மாணவர்களின் வீடு தேடிப் போயும் படித்து வருகிறார்கள். அவர்களின் இந்த நற்செயல் மிகுந்த பாராட்டிற்குரியது.
இந்த நிகழ்ச்சியில் தங்களுக்கு விருப்பமான வாசிப்பாளர்களை அவர்கள் கொண்டாடிய விதம் அற்புதமானது. கல்லூரி ஆண்டுவிழாவில் காணப்படும் உற்சாகம் போலப் பெருமகிழ்ச்சி காணப்பட்டது. ஒரு ரீடர் பரிசு பெறும் போது தலைவா என்று ஒருவர் சப்தமிட்டு விசில் அடித்தார். அந்த ரீடர் வெட்கத்துடன் நன்றி சொந்தங்களே என்றார். அந்த வார்த்தை உண்மையானது. ரீடர்கள் இவர்களைச் சொந்தங்களாகவே உணருகிறார்கள். நடத்துகிறார்கள், உதவி செய்கிறார்கள்.
பார்வையற்றவர்களுக்கெனத் தனியே ஒரு நூலகம் அஸ்ஸாமில் செயல்படுகிறது. மதுரையில் இவர்களுக்கென ஹெலன் கெல்லர் ஆடியோ நூலகம் செயல்பட்டு வருகிறது. இது போலக் கோவை பொதுநூலகத்தில் பார்வையற்றவர்களுக்கெனச் சிறப்புப் பிரிவு உருவாக்கப்பட்டிருக்கிறது. அங்கே பார்வையற்றவர்கள் சாப்ட்வேர் உதவியுடன் கணிணி மூலம் படிக்கலாம். பிரெய்ல் மொழியில் அச்சிடப்பட்ட புத்தகங்களும் உண்டு.
ஆண்டுத் தோறும் எனது சிறார் நூல்களும் பிரெயில் மொழியில் அச்சிடப்பட்டுப் பார்வையற்ற மாணவர்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்படுகின்றன. இதற்கு முக்கியக் காரணமாக இருப்பவர் ஆடிட்டர் சந்திரசேகர். அவர் தேசிய பார்வையற்றோர் சங்கத்தின் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். பார்வையற்றவர்களின் நலனிற்காக அவர் செய்து வரும் உதவிகள் பாராட்டிற்குரியவை. இந்த அமைப்பின் தமிழகத் தலைவராக இருப்பவர் சவேரா ஹோட்டலின் உரிமையாளர் நீனா ரெட்டி.
சேது பாஸ்கரா கல்வி குழுமத்தின் தலைவர் சேது குமணன் பார்வையற்றவர்களுக்காகப் பல்வேறு விதங்களில் சிறப்பாக உதவிகள் செய்து வருகிறார்
அது போற்றுதலுக்குரிய பணி..
இரண்டு ஆண்டுகளுக்குள் மேலாக நான் மோகனையும் செல்வத்தையும் நூலகத்தில் சந்தித்துப் பழகியிருந்தேன். ஒரு நாள் மோகன் என்னிடம் ஒரு கல்யாணப்பத்திரிக்கையை நீட்டி “எனக்குக் கல்யாணம், அவசியம் வந்துருங்க சார்“ என்றார்
“யாரு பொண்ணு “என்று கேட்டேன்
“லவ் மேரேஜ். பொண்ணு பேரு சாந்தி. நூலகத்தில் பாத்து இருப்பீங்க. தினம் வருவாங்க. மெட்ராஸ் யுனிவர்சிட்டில பிஎச்டி பண்ணுற ஸ்காலர். பேசிப்பழக்கமா ஆகிருச்சி. பொண்ணு வீட்ல கல்யாணத்துக்கு ஒத்துகிடலை. ஆனா சாந்தி உறுதியா இருக்கு. அதான் பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து கல்யாணம் ஏற்பாடு பண்ணியிருக்காங்க “. என்று வெட்கத்துடன் சொன்னார் மோகன்
“கட்டாயம் வந்துடுறேன்“ என்றேன்
“இனிமே புத்தகம் படிக்க வீட்லே ஒரு துணை வந்துருச்சி சார். நைட்லயும் புத்தகம் படிக்கலாம்“ என்றார் மோகன்
திருமணம் மூலம் புதிய வாசிப்புத் துணை கிடைத்திருப்பது தான் மோகனின் பெரிய சந்தோஷம். இதைவிடப் புத்தகங்களை ஒருவரால் எப்படி நேசிக்க முடியும்.
பெரும்பான்மையான பொதுநூலகங்களில் பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் விதமாக எந்தவிதமான உதவிகளும் கிடையாது. மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை வசதிகள் கூடக் கிடையாது. பிரெயில் மொழியில் அச்சிடப்பட்ட கேட்லாக் கிடையாது. ஆடியோ நூல்கள் கிடையாது. அண்ணா நூற்றாண்டு நூலகம் போல ஒன்றிரண்டு நூலகங்களில் தான் இந்த வசதிகள் உள்ளன.
மோகன் திருமணத்திற்காகப் பட்டாபிராம் போயிருந்தேன்
திருமணப்பத்திரிக்கையில் “புத்தகங்கள் மட்டுமே அன்பளிப்பாக ஏற்றுக் கொள்ளப்படும்“ என மோகன் அச்சிட்டு இருந்தார். அன்றைக்கு அவரது திருமணத்திற்கு வந்த அத்தனை பேரும் புத்தகங்களைத் தான் பரிசு அளித்தார்கள்.
இன்றைக்கும் மோகனைப் போலப் பார்வையற்றவர் பலரும் நூலகத்திற்கு வருகிறார்கள். ஆசையாகப் புத்தகத்தைத் தேடி படிக்கிறார்கள். புத்தகக் கண்காட்சியில் வந்து தேவையான புத்தகங்களை வாங்கிப் போகிறார்கள். பார்வையின்மை படிப்பதற்குத் தடையில்லை என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் பார்வையுள்ள சிலருக்கோ படிப்பது வெட்டிவேலையாகத் தோன்றுகிறது.
மோகனைப் போன்றவர்களுக்குப் புத்தகம் படிப்பதன் மூலம் மனதில் வெளிச்சத்தை உண்டாக்கிக் கொள்ளத் தெரிந்திருக்கிறது. பார்வையுள்ள பலருக்கும் உலகம் நன்றாகத் தெரிகிறது. ஆனால் உள்ளம் தான் இருண்டு கிடக்கிறது.
••