நூலக மனிதர்கள் 8 பீம ரகசியம்

அந்தக் கான்ஸ்டபிள் யூனிபார்மில் தான் நூலகத்திற்கு வருவார். ஐம்பது வயதிருக்கும். பருத்த உடல். படியேறும் போது மூச்சுவாங்கும். மூட்டுவலியோடு அவர் படியேறி வந்தவுடன் நூலகர் முன்பாக உள்ள நாற்காலியில் உட்கார்ந்து கொள்வார்.

அவராக ஒரு போதும் புத்தக அடுக்குகளுக்குச் செல்ல மாட்டார். கதை, கவிதை நாவல் போன்ற எந்தப் புத்தகத்தையும் எடுத்துப் போக மாட்டார். எப்போதும் சமையல் புத்தகம் மட்டுமே எடுத்துப் போவார்.

நிச்சயம் அது அவர் படிப்பதற்கான புத்தகமில்லை என்று தெரியும். விதவிதமான சமையல் முறைகளைப் பற்றிய புத்தகங்களை இரவல் எடுத்துக் கொண்டு போவார். அத்தனையும் செய்து பார்த்து ருசிப்பவர் போலத் தான் தோன்றியது.

நூலகர் அவருடன் நல்ல நட்பில் இருந்தார் என்பதால் கான்ஸ்டபிள் வந்தவுடன் அவருக்குத் தேநீர் வாங்கி வரும்படி ஆள் அனுப்பி வைப்பார். தேநீர் வரும்வரை அவர்கள் உரையாடிக் கொண்டிருப்பார்கள். கான்ஸ்டபிளின் சந்தேகங்கள் விசித்திரமானவை.

ஒரு நாள் அப்படி நூலகரிடம் ஒரு கேள்வி கேட்டார்

“சமையல்ல சிறந்தவன் பீமன்னா.. பீமனோட சமையல் ரகசியம் பற்றி ஏதாவது புத்தகம் இருக்கணும்ல. அது இருந்தா குடுங்க“

“அப்போ பொஸ்தகம் எழுதுற பழக்கம் இருந்திருக்காதுல்லே “ என்றார் நூலகம்

“ வழி வழியா அந்த ரகசியத்தைக் கேட்டு வந்திருப்பாங்க. அப்படிப் புத்தகம் ஏதாவது இருக்கானு விசாரிச்சி சொல்லுங்க “

“எனக்கு தெரிஞ்சி இல்லே“ என்றார் நூலகர்

“பீம ரகசியம் இல்லேன்னா நளன் சமையல்ல கில்லாடி தானே,, நள ரகசியம் இருக்கா“ என்று கேட்டார் கான்ஸ்டபிள்

அப்போது நூலகப் பணியாளர் குறுக்கிட்டு “நளபாகம்னு ஒரு புத்தகம் இருக்கு சார்“ என்றார்

“பாத்தீங்களா. அதை இத்தனை நாளும் குடுக்காமல் விட்டுட்டீங்களே“ என்று சொல்லி சிரித்தார் கான்ஸ்டபிள்

நூலகர் கேட்லாக்கை பார்த்து அந்தப் புத்தகத்தை எடுத்து வரச் சொன்னார். நூலக உதவியாளர் நளபாகத்தை எடுத்துக் கொண்டு வந்து தந்தார்.

“பெரிய புக்கா இருக்கு. நிறைய அயிட்டம் செய்முறை இருக்கும் போல“ என்று கான்ஸ்டபிள் புத்தகத்தைத் தன் பெயரில் பதிந்து வாங்கிக் கொண்டார். தேநீர் வந்தது. அதைக் குடித்தபடியே நூலகரிடம் தன் மனைவி சமையல் புத்தகங்களைப் பார்த்து ஒரு நோட்டில் எழுதி வைத்துக் கொள்வாள் என்றும் அப்படி நாலு பெரிய நோட்டுகள் தன் வீட்டில் இருப்பதாகவும் சொன்னாள்.

நூலகர் சலிப்போடு சொன்னார்

“நம்ம வீட்ல எப்பவும் இட்லி தோசை தான். மூணு பிள்ளைகளை வச்சிகிட்டு அதையே அவளாலே நேரத்துக்குச் செய்ய முடியலை. உடம்பு முடியாதவள். அடிக்கடி மூச்சிரைப்பு வந்துருது“ என்றார்

“அதுக்கு உளுந்தங்கஞ்சி வச்சி சாப்பிடணும். அந்தப் பக்குவம் கேட்டு எழுதி வாங்கிட்டு வர்றேன்“

“ஹோட்டல்ல கிடைக்கும்னா சொல்லுங்க. வீட்டுக்கு வாங்கிட்டு போறேன். ஆனால் அதை எல்லாம் பக்குவம் பாத்துச் செய்ய அவளாலே முடியாது“

“அப்போ ஒரு நாள் நம்ம வீட்ல வைக்கச் சொல்லி கொண்டுட்டு வர்றேன்“ என்றார்.

நூலகர் ஸ்நேகத்துடன் நன்றி சொன்னார். நளபாகத்தைக் கையில் எடுத்தபடியே கான்ஸ்டபிள் வெளியேறிப் போனார்

இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் நூலகம் வந்தவுடன் பெருமூச்சோடு நூலகரிடம் கேட்டார்

“என்ன இப்படி ஏமாத்திட்டீங்க“

“நான் என்ன ஏமாத்தினேன்“ என்று அப்பாவியாகக் கேட்டார் நூலகர்

“இதுல ஒரு சமையல் குறிப்பும் இல்லை. இது ஏதோவொரு நாவல். என் வொய்ப் கோவிச்சிட்டா“ என்றபடியே நளபாகத்தை நீட்டினார்

தி. ஜானகிராமன் எழுதிய புகழ்பெற்ற நாவல் நளபாகம். அது தெரியாமல் எடுத்துப் போனது அவரது தவறு என்பது கூடப் புரியவில்லை.

நளபாகம் நாவலில் காசி ராமேஸ்வரம் போகும் யாத்ரா ரயிலில் சமையல்காரனாக இருப்பவர் காமேச்வரன். சமையல் கலையில் நிகரற்றவர். பயணத்தின் ஊடாக ரங்கமணி என்ற பெண்ணுக்கு காமேச்வரனின் பக்தியும் ஒழுக்கமும் சமையல் ருசியும் பிடித்துப் போய்விடத் தன்னுடைய ஊரான நல்லூருக்கு அழைத்துப் போகிறாள். அங்கே அவரது வாழ்க்கை என்னவாகிறது என்பதை நாவல் விவரிக்கிறது.

இந்த நாவலின் ஒரு இடத்தில் தி.ஜா இப்படி எழுதியிருப்பார்

“என் குருநாதன் வத்சனை நினைச்சுண்டு அவருக்கு ஒரு கும்பிடு போட்டுட்டுத்தான் உலைநீர் வைக்கிறேன்.சமையல் சுயபோதினி புத்தகங்களைப் பார்த்து சமைக்கலே! அந்தப் புஸ்தககங்களைப் படிச்சு ரசம் குழம்பு வைச்சா நவத்துவாரமும் எரியும்”

நல்லவேளை கான்ஸ்டபிளின் மனைவி இந்த வரிகளைப் படிக்கவில்லை. ஆனால் நளனின் சமையல் ரகசியங்களைத் தெரிந்து கொள்ள முடியாமல் போய்விட்டதே என்ற ஆதங்கம் கான்ஸ்டபிளிடம் வெளிப்பட்டது.

முதன்முறையாக ஒரு தவறான புத்தகத்தை எடுத்துப் போய்விட்டதற்காகக் கவலைப்பட்டார்

புதிதாக வந்திருந்த “நூறு செட்டிநாட்டு சிற்றுண்டி வகைகள்“ நூலைக் கொடுத்து அவரைச் சமாதானப்படுத்தினார் நூலகர். அதைக் கையில் வாங்கிக் கொண்டு எப்போதும் போலவே புதிய சந்தேகம் ஒன்றை கேட்டார் கான்ஸ்டபிள்

“இந்த சமையல் புக் எழுதுறவங்க வாழ்க்கை குறிப்பு தொடர்பு முகவரி எதுவும் புக்லே இருக்கிறதில்லையே. உண்மையில் சமைத்துப் பார்த்து தான் எழுதுவாங்களா. ஏதாவது சந்தேகம் இருந்தால் எப்படிக் கேட்கிறது“

“பதிப்பகத்துக்குக் கடிதம் எழுதிப் போட்டா பதில் வரப்போகுது“ என்றார் நூலகர்

“அப்படி என் வொய்ப் தபால் போட்டு இருக்கா. பதில் வரவேயில்லை. அதான் கேட்டேன்“

“நீங்க மெட்ராஸ் போறப்போ நேர்ல போயி கேட்டுட்டு வந்துர வேண்டியது தானே“ என்றார் நூலகர்

“அப்படித் தான் செய்யணும்“ என்றார். ஆனால் அவருக்குப் பீம ரகசியம் மீதான தேடல் விடவேயில்லை. ஒரு நாள் நூலகர் என்னை அந்தச் சிக்கலில் கொண்டு போய் மாட்டிவிட்டார்

“சார் ஒரு எழுத்தாளர். மகாபாரதம் பற்றி ஒரு நாவல் எழுதியிருக்கிறார்“ என்று கான்ஸ்டபிளிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார்

“அப்படியா சார். சந்தோஷம். ஏன் சார் பீமனோட சமையலை பற்றி மகாபாரதத்தில் ஏதாவது எழுதியிருக்கா. அதைப்பற்றிச் சொல்லுங்கள்“ என்றார்

“பீமன் நிறையச் சாப்பிடுவான். நன்றாகச் சமைப்பான் என்று மகாபாரத்தில் சொல்லப்படுகிறது. ஆனால் என்ன உணவுகளை எப்படிச் சமைத்தான் என்ற குறிப்புகளை வாசித்தாக நினைவில்லை. சிறுபாணாற்றுப்படை என்னும் தமிழ் நூலில் ஓய்மானாட்டு நல்லியக்கோடன் பாணர்களுக்கு விருந்து படைக்கும் போது பீமனால் எழுதப்பட்ட நூலின் படி சமைத்துக் கொடுத்தான் என்று ஒரு வரி வருகிறது. அது தான் பீமனின் சமையல் நூல் பற்றி நினைவில் உள்ள ஒரே விஷயம்“ என்றேன்.

“பார்த்தீங்களா. நான் சொன்னேன்ல. பீமரகசியம் கட்டாயம் எழுதப்பட்டு இருக்கும்… பீமன் காலத்தில் இப்படிக் குக்கர், கேஸ் ஸ்டவ் எல்லாம் வரலை. விறகு அடுப்பில் சமைத்துச் சாப்பிட்டு இருப்பாங்க. அந்த ருசி தனியா இருக்கும்“ என்று சந்தோஷமாகச் சொன்னார்

சதா சாப்பிடுவதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பார் போலும். ஆனால் அவருக்கு அந்தச் சிறுபொறிப் போதுமானதாக இருந்தது. மதுரைக்குப் போய்த் தேடி எப்படியாவது அந்த நூலை வாங்கிவிடுவதாகச் சொல்லிச் சென்றார்.

ஆனால் அவர் நினைத்தது போல அந்த நூல் கிடைக்கவில்லை

இன்னொரு நாள் என்னிடம் கேட்டார்

“பீமபுஷ்டி அல்வா பீமன் தயாரிச்ச ஸ்வீட் தானே“

“இல்லை. அது ராஜஸ்தானிலிருந்து வந்த இனிப்பு“ என்றேன்

“பீமன் எதுக்கு ராஜஸ்தான் போனான்“ என்று கேட்டார்

“இந்த அல்வாவிற்கும் பீமனுக்கும் ஒரு தொடர்புமில்லை“ என்று சொன்னேன்

“அப்போ ஏன் அந்தப் பெயர் வச்சிருக்காங்க. நானும் வாங்கிச் சாப்பிட்டுப் பாத்துருக்கேன். நல்லா தான் இருக்கு“ என்றார்

“எனக்குத் தெரியாது“ என்று அவரிடமிருந்து தப்பி ஓடினேன். அதன் பிறகு அந்தக் கான்ஸ்டபிள் கண்ணில்படாமலே நூலகம் போய்வருவேன். எப்போதாவது கண்ணில் பட்டுவிட்டால் உடனே பீம ரகசியம் பற்றிக் கேட்க ஆரம்பித்துவிடுவார்.

பீமனின் சமையல் குறிப்புகளைக் கண்டுபிடித்து அந்த உணவு வகைகளைச் சமைத்துச் சாப்பிடுவதை வாழ்நாளின் ஒரே லட்சியமாக அவர் வைத்துக் கொண்டிருந்தார்.

அவருக்கு உள்ள ஒரே வருத்தம். தமிழ்நாட்டில் ஊருக்கு ஊர் விதவிதமான உணவு வகைகள் இருக்கின்றன. பிரமாதமான சமையல் கலைஞர்களும் இருக்கிறார்கள். ருசியாகச் சமைப்பவர்கள் அதை ஏன் எழுத மறுக்கிறார்கள். தன்னைப் போல நாக்கினால் மட்டுமே உயிர்வாழ்பவர்களை ஏன் ஏமாற்றுகிறார்கள் என்று கோபம் கொண்டார். நியாயமான கோபம்.

தொலைக்காட்சியும், யூடியூப்பும் வந்தபிறகு வீடியோ பார்த்துச் சமைப்பது அதிகமாகிவிட்டது. அமெரிக்காவில் வசிக்கும் மகளுக்கு மதுரையில் உள்ள அம்மா பூண்டுக்குழம்பு வைப்பதற்கு ஸ்கைப் மூலம் உதவி செய்யும் காலமிது. ஆனாலும் சமையல் புத்தகங்களுக்கெனத் தனியே வாசகர்கள் இருக்கிறார்கள். அந்தத் துறையில் புதிய நூல்கள் நிறைய வெளியாகவே செய்கிறது. நிறைய விற்பனையும் ஆகிறது. புத்தகக் கண்காட்சி வளாகத்தில் நேரடியாகச் சமைத்துக் காட்டி சமையல் நூலை விற்பனையும் செய்கிறார்கள். பராம்பரிய உணவு முறைகள் மீட்கப்படுகின்றன. சங்ககால உணவு வகைகளை மட்டுமே கொண்ட விருந்து நடத்தப்படுகிறது. இன்று உணவு குறித்துப் புதிய விழிப்புணர்வு உருவாகி வருகிறது. அதைச் சந்தை வணிகர்கள் சுயலாபங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

எப்போதாவது மகாபாரதப் புத்தகத்தைப் புரட்டும் போது உடனே அந்தக் கான்ஸ்டபிள் ஞாபகம் வந்துவிடுகிறார். அவர் தன் லட்சியத்தை நிறைவேற்றிவிட்டாரா என்று தெரியவில்லை. பாவம் அவர் மனைவி. இப்படிச் சமைப்பதை மட்டுமே வாழ்க்கையாகக் கொண்டிருக்கிறார். நூலகம் வருவதற்குக் கூட அவர் அனுமதிக்கப்படவில்லையே என்று தோன்றியது.

திருச்சி ரயில்வே காவல்துறை எஸ்.பியான டி.செந்தில்குமார் அவர்கள் வீட்டிற்கு ஒருமுறை போயிருந்தேன். நல்ல நண்பர். மிக அரிய நூல்களை தேடிச் சேகரித்து பெரிய நூலகம் ஒன்றை வைத்திருக்கிறார். நிறையப் படிக்கிறார். புத்தகக் கண்காட்சி தோறும் சென்று புத்தகங்களை வாங்கிக் குவிக்கிறார். சிறப்பாக இலக்கிய உரைகளை நிகழ்த்துகிறார். வரலாறு குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார். அது மிகுந்த பாராட்டிகுரிய விஷயம்.

இவரைப் போன்று காவல்துறையில் தீவிர இலக்கியம் படிப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். சிலர் எழுத்தாளர்களாகவும் சிறந்து விளங்குகிறார்கள். இரவு ரோந்து சுற்றும் ஜீப்பில் எப்போதும் புத்தகங்களை வைத்துக் கொண்டிருக்கும் போலீஸ் அதிகாரிகளை எனக்குத் தெரியும்.

புத்தக கண்காட்சி வளாகத்தில் பாதுகாப்பு பணி புரிந்த இரண்டு காவலர்கள் எனது தேசாந்திரி அரங்கிற்கு வந்து இரண்டாயிரம் ரூபாய்களுக்கு புத்தகம் வாங்கிக் கொண்டு போனார்கள். தினமும் தங்களுக்கு விருப்பமான புத்தகங்களை தேடித்தேடி வாங்குவதாக சொன்னார்கள். அவர்கள் பேச்சில் அதை நன்றாக உணர முடிந்தது. இவர்களைப் போன்றவர்கள் பாராட்டிற்குரியவர்கள்.

மீனாட்சி அம்மாள் எழுதிய ‘சமைத்துப் பார்’ என்ற புத்தகம் 1951ம் ஆண்டு. வெளியானது. மிகப்பிரபலமான சமையல் புத்தகம். கன்னடம், தெலுங்கு மலையாளம், இந்தி, மொழிகளிலும் வெளியாகியிருக்கிறது, ஆங்கிலத்தில் பென்குவின் வெளியீடாக வந்துள்ளது. அந்தக் காலத்தில் இந்த நூலைத் திருமணமாகிச் செல்லும் பெண்ணின் சீர்வரிசையோடு தருவார்கள். போஜன குதூகலம் என்றொரு நூலை தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் வெளியிட்டிருக்கிறது. அதில் தானிய வகைகள் பற்றி நிறைய அபூர்வமான தகவல்கள் இருக்கின்றன.

நள வீம பாகச் சாஸ்திரம் என்றொரு நூல் நூறு வருஷங்களுக்கு முன்பே வெளியாகியிருக்கிறது. தற்போது அச்சில் இருக்கிறதா என்று தெரியவில்லை. அது தான் நமது கான்ஸ்டபிள் தேடிக் கொண்டிருந்த புத்தகம்.

நூலகத்திற்கு வருபவர்கள் எல்லோரும் அறிவை வளர்க்க மட்டும் வருவதில்லை. இப்படி உடலை வளர்க்க வருபவர்களும் இருக்கிறார்கள் என்ற உண்மையைக் கான்ஸ்டபிள் வழியாகவே கண்டு கொண்டேன். இரண்டும் தேவையான விஷயங்கள் தானே.

மனிதன் எழுதக் கற்றுக் கொள்வதற்கு முன்பு சமைக்கக் கற்றுக் கொண்டிருப்பான். அந்த வரலாற்று உண்மையைக் கான்ஸ்டபிள் போன்றவர்கள் எப்போதும் நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறார்கள்.

••

0Shares
0