ஞாயிற்றுக்கிழமை தோறும் அவர்கள் குடும்பத்துடன் நூலகத்திற்கு வருவதைக் கண்டிருக்கிறேன்.
மூன்று சைக்கிளில் அவர்கள் நூலகத்தின் முன்பு வந்து இறங்குவதைக் காணுவதே மகிழ்ச்சியாக இருக்கும். அப்பா அம்மா இரண்டு மகள்கள் ஒரு பையன் எனக் குடும்பமாக நூலகத்திற்கு வருவார்கள்.
திருமண வீட்டிற்குப் போவது போல அழகான உடையுடுத்தியிருப்பார்கள். நூலகத்திற்கு இப்படிக் குடும்பமாக வருவது அவர்கள் மட்டுமே. பெரும்பாலும் ஒருவர் இருவராக நூலகத்திற்கு வருவதைக் கண்டிருக்கிறேன். ஆனால் ஒரு குடும்பமே நூலகத்திற்கு வருவது வியப்பாக இருக்கும். வாரந்தோறும் நூலகம் வருவதை ஒரு பழக்கமாக வைத்திருந்தார்கள்.
நூலகத்தினுள் அவரவர் விரும்பிய பகுதிக்குப் போய்ப் புத்தகம் தேடுவார்கள். யாரும் யாருடைய ஆலோசனையும் கேட்பதுமில்லை. சொல்வதுமில்லை. அதிலும் இரண்டு மகள்களும் எளிதில் புத்தகம் எடுத்து விட மாட்டார்கள். புத்தக அடுக்கிலே நின்று பாதி வெளிச்சத்தில் புரட்டி வாசிப்பார்கள். பிறகு சலிப்புடன் வைத்துவிட்டு வேறுபுத்தகத்தைப் புரட்டுவார்கள். இப்படி நீண்ட நேரத்துக்குப் பிறகு தான் புத்தகம் தேர்வு செய்வார்கள்.
கடைசித் தம்பி இதற்குள் வார இதழில் வெளியாகியுள்ள படக்கதையைப் படித்து முடித்திருப்பான். எல்லோரும் புத்தகம் எடுத்து முடிக்கும் வரை அவர்களின் தந்தை அமைதியாகக் காத்துக் கொண்டிருப்பார்.
திடீரென நூலகத்திற்குள் வானுலகிலிருந்து தேவதைகள் இறங்கி வந்து புத்தகம் தேடுவது போலவே இருக்கும். அவர்கள் புத்தகம் எடுத்துக் கொண்டு வெளியேறிப் போனதும் நூலகம் வெறிச்சோடி விடும்.
நூலகத்தில் புத்தகம் எடுத்துவிட்டு அவர்கள் அருகிலுள்ள ஐஸ்க்ரீம் கடையில் போய் உட்கார்ந்து ஆளுக்கு ஒரு ஐஸ்க்ரீம் சாப்பிடுவார்கள். எவ்வளவு சந்தோஷமாக ஞாயிற்றுக்கிழமையைக் கழிக்கிறார்கள் என்று தோன்றும்.
எனது நண்பன் பாபு அவர்களுக்குத் தெரிந்தவன். அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி போய்வருபவன். அவன் ஒரு நாள் சொன்னான்
“அவர்கள் வீட்டில் பிள்ளைகள் மூன்று பேருக்கும் மூன்று படிப்பு மேஜையிருக்கிறது. அதில் டேபிள் லேம்ப் கூட இருக்கிறது. அந்த வெளிச்சத்தில் தான் படிப்பார்கள்“ என்று சொன்னான்
கேட்கும் போது கனவு போல இருந்தது. அந்த நாட்களில் டேபிள் லேம்ப் எவரது வீட்டிலும் கிடையாது. படிப்பதற்கு இத்தனை சௌகரியம் எவர் செய்து தருவார்கள். ஆனால் அப்படி அழகான மேஜை விளக்கு வெளிச்சத்தில் அமர்ந்து படிக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது.
ஊரில் வசிக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களில் ஒரேயொரு குடும்பம் தான் நூலகத்திற்கு வருகை தருகிறது. பிள்ளைகளின் விருப்பப்படி புத்தகம் எடுத்துப் படிக்க வைக்கிறது. அதை விடவும் சௌகரியமாக அமர்ந்து படிக்க வசதி செய்து கொடுத்திருக்கிறது. சிலர் படிப்பின் முக்கியத்துவத்தை நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். ஏனோ பலரும் அதை உணரவேயில்லை.
நூலக உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு முறை வீதி வீதியாகப் போய் உறுப்பினர் சேர்க்கை செய்யலாம் என்று நூலகர் வேண்டுகோள் விடுத்தார்.
நானும் சில நண்பர்களும் வீதி வீதியாகப் போய் நூலகத்தில் உறுப்பினராகும்படி மக்களிடம் கேட்டுக் கொண்டோம். பலருக்கும் நூலகம் என்றால் என்னவென்றே தெரியவில்லை. எங்கேயிருக்கிறது என விசாரித்தார்கள். அதை விடவும் தடுப்பூசி போட வருகிறவர்களைப் பார்த்து மிரளுவது போல நடந்து கொண்டார்கள்.
ஒரு வீதியில் வடை போட்டு விற்கும் பாட்டி ஒருவர் தான் எங்களை அழைத்து “ஏம்பா என்னை எல்லாம் சேர்க்க மாட்டாயா“ என்று கேட்டார்
சந்தோஷத்துடன் அவரை உறுப்பினராக்கிக் கொள்வதாகச் சொன்னோம்
“நான் அந்தக் காலத்து ஐந்தாம் வகுப்பு. பொஸ்தகம் எல்லாம் படிப்பேன். ஆனா ஒண்ணு என்னாலே லைப்ரரிக்கெல்லாம் வர முடியாது. யாராவது புத்தகம் கொண்டு வந்து வீட்ல கொடுக்கணும். அது முடியுமா “என்று கேட்டார்
“அதெல்லாம் முடியாதும்மா“ என்றார் நூலகர்
“அப்போ என்ன மாதிரி வயசானவங்க வீட்டில் இருந்து படிக்க வழியே கிடையாதா“ என்று பாட்டி கேட்டது எங்களை உறுத்தியது.
“ஒரு காலத்தில் நூலகத்திலிருந்து தள்ளுவண்டி மூலம் வீடு வீடாகப்போய்ப் புத்தகம் இரவல் கொடுத்தார்களே“ என்று பாட்டி கடந்தகால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்
“அப்படிக் கொடுக்க எங்க கிட்ட ஆட்கள் இல்லை “என்று நூலகர் சொன்னார்
“இந்தத் தம்பி மாதிரி பசங்க கிட்ட குடுத்து விடுங்க“ என்றார் பாட்டி
ஒரு பாட்டி படிக்க ஆசைப்படுவது பெரிய விஷயம் என்பதால் நாங்களே கொண்டு வந்து தருகிறோம் என்று உறுதி அளித்தோம். அப்போது ஐந்துரூபாய் உறுப்பினர் கட்டணம். அந்தப் பாட்டி ஐந்து ரூபாய் கொடுத்து உறுப்பினராகிக் கொண்டார். அவர் ஒருவர் தான் ஆசையாக அழைத்து உறுப்பினராகிக் கொண்டவர்.
இதே நாளில் நூலகச் சேர்க்கைக்காக ஒரு தனியார் பள்ளிக்கு சென்றோம். தலைமை ஆசிரியரிடம் பேசி மாணவர்களை நூலக உறுப்பினராக்கும்படி சொன்னோம்
“பாடப்புத்தகம் படிக்கவே நேரமில்லை. கண்ட புத்தகம் எல்லாம் படித்தால் பசங்க கெட்டுப்போயிருவாங்க“ என்றார் தலைமை ஆசிரியர்.
“நீங்களே இப்படிச் சொன்னா எப்படிச் சார். நாங்களும் ஸ்கூல்ல படிச்சி தானே வந்துருக்கோம் “என்றோம்
“பசங்க கிட்ட காசு கிடையாது சார். வீட்ல கேட்டா திட்டுவாங்க “என்று தலைமை ஆசிரியர் பேச்சை மாற்றினார்
நாங்கள் எவ்வளவோ போராடியும் பள்ளி மாணவர்களை நூலக உறுப்பினராக்க அவர் சம்மதிக்கவில்லை.
அப்போது நூலகர் ஆதங்கத்துடன்
“சரி சார். மாணவர்களை விடுங்கள். உங்க ஸ்கூல் டீச்சர்ஸ் எல்லோரையும் உறுப்பினர் ஆக்க உதவி செய்யுங்கள்“ என்றார்
“அது நீங்களே கேட்டுப்பாருங்க “என்று நழுவிக் கொண்டார் தலைமை ஆசிரியர்
அந்தப் பள்ளியில் பதினெட்டு ஆசிரியர்கள் வேலை செய்தார்கள். அலுவலகப் பணியாளர்கள் ப்யூன் என மொத்தமாக இருபத்தியாறு பேர் வேலை செய்தார்கள். அதில் ஒருவர் கூடப் பொது நூலகத்தில் உறுப்பினராக இல்லை. அதை விடவும் ஐந்து ரூபாய் கொடுத்து உறுப்பினராக ஒருவரும் முன்வரவில்லை.
ஒரு ஆசிரியர் நாங்கள் தொல்லை செய்வதாகக் கோவித்துக் கொண்டார். அந்தப் பள்ளியில் மாணவர்கள் படிக்க நூலகம் எதுவுமில்லை. ஆசிரியர்களுக்கும் படிப்பதில்லையே என்று கேட்டதற்கு “இருக்கிற வேலையைப் பார்க்கவே முடியலை சார். படிக்கவேண்டியதெல்லாம் காலேஜ்ல் படிச்சாச்சி“ என்று கோபமாகச் சொன்னார் இன்னொரு ஆசிரியர்.
மூன்று நாட்கள் சுற்றி அலைந்த பிறகு நாங்கள் ஒரு உண்மையைக் கண்டுபிடித்தோம். இலவசமாக உறுப்பினர் ஆகிக் கொள்ளுங்கள் என்று சொன்னாலும் பொதுமக்கள் உறுப்பினர் ஆக மாட்டார்கள். இதைவிடவும் வேலையில்லாதவர்கள் தான் நூலகத்தில் சென்று படிக்கிறார்கள் என்ற பொதுப்புத்தி மக்களிடம் இருக்கிறது.
சிலர் “படிச்சி என்னஆகப்போகுது சார்“ என்று சலித்துக் கொண்டார்கள். சிலரோ “கண்டபுஸ்தகம் படிச்சா மண்டைக் குழப்பம் வந்துரும்“ என்றார்கள். புத்தகங்களின் மீதான வெறுப்பு விதவிதமாக உள்ளது.
கேரளாவில் இதற்கு மாற்றாகச் சிறிய கிராமங்களில் கூட நூலகம் அவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறது. நிறைய உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அன்றாடம் நூலகம் போவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகமெங்கும் புத்தகக் கண்காட்சிகளின் வருகையும், புத்தகம் குறித்துத் தொடர்ந்து பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருவதால் இன்று நிறையப் புதுவாசகர்கள் உருவாகியிருக்கிறார்கள். நிறைய ஆசிரியர்கள் படிக்கிறார்கள். வகுப்பறையில் படித்த விஷயங்களை அறிமுகம் செய்கிறார்கள். பள்ளியிலே புக் கிளப் நடத்துகிறார்கள். ஆனால் பொதுநூலகத்துடன் மாணவர்களுக்கு உள்ள இடைவெளி அப்படியே இருக்கிறது.
சொத்து வரி அல்லது வீட்டு வரியில் 10 விழுக்காடு நூலக வரியாக வசூல் செய்யப்படுகிறது. இதற்கு 1948ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ்நாடு பொதுநூலகச் சட்டம் வழி செய்கிறது. இந்த நிதியோடு அரசின் மானியமும் இணைந்து கொண்டு நூலக நிதி உருவாக்கப்படுகிறது. தங்களின் பங்களிப்பு அரசு பொதுநூலகத்திலிருக்கிறது என்பதே பொதுமக்களுக்குத் தெரியாது.
ஒரு காலத்தில் ரயில் பயணத்தில் நிறையப் பேர் கையில் புத்தகம் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். பேருந்தில் கூவிக்கூவி டைம்பாஸ் இதழ்களை விற்பார்கள். ஆனால் செல்போனின் வருகைக்குப் பிறகு ரயிலில் பேருந்தில் புத்தகம் படிப்பவரைக் காணவே முடிவதில்லை.
நம்மை விடத் தொழில்நுட்பத்தில் மிகவும் வளர்ச்சியடைந்த ஜப்பானில் ரயில் பயணத்தின் போது எழுபது சதவீதம் பேர் புத்தகம் கையுமாக இருக்கிறார்கள். தியானம் செய்வது போல அத்தனை ஈடுபாட்டுடன் படிக்கிறார்கள். இதே செல்போன் அவர்களிடமும் இருக்கத்தானே செய்கிறது. ஏன் அவர்கள் புத்தகங்களைத் தேர்வு செய்கிறார்கள். அது ஒரு பண்பாடு.
பொதுவெளியில் செல்போன் ஏற்படுத்திய பாதிப்பில் முக்கியமானது பொதுநூலகங்களை நோக்கி இளைஞர்களை வரவிடாமல் தடுத்து வைத்திருப்பதாகும். பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் தானே இளைஞர்கள் நூலகத்தை நோக்கி ஈர்க்கப்பட்டார்கள். தயங்கித் தயங்கி நூலகத்தினுள் வந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை வளர்த்துக் கொண்டார்கள். இன்று அந்த நகர்வு திசைதிரும்பிப் போய்விட்டது. அதை நினைக்கும் போது வருத்தமாகவே இருக்கிறது
**