நெடுங்குருதி இரண்டு விமர்சனங்கள்

உறுபசி கொண்ட ஊர் – வேம்பலை
ஜெயந்தி சங்கர்
ஊரையும் உணர்வையும் பாத்திரங்களாக்கும் வித்தை எஸ் ராவின் எழுத்துக்குப் பலம். மூன்று தலைமுறைகளைத் தொட்டுச் செல்லும் ‘நெடுங்குருதி’யின் முக்கிய கதாபாத்திரம் வெம்மை என்றால் ‘உறுபசி’யில் காமம். நூலாசிரியருக்குப் பிடித்தமான வ்ய்யில் அவரின் எளிய நடையைத் தொடர்ந்து நிழலெனக் கூடவே வருகிறது. வெயில் மீதான எஸ் ராவின் காதல் உறுபசையில் வெளிப்படும் இடங்களெல்லாம் கதையோடு ஒட்டாமல் துருத்திக்கொண்டு நின்றிருக்கும். ஆனால், அதற்கு நேர்மாறாய் ‘நெடுங்குருதியில்’ பின்னிப் பிணைந்து கிடக்கிறது. வெயில் மீது தன்க்கிருக்கும் ஆழ்ந்த ஈடுபாட்டை அனுபவித்து வெளிப்படுத்திடக் கிடைத்த பெரிய வாய்ப்பாக இந்நாவலை சிறிய வாய்ப்பாக வெயில் திரைப்பட விமர்சனத்தையும் (ஜனவர் 07 – உயிர்மை) மிகச்சரியாகப் பயன் படுத்திக் கொண்டுவிடுகிறார் என்பதை நாம் சுவாரஸியத்துடன் அவதானிக்க முடிகிறது.

இந்நாவலை படித்து முடிக்கும் வரையில் நமக்குள்ளும் வெம்மை படர்வதை உணர முடியும். வெய்யிலில்லாமல் வேம்பலை இல்லை. சரி, ஆனால் படித்து முடிக்கும் போது ‘வேம்பலை’யில்லாமல் பூமியில் வெயிலே இருக்காதோ என்ற பிரமை ஏற்பட்டு விடுமளவிற்கும் வேம்பலை என்றால் வெயில், வெயில் என்றால் வேம்பலை என்று தீர்மானித்து விடக் கூடிய மனநிலைக்கு நம்மை கொணர்ந்து விட எஸ் ராவால் முடிகிறது. வேம்பலையைப் பிரிந்த நாகு, வசந்த போன்ற பாத்திரங்களின் ஊர்பற்றிய உணர்வுகளுடன் நம்மால் எளிதில் பொருந்தி விட முடிகிறது. ஏனென்றால் ஒவ்வொருக்குள்ளும் ஏதோ ஒரு ஊர் பால் இத்தகைய ஒரு பற்றுதல் இருந்து தானே விடுகிறது.

கிராமம் பரிச்சயமில்லாத என்னைப் போன்றவர்களுக்கு நாவலின் துவக்கத்திலிருந்தே புதிய ஓர் உலகதிற்குள் பிரவேசிக்கும் அனுபவம் உண்டாகவே செய்யும். வெய்யில் உக்கரமேறிப் போன ‘வேம்பலை’ என்ற கிராமம் தான் கதையின் முக்கியப் பாத்திரமும் முக்கியக் களமும். அதே நேரத்தில் இரவில் பிசுபிசுக்கும் இருளும், வெயிலுக்கு இணையான கதைஞரின் கவனத்தை ஆங்காங்கே பெற்று விடுகிறது. எந்த ஒரு கதாபாத்திரத்தையும் சுற்றி வராமல் நிகழ்வுகள் வேம்பலையைச் சுற்றியே வருகின்றன.
குருதிக் கறையும், அதன் ருசியைக் கண்ட நிலமும், சதா முறுக்கேறித் திரியும் அதன் வாலிபர்களும் திடீரென்று காணாமல் போகும் ஆண்களை நினைத்துக் கண்ணீர் விடும் பெண்களும் என்று நெடுங்குருதியில் மக்கள் அலைந்தபடியிருக்கிறார்கள். கதையில் நெடுக படிந்திருப்பது வேம்பலையின் வெக்கையுடனான நிழல் மட்டுமல்ல, வேண்டாமென்று ஊரை விட்டு ஓடிச்சென்று ஒளிந்து கொண்ட எண்ணற்ற நபர்களின் இழப்புகளும், தூரத்தே இருக்கும் போது ஊரின் பால் அவர்கள் கொள்ளும் ஏக்கமும் தான். ஏனென்றால், ஊரை தாம் வாழும் நிலமாகப் பார்க்காமல் உறவாகப் பார்க்கிறார்கள் அம்மக்கள். ஊரைத் தம் சொந்தமாகக் கருதும் அவர்களால் தம் ஊருடன் வெயிலுடன் கோபிக்கவும் கொஞ்சவும் முடிகிறது.

கத்தியை எடுத்துக் காட்டி வெயிலோடு சண்டைக்குக் கிளம்பிவிடும் அளவுக்கு வேம்பலையின் மக்களால் சூரியனையும் அது கக்கும் வெய்யிலையும் கூட தமதென்று எற்று இயைந்து விட முடிவது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆசிரியர் சொல்வது போல பெரும்பாலும் ‘ஊர்ந்தும்’ சிலவேளைகளில் ‘பாம்பென நெளிந்தும்’ செல்லும் வெய்யிலைக் ‘குடித்து’ ஆட்கள் வாழவும் கருவிலிருந்து சிசுக்கள் வளரவும் செய்கின்றனர். அவ்வாறு வெயிலைக் குடித்தபடியே வெம்மையேறியிருக்கும் இவர்கள் மழைக்குப் பிறகான காலையில் குளிர்மை கொண்டு புன்னகைத்தபடியே இருக்கிறார்கள்.

தம் வீட்டின் கால்நடைகளை தங்களின் பிள்ளைகளைப்போல் நேசித்திடும் வேம்பலையின் மக்கள் விசித்திரமானவர்களாய் இருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கைகள், வழிபாடுகள் அனைத்துமே ஏன் பல்வேறு அமானுஷ்யங்களும் கூட நான் இதுவரை கேட்டிராதவையாகவே இருக்கின்றன. ஆசிரியர் மிகுந்த கலையுணர்வோடு சொன்னபோதிலும் கூட அம்மக்களின் வறுமையானது மனதை மிகவும் கனக்கத்தான் செய்துவிடுகிறது. பரதேசிகள் இருவரும் பசி மிகுந்த நேரத்தில் ஊரில் உணவு எதுவும் கிடைக்காது ஏமாற்றத்துடனும் கோபமாகவும் ஊரை விட்டுப் போகும் போது மனதைப் பிசைகிறது.

எறும்புகள் குறித்து ஆதிலட்சுமி நாகுவிடம் சொல்வதெல்லாம் அவனால் நம்ப முடிந்த அளவிற்கு நம்மாலும் ஒன்றிவிட முடிகிறது. குறீயீடுகளாக பறவைகளும் புழுக்களும் கதையோட்டத்திற்கு சுவாரஸியத்தை மட்டுமில்லாமல் பல்வேறு அனுமானங்களையும் விட்டுச் செல்கின்றன. ஆதிலட்சுமி, நீலா, வேணி, பக்கீர் போன்ற பாத்திரங்கள் ஒவ்வொன்றும் தனித்துவத்துடன் உலவுகின்றன. சிறுவயதில் நாகுவின் பெற்றோர் சண்டை போட்டுக் கொள்ளும் இடங்களும் நிகழ்வுகளும் கண்முன் நடப்பதைப் போலவே விரிகின்றன. ப்க்கீருக்கு என்னதான் ஆயிற்று என்று கடைசி வரை சொல்லாமல் ஊகங்களுக்கு விட்டு விடுகிறார் ஆசிரியர். பக்கீரின் மனைவி தன் கணவனுக்காகக் காத்திருக்காமல் வாழ்க்கையை நடைமுறையில் ஏற்றுக் கொண்டு வாழ்ந்து விடுகிறாள்.ரத்தினாவதி கடைசி வரை நாகுவை நினைத்தபடியே வாழ்க்கையின் ஓட்டத்தோடு ஓடி, பாலியல் நோய் பீடித்து, இறுதியில் தற்கொலை செய்து கொள்வது பரிதாபமாக இருக்கிறது. குழந்தைமை மறுக்கப்பட்ட திருமால் சூழ்நிலையின் குழந்தையாகிவிடுவதும் இயல்பாகச் சொல்லப்பட்டுள்ளது. பவுலின் கடந்த காலம் திருமலுக்கு ஏற்படும் பாதிப்பை நமக்குள்ளும் விட்டுச் செல்லத் தவறவில்லை. இறையியல் படிப்பை மேற்கொண்ட திருமால் மற்றும் பவுல் ஆகியோரின் உள்மனப் போராட்டங்களும் நம்பகத்தன்மையோடு நகர்கின்றன.

கதையை ஆசிரியர் உண்மைக்கு மிக நெருங்கி சொல்வது மாதிரியும் அதே வேளையில் அதை விட்டு தூரத்திலிருந்து சொல்வது மாதிரியும் உணர முடிவது ஒரு வித்தியாசமான அனுபவம். ஒரு நவீன கவிதைக் கொடுக்கும் உள்ளார்ந்த ஒரு லயம் மற்றும் அனுபவதிற்கிணையான ஓர் அனுபவத்தை கொடுத்து விடுகிறது. அது மட்டுமல்லாமல் ஒரு வாழ்வியலை கலை நேர்த்தியோடு சொல்வதால் இந்நாவல் தமிழின் முக்கிய நவீன நாவல் பட்டியலில் நிச்சயம் அதற்கு இடம் கொடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. நாவல் என்ற பொதுவான வடிவத்திலிருந்து கொஞ்சம் விலகி சில சோதனை முயற்சிகளில் ஈடுபடும் எஸ் ரா உறுபசியிலும் சரி, நெடுங்குருதியிலும் சரி நல்லதொரு வாசிப்பனுபவத்தினைக் கொடுத்து விட்டே செல்கிறார்.

pithcher plant, venus flytrap போன்ற மாமிசமுண்ணும் செடிகளை (carnivores) நினைவு படுத்துகிறது தன் நாவால் சுழற்றிச் சுழற்றி தன்னுள் மக்களை இழுத்துக் கொள்ளும் வேம்பலை. ஊரின் மீதும், தன் அய்யாவின் மீதும் தனக்கிருக்கும் பற்றை வெளிப்படுத்திக்கொண்டு வசந்தா பேசிடும் வேளையில் அவளிடம் “ஏய் வசந்தா, உங்கப்பா ஜாடையிலேயே, அவரப்போலவே கால்ல வடுவோட திருமால்னு உனக்கொரு அண்ணன் தூரத்துல வடக்க இருக்காண்டி”, என்று சொல்லிடத் தோன்றுகிறது. வேம்பலையை நோக்கிப் பயணப்படும் அவ்வேளையில் வசந்தா ஓரகத்தி பெற்றுடுத்த தன் கணவனின் குழந்தைக்கு ஆசையாக ‘நாகு’ என்று தன் தந்தையின் பெயரைச் சூட்டுவதும் அதைத் தாமே வளர்க்கலாம் என்று சொல்லுவதும் இன்னொரு ‘நாகு’ உருவாகப் போகிறான் என்று குறிப்பால் உணர்த்துவதைப் போலிருக்கிறது. வேம்பலையைப் போலவே மேலும் மேலும் நாகுக்ககளை உருவாக்கும் தாகமானது ஆசிரியருக்கும் தீராது தொடர்ந்திடுமோ……

 ***

கண்ணீருக்கும் குருதிக்கும் இடையில்  –   ஜ.சிவகுமார் 

நீண்ட வெயிலும் வேம்புமரங்களும் நிறைந்த வேம்பலைக் கிராமத்தைக் களமாகக் கொண்டு நெடுங்குருதி நாவல் எழுதப் பட்டுள்ளது. மிக நீண்ட வெயிலாலும் மழையாலும் பனியாலும் பொழியப்படுகின்ற வேம்பலைக் கிராமம் பருவக் காலங்களுக்கு ஏற்ப இடைவெளி கொள்கிறது. ஆனால், வேம்பர்களின் வாழ்வில் கண்ணீருக்கும் குருதிக்கும் இடைவெளியோ ஓய்வோ இல்லை. இந்தச் துர்பாக்கியம் அந்தக் கிராமத்துக்கு வருபவர்களையும் (பக்கீரின் மனைவி) பிடித்துக்கொள்கிறது. அந்த ஊரிலிருந்து வெளியேறியவர்களையும் (நாகுவின் குடும்பம்) எங்குச் சென்றாலும் விடாமல் தொடர்கிறது.

நெடுங்குருதி நாவல் பற்றி ராமகிருஷ்ணன் தீராநதி நேர்காணலில் பின்வருமாறு பேசுகிறார். ‘என்னைப் பொறுத்தமட்டில் இந்த நாவல் ஒரு மூர்க்கமான மிருகத்தைப் போல் தன் விருப்பப்படி சுற்றியலைகிறது. வெயிலைக் குடித்துறங்கிய மனிதர்கள் தீமையின் உருக்களைப் போல் நடமாடுகிறார்கள். வாழ்வைப் பற்றிய உயர்வெண்ணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை சாவைக் குறித்த புலம்புதல்களும் இல்லை. அந்த நிலவியல் வாழ்வென்பதே ஒரு மாயம்தான்’என்று கூறுகிறார்.

நாவல் நாகு என்னும் பதினொரு வயது சிறுவனின் கதையாகத் தொடங்குகிறது. நாகுவின் தந்தை வேலை செய்ய மனமின்றி ஊர் சுற்றுகிறார். அம்மா, அக்காவின் உழைப்பில்தான் குடும்பம் நடக்கிறது. நாகுவின் அக்கா நீலா இறந்த பிறகு மற்றொரு அக்காவான வேணிக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர். பின்னர் நாகுவின் குடும்பம் அவனது அம்மாவின் ஊருக்குச் சென்று குடியேறுகிறது. இவர்கள் வேம்பலையின் கசப்பைத் தன்னோடு கொண்டு சென்றபடி இருக்கின்றனர். நாகு வளரும் போதே அவனது அம்மா இறந்துவிடுகிறாள். நாகு தனது தாத்தா வீட்டிலேயே வளர்கிறான்.

நாகு பெரியவனாகித் தரகுத் தொழிலில் ஊர் சுற்றும்போது பாலியல் தொழில் செய்யும் இரத்னாவதியைச் சந்திக்கிறான். நாகுவின் மூலம் இரத்னாவதி திருமாலைப் பெற்றெடுக்கிறாள். தன் மகனைப் படிக்கவைக்க வேண்டுமென்ற ஆசை ரத்னாவதிக்கு இருக்கிறது. வேதக்காரர்கள் பள்ளியில் அவனைச் சேர்த்த பிறகும் அவள் தொழிலை விடமுடிவதில்லை. வயதாகி, அனாதையாக ஒரு விடுதியின் அறையிலேயே தூக்கு போட்டுக்கொண்டு இறக்கிறாள். திருமால் வளர்ந்த பிறகு கிறித்துவப் பாதிரியார் பயிற்சிக்குச் சென்று, மார்க்சிய உந்துதலால் மனம் பிடிக்காமல் திரும்பி விடுகிறான்.

நாகு முறையாகத் திருமணம் செய்துகொள்ளும் மல்லிகாவுக்கு வசந்தா பிறக்கிறாள். அப்பொழுது குற்றப் பரம்பரைச் சட்டத்தின் பேரில் காவல்துறை வேம்பர்களை (பிரான்மலை கள்ளர்களை) முடக்குகிறது. இதனால் காவலர்களுக்கும் வேம்பர்களுக்கும் இடையில் நடைபெறும் மோதலில் நாகு இறக்கிறான். மல்லிகா நாகுவின் அப்பாவுடன் வேம்பலைக் கிராமத்திலேயே வசிக்கிறாள். நாகுவின் அப்பா இறந்தபிறகு தன் ஊர் போகும் மல்லிகா வசந்தாவை விடுதியில் சேர்த்துப் படிக்க வைக்கிறாள். வசந்தாவும் அவளது நெருங்கிய தோழியும் ஒருவனைக் காதலிக்கின்றனர். இதனால் வீடு திரும்பும் வசந்தாவுக்குத் திருமணம் முடித்து வைக்கின்றனர். கணவனோடு சண்டை போட்டுத் தாய் வீட்டுக்கு வரும் வசந்தா பின் சமாதானமடைகிறாள். தனது அய்யாவின் கிராமமான வேம்பலைக்குச் சென்று கணவனோடு வாழ்வதாகக் கூறுகிறாள். இறையியல் படிப்பை வெறுக்கும் திருமால் பிரான்சிஸ் பெல்காமிற்குச் செல்வதோடு நாவல் முடிகிறது.

தாங்களாகச் செய்யும் கொலை, ஆத்திரத்தால் செய்யும் அறிவற்ற செயல்கள் இவற்றால் அவஸ்தைப்படும் வேம்பர்களின் கதையை வேம்பலைக் கிராமத்தையும் வெயிலையும் மைய மிட்டுச் சொல்கிறது இந்நாவல். வேம்பர்களின் வாழ்க்கையும் களவுத் தொழிலின் நுட் பங்களும் சாகசமாக மட்டுமல்லாமல் சாபமாகவும் சொல்லப் படுகின்றன.

நாவலில் வரும் மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்கிறபோது அம்மனிதர்களுடன் பிணைப்பு கொண்ட இயற்கைக் காரணி களையும் சொல்கிறார். வெயில், மழை, பனி, இருட்டு, வெளிச்சம் என எல்லாமே மனிதர்களை விடவும் நுட்பமாகவும் நேர்த்தியாகவும் சொல்லப்பட்டுள்ளன. ‘சுனையில் நீர் சுரப்பது போன்ற சத்தத்தோடு வேம்பின் காற்று கசிந்து கொண்டிருக்கிறது’ என்பது இதற்குச் சான்று. நாவலில் மாயாவாதத் தன்மையும் யதார்த்தமும் கலந்து நாவலை முன்னகர்த்துகின்றன. ஆதிலட்சுமி ஆள்காட்டி விரலின் ரேகைகளில் ஒளி யேற்றுகின்றன. கற்களைத் தேய்த்து மாம்பழ வாசனை வரச்செய்வது, சென்னா கிழவியின் ஆவி தாகம் கொண்டு மக்கள் பாத்திரங்களில் வைக்கும் நீரையருந்துவது, நாயக்கர் வீட்டுப் பசு ஆகாயத்தில் பறப்பது என நாவல் முழுதுமே அமானுஷ்ய சம்பவங்கள் பல நிறைந்துள்ளன.

வேம்பர்களின் வாழ்வை வேம்பலைக் கிராமத்தோடு பதிவு செய்யும் நாவல் வேம்பர்களின் பேச்சுமொழியில் உரையாடல்களைப் பதிவுசெய்யவில்லை. தனது விவரிப்புகளுக்குப் பயன்படுத்தும் மொழியையே நாவலாசிரியர் பாத்திரங்களின் உரை யாடலுக்கும் பெரும்பாலும் பயன்படுத்துகிறார். வேம்பர்களின் வாழ்வை மொத்த சமூகத்திற்குமான வாழ்வியலாகப் பொதுமைப்படுத்துவதற்கான எத்தனிப்பாக இம்மொழி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

**

0Shares
0