நெடுந்தனிமை

புத்தனுக்குப் போதி மரத்தடியில் ஞானம் கிடைத்தது என்பார்கள். இந்த இரண்டு மரங்களின் புகைப்படங்களும் எனக்கு உலகின் தொன்மையை, தனிமையை எப்போதும் நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கின்றன.

இரண்டும் சாதாரணமான மரங்கள் அல்ல. தன்னளவில் மிகத் தனிமையான மரங்கள். இதைப்போல இன்னொரு மரம் உலகில் இல்லை என்பதே இதன் சிறப்பு. அப்படி என்ன இருக்கிறது என்று தானே யோசிக்கிறீர்கள்.


ஒன்று ஜெனரல் ஷெர்மான் எனப்படும் உலகிலே மிக வயதான மரம். இதன் வயது 2200 வருசங்களுக்கும் மேல் என்று சொல்கிறார்கள். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள யாஸ்மைட் தேசியப் பூங்காவில் உள்ளது. 2100 டன் எடையும் 275 உயரமும் கொண்ட இந்த ரெட்வுட் வகை மரமே இன்று வரை உலகில் உள்ள மரங்களில் மிகவும் வயதானது. இந்த மரம் இரண்டாயிரம் வருசத்தின் மனித வாழ்வைக் கண்டிருக்கிறது.

எத்தனை புயல்மழைகள், எத்தனை கோடைகள் கண்டிருக்கும். எவ்வளவு மனிதர்கள் இதைக்கடந்து போயிப்பார்கள். மனிதவாழ்வோடு ஒப்பிடும் போது இந்த மரம் மகத்தானது. இரண்டாயிரம் வருசத்தின் முந்தைய மனித வாழ்க்கைக்கு எலும்புத்துண்டுகளைத் தவிர வேறு சாட்சிகள் இல்லை. ஆனால் இந்த மரம் இன்றும் உயிர்ப்போடு நின்று கொண்டிருக்கிறது.

ஒவ்வொருமுறை இதைக் காணும் போது அடையும் வியப்பு சொற்களில் அடங்காதது. அமெரிக்கா என்ற நிலப்பரப்பில் நடைபெற்ற அத்தனை மாற்றங்களுக்கும் உள்ள தொன்மையான சாட்சி இந்த மரம் தானில்லையா?

காலத்தின் எல்லாச் சீற்றங்களையும் கடந்து இம் மரம் தனித்து நின்று கொண்டிருக்கிறது என்றால் ஏதோவொரு கருணை இந்த மரத்தின் மீது கவிந்திருக்கிறது என்று தானே அர்த்தம். நூற்றாண்டிற்குள் மனித வாழ்க்கை கொள்ளும் நினைவுகளும் கொந்தளிப்புகளும் சொல்லி முடியாமல் இருக்கின்றன. என்றால் இரண்டாயிரம் வருடத்தின் நினைவுகளை இந்த மரம் தனக்குள் எப்படிப் பொதித்து வைத்திருக்கும். சரித்திரம் கல்லில் எழுதப்பட்டது மட்டுமல்ல. உயிரோடு கண் முன்னே காட்சியளிக்ககூடியது என்பதற்கு இது சாட்சியாக இருக்கிறது.

இந்த மரத்தைக் காணும்போது யாரோ ஒரு அவதூதனைக் காண்பது போலவே இருக்கிறது. வார்த்தைகளால் எதையும் கற்றுக் கொடுக்காத போதும் மரம் தன் இருப்பின் வழியாகவே வாழ்வு மகத்தானது என்பதை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கிறது .

இரண்டாயிரம் வருசம் என்பதை எண்ணிக்கையாகத் தவிர வேறு எப்படி கற்பனை செய்வது? எத்தனை பகலிரவுகள் கடந்து போயிருக்கின்றன. எத்தனை மனித கண்கள் இம்மரத்தை தீண்டியிருக்கின்றன. யாவும் கடந்து மரம் ஆகாசம் நோக்கி உயர்ந்தபடியே தான் தனியாள் என்று தனக்குத்தானே சொல்லியபடியே நின்று கொண்டிருக்கிறது
உலகின் மூத்த உயிரினம் என்ற வகையில் இதை ஒவ்வொரு நாளும் மனதிற்குள் வணங்குகிறேன். எங்கோ கண்காணாத இடத்தில் இருந்த போதும் இம்மரம் உலகிற்கு தன்னால் ஆன செய்தியை சொல்லிக் கொண்டேதானிருக்கிறது. அந்த செய்தி இயற்கை பெருங்கருணை கொண்டது என்பதே.

*
இன்னொரு மரம் தனிமையின் உருவகம் போன்றிருக்கிறது. நிஜம். ஆப்ரிக்காவின் சகாரா பாலைவனத்தில் நானூறு கிலோமீட்டர் சுற்றளவில் சுடுமணலைத் தவிர வேறு எதுவுமில்லை. கானல் மட்டுமே அலைந்து கொண்டிருக்கிறது. காற்றின் பேரோசை எங்கும் எதிரொலிக்கின்றது. அவ்வளவு நீண்ட பாலையில் இந்த ஒரேயொரு மரம் தனித்து நிற்கிறது.

சகாராப் பாலைவனத்தைக் கடக்கும் பயணிக்கு நம்பிக்கை அளிக்கும் விருந்தாளி போல இந்த ஒற்றை மரம் தனியே நிற்கிறது. ஆப்பிரிக்காவின் ஆதிகுடிமக்கள் இதைத் தங்கள் முன்னோர்களின் ஆவி என்று கருதுகிறார்கள். காரணம் ஈரமற்ற பாலை நிலத்தில் புல் பூண்டு கூட முளைக்க முடியாது. ஆனால் இந்த மரம் வேர்விட்டு வளர்ந்து நிற்கிறது என்றால் அது தங்களின் இனத்தை காப்பதற்காக மட்டுமே என நம்புகிறார்கள்.

உண்மையில் தொல்குடியின் மூதாதை போலவே மரம் தோற்றமளிக்கிறது. இன்று ஆப்பிரிக்காவின் பல இனக்குழுக்கள் தங்கள் மொழி அழிக்கப்பட்டு காலனிய அரசாட்சியின் மொழியே பேசும் நிலை உருவாகியிருக்கிறது. மொழியை இழந்து போன தங்களது இனக்குழுவின் அடையாளம் மௌனமாக தனித்திருக்கும் அம்மரம் என்கிறார்கள் ஆப்பிரிக்க எழுத்தாளர்கள்.

ட்ரீ ஆப் டெனரே எனப்படும் இந்த மரம் பூமியின் 120 அடிக்குள் வேர் விட்டுள்ளது என்று தாவரவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளார்கள். எப்படி இந்த ஒரு மரம் மட்டும் தனித்து உயிர்வாழ்கிறது என்பது இன்றும் வியப்பாகவே உள்ளது.

பத்து நிமிசம் வீட்டில் தனித்து இருப்பதற்கே சலித்துக் கொள்கிறோம். ஆனால் இந்த மரமோ நானூறு கிலோமீட்டர் சுற்றளவில் வேறு சிற்றுயிர் கூட இல்லாமல் வருடக்கணக்கில் தனித்து நிற்கிறது.

சில மாதங்களுக்கு முன்பாக ஒரு ரஷ்யத் திரைப்படம் பார்த்தேன். அதில் பிடிபட்டு தண்டனைக்காக அனுப்பபட்ட ராணுவவீரன் ஒருவன் சைபீரியாவிலிருந்து தப்பி ஜெர்மன் செல்வான். அவனது நீண்ட பயணமே படம்

தப்பியோடும் கைதிக்கு உதவி செய்யும் வயதானவர் ஒரு யோசனை சொல்வார். உறைபனி பீடித்த பகுதியில் நாள் கணக்கில் பயணம் செய்யப்போகிறாய். வழியில் நீ ஒரு மனிதனைக் கூட காணமுடியாது. வெண்பனியும், குளிர்காற்றையும் தவிர உனக்குத் துணையே இல்லை. அதனால் சில நாட்களுக்குள் உன் நாவு ஒடுங்கிவிடும். அப்படியே விட்டுவிட்டால் உன் குரல்வளை இறுகிக் கொண்டுவிடும். அதனால் நீ வழியில் தென்படும் மரங்களிடம் பேசு. உன் வேதனைகளை அதோடு பகிர்ந்து கொள் என்பார்.

அது போலவே தப்பியோடும் ராணுவ வீரன் உறைபனியில் தனித்திருந்த மரத்தைக் கண்டு அருகில் சென்று நண்பனோடு பேசுவது போல மிக அந்நியோன்யமாகப் பேசுவான். ஆச்சரியமான நிகழ்வு அது. ஜப்பானில் விறகுவெட்டிகள் மரத்தை வெட்டுவதற்கு முன்பு மரத்திடம் அனுமதி கேட்பார்கள் என்பது போல இது ஒரு ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் விடுதலையுணர்வு.

பாலையில் தனித்திருக்கும் மரத்தை சில வருடங்களுக்கு முன்பு குடிவெறியில் வந்த டிரக் டிரைவர் ஒருவன் இடித்துத் தள்ளி சிதைந்து விட்டான். இப்போது அந்த மரம் இருந்த இடத்தை சுற்றி காப்பு வேலியிட்டிருக்கிறார்கள்.

தனிமையின் மரம் எப்போதும் போலவே பாலையின் முடிவற்ற விசித்திரங்களைக் கண்டபடியே காற்றின் வேகத்தையும் சுழன்று அடிக்கும் மணலையும் இரக்கமற்ற சூரியனையும் அரவணைத்துக் கொண்டு உலகைப் பார்த்தபடியே உள்ளது. ஒவ்வொரு முறை இதை உற்று நோக்கும் போதும் ஒரு கவிதையைப் போல இம்மரம் பரவசத்தையும் புதியதொரு புரிதலையும் உருவாக்குகிறது.

**
சிறுவயதில் பேருந்தில் பயணம் செய்யும் போது கண்ணில் இருந்து ஒடிமறையும் மரங்களை வேடிக்கை பார்ப்பது எனக்கு விருப்பமானது. எப்படி இந்த மரங்கள் இவ்வளவு வேகமாக ஒடுகின்றன என்று யோசித்திருக்கிறேன்.

என் பால்யம் வேம்பின் நிழலில் கழிந்தது. வேப்பம்பழங்களை தின்று கசப்பேறியிருக்கிறது என் நாவு. வேம்பை எங்கே கண்டாலும் நெருங்கமான நண்பனைக் காண்பது போன்ற அகஉணர்வு உண்டாகிறது.

சாலையோரம் உள்ள மரங்களில் இடப்பட்ட எண்களை எண்ணிக்கொண்டே பேருந்தில் பயணம் செய்வேன். யார் இந்த மரங்களுக்கு எண்கள் இட்டார்கள் என்று அப்போது தெரியாது. மாறாக எப்படி எண்களின் வழியே மரத்தை பிரித்து அடையாளம் காணமுடியும் என்ற நினைப்பே மேலோங்கியிருக்கும்.

எண்கள் வெறும் கணக்கு வழக்கிற்கானவை மட்டுமே. பிறகு ஒரு நாள் கையில் செதுக்கு உளியும் பெயிண்ட் டப்பாவுமாக ஒரு ஆள் மரங்களுக்கு எண் இட்டுக் கொண்டிருந்ததைக் கண்டு எங்கிருந்து துவங்குகிறது முதல் மரம் என்று கேட்டேன். அவர் தனக்கு தெரியாது என்றபடியே எங்கோ இருக்குமில்லையா என்று சிரித்தார்.
பின்னாளில் இது பற்றி வாசித்து அறிந்த போது வியப்பாக இருந்தது. சாலையோரம் உள்ள மரங்களுக்கு எண்கள் இடவேண்டும் என்ற யோசனையை முன்மொழிந்தவர் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த ஒமந்தூர் ராமசாமி ரெட்டியார்.

அவர் முதல்வராக இருந்த போது விவசாயத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் லண்டனில் நடைபெற இருந்த விவசாய மேம்பாடு பற்றிய கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கு அனுமதி கேட்டு ஒமந்தூராரைச் சந்திருக்கிறார்.

மிகவும் தேவையான விஷயம், இப்படி தான் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று அதிகாரியைப் பாராட்டிவிட்டு ஒமந்தூரார் சென்னையிலிருந்து செங்கல்பட்டு வரை எவ்வளவு புளிய மரங்கள் இருக்கின்றன என்று கேட்டார்.

அதற்கு அதிகாரி புள்ளிவிபரக் கணக்கு ஏட்டினைப் பார்த்து சொல்வதாகச் சொன்னார். உடனே ஒமந்தூரார் உங்களுக்கு எண்ணிக்கை தெரியாது இல்லையா என்றபடியே அதில் விளையும் புளியை என்ன செய்கிறார்கள் என்று கேட்டார்.

அது சாலையோரம் உள்ள மரங்கள் தானே என்று அதிகாரி இழுத்ததும் அதுக்கு கணக்கு வழக்கு இல்லையா என்றபடியே சாலையோரம் உள்ள மரங்கள் யாவும் அரசாங்கத்திற்குச் சொந்தமானது. அதிலிருந்து விளையும் புளியை ஏலம் விட்டு அந்தத் தொகையை அரசு கணக்கில் வரவு வைக்க வேண்டியது விவசாயத்துறையின் கடமை.

ஆனால் இத்தனை வருசம் நீங்கள் அதைச் செய்யவில்லையே என்று கோவித்து கொண்டார். அதிகாரி அது செயல்படுத்த முடியாத வேலை என்று சலித்துக் கொண்டதும் ஏன் முடியாது முதலில் சாலையோரம் உள்ள மரங்களுக்கு எண்கள் இடுங்கள். அதன்பிறகு அவற்றை உரிய முறையில் ஏலம் விடுவதற்கான சாத்தியங்களை உருவாக்குவோம் என்று சொல்லிவிட்டு சென்னையிலிருந்து செங்கல்பட்டு வரை எத்தனை புளியமரங்கள் இருக்கின்றன, என்ன வகைப் புளி அது என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள் பிறகு லண்டன் செல்லலாம் என்று அனுப்பி வைத்துவிட்டார்

அதன் பிறகு தான் சாலையோரம் உள்ள மரங்கள் எண்ணி கணக்கெடுக்கப்பட்டு உரிய முறையில் ஏலம் விடும் நடைமுறை வந்திருக்கிறது. இது ஒமந்தூரார் பற்றி எழுதப்பட்ட புத்தகத்தில் காணப்படுகிறது.

**
போதி மரம் மட்டுமில்லை. எல்லா மரங்களும் மௌனமாக மனிதனுக்கு நிறையக் கற்றுக் கொடுத்துக் கொண்டேதானிருக்கின்றன. ஆனால் உணர்ந்து கொள்ளவும் செயல்படுத்தவும் நமக்கு விருப்பமில்லை.

இந்த மரங்களைப் பார்த்தபிறகு சென்னையில் எது மிக வயதான மரம் என்ற யோசனை உண்டானது. சிலர் அடையாறு ஆலமரம் என்றார்கள். சிலர் பரங்கிமலையில் உள்ள மரம் என்கிறார்கள். என்வரையில் உலகிற்கு வழிகாட்டும் இரண்டு ஞானிகளைப் போல இந்த மரங்கள் தோற்றம் தருகின்றன. இதன் முன்னே மனித வாழ்க்கை சிற்றெறும்பு போன்றது தானில்லையா ?

0Shares
0