நோபல் பரிசு பெற்ற கவிஞர் பாப்லோ நெருதா குறித்து வெளியாகியுள்ள புதிய திரைப்படம் நெருதா. சிலே தேசத்தின் பிரபல இயக்குனர் Pablo Larrain இயக்கியிருக்கிறார்.சிலே கம்யூனிஸ்ட் கட்சியின் செனட்டராக நெருதா பணியாற்றினார். அதிலிருந்தே படம் துவங்குகிறது.
1946 ஆம் ஆண்டில், சிலேயின் ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரிகளின் சார்பில் நின்ற கேப்ரியல் கோன்சல்ஸ் விதேலாவிற்கு ஆதரவாக வாக்குசேகரித்தார் நெருதா. விதேலா தேர்தலில் வெற்றிபெற்றபின், சிலே கம்யூனிஸ்ட் கட்சியுடன் சண்டையிட்டு கம்யூனிஸ்டுகளைத் தனதுஅமைச்சரவையிலிருந்து வெளியேற்றினார்.
பின்னர் ஜனநாயக பாதுகாப்பு சட்டத்தின் படி கம்யூனிஸ்ட் இயக்கத்தைத் தடைசெய்ய முற்பட்டார்.
படத்தின் ஆரம்பக் காட்சி அற்புதமான ஒரு குறியீடு. பிரம்மாண்டமான கழிப்பறையில் பலரும் ஒன்று சேர்ந்து கொண்டு நீங்கள் தானே அவரைப்பதவியில் அமர்ந்தினீர்கள் என நெருதாவை பார்த்து கூச்சலிடுகிறார்கள்..
அதற்கு நெருதா “நான் மட்டுமில்லை. இங்கிருக்கும் அத்தனைமுட்டாள்களும் ஒன்று சேர்ந்து தானே அதைச் செய்தோம்“ என்கிறார்.
அந்தக் கழிப்பறையின் பிரம்மாண்டாமும் யார் பேச்சை யாரும்பொருட்படுத்தாமல் நடந்து கொள்வதும், குற்றம்சாட்டுவதும், இடையில் மூத்திரம் கழித்துக் கொள்வதும் அன்றைய அரசியலின் போக்குஎப்படியிருந்தது என்பதன் குறியீடாகவே தோன்றுகிறது.
1948 இல் ஜனாதிபதி கோன்சலஸ் விடலா சிலேயில் கம்யூனிசத்தைச் சட்டவிரோதமாக அறிவித்ததுடன் நெருதாவை கைது செய்து தன் முன்னேகருணைக்காக மன்றாடச் செய்யும்படி உத்தரவிட்டார். இதனால் தலைமறைவாகிய நெருதா நண்பர்கள் உதவியால். துறைமுக நகரமானவால்பரசோவில் ஒரு வீட்டின் அடித்தளத்தில் சில மாதங்கள் மறைந்து வாழ்ந்தார். பின்னர், மௌஹூ ஏரியை ஒட்டிய எஸ்டேட் பகுதியில்வாழ்ந்தார். பின்பு ஆண்டிஸ் மலையின் பனிப்பாதையின் வழியாக அர்ஜென்டீனாவுக்குத் தப்பிச் சென்றார்
.பாப்லோ நெருதாவை கைது செய்வதற்காக நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி Oscar Peluchonneau கதையை முன்னகர்த்திப் போகிறான். அவனதுவாய்ஸ் ஒவர் வழியாகவே கதை நிகழ்கிறது.
நெருதா ஒரு கவிஞர் மட்டுமில்லை. சிலேயின் அடையாளம். தேசமெங்கும் அவர் கம்யூனிஸ்ட் போராளியாக அடையாளப்படுத்தபட்டார். அவரதுகவிதைகள் புரட்சியைப் பாடின. அத்துடன் கட்சியின் செனட்டராகப் பணியாற்றினார். ஆகவே அவரைக் கைது செய்து மண்டியிட வைக்க அரசுவிரும்பியது. இதை அறிந்து கொண்டபோதும் நெருதா தலைமறைவாக முடியாது என உறுதியாக இருந்தார். ஆனால் நண்பர்கள் அவரை வற்புறுத்திஒளிந்துவாழும்படியாக ஆலோசனை சொன்னார்கள்.
நெருதா தனது பிரம்மாண்டமான வீட்டை விட்டு மனைவியுடன் வெளியேறினார். நெருதாவின் வீடு முழுவதும் கலைப்பொருட்களால் நிரம்பியது. காவல்துறை அதிகாரியான ஆஸ்கார் கவிஞனின் வீட்டை சோதனையிடும் போது வியப்படைகிறான். ஒரு கவிஞன் ராஜ வாழ்க்கையைஅனுபவித்திருக்கிறான் என அறிந்து கொள்கிறான்.
குடி, இசை. நடனம் பெண்கள் என வாழ்வைக் கொண்டாடியவர் நெருதா. இதைப் பற்றி ஒளிவுமறைவின்றித் தனது நினைவுகள் நூலில் பகிர்ந்துகொண்டுமிருக்கிறார். இப்படத்தில் நெருதாவின் வாழ்க்கை எப்படிபட்டது என்பதை விவரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில் மிகவும்உணர்ச்சிப்பூர்வமான நிலையிலே நெருதா நடந்து கொள்கிறார். நண்பர்களை உபசரித்து விருந்து தருகிறார். மாறுவேஷமிட்டுக் கொள்ள விரும்பி ஒப்பனைகள் செய்து கொள்கிறார். அரேபியநாயகனாகக் கொண்டாடப்படும் T E lawrence தோற்றத்தை உருவாக்கிக் கொண்டு கவிதைபடிக்கிறார். நெருதாவின் கவிதைகள் வைரஸை போன்றவை. அதன் பரவலை நாம் தடுக்கவேமுடியாது எனப்படத்தின் இயக்குனர் தனது நேர்காணலில் குறிப்பிடுவது முக்கியமானது.
நெருதாவை கைது செய்வதன் வழியே தனது ஆளுமையை உயர்த்திக் கொள்ள விரும்பும் ஆஸ்கார் கதாபாத்திரத்தை ஏற்றுச் சிறப்பாக நடித்துள்ளார் கார்சியா பெர்னல். நெருதாவாக நடித்திருப்பவர்Luis Gnecco
தலைமறைவு வாழ்க்கையில் நெருதா ஒரு பறவையிலளாராகத் தனது அடையாளத்தை மாற்றிக் கொள்கிறார். அது மிகப்பொருத்தமான வேஷம். காரணம் உண்மையிலே நெருதாவிற்குப்பறவைகளை ஆராய்வதில் ஆர்வம் அதிகம். ஆஸ்கார் பிடியிலிருந்து தப்பி எப்படி நெருதா வெளியேறுகிறார் என்பதைப் பரபரப்பாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குனர். படத்தின் முக்கியத்தருணங்களில் நெருதாவின் கவிதை வரிகள் பின்புலத்தில் ஒலிக்கின்றன. ஒரு காட்சியில் நெருதாவே தனது புகழ்பெற்ற கவிதை ஒன்றை பாடுகிறார். நேர்த்தியான ஒளிப்பதிவும் இசையும் படத்தின்சிறப்புகள்.
1994ல் வெளியான நெருதாவைப் பற்றிய ILLPOSTINO திரைப்படம் முற்றிலும் வேறு அனுபவம் தரக்கூடியது. தலைமறைவாக வெளியேறி வாழ்ந்த நாட்களில் நெருதாவிற்கும் தபால்காரன்ஒருவனுக்குமான உறவை பற்றிப் பேசுகிறது. அப்படத்தில் வரும் நெருதாவின் சித்திரத்திற்கும் இப்படத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. குறிப்பாக ILL POSTINO வில் வரும் நெருதா கனிவானதந்தையைப் போல நடந்து கொள்கிறார். இப்படத்தில் வரும் நெருதாவோ கலக்காரனைப் போல ஆவேசமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார். நெருதாவின் இன்னொருமுகத்தை அறிந்துகொள்வது போலவேயிருக்கிறது.
நெருதா திரைப்படத்தின் திரைக்கதை உண்மை சம்பவங்களையும் புனைவையும் ஒன்று சேர்த்து உருவாக்கபட்டுள்ளது. உண்மைக்கும் கற்பனைக்குமான ஊசலாட்டம் என்று கூறலாம். காவல்துறைஅதிகாரி ஒரு பக்கம் கவிஞன் ஒரு பக்கம். இருவரும் இரண்டு நிலைகளின் குறியீடுகள். கவிஞனை துரத்திச் செல்லும் காவல்துறை அதிகாரி என்பது தனித்துவமிக்கக் கதைச்சரடு. அதை அழகாகப்பின்னிக் கொண்டு போகிறார் படத்தின் திரைக்கதையாசிரியர் Guillermo Calderón
படத்தின் முடிவில் காவல்துறை அதிகாரி கவிஞனைப் புரிந்து கொள்கிறான். ஆனால் உண்மையில் அப்படி நடக்கவில்லை. படத்தின் சுவாரஸ்யம் கருதி நெருதாவின் அகவாழ்க்கை மட்டுமேமுதன்மையாக்கபட்டுள்ளது. அவரது சமகால அரசியல், அதன் பிரச்சனைகள் எதையும் தான் தொடவில்லை என இயக்குனர் வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்.
தனது நேர்காணல் ஒன்றில் இயக்குனர் Larraín இப்படிக் குறிப்பிடுகிறார்.
Bringing poetry to cinema is always complicated and dangerous, especially with someone like Neruda, who’s so well known from his love poems. We didn’t focus much on those poems. We focused more on poems that had a kind of rage and fury, that maybe aren’t in the anthologies. Not the greatest hits.
His work and poems would inspire us. He was someone who was mixing politics and ideology with poetry, which is something that, today, would be impossible. I don’t see anybody writing like that today. It was a different world, a different moment.
When we were shooting, Neruda’s work was everywhere. You were sitting on a chair, and it was like, “Okay, move the poem.” We were reading them all the time as we waited on set.
இந்த உணர்வே படம் முழுவதும் எதிரொலிக்கிறது
ஒரு பறவை பறப்பதை போலக் கேமிரா சுழன்று கொண்டேயிருக்கிறது. நிறைய லாங்டேக்குகள். கனவில் நடப்பது போல முடிவற்றுச் செல்லும் காட்சிக்கோர்வைகள். நெருதாவின் கவிதைகளைப்போலவே காட்சிகள் படிமங்களாக மாறுகின்றன. கவிதையின் லயத்தையே கேமிராவின் லயமாகவும் மாற்ற முயற்சித்திருக்கிறார்கள். 190 பக்க திரைக்கதை. ஆகவே நிறையப் படமாக்கிவிட்டு அதைஎடிட்டிங்கில் தேர்வு செய்து கச்சிதமாக உருவாக்கியிருக்கிறார்கள்.
கீட்ஸ், எமிலி டிக்கன்ஸ், அன்னாஅக்மதேவா, சில்வியா பிளாத் எனக் கவிஞர்களைப் பற்றி நல்ல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த வரிசையில் நெருதா குறிப்பிடப்படவேண்டிய படம்.