நேற்றின் நிழல்கள்

அபராஜிதோ என்ற தலைப்பைக் கேட்டதும் சத்யஜித்ரேயின் புகழ்பெற்ற திரைப்படமே நினைவிற்கு வரும். ஆனால் தற்போது வெளியாகியுள்ள அபராஜிதோ (Aparajito 2022) சத்யஜித்ரேயைக் கற்பனைக் கதாபாத்திரமாக்கி, பதேர் பாஞ்சாலி உருவான அனுபவத்தை விவரிக்கிறது. இப்படத்தை அனிக் தத்தா இயக்கியுள்ளார்.

சத்யஜித்ரேயாக நடித்துள்ள ஜீது கமல் அப்படியே இளவயது ரேயின் தோற்றம் கொண்டிருக்கிறார். அவரது உடல்மொழியும் துல்லியமாக ரேயைப் பிரதிபலிக்கிறது. அவரது தேர்ந்த நடிப்பு மற்றும் சுப்ரதிம் போலின் ஒளிப்பதிவு படத்தின் தனிச்சிறப்பாகும்.

சாந்திநிகேதனில் ஓவியம் பயின்று விளம்பர நிறுவனத்தில் வேலை செய்த சத்யஜித்ரேயிற்கு எப்படி இசை மற்றும் திரைப்படங்களின் மீது ஆர்வம் உருவானது. பதேர் பாஞ்சாலி திரைப்படத்தை எவ்வாறு உருவாக்கினார், அவரது திரைப்படம் எப்படி சர்வதேசக் கவனம் பெற்றது என்பதே படத்தின் கதை

MY YEARS WITH APU நூலில் சத்யஜித்ரே பதேர்பாஞ்சாலி உருவான விதம் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். அதைத் தான் இப்படத்திலும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அகில இந்திய வானொலிக்காகச் சத்யஜித் ரேயை நாடக அறிஞர் சமிக் பந்தோபாத்யாயா எடுத்த நேர்காணல் தான் படத்திலும் மையமாக விளங்குகிறது.

சத்யஜித்ரேயின் பதேர்பாஞ்சாலி பற்றி விரிவான புத்தகம் ஒன்றை நான் எழுதியிருக்கிறேன். ஆகவே படம் விவரிக்கும் பின்புல நிகழ்வுகளை நன்றாகவே அறிவேன்.

சத்யஜித்ரே மனைவியாக நடிக்கும் சயோனி கோஷ் சிறப்பாக நடித்துள்ளார். லண்டனிலிருந்து கப்பலில் திரும்பும் போது அவர் தாகூர் பாடலை பாடுவது மிகவும் அழகான காட்சி. இது போலவே படப்பிடிப்பில் யோசனை சொல்வது, வீட்டில் ஆங்கிலச் சொல் ஒன்றிற்காக ரேயுடன் சண்டை போடுவது, படம் எடுக்கத் தனது நகைகளைக் கொடுப்பது, ரேயின் வெற்றிக்கு உற்ற துணையாக இருப்பது எனப் பிமலா கதாபாத்திரத்தை அசலாகச் சித்தரித்துள்ளார்கள்.

பதேர் பாஞ்சாலி படத்தில் அபு மற்றும் துர்காவாக நடித்த குழந்தைகள் இருவரும் பிஜயா ரேயால் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டனர் என்பதை இப்படத்திலும் நினைவுபடுத்துகிறார்கள்

ரே லண்டனுக்குச் சென்ற நாட்களையும் டிசிகாவின் பைசைக்கிள் தீவ்ஸ் பார்த்த அனுபவத்தையும் படம் நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறது

மேற்கத்திய இசை மீது சத்யஜித்ரே கொண்டிருந்த விருப்பம் அவரது திரைப்பட உருவாக்கத்தின் போது எப்படி உதவியது என்பதைச் சில காட்சிகள் மூலம் அழகாகக் காட்டுகிறார்கள். பண்டிட் ரவிசங்கருடன் இணைந்து ரே பதேர்பாஞ்சாலி இசையமைப்பினை உருவாக்கும் காட்சி அற்புதம். மறக்கமுடியாத இசைக்கோர்வையை ரவிசங்கர் உருவாக்கியிருப்பார்.

சத்யஜித்ரேயின் வாழ்க்கை வரலாற்றை அவரது பெயரிலே படமாக்காமல் கற்பனையாக அபராஜிதோ ரே என்ற இயக்குநர் படம் உருவாக்குவது போலக் காட்டியிருக்கிறார்கள். பதேர்பாஞ்சாலி படம் உருவாக்கபட்டது பற்றி நேரடியாகவே ஒரு படத்தை எடுத்திருக்கலாமே எதற்காக இப்படிக் கற்பனை பெயர்கள். கற்பனை கதாபாத்திரங்கள் என்று புரியவில்லை. இவ்வளவிற்கும் ரே குடும்பத்தினர் இதற்கு அனுமதி வழங்கியிருக்கிறார்கள்.

பிபூதிபூஷன் நாவலுக்கான உரிமையைக் கேட்பதற்காக அவரது மனைவியைச் சந்தித்து ரே உரையாடும் காட்சி, மழையின் முதல் துளி வழுக்கைத்தலை மனிதர் தலையில் விழ வேண்டும் என்பதற்காக ரே எடுக்கும் எத்தனம். நாயும் துர்காவும் அபுவும் மிட்டாய் வியாபாரி வரும் போது பின்னால் செல்லும் காட்சியினைப் படமாக்கும் போது ரேயின் மனைவி தரும் யோசனை, கட் சொல்லாத காரணத்தால் பாடையிலே கண்மூடி படுத்துக் கிடக்கும் கிழவியின் செயல், வழக்கமாகத் தாங்கள் சந்தித்து உரையாடும் காஃபி ஹவுசிற்குப் படம் இயக்கியபிறகு ரே செல்லும் போது கிடைக்கும் உற்சாக வரவேற்பு, அமெரிக்காவில் படம் திரையிடப்படும் நாளில் ரே உறக்கமின்றித் தவிப்பது, பிரதமர் ஜவஹர்லால் நேரு பதேர்பாஞ்சாலி படம் பார்க்கும் காட்சி, பதேர்பாஞ்சாலி வெளியான நாளில் திரையரங்கத்தில் கிடைத்த வரவேற்பு என நிறைய ரசிக்கத்தக்க காட்சிகள்.

கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் 1950களின் கல்கத்தா நகரக் வாழ்க்கையை மறு உருவாக்கம் செய்துள்ளது . பழங்கால வால்வு ரேடியோ, விண்டேஜ் கார்கள், விளம்பர ஏஜென்சியின் மேசை மற்றும் நாற்காலி அமைப்பு, அந்தக்கால வீடு, பழங்கால ப்ரொஜெக்டரின் ஒசை, சீலிங் ஃபேனின் சத்தம், எளிமையான உடைகள் மூலம் காலம் உணர்த்தப்படுகிறது. பதேர் பாஞ்சாலி படப்பிடிப்புக் காட்சிகள் நம்மை அந்தத் தருணங்களுக்கு அழைத்துச் செல்லும் அளவுக்குச் சிறப்பாக உள்ளது.

இந்தத் திரைப்படம் மீண்டும் ஒருமுறை சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலியைப் பார்க்கத் தூண்டுகிறது. அதுவே இதன் வெற்றி.

0Shares
0