நைல் நதியில் ஒரு பயணம்

புகழ்பெற்ற நைல் நதியின் ஊடாக வரலாற்றுப்பேராசிரியர் பெத்தனி ஹியூஸ் ஆயிரம் மைல் நீண்ட பயணம் ஒன்றை மேற்கொண்டிருக்கிறார். இந்தப் பயணம் நான்கு பகுதிகள் கொண்ட ஆவணப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

The Nile: Egypt’s Great River with Bettany Hughes என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன்.

இதில் எகிப்தின் வரலாற்றையும் நைல் நதிக்கரை நாகரீகத்தையும் அழகாக, விரிவாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

பெத்தனியோடு நாமும் படகில் பயணம் செய்து பிரமிடுகளையும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களையும் பார்வையிடுகிறோம். விதவிதமான பாரம்பரிய உணவு வகைகளை, இசையை, நடனத்தைக் காணுகிறோம். நேரில் சென்றாலும் பார்க்கமுடியாத அரிய கல்லறைகள் பாதுகாக்கப்பட்ட இடங்கள், வரலாற்றுச் சின்னங்கள் பெத்தனிக்காகத் திறந்துவிடப்படுகின்றன. அவரோடு இணைந்து நாமும் பிரமிடின் உள்ளே நடக்கிறோம். புதையுண்ட மனிதர்களின் எலும்புக்கூடுகளைக் காணுகிறோம். பழைய எழுத்துருக்களை வாசிக்கிறோம்.

தொல்பொருள் ஆய்வில் இன்று புகழ்பெற்று விளங்கும் பெண் அறிஞர்கள் பலரையும் பெத்தனி சந்திக்கிறார். அதிலும் மம்மி ஒன்றின் பெட்டகத்தைத் திறந்து காட்டி அதனுள் உடல் எப்படிப் பதப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை விவரிக்கும் ஆய்வாளரின் கண்களில் தான் எத்தனை உற்சாகம். இரண்டாயிரம் வருஷத்தின் முந்திய வாசனையைத் தான் நுகருவதாகச் சொல்கிறார் பெத்தனி. வாசனைக்கு வயது உருவாகும் தருணத்தைக் கண்டேன்.

எகிப்தைப் பற்றி நாம் எவ்வளவு படித்திருந்தாலும் இது போன்ற நேரடியான காட்சிகள் தரும் கிளர்ச்சி அலாதியானது. லண்டன் ம்யூசியத்தில் பெத்தனி தனது சிறுவயதில் மன்னர் துட்டன்காமூனின் மம்மியை நேரில் கண்டிருக்கிறார். அது ஏற்படுத்திய ஆர்வம் எகிப்தின் வரலாற்றையும் பண்பாட்டினையும் பற்றிக் கற்றுக் கொள்ளவும் ஆய்வு செய்யவும் தூண்டியிருக்கிறது. இந்த ஆவணப்படம் முழுவதும் அவர் பரபரப்பாக ஓடிக்கொண்டேயிருக்கிறார். முப்பது ஆண்டுக்கால அவரது தேடலை நான்கு மணி நேரத்திற்குள் அடக்கிவிட முயல்கிறார். ஒரு பெரிய குழுவே இந்த ஆவணப்படத்திற்கான ஆய்வில் ஈடுபட்டிருக்கிறது.

1922 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆய்வாளர் ஹோவர்ட் கார்ட்டர் எகிப்தில் ஆய்வு செய்து பாரோவின் கல்லறைகளைக் கண்டுபிடித்தார். அவர் மூலமாகவே துட்டன்காமூனின் மம்மி கண்டுபிடிக்கப்பட்டது. தொல்பொருள் ஆய்வில் இது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. 1972 ஆம் ஆண்டுப் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் கண்காட்சிக்காக வைக்கப்பட்ட போது 1.6 மில்லியன் மக்கள் பார்வையிட்டார்கள். அப்போது தான் பெத்தனியும் இதைக் கண்டிருக்கிறார்.

எகிப்தில் மட்டும் லட்சக்கணக்கில் விலங்குகளின் மம்மிகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்ட பூனைகளின் பதப்படுத்த உடலாகும். இந்த ஆவணப்படத்தில் இறந்த பூனை ஒன்றின் உடலைப் பதப்படுத்திக் காட்டுகிறார்கள். இப்படித்தான் பண்டைய காலங்களில் உடல்களைப் பதப்படுத்தியிருப்பார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது

படகுவீடு ஒன்றில் தனது பயணத்தைத் துவங்கும் முன்பு பெத்தனி உலக வரலாற்றில் நைல் நதி நாகரீகத்தின் பங்கினை சுருக்கமாக விவரிக்கிறார். பிரமிடுகளையும் பிரம்மாண்டமான நகரங்களையும் உருவாக்கிய எகிப்தியர்களின் கலைத்திறனை வியந்து போற்றுகிறார்.

படகு நைல் நதியில் பயணிக்கத் துவங்குகிறது. நதி தன் கடந்தகாலத்தை நினைவு கொள்வதில்லை. மனிதர்களுக்குத் தான் கடந்தகாலம் முக்கியம். அதிலும் கடந்தகாலத்துயரத்தின் வடுக்களைத் திரும்பத் திரும்ப நினைவுகொண்டபடியே இருப்பது மனித இயல்பு. ஆனால் நைல் நதி தன்னுடைய வரலாற்று ஞாபகங்களை மறந்து தன் போக்கில் ஒடிக் கொண்டிருக்கிறது. மனித வாழ்க்கை என்பது அதன் சிறிய சுழிப்பு மட்டுமே. நதியில் பட்டும் ஒளிரும் வெயிலின் அழகு அத்தனை வசீகரமாகயிருக்கிறது.

நைல் எத்தனையோ கனவுகளை உருவாக்கியது. நைல் நதியில் வளர்ந்த ராஜ்ஜியங்கள் எல்லாமும் அதன் கனவுகள் தானே. நதியின் போக்கிற்கு எதிரான திசையில் தனது பயணத்தினைத் துவங்குகிறார் பெத்தனி. அவரது ஆய்வுக்குறிப்புகள். துணை நூல்கள் கூடவே இருக்கின்றன. கேமிரா அவரது நிழல் போல எங்குச் சென்றாலும் பின்தொடருகிறது.

நதிக்கரையோர வாழ்க்கை கால ஒட்டத்தில் மாறவேயில்லை. மீன்பிடிப்பவர்களும் ஆற்றில் குளிப்பவர்களும், குதிரைகளும் காலத்தில் உறைந்து போனவர்களைப் போலக் காணப்படுகிறார்கள் பெத்தனியின் படகில் பராம்பரியமான எகிப்தின் உணவு அவருக்கு அளிக்கப்படுகிறது. தேசமெங்கும் தான் ஒரு எகிப்தியன் என்பதில் மக்கள் பெருமிதம் கொள்கிறார்கள்.

ஒரு காட்சியில் பேரிச்சைமரங்களைத் தேடிச்சென்று நேரடியாகப் பழங்களைப் பறித்துச் சாப்பிடுகிறார். அதைப்பதப்படுத்தும் பணியினைப் பார்வையிடுகிறார். பேரீச்சை பழத்தில் தான் எத்தனை விதங்கள். இங்கே நாம் சாப்பிடும் பேரீச்சம்பழம் என்பது மலிவு ரகத்தைச் சேர்ந்தது. தேனில் ஊறவைத்த பேரீச்சை பழத்தை உணவோடு சேர்த்துச் சாப்பிடுகிறார் பெத்தனி.

பிரமிடுகளைத் தேடிய அவரது முதற்பாதியில் இன்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ள புதிய உண்மைகளையும் விளக்குகிறார். ஒரு காட்சியில் அவரது கண்முன்னே புதையுண்ட கற்படிவம் ஒன்று மீட்கப்பட்டு வாசிக்கபடுகிறது. பிரமிடு போன்ற கட்டுமானத்தை எப்படி உருவாக்கினார்கள். இதற்கு எவ்வளவு பொருட்செலவு செய்யப்பட்டது. எத்தனை ஆயிரம் வேலை செய்தார்கள். அவர்கள் என்ன சாப்பிட்டார்கள். எங்கே தங்கினார்கள் என்பதைத் தொல்பொருட்களின் உதவியோடு விளக்குகிறார்.

கிசா பிரமிடு காம்ப்ளக்ஸ், தஹ்ரீர் சதுக்கம், எகிப்திய அருங்காட்சியகம் போன்றவற்றைப் பார்வையிடும் பெத்தனி அரச குடும்பத்தைச் சார்ந்த மம்மிகள் அதற்குள் மறைத்துவைக்கபட்ட வைரம் மற்றும் தங்க நகைகளுக்காகக் கொள்ளையர்களால் எப்படிக் கொள்ளையடிக்கப்பட்டன என்பதையும் சுவாரஸ்யமாக விவரிக்கிறார்.

எகிப்திய கடவுள்கள் பற்றியும் அவர்களின் வாரிசாக மன்னர்கள் ஆட்சி செய்த விதம் பற்றியும் கூறும் பெத்தனி முதலை வடிவத்தில் உள்ள கடவுளின் சிலையை அடையாளம் காட்டி முதலைகள் எவ்வாறு வணங்கப்பட்டன என்பதை இன்னொரு காட்சியில் அறிமுகம் செய்கிறார்.

பண்டைய எகிப்தில் நைல் ஆற்றில் ஏற்படும். வெள்ளத்தைக் கண்காணிக்கத் தனியே அளவுமுறைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. ஒரு காட்சியில் அந்த அளவுகள் எவ்வாறு அமைக்கப்பட்டன. அதை எப்படிக் கண்காணித்தார்கள் என்பதை தானே நேரில் சென்று சுட்டிக்காட்டுகிறார்.

துட்டன்காமூன் எகிப்தின் புகழ்பெற்ற மன்னர். கிமு 1333 முதல் கிமு 1324 வரை இவர் ஆட்சிசெய்திருக்கிறார். துட்டன்காமூன் தனது ஒன்பதாவது வயதில் மன்னராகப் பதவி ஏற்றுக் கொண்டார். அமூன் என்ற கடவுளின் வாரிசு எனப்பொருள் தரும் விதமாகவே அவருக்குப் பெயரிடப்பட்டிருக்கிறது. அவரது கல்லறையை எப்படி கண்டுபிடித்தார்கள். எப்படி மீட்டார்கள் என்பதை கூறும் பெத்தனி துட்டன் காமனின் மலேரியா நோய் தாக்கி மரணம் அடைந்திருக்கக் கூடும் என்று இன்றைய ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளதாக கூறுகிறார்

கிளியோபாட்ரா பற்றி நமக்குள் இருக்கும் பொதுப்பிம்பம் தவறானது. உலகப்புகழ் பெற்ற அழகி என்ற பிம்பத்தைத் தாண்டி அவர் சிறந்த அறிவாளி. வானவியல் மற்றும் கணிதம் சார்ந்து ஆழ்ந்த ஞானம் கொண்டவர். எகிப்தின் காலக்கணிதம் முன்னோடியானது. ஒரு வருடத்தை நான்கு மாதங்கள் வீதமாக மூன்று பருவங்களாக மாற்றியதும், ஆண்டிற்கு 365 நாட்கள் எனக் கணக்கிட்டதும் எகிப்தின் காலண்டர் முறையே. கிளியோபாட்ரா ஏழு மொழிகளைச் சரளமாகப் பேசவும் எழுதவும் தெரிந்தவர். அவரது ஆட்சிக்காலத்தில் கலையும் அறிவியலும் மிகப்பெரிய வளர்ச்சிபெற்றிருந்தன எனக் கிளியோட்பாராவின் மறுபக்கத்தைப் பெத்தனி நமக்கு அறிமுகம் செய்துவைக்கிறார்

கிளியோபாட்ரா என்ற ஹாலிவுட் திரைப்படம் அவரை ஒரு கவர்ச்சிப்பதுமையாகவே அறிமுகம் செய்தது. ஆனாலும் அந்தப்படத்தின் ஒரு காட்சியில் அலெக்சாண்ட்ரியா நூலகம் எரிக்கப்படும் போது கிளியோபாட்ரா மிகுந்த கோபம் கொள்கிறார்.

அது ஒரு காட்டுமிராண்டித்தனம் என்று சீசரின் முகத்திற்கு நேராகச் சொல்கிறார். ஜூலியஸ் சீசருக்கு தான் நூலகத்தின் மதிப்பு தெரியவேயில்லை.

படத்தின் இதற்கு முந்திய காட்சியில் ஒரு அறிஞர் நூலகத்திலிருந்த அரிஸ்டாட்டிலின் கையெழுத்துப் பிரதிகள் உள்ளிட்ட அரிய நூல்கள் தீயில் எரிவதைத் தாங்க முடியாமல் புலம்பும் காட்சியும் இடம்பெற்றிருக்கிறது.

அலெக்சாண்ட்ரியா நூலகம் எகிப்தின் மிகப்பெரிய நூலகமாகும். இங்கே பாபிரஸ் எனப்படும் காகித சுருள் வடிவத்தில் புத்தகங்கள் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. ஆகவே தீப்பற்றியதும் பெருமளவு எரிந்து நாசமாகிவிட்டன. அறிவை சேகரித்து வைக்க வேண்டும். அதை முறையாகப் பயில வேண்டும் என்ற எண்ணம் எகிப்தில் நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. .

பெட்டனி தனது பயணத்தின் வழியே கிளியோட்பாரா உருவாக்கிய கலைக்கூடங்களை, அதன் தனிச்சிறப்புகளை, அவளது ஆட்சிக்காலத்தின் சிறப்புகளை விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். குறிப்பாகக் கிளியோபாட்ராவிற்கு விருப்பமான நீலத்தாமரைகள் இன்று எகிப்தில் அழிந்து போய்விட்டன. ஒரு காலத்தில் அது எகிப்தின் அடையாளம். இன்று அந்த நீலத்தாமரை மலர்களைக் காப்பாற்றி வளர்க்கும் ஒரு ஆய்வாளரைத் தேடிச்சென்று சந்தித்து நீலத்தாமரை மலரைப் பரிசாகப் பெறுகிறார். அந்த மலரின் அபூர்வ வாசனையை நுகர்ந்து பார்க்கிறார் பெத்தனி.

பாலைவனத்தின் ஊடே ஒரு பெண்மணி சிறிய குளத்தில் இப்படி நீலத்தாமரைகளை வளர்த்து வருவது அபூர்வமாகயிருக்கிறது.

இன்னொரு காட்சியில் பகலில் நேரம் கணிக்கப் பயன்படும் சூரியக்கடிகாரம் போல இரவில் நேரத்தைக் கணக்கிட உருவாக்கப்பட்ட நீர் கடிகாரம் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பெத்தனி தானே பரிசோதனை செய்து காட்டுகிறார். நீர்க்கடிகாரத்திலிருந்து தண்ணீர் சொட்டு சொட்டாகச் சொட்டி வெளியேறுவதை வைத்து இரவில் நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். எளிய, வியப்பான அணுகுமுறை.

பண்டைய நகரமான தீபஸ் தற்போது லக்சர் எனப்படுகிறது. தீப்ஸ் நகரை நூறு வாயில்களின் நகரம்” என்று அழைத்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் செல்வச்செழிப்பாக விளங்கிய இந்த நகரம் இன்று புதிய தோற்றம் கொண்டிருக்கிறது. லக்சரின் புராதன இடங்களைக் காண பெத்தனி செல்கிறார். அதே பழைய காரோட்டி. அதே பாதையில் மீண்டும் ஒரு பயணம் என மகிழ்ச்சி அடைகிறார்.

இந்த ஆவணப்படத்தில் கழுதைகளை எகிப்தியர்கள் எவ்வளவு முக்கியமாகக் கருதுகிறார்கள், கொண்டாடுகிறார்கள் என்பதைக் காட்டுகிறார்கள். அழகான கழுதை ஒன்றை பெத்தனி ஆசையாகக் கட்டிக் கொள்கிறார். சுமைகளை ஏற்றிச் செல்வதற்கு இன்றும் கழுதைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

எகிப்தின் பிரமிடுகளைக் கட்டியவர்களுக்கெனத் தனிக்குடியிருப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன. அங்கே குடும்பத்துடன் வசித்தார்கள். அவர்களுக்கான வழிபாட்டு ஸ்தலம். விளையாட்டுக்கூடம், நடனக்கூடங்கள் குடிநீர் விநியோகம் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அவர்கள் அணிந்த விதவிதமான அணிகலன்கள். பயன்படுத்திய சமையற்பாத்திரங்கள் இன்று தொல்பொருள் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன. இன்று அலுவலகப்பதிவேடு இருப்பது போலவே அந்தக் காலத்திலும் வேலைப்பதிவேடு இருந்திருக்கிறது. அதில் யார் யார் என்ன வேலை செய்தார்கள். என்றைக்கு விடுப்பு எடுத்தார்கள் என்பது குறிக்கப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி ஆய்வாளருடன் பேசும் போது பெத்தனி எதற்கெல்லாம் விடுப்பு எடுத்திருக்கிறார்கள் என்று கேட்கிறார். விழாக்கள் மற்றும் குடும்ப நிகழ்வுகளுக்காக விடுப்பு எடுத்திருக்கிறார்கள் என்று பதில் தருகிறார்.

எகிப்தியர்கள் கப்பல்களைக் கட்டும் தொழிலில் முன்னோடிகள். உள்நாட்டுப் பொருட்களைச் சந்தைப்படுத்தவும் கட்டுமானத் திட்டங்களுக்குத் தேவையான பொருட்களைக் கொண்டு செல்லவும் நைல் நதியே பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆவணப்படத்தின் ஒரு காட்சியில் படகில் துணிகள் கொண்டுவரும் வணிகர்கள் பெத்தனியிடம் வியாபாரம் செய்கிறார்கள். மிக அழகான சிவப்பு உடை ஒன்றை வாங்குகிறார்.

இந்த நான்கு பகுதித் தொடர் நைல் டெல்டாவில் தொடங்கி அஸ்வான் நகரத்திற்குச் செல்வது வரை பயணிக்கிறது. அஸ்வான் அணைக்கட்டினை பற்றிக் காமிக்ஸ் புத்தகம் ஒன்றில் முதன்முறையாகப் படித்தபோது அந்தச் சொல் மனதில் தங்கியிருந்தது. நேற்று அஸ்வான் அணையை, சுற்றியிருந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைக் காணும்போது மனதில் அந்தக் காமிக்ஸ் காட்சிகளும் சேர்ந்து ஓடின.

கிமு 1478 இல் எகிப்தினை ஆட்சி செய்த ஹட்செப்சுட் ராணியைக் கிளியோபாட்ராவை விடவும் சிறந்தவர் என்கிறார் பெத்தனி. எகிப்தின் வம்சத்தில் வேறு எந்தப் மன்னரையும் விட ஹட்செப்சூட் நீண்ட காலம் ஆட்சி செய்திருக்கிறார் என்கிறார்.

மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்து முழுவதும் நூற்றுக்கணக்கான பேராலயங்களையும் நினைவிடங்களையும் கட்டுமானம் செய்திருக்கிறார். இவை மிகப்பிரம்மாண்டமானவை. The Valley of the Kings எனப்படும் லக்சர் பள்ளத்தாக்கு முழுவதும் பாரோ மன்னர்களின் கல்லறைகள் அமைக்கபட்டுள்ளன. அதில் ஹட்செப்சூட் தனக்கான கல்லறை ஒன்றினையும் உருவாக்கியிருக்கிறார். பெரும்பாலான அரச கல்லறைகள் அமைந்துள்ள இந்தப் பள்ளத்தாக்கினுள் பயணம் செய்யும் பெத்தனி கொள்ளையர்களுக்குப் பயந்து இன்றும் அந்தக் கல்லறைகள் பாதுகாப்பாகப் பூட்டிவைக்கபட்டிருப்பதைத் தெரிவிக்கிறார்.

அகதா கிறிஸ்டி பயணம்செய்த கப்பலில் அவரது நினைவாக அதே அறையை அப்படியே பாதுகாத்து வருவதையும் Death on the Nile நாவல் எழுதிய மேஜையினையும் பெத்தனி பார்வையிடுகிறார். இது போல அஸ்வானில் சர்ச்சில் தங்கியிருந்த அறையைப் பெத்தனிக்கு ஒதுக்குகிறார்கள். எவ்வளவு ஆடம்பரமான அறை. அவரது பார்வையிலே தனக்கு ராஜஉபச்சாரம் நடக்கிறது என்பதைப் பெத்தனி வெளிப்படுத்துகிறார்

எகிப்தின் வரலாற்றுச்சின்னங்களைப் பார்வையிட உலகம் முழுவதுமிருந்து பயணிகள் வந்தவண்ணமிருக்கிறார்கள். வரலாறு அங்கே நினைவுபடுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. உடலைப் பதப்படுத்தி அழியாத வாழ்க்கையை மேற்கொள்ள நினைத்த பாரோ மன்னர்களின் ஆசை நிறைவேறவில்லை. ஆனால் அவர்கள் கட்டிய கட்டுமானங்கள். கலைக்கூடங்கள், பிரமிடுகள் காலத்தை வென்று அவர்கள் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

கலைகள் மட்டுமே காலத்தை வென்று நிலைக்கக் கூடியது என்பதையே இந்தப் படமும் நமக்கு உணர்த்துகிறது.

•••

0Shares
0