பக்கத்து இருக்கை

புதிய குறுங்கதை

பத்தொன்பது ஆண்டுகளாக அவன் டயரி எழுதி வருகிறான். அவற்றை ஒரு மரப்பெட்டியில் பாதுகாத்தும் வருகிறான். அவனது டயரியில் ஒரு நாளில் என்ன நடந்தது என்பதைப் பற்றி எழுதவில்லை. மாறாக எங்கே சென்றாலும் அவனது பக்கத்து இருக்கையில் யார் அமர்கிறார்கள் என்பதைப் பற்றி மட்டுமே எழுதி வந்தான்.

பக்கத்து இருக்கையில் யார் அமர்ந்திருக்கிறார்கள் என்பது பலருக்கும் பொருட்டேயில்லை. ஆனால் அவனுக்கு அது முக்கியமானது. தன்னருகில் அமர்ந்திருப்பவர் சில நிமிஷங்களோ, சில மணி நேரமோ தன்னுடன் அவரது வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்கிறார். அது தற்செயல் நிகழ்வில்லை. விநோத விதி.

அதுவும் சினிமா தியேட்டரில். மருத்துவமனையில், ரயிலில், பேருந்தில். அரசு அலுவலகக் காத்திருப்பு வரிசையில் அடுத்து அமர்ந்திருப்பவர் கதையில் வரும் கதாபாத்திரம் போலவே இருக்கிறார். நடந்து கொள்கிறார்.

சினிமா தியேட்டரில் ஒரு முறை அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் படம் துவங்கியது முதல் முடியும் வரை ஜெபித்துக் கொண்டேயிருந்தார். வங்கியில் அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்த கிழவரின் கையில் பாப்பா என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. விமானநிலையத்தில் பக்கத்தில் அமர்ந்திருந்த இளம்பெண் ஒரே விரலில் இரண்டு மோதிரம் அணிந்திருந்தாள்.

மருத்துவமனையில் பக்கத்து இருக்கையில் அமர்ந்த சிறுமி ஊசி போடுவார்களா என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தாள். ஒருமுறை அவனது பக்கத்துச் சீட்டில் பூனை அமர்ந்திருந்தது.

இன்னொரு முறை ஒருவன் விரல் ஒடிந்து ரத்தம் வழிய அமர்ந்திருந்தான். வேறு ஒரு நாள் பக்கத்து இருக்கைப் பெண் தனது டிபன் பாக்ஸை திறந்து உலர்ந்த இட்லியை சீனி தொட்டு சாப்பிட்டாள். ஊட்டி பயணம் ஒன்றில் அடுத்த இருக்கைப் பையன் செல்போனில் தனது காதலிக்கு முத்தம் கொடுத்தபடியே வந்தான்.

சினிமா தியேட்டரில். விமானத்தில். ரயிலில் பக்கத்து இருக்கையில் யார் வந்து அமரப்போகிறார்கள் என்று தெரியாமல் கற்பனை செய்வது சுகமானது. ஒரு போதும் அவனது கற்பனை நினைவானதில்லை. இதை விடவும் அறியாத ஒரு நபர் இரண்டு முறை அவனருகில் அமர்ந்ததேயில்லை. அது மட்டுமின்றி இதுவரை ஒரு வெள்ளைக்காரன் கூட அவனருகில் அமர்ந்ததில்லை. பக்கத்து இருக்கை என்பது ஒரு புதிர். பயணத்தின் போது யாரும் வராமல் காலியாகவே உள்ள பக்கத்து இருக்கை ஏன் இவ்வளவு மகிழ்ச்சியைத் தருகிறது.

ஒருமுறை பெங்களூர் ரயிலில் அவனது பக்கத்துச் சீட்டில் இருந்தவர் எழுந்து அடுத்த கம்பார்ட்மெண்டில் இருந்த நண்பருடன் பேச சென்ற போது இருக்கையில் தனது புத்தகத்தை வைத்துவிட்டுப் போனார். பெங்களூர் வரை அவனது பக்கத்துச் சீட்டில் ஒரு புத்தகம் மட்டுமே பயணம் செய்தது. அதனுடன் எப்படிப் பேசுவது என்று தெரியவில்லை. இருவரும் மௌனமாகப் பயணம் செய்தார்கள்.

திருமணம் செய்து கொண்ட பிறகு அவனது பயணத்தில்,சினிமா அரங்கில். ஹோட்டலில் மனைவியோ மகளோ அமர்ந்து கொள்கிறார்கள். பக்கத்துச் சீட்டில் அவர்கள் அமர்ந்தவுடன் அந்த இடம் வீடு போலாகிவிடுகிறது.

ஒருமுறை ஹோட்டலில் பக்கத்துச் சீட்டில் அமர்ந்தவர் அவன் சாப்பிடுகிற அதே ரவாதோசையை ஆர்டர் செய்தார். அவன் இரண்டாவதாகச் சொன்ன சப்பாத்தியை அவரும் ஆர்டர் செய்தார். அவனைப் போலவே டிகாசன் அதிகமாகக் காபியும் குடித்தார். தானே இரண்டு நபராகச் சாப்பிடுவது போல அவனுக்குத் தோன்றியது.

தனியே இருக்கும் சமயங்களில் தனது பழைய டயரிகளைப் புரட்டி பக்கத்தில் அமர்ந்தவர்களைப் பற்றிப் படித்துப் பார்ப்பான். அவன் படித்த எந்த நாவலிலும் அப்படியான கதாபாத்திரங்கள் வந்து போனதில்லை. வியப்பாக இருக்கும். தனது பக்கத்து இருக்கை மனிதர்களில் ஒருவரேனும் தன்னைப் போல இப்படி நாட்குறிப்பு எழுதுகிறவராக இருப்பாரா, தன்னைப் பற்றி ஏதாவது எழுதியிருப்பாரா என்று யோசிப்பான். ஏமாற்றமே மிஞ்சும். அப்போது விசித்திரமானது உலகம் என்று தனக்குத் தானே முணுமுணுத்துக் கொள்வான்.

0Shares
0