பசியாறிட்டீங்களா.

ஒரு வார கால மலேசியப் பயணத்திலிருந்து இன்று சென்னை திரும்பினேன்,

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் நான் நடத்திய மூன்று நாள் சிறுகதைப் பயிலரங்கில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டார்கள், காலை எட்டு மணிக்குத் துவங்கிய பயிலரங்கு இரவு 11 மணிவரை நடைபெற்றது, உற்சாகத்துடன் கூடிப்பேசி விவாதித்தது சிறப்பாக இருந்தது,

ஒரு ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட 20 சிறுகதைகளில் இருந்து சிறந்த  ஒன்றைத் தேர்வு செய்து ஆயிரம் ரிங்கட் பரிசு தருகிறார்கள், அந்த தேர்வுக்குழு தலைவராக நான் பணியாற்றி எழுதாத ஒப்பந்தங்கள் என்ற கௌரி சர்வேசன் கதையைச் சிறந்த சிறுகதையாகத் தேர்வு செய்தேன், அதற்கான விழா தனிநிகழ்வாக நடைபெற்றது.

தமிழ் இலக்கியம் என்பது தமிழ்நாட்டில் மட்டும் எழுதப்படுவதில்லை, ஈழம் சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, கனடா,  ஐரோப்பா, மற்றும் அமெரிக்கா எனத் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து சென்ற நாடுகள் யாவிலும் தமிழ் இலக்கியம் புதிய முனைப்புடன் வளர்ந்து வருகிறது, இந்தப் பன்னாட்டு சூழலை முதன்மைபடுத்தியே நான் அதிகம் பேசினேன், இன்று உலகு தழுவிய அளவில் தமிழ் இலக்கியம் முன்னெடுத்து செல்லவேண்டிய அம்சங்களையே சுட்டிக்காட்டினேன்.

மலேசிய தமிழ் மக்கள் தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து கற்றிருக்கிறார்கள், நாம் தான் மலேசியத்தமிழ் இலக்கியங்களைக் கவனமாக வாசித்து அறிந்திருக்கவில்லை, இயற்கையோடு கூடிய தோட்டப்புரத்து வாழ்க்கையைப் பற்றிய அவர்களின் நாவல்கள் கதைகள் மிக அற்புதமானவை, தனித்துவமானவை,

மலேசியத்தமிழ் சிறுகதைகளில் சீனம், மலேசியம், தமிழ் என்று மூன்று பண்பாட்டுக்கூறுகளின் கலப்பு காணப்படுகிறது, தனிமையும், அடையாளச்சிக்கலும், நகர்மயமாவதின் அகபுறப் பிரச்சனைகளுமே இன்றைய சிறுகதைகளின் பிரதானக் களமாக உள்ளது.

மொழிக்கலப்பு மற்றும் பின்நவீனத்துவம் தேவையா என்பதைப்  பற்றியே என்னிடம் அதிகம் கேள்விகள் கேட்கப்பட்டன,

யாஸ்மின் அகமது என்ற திரைப்பட இயக்குனரின் செபட் (Sepet – Yasmin Ahmad ) என்ற படம் பார்த்தேன், அற்புதமான படம். நிறைய விருதுகளைப் பெற்றிருக்கிறது,

விமானத்தில் 1974ல் வெளியான Rajnigandha என்ற பழைய ஹிந்திபடம் ஒன்றினைப் பார்த்தேன், பாசு சட்டர்ஜி இயக்கியது, கதை சொல்லும் முறையும் காட்சிபடுத்தபட்ட விதமும் மிகுந்த சுவாரஸ்யமானதாக இருந்தது, குறிப்பாக கே.கே.மஹாஜன் ஒளிப்பதிவு, காட்சிக்கு காட்சி கவிதையாக எடுத்திருக்கிறார், வித்யா சின்ஹா, அமோல்பலேகர் இவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள், இப்படத்தில் உள்ள சலீல் சௌத்ரியின் இசை பயணத்தின் களைப்பை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது

என் அருகில் ஒரு சீனர் மிகவும் உற்சாகமாக காவலன் திரைப்படத்தை பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார், அது படம் பார்ப்பதை விட அதிக உற்சாகமாக இருந்தது.

சீனர்கள் நடத்தும் Old Town white coffee என்ற தொடர் உணவகத்தின் காபி மிகவும் பிடித்துப்போனது,  அந்தக் காபியின் ருசி அலாதியானது, அதைவிட கூடிப்பேசுவதற்கு வசதியாக அவர்கள் அமைத்துள்ள இருக்கைகளும் சுதந்திரமும் இது போன்ற இடம் எதுவும் சென்னையில் இல்லையே என்ற ஏக்கத்தையே உருவாக்கிவிட்டது

மலேசிய தமிழ்மக்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போது பசியாறிவிட்டீர்களா என்று அன்போடு கேட்கிறார்கள், பசியாறுதல் என்பது சாப்பிட்டீர்களா என்பதை விடவும் நல்லதொரு வார்த்தை, தமிழ்நாட்டில் காரைக்குடி மற்றும் நெல்லைவட்டாரத்தில் இந்த பிரயோகமிருப்பதை கேட்டிருக்கிறேன்.நாம் கைவிட்ட பல நல்ல தமிழ் சொற்களை மலேசிய தமிழ் மக்கள் அன்றாடம் பயன்படுத்துகிறார்கள், அதன் தனித்துவத்தை அவர்கள் பேச்சில் கேட்பது சந்தோஷமாக இருந்தது

அங்கே காபி தேவைஎன்றால் பசும்பால் காப்பி என்று சொல்லியாக வேண்டும், இல்லாவிட்டால் பால்படவுர் கலந்த காபி வந்துவிடும், நிறைய சமஸ்கிருத சொற்கள் அப்படியே மலேசிய சொற்களாகியிருக்கின்றன

ஐம்பதுக்கும் மேற்பட்ட மலேயச்சொற்களைக் கற்றுக் கொண்டேன்,  என்னை வியக்க வைத்த அம்சம் சீனர்களின் சுறுசுறுப்பான வாழ்க்கை, வணிகத்தில் அவர்கள் காட்டும் ஈடுபாடு, சீனர்களின் பூர்வீகக் கோவில்களை கண்டேன், அதன்நுண்கலைப்பொருட்கள் விற்பனையகத்திற்கு சென்று நிறைய பழம்பொருள்களையும் பல்வேறுவிதமான தைல வண்ண ஒவியங்களை பார்க்க முடிந்தது,

நோன்புகாலம் என்பதால் அன்றாடவாழ்க்கையின் மீது சாந்தமும் அமைதியும் படிந்திருப்பதை உணர முடிந்தது, ஒரு பக்கம் அதிநவீன கட்டிடங்களும் தொழில்நுட்பமும் ஒன்று சேர்ந்திருக்கிறது, மறுபக்கம் மன்னர் ஆட்சி, அதன் மரபுகள் என்று ஒரே நேரத்தில் இரண்டு வேறு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது கோலாலம்பூர்,

கோலா லும்பூர் என்பதை சரி என்று சொன்ன ஒரு வரலாற்று அறிஞர் இரண்டு ஆறு சங்கமிக்கின்ற சேறு நிரம்பிய இடம் என்பதே அதற்குப்பொருள் என்று சொன்னார், மலேசியாவின் முக்கிய ஊர்ப்பெயர்களின் காரணத்தை கேட்டு அறிந்தபோது வியப்பாக இருந்தது, பெரும்பாலும் பறவைகளின் பெயராகவும், மரங்களின் பெயராகவும், ஊர் பெயர்  வைக்கப்படுகிறது, ஈப்போ என்ற நகரின் பெயர் நஞ்சுகலந்த மரம் என்றார்கள்,

இந்தப்பயணத்தின் போது  பா. சிங்காரத்தையும் நாடக கலைஞர் டிகே சண்முகத்தையும் அதிகம் நினைத்துக் கொண்டேன், அவர்கள் இருவரும் மலேசிய தமிழ்வாழ்க்கையை நமக்கு அறிமுகம் செய்து வைத்ததில் முன்னோடிகள்,

மலேசியாவில் டாக்டர் ஜெயபாரதி அவர்களின் தந்தை நடத்திய வணிக நிறுவனத்தில் தான் பா.சிங்காரம் பணியாற்றியிருக்கிறார், ஜெயபாரதி அவர்களுடன் மூன்று முறை தொலைபேசியில் உரையாட முடிந்தது, நேரில் சந்திக்க விரும்பிய போதும் காலநெருக்கடியால் சந்திப்பு இயலாமல் போனது, அவர் ஒரு வாழும்வரலாறு, தமிழின் அரிய வரலாற்றுப் பொக்கிஷங்களை பாதுகாத்து வைத்திருக்கிறார். மூன்று மாதங்களில் அவரைச் சந்திக்க மீண்டும் ஒரு பயணம் மேற்கொள்ள எண்ணியிருக்கிறேன்

இந்தப் பயணத்தில் மலேசியத் தமிழ் இலக்கியத்தின் புத்திலக்கியங்களை வாசிக்கவும் அதன் முக்கிய எழுத்தாளர்களைச் சந்திப்பதற்கும் முடிந்தது சந்தோஷமாக இருந்தது, குறிப்பாக எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு அவர்களோடு பழகியது மறக்கமுடியாத அனுபவம்,

இந்தப்பயணத்தில் நிறைய புதிய நண்பர்கள் அறிமுகமானார்கள், இளம்வாசகர்களுடன்  கூடிப்பேசவும் பகிர்ந்து கொள்ளவும் முடிந்தது உற்சாகப்படுத்தியது

தொடர்ந்து  இடைவிடாத மழையுடன் மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் பயணம் செய்து கொண்டிருந்தேன், அந்த மழை நாம் அறிந்த ஒன்றில்லை, இடியோசையில்லை, அடர்மழை என்று சொல்வோமே அது போன்ற கனமான மழை, மூன்று நான்குமணிநேரம் தொடர்ச்சியாக பெய்து கொண்டேயிருக்கிறது

பயணவழியெங்கும் கூடவே வந்து கொண்டிருந்த மலைகளின் மௌனமும் அழகும் மனதில் என்றும் அழியாத சித்திரமாக பதிவாகியுள்ளது.

பயணத்தில் என் கூடவே இருந்து சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்ட மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் ராஜேந்திரன், டாக்டர் முல்லை ராமையா. ரெ.கார்த்திகேசு, புண்ணியவான், நண்பர் துரைசிங்கம், செண்பகவள்ளி, பொன்.கோகிலம். ஸ்ரீவிக்னேஸ்வரன். பயிலரங்கில் துணைநின்ற முனைவர் சம்பத், நேர்காணல் செய்த தயாஜி, அனைவருக்கும் மனம் நிரம்பிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

••

0Shares
0