What I Talk About When I Talk About Running என்ற ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முராகமியின் புத்தகம் அவரது ஒட்டப்பந்தய அனுபவங்களை விவரிக்கிறது, முராகமி மராத்தன் ஒட்டத்தில் ஈடுபாடு கொண்டவர், தனது மத்திய வயதில் ஒட்டப்பந்தயங்களில் ஆர்வமாகிய முராகமி அதை ஒரு விளையாட்டு என்பதை தாண்டிய ஆன்மீக அனுபவமாக விவரிக்கிறார், ஒட்டப்பந்தயத்தில் ஒருவன் அடையும் வெற்றி என்பது அவன் எவ்வளவு நிமிசங்களுக்கு ஒடி வெற்று பெறுகிறான் என்பது மட்டுமில்லை, மனிதர்களின் உடல் எவ்வளவு வேகமாக ஒடக்கூடியது என்று உலகிற்கு அறிவிக்கபடும் வெற்றி ஆகவே ஒரு பந்தய வீரனின் சாதனையின் வழியே மனித குலமே தன்னை மேம்படுத்திக் கொள்கிறது எனும் முராகமி ஒட்டப்பந்தயம் குறித்த தனது எண்ணங்களையும் நினைவுகளையும் விரிவாக இதில் பதிவு செய்திருக்கிறார்
••
Dostoevsky in 90 Minutes என்ற இரண்டு பகுதிகளால் ஆன Paul Strathern னின் ஆடியோ புத்தகம் ஒன்றினைக் கேட்டேன், புதிய வாசகர்கள் தஸ்தாயெவ்ஸ்கியை அறிந்து கொள்வதற்கான எளிய வழியிது, சுவாரஸ்யமாக, அதே நேரம் அவரது தனித்துவங்கள் அத்தனையும் எடுத்துக்காட்டும் விதமாக இந்த உரை அமைந்திருக்கிறது, பிளாட்டோ, நீட்ஷே போன்ற ஆளுமைகளைப்பற்றிய எளிய அறிமுகப்புத்தகங்களை எழுதிய பவுல் தற்போது இலக்கிய ஆளுமைகளை குறித்து இது போன்ற உடனடி புத்தகங்களை உருவாக்கி வருகிறார்
••
RAYMOND SMULLYAN கணிதப்புதிர்களை உருவாக்குவதில் கில்லாடி, இவரது புத்தகங்கள் பெரும்பாலும் புனைவும் கணிதமும் ஒன்று சேர்ந்தே உருவாக்கபடுகின்றன, கணிதத்தை புனைவோடு சுவாரஸ்யமாக எழுதும் சிமுலியன் எழுதிய The Lady or the Tiger ? ஒரு முக்கியமான கணிதபுதிர்களின் தொகுப்பு, போர்ஹேயின் கதையை வாசிப்பது போன்ற ஈர்ப்பு கொண்டதாகயிருக்கிறது , சிமுலியன் தாவோ சிந்தனை மரபில் அதிக ஈடுபாடு கொண்டவர், அது குறித்தும் விரிவான நூலை எழுதியிருக்கிறார், சதுரங்க விளையாட்டின் வழியே அராபியப் புனைகதைகளின் புதிர்தன்மையை விளக்கும் அவரது எழுத்தை முன்னதாக வாசித்திருக்கிறேன், புதிர்பாதைகளை உருவாக்கும் இந்த விசித்திர ஆளுமை நாம் அறிந்து கொள்ளப்பட வேண்டிய முக்கிய புதிராளர்,
••
சுவாமி சிவானந்த பரமஹம்ஸரின் சித்தாஸ்ரமத்திற்கு சென்றிருந்தேன், சிவானந்த பரமஹம்ஸர் சித்தவேதம் என்ற நூலை எழுதியிருக்கிறார், அதில் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருக்கும் ஒரு ஜீவன் இல்லை, இருப்பது ஒரே ஜீவன், அது எல்லோருக்குள்ளும் இருக்கிறது என்று பொருள் கொள்ளும்விதமாக தனது ஜீவனுடைய சரித்திரத்தை சித்த வேதம் என்ற நூலாக எழுதியிருக்கிறார், சித்தவேத்த்தின் மொழியும் கேள்விபதில் முறைகளும் சுவாரஸ்யமாக இருக்கின்றன,
••
விவேக சிந்தாமணியை வாசித்துக் கொண்டிருந்தேன். தமிழ் நீதி நூல்களை ஒருவன் ஆழ்ந்து வாசித்தால் போது திரைக்கதை எழுதுவது மிக எளிதாகிவிடும், இந்தப் பாடலை பாருங்கள், அதில் உள்ள ஒவ்வொன்றும் ஒரு காட்சிகள், அதன் பின்னே ஒரு கதை ஒளிந்திருக்கிறது, திரைக்கதை எழுதுவதற்கு சிட் பீல்டினை திரைக்கதை நூலை வாசிப்பதை விட இது போன்ற நீதிநூற்களை வாசிக்கும்படியாகவே நான் சிபாரிசு செய்வேன்
ஆபத்துக்கு உதவாப் பிள்ளை அரும்பசிக்கு உதவா அன்னம்
தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்
பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை ஏழும்தானே.
**
தாங்கொணா வறுமை வந்தால் சபைதனில் செல்ல நாணும்
வேங்கை போல் வீரம் குன்றும் விருந்தினர் காண நாணும்
பூங்கொடி மனையாட்கு அஞ்சும் புல்லருக்கு இணங்கச் செய்யும்
ஓங்கிய அறிவு குன்றும் உலகெலாம் பழிக்கும் தானே
**
அரவினை ஆட்டுவாரும் அரும் களிறு ஊட்டுவாரும்
இரவினில் தனிப்போவாரும் ஏரிநீர் நீந்துவாரும்
விரைசெறி குழலியான வேசையை விரும்புவாரும்
அரசனைப் பகைத்திட்டாரும் ஆருயிர் இழப்பார் தாமே.
**
‘சங்காரா’ என்ற பிரசன்ன ஜெயக்கொடி இயக்கிய சிங்களப்படம் ஒன்றினை இணையத்தில் பார்த்தேன் புத்த ஜாதகக்தைகளைச் சுவரோவியமாக கொண்ட ஒரு பழமையான மடாலயம் ஒன்றிற்கு வருகை தரும் ஆனந்த தேரா என்ற பிக்குவின் கதை. இயற்கையோடு இணைந்த அழகான புறவெளி, அதன் ஊடாக பயணிக்கும் பிக்கு என படம் அற்புதமாக துவங்குகிறது
சிதைந்து போன ஒவியத்தினைத் திருத்தி புதிதாக நிறமூட்டி சரிசெய்வதே பிக்குவின் வேலை, அவன் விகாரையில் தங்கிக் கொண்டு ஒவியங்களைச் சரிசெய்கிறான்,
ஒருநாள் ஒவியத்தில் உள்ள பெண்ணின் சிதைந்த ஸ்தனங்களை வர்ணம் தீட்ட தொட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு ஒரு இளம் பெண் சிரிக்கிறாள், பிக்கு அதை கண்டு வெட்கமடைகிறான்,
தன்னை பரிகசித்த பெண்ணின் மீது பிக்குவிற்கு ஆசை உருவாகிறது, அவன் மனது சஞ்சலமடையத் துவங்குகிறது, தன்னியல்பை இழக்கிறான், அந்த பெண்ணின் நினைவு அவனை துயரப்படுத்துகிறது
படம் முழுவதும் ஊதுபத்தியின் புகையில் இருந்து வரும் நறுமணம் போல பௌத்தம் ஊடுகலந்திருக்கிறது, படத்தில் பிக்கு காட்சிபடுத்த விதம் மிக அற்புதமாக உள்ளது, மனதின் தூய்மையை இழந்துவிடுகின்ற பிக்குவின் கதை வழியே ஆசையின் கொந்தளிப்பை நாம் துல்லியமாக அறிந்து கொள்ள முடிகிறது, சமகாலத்தில் வெளியான மிக முக்கியமான சிங்களப் படமிது,
••
Jostein Gaarder எழுதிய Sophie’s World புத்தகம் தத்துவத்தின் வரலாற்றை விவரிக்கும் மிக முக்கியமான புத்தகம், சோபி என்ற பதிநான்கு வயது சிறுமிக்கு ஒருநாள் யார் எழுதியது எனத்தெரியாத ஒரு தபால் அட்டை வருகிறது, அதில் Who are you? Where does the world come from? என்ற கேள்வி உள்ளது, அனுப்பியவர் யார் என்று தெரியவில்லை, அந்தக் கேள்விக்கான விடைதேடுதலின் வழியே தத்துவத்தின் நீண்ட வரலாறு விவரிக்கபடுகிறது, இதுவரை நான் வாசித்த புத்தகங்களில் இதுவே எளிமையாகவும் ஆழமாகவும் தத்துவத்தின் சாரத்தை விளக்குகிறது, சுவாரஸ்யமாக வாசிக்க முடிகிறது என்பதே இதன் பலம், இந்த வகை எழுத்திற்குத் தமிழில் கவிஞர் ஆனந்த் முன்னோடி, அவரது இரண்டு சிகரங்களின் கீழ் மற்றும் நான் காணாமல் போகும் கதை இரண்டிலும் வெளிப்படும் தத்துவம் சார்ந்த புனைவெழுத்து சிறப்பானது.
••
இயக்குனர் மணிக்கௌலின் மரணம் இந்திய சினிமாவின் மாபெரும் இழப்பு, அவர் நாட்டார்கலைமரபின் உயர்கூறுகளை இந்திய சினிமாவில் இடம் பெறச் செய்தவர், ராஜஸ்தானத்தை சேர்ந்த மணிக்கௌல் அதன் நாட்டார் மரபிசையை தொன்மக்கதையை திரைப்படமாக்கியிருக்கிறார், அவரது துவிதா நாட்டார்மரபுக்கதையே.
மணிக்கௌல் தனது ஆசானாக கொண்டது ராபர்ட் பிரஸ்ஸானை, அவரது பிக்பாக்கெட் படத்தினை பலமுறை பார்த்துள்ளதாக தெரிவித்திருக்கிறார், பிரஸ்ஸானின் வழியில் தான் மணிக்கௌலின் படங்களும் உருவாக்கபட்டிருக்கின்றன.
தஸ்தாயெவ்ஸ்கியின் A Gentle Creature சிறுகதையை மணிக்கௌல் நசர் என்ற தலைப்பில் படமாக்கியிருக்கிறார், இறந்து போன மனைவியின் உடலின் முன்பாக ஒரு இரவைக் கழிக்கும் கணவனின் மனவோட்டமே இக்கதை, கதையின் அதே அழுத்தமும் இறுக்கமும் படத்திலும் இடம்பெற்றிருக்கிறது
தஸ்தாயெவ்ஸ்கியின் இடியட் நாவலையும் மணிக்கௌல் படமாக்கியிருக்கிறார், இவரது சித்தேஸ்வரி மற்றும் துருபத் பற்றிய டாக்குமெண்டரி படங்கள் புதிய அழகியலை உருவாக்கியவை,
மணிக்கௌலிற்கு மிகவும் பிடித்தமான படம் குருதத் தயாரித்த Sahib Bibi Aur Ghulam . அப்ரார் ஆல்வி இயக்கத்தில் வெளியான அற்புதமான திரைப்படம்,
மணிக்கௌலின் நினைவாக நேற்று சாகிப் பீபீ அவுர் குலாம் படத்தை மறுபடியும் பார்த்தேன், ஒரு பெண் தன்னைக் கணவன் நேசிக்கவில்லை என்பதற்காக குடிக்கப் பழகி மெல்ல அந்தக் குடியால் தன்னை அழித்துக் கொள்ளும் அந்த சோகம் நெஞ்சைக் கவ்வக் கூடியது, குருதத், மீனா குமாரி, வகிதா ரஹ்மான் மூவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள், பாடல்களும் அது பாடமாக்கப்பட்ட விதமும் மெய்மறக்க செய்கின்றன.
**