பதினெட்டாம் நூற்றாண்டின் மழை

என் ஆதர்ச எழுத்தாளரான அ.முத்துலிங்கம் அவர்கள் எனது சிறுகதைத்தொகுப்பான ‘பதினெட்டாம் நூற்றாண்டின் மழை’ பற்றி எழுதிய கட்டுரை.

••

தனியாக அனுப்பிவிட்ட மகிழ்ச்சி

அப்பூதியடிகள் என்ற தொண்டரைப்பற்றி பெரியபுராணத்தில் படித்திருப்போம். அவர் திருநாவுக்கரசரில் அளவில்லாத பக்தி கொண்டவர். திருநாவுக்கரசரை அவர் பார்த்தது கிடையாது, கேள்விப்பட்டதுதான். ஆன்மீக குருவாக அவரை வரித்து நிறைய தானதருமங்கள் செய்து வந்தார். அவருடைய பிள்ளைகள் எல்லோருக்கும் ‘திருநாவுக்கரசர்’ என்றே பெயர் சூட்டினார். ஆடு மாடுகளுக்கும் அதே பெயர்தான். திருநாவுக்கரசர் பெயரால் ஒரு தண்ணீர் பந்தல் நடத்தி   வழிப்போக்கர்களின் தாகம் தீர்த்தார்

ஒருநாள் நாவுக்கரசர் களைத்து நடந்து பந்தலுக்கு வந்து தாகம் தீர்ந்து ஆறினார். அப்பூதியடிகளைப் பார்த்து ‘இந்த நாவுக்கரசர் யார்?’ என்று வினவினார். ‘அவர் என்னுடைய குரு’ என்றார். ‘அப்படியா, அவரை பார்த்திருக்கிறீரோ?’ ‘இல்லை’ என்றார். ‘அடியேன்தான் நாவுக்கரசர்.’ அப்பூதியடிகள் திகைத்துப்போனார்.

இரண்டுநாள் முன்பு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதைப் படித்தபோது எனக்கு அப்பூதியடிகள் அனுபவித்த பரவச உணர்வு நினைவுக்கு வந்தது. அந்தக் கடிதம் இதுதான்.

‘உங்கள் இணைய தளத்தை முழுமையாக வாசித்தேன் , பதிவுகள் மிக நன்றாக உள்ளது, உங்கள் எழுத்தின் தனிச்சிறப்பு மெல்லிய பகடி, நுட்பமான விவரணை அது வெகு சிறப்பாக கட்டுரைகளில் உள்ளது, இணைய வடிவமைப்பு . எழுத்துரு வடிவம் அழகாக உள்ளது எனக்கு பிடித்தமான எழுத்தாளரின் இணைய தளம் என்பதால் அடிக்கடி இதைப்பார்வையிடுகிறேன், எஸ்,ராமகிருஷ்ணன் சென்னை.’

இது எனக்கு அவர் தனியாக அனுப்பிவிட்ட மகிழ்ச்சி. எஸ்.ராமகிருஷ்ணனை நான் சந்தித்தது கிடையாது; பேசியதும் இல்லை. உலகம் அறிந்த, லட்சக்கணக்கான வாசகர்களைக்கொண்ட ஓர் எழுத்தாளர் இன்னொருவரை பாராட்டுவதற்கு மனதின் எல்லாக் கதவுகளும் திறந்திருக்க வேண்டும்.  எஸ்.ராமகிருஷ்ணன் அப்படியானவர்.

நான் இணையதளம் தொடங்கியதை ஒருவருக்கும் சொல்லவில்லை. என் உற்ற நண்பர்களுக்குக்கூட தெரியாது. என் மனைவி அதை தற்செயலாகவே கண்டுபிடித்தார். எனக்கு அவ்வப்போது தோன்றுவதை எழுதுவதற்காக ஆரம்பிக்கப்பட்டது. மற்றவர்கள் படிப்பார்கள் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. அதுவும் மிகவும் பிசியான எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற ஒருவர்  தானாகவே தளத்தை தேடி வந்து படிப்பதென்றால் அது ஆச்சரியப்படவேண்டிய விசயம்தானே.

என்னுடைய மகிழ்ச்சிக்கு இன்னொரு காரணமும் இருந்தது. இரண்டுநாள் முன்புதான் சென்னையிலிருந்து நான் தபால்மூலம் எடுப்பித்த எஸ்.ராமகிருஷ்ணனின் ‘பதினெட்டாம் நூற்றாண்டின் மழை’ சிறுகதை தொகுப்பை படித்து முடித்திருந்தேன். இப்படியான புத்தகங்களை படித்தால் அது மனதில் பெரும் விரக்தியை உண்டாக்கிவிடும். ஒன்றுமே படிக்கவோ எழுதவோ தோன்றாது. ஆழமான மன எழுச்சியடைந்திருந்தேன். சிறுகதைகள் எழுப்பிய அதிர்வு மனதில் அடங்க சில காலம் பிடிக்கும்.

ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் ’50சேம் மாட்டுத்தாள்’ விற்றார்கள். அதன் விலை ஐந்து ரூபாயாக உயர்ந்தபிறகும்கூட அதை ’50சேம் மாட்டுத்தாள்’ என்றே அழைத்தார்கள். நான் லாகூருக்கு போனபோது அங்கே  ‘நவ்லாக்’ என்ற மண்டபத்தை பார்த்தேன். கலாபூர்வமான உள்வண்ண வேலைப்பாடுகள் கொண்ட சலவைக்கல் விமானம். ‘நல்லாக்’ என்றால் ஒன்பது லட்சம் என்று அர்த்தம். ஷாஜஹானுக்கு கட்டிடங்கள் கட்டுவதே வேலை. கட்டிடத்தின் செலவுக் கணக்கை பார்த்தபோது ஒன்பது லட்சம் காட்டியதாம். அப்படியே அதன் பெயரைக சூட்டிவிட்டார்கள். ஒரு பொருளுக்கு அதன் விலையையே பெயராக சூட்டுவது சில இடங்களில் வழக்கம்.

எஸ்.ராவின் புத்தகத்தில் நான் படித்த முதல் சிறுகதை அப்படியான ஒன்றுதான். என் வழக்கம்போல புத்தகத்தை நடுவிலே பிரித்து படிக்கத் தொடங்கியபோது அகப்பட்ட சிறுகதைதான் ‘ஹசர் தினார்.’ ஹசர் தினார் என்றால் ஆயிரம் தினார் என்பது பொருள். ஓர் அடிமையை ஆயிரம் தினார் கொடுத்து வணிகன் வாங்குகிறான். அதிலிருந்து அடிமைக்கு ஹசர் தினார் என்ற பெயர் நிலைத்துவிடுகிறது. அந்த இழிவான பெயர் அடிமைக்கு பிடிக்கவில்லை. தன் வாழ்நாள் முழுவதும் அந்த பெயரை உதறி எறியவே முயற்சிக்கிறான். டில்லியை அப்போது ஆண்ட சுல்தான் கில்ஜி இந்த அடிமையை வாங்குகிறான். இருவரும் காதலர்கள் ஆகிறார்கள். வெகு சீக்கிரத்தில் சுல்தானின் மனதையும், அரண்மனையையும் தன் வசப்படுத்திவிடுகிறான் ஹசர் தினார். அரசனிடம் தனக்கு ஒரு புதுப்பெயர் வைக்கச்சொல்லி மன்றாடுகிறான். அரசன் ‘மாலிக் கபூர்’ என்று நாமம் சூட்டுகிறான். அப்படியும் அவன் வெறுக்கும் ஹசர் தினார் என்ற பழைய பெயர்தான் தொடர்கிறது. ஒருநாள் அரசனை நஞ்சுவைத்து கொன்றுவிட்டு டில்லிக்கு அரசனாகி ஆள்கிறான். வெளியே அவன் மாலிக் கபூர் என்று அறியப்பட்டாலும் வரலாற்றிலிருந்து அடிமைச் சின்னமான ஹசர் தினார் என்ற பெயரை அவனால் இறுதிவரை நீக்கிவிட முடியவில்லை.

‘சௌந்திரவல்லியின் மீசை’ என்று ஒரு கதை. ஏழாம் வகுப்பு படிக்கும் சௌந்திரவல்லிக்கு மெல்லிய மீசை  முளைத்துவிடுகிறது. வகுப்பில் பையன்களும் பெண்களும் கேலி செய்கிறார்கள். சயின்ஸ் வாத்தியார் வகுப்பர்களுடன் சேர்ந்து, இரண்டுபேர் அவள் தலையை அழுத்திப் பிடிக்க, குனிந்து அவள் முகத்தை பார்த்து பலத்த சிரிப்போடு ‘ஆமாம், மீசை இருக்கிறது’ என்று ஆமோதிக்கிறார். சௌந்திரவல்லி அவமானம் தாங்காமல் பள்ளிக்கூடம் போவதை நிறுத்திவிடுகிறாள். மஞ்சள் கிழங்கை முகத்தில் தேய் தேய் என்று தேய்க்கிறாள். முகம் மஞ்சள் காமாலை வந்தவள் போல மாறிவிடுகிறது. பச்சிலை, கழுதை மூத்திரம் என்று சகல வைத்தியமும் செய்துபார்க்கிறாள். நாள் போனது, மீசை போகவில்லை

ஒருநாள் அம்மா டவுனுக்கு போய் முகத்துக்கு பூசும் கிரீம் வாங்கிவந்து கொடுக்கிறாள். சௌந்திரவல்லி வேண்டாமென்று விடுகிறாள். தலையில் அடித்தபடியே தாய் அழத் தொடங்குகிறாள். சௌந்திரவல்லிக்கும் அழவேண்டும்போல இருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு அழுதார்கள். அந்த அழுகை சௌந்திரவல்லியின் மீச முளைத்ததற்காக மட்டும் இல்லை என்பது இருவருக்கும் தெரிந்தேயிருந்தது.

ஏழாம் வகுப்பு தமிழில் எழுதப்பட்ட இந்தக் கதை ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கான கதை அல்ல. உலகத்தின் எந்த வொரு மூலையில் வாழும் எந்த ஒருவரும் தன்னை அதில் காணும் கதை

‘நற்குடும்பம்’ என்ற கதை. நான் இருமுறை படித்தது. இன்னும் ஒரு தடவை படிக்கலாம் என்று இருக்கிறேன். தொகுப்பிலே உள்ள கதைகளில் ஆகச் சிறந்தது என்பது என்னுடைய எண்ணம். இந்தக் கதை நடுவிலே தொடங்குகிறது. வித்தியாசமான கட்டமைப்பு. அப்பாவின் சம்பள நாள் அன்று வழக்கம்போல அம்மாவும் மகனும் பஸ்பிடித்து வந்து பஸ் நிலையத்திலே அப்பாவுக்காக காத்து நிற்பார்கள். ஒருநாளும் அப்பா சொன்ன நேரத்துக்கு வருவது கிடையாது. அவன் அம்மா மூத்திரம் போவதற்குகூட பயந்து அடக்கிக்கொண்டு காத்திருப்பாள். சிடுசிடுத்த முகத்தோடு அப்பா தான் நினைத்த நேரத்துக்கு வருவார். அம்மா ஒரு சொல் பேசமாட்டாள். சாமான்களை வாங்கிக்கொண்டு பஸ்சில் வீடு திரும்புவார்கள்.

அப்பாவை பார்க்கும்போது அம்மா எதற்காகவோ நடுங்குவாள். அப்பா அடிக்கும்போதெல்லாம் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு அம்மா தாத்தா வீட்டுக்கு போவாள், மறுபடியும் திரும்புவாள். ஒரு நாள் அம்மா அடியின் வலி தாங்க முடியாமல் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொள்கிறாள்.

அப்பா அவசரமாக இன்னொரு பெண்ணை மணமுடித்து வீட்டுக்கு கூட்டிவந்தார். ஆனால் எல்லாமே மாறிவிட்டது. அவனும் சித்தியும் மாதக் கடைசியில் பஸ் நிலையத்துக்கு வந்தார்கள். சித்தி பஸ் நிலையத்தில் காத்திருக்க சம்மதிக்கவில்லை, அப்பாவின் அலுவலகத்துக்கே போய் விடுகிறாள். அவனுக்கு அதிர்ச்சி. சாமான்களை வாங்கி ரிக்சாவில் கொண்டு செல்கிறார்கள். அம்மா இருந்தபோது ஒருமுறைகூட ரிக்சா பிடித்ததில்லை. பேருந்தில் திரும்பும்போது சித்தி அப்பாவின் தோளில் சாய்ந்திருக்கிறாள். அவளுடைய கேசம் காற்றில் விசிறிபோல பறக்கிறது. அவனுடைய அம்மா இப்படியெல்லாம் செய்ததே கிடையாது. அம்மாவை அடித்த அதே அப்பா எப்படி சித்தியிடம்மாறிவிட்டார் என்பது அவனுக்கு புரியவே இல்லை.

தொகுப்பில் கடைசியாக வருவது விசித்திரி என்ற விசித்திரமான கதை. தெருவில், பகல் நேரத்தில், ஒரு பெண் நிர்வாணமாக ஓடிவருவதிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. அன்று பின்மதியப் பொழுதில் என்ன நடந்ததென்பது ஒருவருக்கும் தெரியாது. ஊகம்தான். அவள் உடைக்குமேல் உடை அணிந்து, வீட்டில் அகப்பட்ட துணியை எல்லாம் எடுத்து உடலை சுற்றிக் கட்டியிருக்கிறாள். அவள் என்னத்தை மறைக்க எண்ணுகிறாள். தன்னையா அல்லது உலகத்தையா?

இப்படி தொகுப்பில் பல கதைகள். ஆனால் ஒன்றையொன்று தூக்கிச் சாப்பிட்டுவிடும். ஒவ்வொரு கதைக்கும் ஒரு சொல்முறை உருவாகியிருக்கிறது. ஆங்கில எழுத்தாளர் யாரை சந்தித்து சிறுகதையின் வெற்றி என்னவென்று நீங்கள்  கேட்டாலும் அவர்கள் construction (கட்டுமானம்) என்று பதில் சொல்வார்கள். நான் அப்படி பலமுறை கேட்டிருக்கிறேன். இந்த தொகுப்பில் உள்ள 27 கதைகளில், நான் மேலே சொன்ன கதைகள் ஒரு மாதிரிக்குதான். ஒவ்வொரு சிறுகதையின் கட்டுமான நுட்பங்களும் கூர்ந்து அவதானிக்கத் தக்கவை. உணர்ச்சிப்பெருக்குக்கு ஏற்றமாதிரி கட்டுமானம் மாறுபடுவதுதான் இதன் பெரிய வெற்றி.

சில கதைகள் அழவைத்தாலும் வாசிப்பு இன்பம் என ஒன்று இருக்கத்தானே செய்கிறது. jigsaw puzzle ல் ஒரு சில்லு இன்னொரு சில்லைப்போல இருப்பதில்லை. இந்த தொகுப்பில் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகையாக அமைந்துள்ளது. சிறுகதை எழுதுவோருக்கு பாடப்புத்தகமாக வைக்கக்கூடிய அளவுக்கு கதைகள் கச்சிதமாக நிறைவடைந்திருக்கின்றன. நல்ல சிறுகதையின் இலக்கணம் அதை வாசித்து முடித்த பின்னர் நீங்கள் பார்க்கும் பார்வை விசாலமானதாக இருக்கவேண்டும் என்பவர்கள் உண்டு. புதுக் கண்கள் கிடைக்கும் என்பார்கள். உங்களுக்கு ஒரு புது உலகமே காத்திருக்கிறது. இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் எஸ்.ரா தனித்தனியாக அனுப்பிவைத்த மகிழ்ச்சி போய்ச்சேரும்.

**

நன்றி : அ.முத்துலிங்கம்

https://amuttu.com/index.php?view=pages&id=33

0Shares
0