பதினேழாவது ஆள்

2021 ஆகஸ்ட் காலச்சுவடு இதழில் வெளியான எனது குறுங்கதை

ராமநாதன் வீட்டில் மாட்டப்பட்டிருந்த குடும்ப புகைப்படத்தில் புதிதாக ஒருவர் தோன்றியிருந்தார். அவர் யார். எப்படி புகைப்படத்தில் புதிதாகத் தோன்றினார் என்று வீட்டில் எவருக்கும் புரியவில்லை. அந்தப் புகைப்படம் 1986ல் எடுக்கப்பட்டது. அஜந்தா ஸ்டுடியோவில் பொங்கலுக்கு மறுநாள் எடுத்தது. சின்ன அக்கா கல்யாணி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எடுத்த புகைப்படம். சுருள் முடியோடு பேரழகியாக இருக்கிறாள். அந்த புகைப்படத்தில் மொத்தம் பதினாறு பேர் இருந்தார்கள்.

ஆனால் பதினேழாவதாக ஒரு ஆள் சபரிமாமாவிற்கும் சொக்கர் அண்ணனுக்கும் நடுவில் எப்படித் தோன்றினார் என்று புரியவேயில்லை. ராமநாதன் புகைப்படத்தைச் சுவரிலிருந்து எடுத்து கிழிந்த துணியால் துடைத்துப் பார்த்தார். புதிதாகத் தோன்றியிருந்த ஆளுக்கு இருபத்தைந்து வயதிருக்கும். ஒடுங்கிய முகம். இடது புருவத்தின் குறுக்கே வெட்டு தழும்பு இருந்தது, மெலிந்த உடல். கோடு போட்ட சட்டை. கறுப்பு பேண்ட். அப்படி ஒரு முகச்சாடை கொண்ட எவரும் தங்களின் குடும்பத்தில் கிடையாது. அப்படியானால் யார் இவன். எப்படி புகைப்படத்தில் தோன்றினான் என்று அவருக்குப் புரியவில்லை. கோவையில் வசிக்கும் சபரிமாமாவிற்கு போன் செய்து கேட்கலாம் என நினைத்தார். போனில் மாமாவின் லைன் கிடைக்கவில்லை,

ஐந்து நிமிஷத்திற்குப் பிறகு சபரி மாமாவிடமிருந்து போன் வந்தது. பேச்சை ஆரம்பிக்கும் “முன்பே நம்ம வீட்ல ஒரு குரூப் போட்டோ இருந்துச்சே“ என்று தான் ஆரம்பித்தார். “ஆமா“ என்று தெரியாதவர் போல கேட்டார் ராமநாதன். “அதுல புதுசா ஒரு ஆள் நிற்கிறது மாதிரி இருக்கு. பழைய போட்டோவில புது ஆள் எப்படி வர முடியும். நான் தான் இத்தனை நாள் போட்டோவை சரியாக பாக்கலையா“ என்று கேட்டார் சபரி மாமா

“அந்த ஆள் புருவத்துல தழும்பு இருக்கா“ என்று கேட்டார் ராமநாதன். “ஆமா. அது யாரு.. நமக்கு தெரிஞ்சவனா“..எனக்கேட்டார் சபரி மாமா

“எனக்கும் தெரியலை. ஆனா என் வீட்டு போட்டோவிலயும் அந்த ஆள் தோன்றியிருக்கான்“ என்றார்.

இந்த இருவர் மட்டுமில்லை. அந்த போட்டோ வைத்திருந்த ஐந்து குடும்பங்களிலும் அந்த இளைஞன் புதிதாக இணைந்திருந்தான். பகலிரவாக அவன் யாரென உறவினர்களிடம் விசாரித்தார்கள். யூகம் செய்தார்கள். பழைய ஆல்பங்களைத் தேடினார்கள். எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நாட்களில் அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட காலத்தில் குடும்பத்தில் இருந்த சந்தோஷம். இளமைக்கால நினைவுகள். சொந்த ஊரில் வாழ்ந்த வாழ்க்கை பற்றி ஏக்கத்துடன் போனில் பேசிக் கொண்டார்கள். தற்கொலை செய்து கொண்ட கல்யாணி அக்காவை யாரும் இப்போது நினைப்பதில்லை என்பதைப் பற்றி குற்றவுணர்ச்சி கொண்டார்கள்.

கடைசியில் புதிதாகத் தோன்றிய இளைஞன் புகைப்படத்தில் இருந்தால் இருந்து விட்டுப் போகட்டும், போட்டோ தானே என்று முடிவு செய்தார்கள்.

இந்த முடிவை அவர்கள் அடைந்த மறுநாள் காலை புகைப்படத்தில் இருந்த இளைஞன் மறைந்திருந்தான். அவன் உருவம் மறைந்த போது புகைப்படத்திலிருந்த கல்யாணி அக்காவும் மறைந்திருந்தாள். அது தான் ஏன் என எவருக்கும் புரியவில்லை. 

••

0Shares
0