பதேர் பாஞ்சாலி


 


 


 


 


 


 


எங்கிருக்கிறாய் துர்கா ?இரண்டு நாட்களுக்கு முந்தைய இரவில் பதேர்பாஞ்சாலி திரைப்படத்தை பின்னிரவில் தனியாக உட்கார்ந்து பார்த்து கொண்டிருந்தேன்.  இதற்கு முன்பாக இருபது முறைகளுக்கும் மேலாக பார்த்திருக்கிறேன் என்றாலும் அந்த படம் அந்தரங்கமாக சில சலனங்களை எனக்குள் உருவாக்குகிறது என்பதற்காகவே அடிக்கடிப் பார்ப்பேன். விளக்கின் சுடர் நிசப்தமாக அசைந்து கொண்டிருப்பது போல காட்சிகளின் வழியே  ஏதோ துண்டப்பட்டு சலனம் கொள்ளத் துவங்கியிருந்தேன். முன்பு ஒரு போதும் பார்த்தறியாத ஒரு படத்தை காண்பது போலவே ஒவ்வொரு சிறு அசைவிற்கும் மனது கூடவே அசைந்தது.


எனது இருபத்திரெண்டாவது வயதில் பதேர் பாஞ்சாலி படத்தை முதன்முறையாக பெங்களுரில் உள்ள ஒரு திரைப்பட இயக்கம் நடத்திய திரைவிழாவில் பார்த்தேன். கல்லுரி விடுமுறைக்காக உறவினர் வீட்டிற்கு வந்திருந்த என்னை தற்செயலாக அந்த திரைப்பட விழாவிற்கு கூட்டிச் சென்றார் எனது மாமா. முதலிரண்டு நாட்கள் ஹங்கேரி படங்கள் திரையிட்டார்கள். அதில் எனக்கு பெரிதாக கவனம் கூடவில்லை.


ஒரு ஞாயிற்றுகிழமை காலை பத்து மணிக்கு பதேர்பாஞ்சாலி திரையிட்டார்கள். அன்று நாங்கள் திரையிடல் நடைபெற்ற இடத்திற்கு சென்றபோது ஐநுறுக்கும் மேற்பட்டவர்கள் முன்னதாகவே வந்து காத்திருந்தார்கள். கதவு திறக்கபடாததால் எல்லோரும் பொறுமையாக வெளியே காத்திருந்தார்கள். பத்து நிமிடங்களுக்கு பிறகு கதவு திறந்தது. ஒரு நபர் கன்னடத்தில் சத்யஜித்ரே பற்றி பேசினார். அதன்பிறகு பதேர்பாஞ்சாலி படம் ஒடத்துவங்கியது


வளைந்த மூங்கில் மரங்கள் அடர்ந்த பாதை, வெளிச்சம் இருளை துரத்தி விளையாடுகிறது. சுட்டசெங்கற்களால் ஆன வீடுகள். பழைய கால கிணறு, துருப்பிடித்த இரும்பு சட்டங்கள், வேதனையை மறைக்க தெரியாத மனிதர்கள் என ஒரு வங்காள கிராமம்  இடம் பெயர்ந்து வந்துவிட்டது போன்றிருந்தது. பார்க்க துவங்கிய சில நிமிசங்களிலே துர்காவிடம் என் மனதை பறி கொடுத்துவிட்டேன். துர்காவின் ஒவ்வொரு செயலும் என்னை அவளோடு மிகவும் நெருக்கமாக செய்தது.


துர்கா கொய்யாபழம் திருடுகிறாள். துர்கா அம்மாவிடம் திட்டுவாங்குகிறாள். துர்கா தம்பிக்கு அலங்காரம் செய்துவிடுகிறாள். ரயிலை காட்டுவதற்காக அழைத்துக் கொண்டு ஒடுகிறாள், பாட்டியோடு ஸ்நேகம் கொள்கிறாள். துர்கா பெரிய மனுஷியை போல புடவை கட்டியிருக்கிறாள். அப்பு பிறந்து வளர்ந்து வேடிக்கையான சிறுவனாக வளரும் போது கூட என்னால் அப்புவோடு நெருக்கம் கொள்ள முடியவேயில்லை. துர்காவின் பெரிய கண்கள், அடர்ந்த கூந்தல், முகச்சுழிப்பு, கள்ளசிரிப்பு என ஒவ்வொன்றாக என்னுள் வேர் பதித்து கொண்டேயிருந்தது.


துர்காவிற்கு உடல் நலமற்று போகிறது. அவள் இறந்து போய்விடுகிறாள். ஊரிலிருந்து திரும்பும் அப்பா எங்கே துர்கா என்று தேடும்போது அம்மாவால் பதில் பேசமுடியவில்லை. அவரது துக்கம் வெளிப்படுத்த முடியாமல் விக்கி நிக்கிறது. துர்கா இனி இல்லை என்று வீடே அவளின் வெறுமையை உணர்கிறது. அந்த நிமிசத்தோடு படத்திற்குள் முழ்கியிருந்த எனக்கு மூச்சடைப்பு ஏற்பட்டது போன்று படத்தை விட்டு கண்களை வேறு பக்கம் திருப்பத் துவங்கினேன். திரையைப் பார்க்கப் பிடிக்கவில்லை. ஒரு கண்ணாடிக் கோப்பையை கைதவற விட்டது போன்று உள்ளுக்குள் நடுங்கி கொண்டேயிருந்தது.


மாமா படத்தில் ஒன்றிப்போயிருந்தார். எழுந்து வெளியே போய்விடலாம் என்றாலும் தயக்கமாக இருந்தது. இருட்டுக்குள்ளாகவே தரையை வெறித்து பார்த்து கொண்டிருந்தேன். நாக்கில் கசப்பு படிந்துவிட்டது போன்றிருந்தது. என்னை அறியாமல் எப்போதாவது திரையை நேர்கொள்ளும் போது கூட அதனுள் மனம் ஒன்றவேயில்லை. துர்கா திருடி ஒளித்த வைத்த பொருட்களை அப்பு எடுத்து வெளியே எறியும் போது அத்தனையும் ஒடிப் போய் பொறுக்கி கொண்டுவிட வேண்டும் போலிருந்தது. ஈரக்களிமண் காலில் ஒட்டிக் கொள்வது போல மனதில் துர்கா அப்பிக் கொண்டு விட்டாள்.


படம்விட்டு வெளியே வந்து வெயில் மங்கிய சாலைகளில் நடந்து திரிந்தோம். ஆனாலும் அவள் உருவாக்கிய துக்கம் வடியவேயில்லை. இரண்டு நாட்களுக்கு மேல் பெங்களுரில் இருக்க முடியவில்லை. ஊருக்கு புறப்பட்டுவிட்டேன்.


அதன் பிறகு சென்னையில், திருச்சியில், திருவனந்தபுரத்தில், கல்கத்தாவில் என பலஇடங்களிலும் பதேர்பாஞ்சாலியின் மூன்று பகுதிகளையும் பார்த்திருக்கிறேன். அதைப்பற்றி எவ்வளவோ வாசித்திருக்கிறேன். வியந்திருக்கிறேன். ஆனால் துர்காவை பற்றிய நினைவுகள் மட்டும் இன்றும் மனதில் அழியாமல் அப்படியே இருக்கின்றன


துர்கா உயிரோடிருந்தால் என்னவாகியிருக்கும். அவர்கள் அந்த ஊரிலிருந்து வெளியேறி போயிருக்கமாட்டார்கள். அதைவிடவும் அப்புவின் உலகம் வேறுவிதமாக ஆகியிருக்கும். ஆனால் துர்கா படித்திருக்க மாட்டாள். துர்கா யாரையோ திருமணம் செய்து கொண்டு ஒரு எளிய வாழ்க்கையை வாழ போயிருப்பாள். ஆனாலும் துர்காவின் பாசம் அப்படியே இருந்திருக்கும். அப்புவிற்கு வாழ்வின் மீதுள்ள பிடிப்பாக இருந்திருப்பாள். துர்காவும் அப்புவிற்கும் உள்ள வெளிப்படுத்தபட முடியாத அன்பு இன்னொரு தளத்தில் அக்கதையை கொண்டு போயிருக்கும்


துர்கா காசியை பார்த்திருந்தால் மிகுந்த சந்தோஷம் கொண்டிருப்பாள். அந்த படித்துறைகளில் அவளது பாதங்கள் ஒடி களிப்படைந்திருக்கும். படித்துறை புறாக்களுக்கு தீனி போட்டிருப்பாள். துர்கா கல்கத்தாவில் ரயில் நிலையத்தை ஒட்டிய அப்புவின் அறையை கண்டிருந்தால் பால்யத்தின் காட்சியை நினைவு கூர்ந்திருப்பாள். வேதனை மிக்க தங்களது கடந்த காலத்தினை நினைத்து தன்னை மீறி அழுதிருப்பாள்.


அவளால் தம்பி மனைவியின் சாவை தாங்கி கொண்டிருக்க முடியாது. அவளது பையனை தானே வளர்க்க துவங்கியிருப்பாள். துர்கா என்ற சரடு அந்தபடத்தில் கண்ணுக்கு புலனாகாமல் யாவற்றின் பின்னும் ஒடிக் கொண்டேயிருக்கிறது.


சில மாதங்களுக்கு முன்பு துர்காவாக நடித்த சிறுமியின் ( உமா தாஸ் குப்தா, இன்று அமெரிக்காவில் வசிக்கிறாள்) நினைவுகுறிப்புகள் உலக பிரசித்தி பெற்ற இலக்கிய இதழான கிராந்தாவில் (எழ்ஹய்க்ஹ) வெளியாகியிருந்தது. அதற்காகவே அதை பிரதியெடுத்து அனுப்பும்படியாக அமெரிக்காவில் உள்ள நண்பருக்கு தெரிவித்தேன். இரண்டு வாரத்தின் பின்பு கையில் கிடைத்த இரவிலே வாசித்தும் முடித்தேன். உமா தாஸ்குப்தாவின் நினைவில் பதிந்திருப்பது முற்றிலும் வேறுபட்ட அனுபவங்கள். ஆனால் துர்கா உயிரோடு இருந்தால் என்ன செய்து கொண்டிருப்பாள் என்ற எனது தேடுதலுக்கு சிறிய ஆறுதலாக இருந்தது அந்த பேட்டி


அதன்பிறகு இரண்டு முறை விபூதிபூஷணின் பதேர்பாஞ்சாலி நாவலை வாசித்திருக்கிறேன். அதில் வரும் துர்கா சம்பிரதாயமான வங்காளச் சிறுமி. அவள் என்னோடு இத்தனை நெருக்கம் கொள்ளவில்லை. அதில் கதாபாத்திரங்களை விடவும் அந்த கிராமமும் அதன் இரவு பகல்களுமே என்னை வசீகரித்தன. அந்த நாவல் மிக நீண்ட விவரணைகளும் குறுக்கும் நெடுக்குமாக பல சரித்திர குறிப்புகளும் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் அது பழைய நாவல் வடிவத்தின் தொடர்ச்சியாகவே உள்ளது. ஆனால் சத்யஜித்ரே உருவாக்கிய பதேர்பாஞ்சாலி  விபூதி பூஷண் நாவலின் சாற்றை உள்வாங்கி கொண்டு உருவாக்கபட்ட தனித்துவமான கலைப்படைப்பு.


துர்கா ஏன் எனக்கு இத்தனை நெருக்கமாக இருக்கிறாள் என்று என்னை நானே பலமுறை கேட்டுக் கொண்டிருந்திருக்கிறேன். அவள் மீதான எனது விருப்பத்திற்கான காரணங்களில் சில வெளிப்படையாகவும் சில நிழல்மறைவிலும் இருக்கின்றன


துர்கா நான் பால்யத்தில் பார்த்த எனக்கு மிகவும் பரிச்சயமான ஒரு சிறுமியின் சாயலில் இருந்தாள். எனக்கு பரிச்சயமான அந்த சிறுமி ஒரு நாள் நீச்சல்தெரியாமல் கிணற்றில் விழுந்து இறந்து போனாள். அன்று ஊரே கிணற்றடியில் கூடியிருந்தது. நான் கிணற்றில் குனிந்து பார்த்தபோது படிக்கட்டில் அவளது அடர்ந்த கூந்தல் விரிந்து கொண்டிருக்க அவள் சரிந்து கிடந்தாள். அவளது ஊதா நிற பாவாடையில் ஈரம் சொட்ட மூர்க்கமான மதிய நேரத்து சூரியன் அவள் முதுகில் ஊர்ந்து போய்க்கொண்டிருந்தது. அந்த சிறுமியை துர்கா நினைவுபடுத்துகிறாள் எனலாம்.


இன்னொரு பக்கம் துர்காவை போல தம்பிகளை நேசிக்கும் அக்காக்கள் பலரையும் எனது பால்யம் முழுவதும் பார்த்திருக்கிறேன். அக்கா இல்லாமல் இருக்கிறோமே என்று சிறுவயதில் கவலைபட்டு அழுதிருக்கிறேன். அதுவும் கூட காரணமாக இருந்திருக்க கூடும்


இவையாவையும் விட ஊரை விட்டு வெளியேறி சென்ற குடும்பங்கள் யாவின் பின்புலத்திலும் ஒரு துர்மரணம் இருந்திருக்கிறது என்பதை நிதர்சனமாக கண்டதும் காரணமாக இருந்திருக்கலாம்


இப்படி கண்ணுக்கு தெரியாத ஏதோ காரணங்களை நினைவுபடுத்துவதோடு மட்டுமல்லாது ஒரு இரவே வாழ்ந்தாலும் மின்மினிப்பு காட்டிச் செல்லும் மின்மினிப்பூச்சி போல வாழ்வின் வசீகரத்தை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறாள். அவளது சிறப்பே அவள் நம்மில் சிலரை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறாள் என்பதே. பால்யத்தின் மாறாத கள்ளத்தை அவள் சிரிப்பு வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. துர்கா யாவர் வீட்டிலும் கரைந்து போயிருக்கிறாள்.


பதேர்பாஞ்சாலியை இந்த இரவில் பார்த்து கொண்டிருந்த போதும் அதே துக்கம் தொண்டையை அழுத்தியது. நான் ஒரு படம் பார்த்துகொண்டிருக்கிறேன் என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்ட போதும் திரையை விட்டு கண்கள் நழுவுகின்றன. மனம் துக்கத்தின் சாலையில் நடந்து கொண்டேயிருக்கிறது.


துர்கா நினைவில் ஒரு சுடரை போல எரிந்து கொண்டேயிருக்கிறாள். நீங்கள் பதேர் பாஞ்சாலி பார்த்திருக்கிறீர்களா என தெரியாது. ஆனால் ஒருமுறை அவசியம் பார்க்க வேண்டும் என்பதற்கு ஒரேயொரு காரணமிருக்கிறது. அதில் உங்கள் பால்யமும் கரைந்து கிடக்கிறது. துர்காவை போன்ற சிறுமி உங்களுக்கு சகோதரியாக இருந்திருக்க கூடும். அதற்காகவாவது ஒரு முறை பாருங்கள். பதேர்பாஞ்சாலி வெறும் திரைப்படம் மட்டுமல்ல, அது வாழ்வு குறித்த ஒரு ஆவணம்.


***பதேர்பாஞ்சாலி திரைப்படம் பற்றிய விரிவான எனது பதிவு நூறு பக்கங்களுக்கும் மேலாக உள்ளது. அது தனித்து பதேர்பாஞ்சாலி – நிதர்சனத்தின் பதிவுகள் என்ற புத்தகமாக உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.


 

0Shares
0