பயணியின் சிறகுகள்

அஹ்மது யஹ்யா அய்யாஷ்

இலக்கற்ற பயணி நூல் பற்றிய விமர்சனம்

எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்களுக்கு மனதை கிறங்கடிக்கும் ஆற்றல் உண்டு. எஸ்ரா வின் எழுத்துக்கள் வெறுமெனக் காகிதங்களில் அச்சிடப்பட்ட எழுத்துக்களின் குவியல் அல்ல. அவை தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களால் கோர்க்கப்பட்ட அழகான சரடுகள். அப்படித்தான் இலக்கற்ற பயணி எனும் பயணம் குறித்த எஸ்ரா வின் கட்டுரைகளின் தொகுப்புகள் அடங்கிய நூல். பயணம் குறித்து எல்லோருக்கும் ஓர் கனவு உண்டு, எண்ணங்கள் உண்டு, திட்டங்கள் உண்டு. அவையெல்லாம் பயணங்களே அல்ல என்கிறார் எஸ்ரா. நாடோடிகள் பற்றிய சிந்தனை என் மனதில் அடிக்கடி எழுந்து பின் அடங்கும். சிலபோது நானும் சில தோழர்களிடம் நானும் நாடோடி தானே எனச் சொல்லிக் கொள்வேன். அப்படி ஒரு பிம்பத்தை நம்மால் சொல்லிக் கொள்ள முடியுமே தவிர. நாடோடிகளின் வாழ்வை நம்மால் அடையவே முடியாது. அதுபோலத்தான் பயணம் என்பதும் பயணி என்பதும் அதில் திட்டமிடல் இருக்காது / சாப்பாட்டுப் பொட்டலங்கள் அடங்கிய குவியல் நம்மிடையே இருக்காது., தேர்ந்தெடுக்கப்பட்டு, அயர்ன் செய்து மடித்து வைக்கப்பட்ட சிறு எண்ணிக்கையிலான உடைகள் இருக்காது. அன்புத் தோழர் இஸ்மாயில் காக்கா ஒருமுறை தனது சக தோழரிடம் “வீட்டை நோக்கிய பயணம் ” என்ற போஸ்ட்டுக்கு “இலக்கு வைத்து பயணித்து அடைதலோ, திரும்புதலோ பயணமே அல்ல” என்பார். அதுபோலத்தான் பயணம் என்பதைப் பற்றி எஸ்ரா குறிப்பிடும்பொழுது

“பயணம் செய்வது வேறு, சுற்றுலா செல்வது வேறு. பயணம் என்பது உலகை அறிந்து கொள்ளும், வழி சுற்றுலா என்பது பொழுதைப் போக்குவதற்கான வழி. பெரும்பான்மை சுற்றுலாக்கள் விடுமுறை கொண்டாட்டங்களே. பயணி ஒரு போதும் சுற்றுலா செல்ல விரும்புகின்றவனில்லை. அவன் போகும் இடங்களில் எல்லாம் புகைப்படம் எடுத்துக்கொள்வதையோ, சுடச்சுட எழுதி, அச்சிட்டு இணையத்தில் ஏற்றி விளம்பரப்படுத்திக் கொள்வதையோ விரும்பாதவன். வானில் பறந்து செல்லும் பறவையின் நிழல், தண்ணீரில் பட்டுச்செல்வதைப் போலத் தன்னிருப்பை உலகின் மீது படியவிட்டுப் பறந்து போகிறவனே பயணி.” என்று எழுதுகிறார்.

எஸ்ராவின் இப்பயணக் கட்டுரைகளில் இடம்பெறுபவை என்னவெனில் “ஏரி, கடல், ஓவியம், நூலகம், சிற்பங்கள், பண்டைகாலக் கல்வெட்டுகள், பனி விழும் பிரதேசம், ரயில் பயணம் போன்றவையே. தண்ணீர் குறித்த எஸ்ரா பார்வையும், எழுத்தும் அற்புதமானது. கனடாவின் ஏரிகளைப் பற்றி எஸ்ரா மிக அற்புதுமாக எழுதியிருக்கிறார். அவை உங்களை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். ஏரிகளைப் பகலில் பார்ப்பதும் இரவில் பார்ப்பதும் எப்படி வேறு வேறு அனுபவங்களைத் தருமோ அதுபோலத்தான் நான்கு பருவங்களிலும் ஏரிகளைக் காண வேண்டும். அதுதான் ஏரிகளை முழுமையாகப் பார்த்ததாகச் சொல்ல முடியும் இல்லையேல் ஏரியை ஓரளவு பார்த்ததற்குச் சமம் என எஸ்ரா சொல்வார். எஸ்ராவின் இப்புத்தகத்தினைப் பெரும்பாலும் பயணங்களில்தான் வாசித்தேன். அன்பை மீட்டுகிற ஓர் பயணத்தில் கனடாவின் ஒன்டாரியா ஏரிகளைப் பற்றிப் படித்தேன். உலகின் மிக நீண்ட 1815 அடி உயரத்தில் உள்ள சிஎன் டவரிலிருந்து ஒன்டாரியா ஏரியை பார்ப்பது எவ்வளவு அலாதியானது என்பதை என்னால் உணர முடிகிறது. உயரம் என்கிற ஒன்று நம்மை வேறு ஒரு உலகிற்குக் கூட்டிச் செல்கிறது. கிட்டதிட்ட பறவை அதீத உயரத்தில் அமர்ந்து கொண்டு பறத்தலுக்குத் தயாராகும் மனநிலையை அவை ஏற்படுத்தும்.

தண்ணீர் மீதான காதல் என்பது அலாதியானது. அது ஓடும் ஆறானாலும், கொட்டும் அருவியானாலும், அடித்து ஆடும் கடலானாலும் சரியே. அதில் ஓர் கிறக்கம் இருக்கிறது. நாம் வெறுமையை உணரத் துவங்கும்போது , அவமானங்களால் விக்கித்து நிற்கும்போது , தனிமை நம்மை விழுங்கத் துவங்கும்போது இப்பிரம்மாண்டமான நீருக்குள் நம்மைப் புதைத்துக் கொள்ள வேண்டும். அது நமது வெறுமையை , அவமானங்களை, தனிமையைக் கழுவி நம்மைச் சுத்தப்படுத்தும். எழுத்தாளர் பிரபஞ்சன் குளியலை பற்றி எழுதும்போது ” பூட்டப்பட்ட அறைகளில் , தண்ணீர் ஊற்றிக் கொள்வதற்குப் பெயர் குளியல் அல்ல அது உடலைக் கழுவி கொள்வது ” என்பார். அப்படியான குளியலைப் போன்று அல்ல ஏரிகளும், கடலும் , ஆறும் நமக்குத் தருவது. நீரின் ஆன்மாக்களோடு உரையாடுவதும் பதிலுக்கு நீர் நமது உடலை வருடுவதும் தான் குளியல்.

எஸ்ரா இப்புத்தகத்தில் இரண்டு இடங்களில் ஒரே போலச் செயல்படுவார். ஒன்று கனடாவின் சிம்கோ ஏரியின் முன்பு சிறிய கல்லை எறிந்துவிட்டு இந்தக் கல் தரையை வந்தடைய இன்னும் எத்தனை வருடம் ஆகுமோ, அத்தனை வருடம் என் நினைவுகள் இதில் இருக்கட்டும் என்று எழுதுவார். அதுபோலவே நயாகரா நீர்வீழ்ச்சிக்கு முன்பு தனது சட்டைப் பையில் இருந்து ஒரு நாணயத்தை எடுத்து அருவியை நோக்கி வீசிவிட்டு

” என் கரம் தொட முடியாத அருவியை நாணயம் தொட்டு உணரட்டும். அருவியின் உள்ளே மனிதக்கரங்கள் தீண்ட முடியாமல் அந்த நாணயம் பயன்பாடு என்ற உலகில் இருந்து தன்னைத் துண்டித்துக்கொள்ளட்டும். எனது வருகை அந்த நாணயத்தின் பெயரால் உறுதி செய்யப்படட்டும். அருவியைப் போல வாழ்க்கை எனக்குத் தீராச் சந்தோஷத்தை வாரி வழங்கட்டும் ” என நினைத்துக் கொண்டதாக எழுதுகிறார். எவ்வளவு அற்புதமான வரிகள் இவை. எழுத்தாளன் பிற மனிதனர்களின் ரசனைகளில் இருந்தும், சொற்களில் இருந்தும் வேறுபடும் இடம் இதுதான்.

கடலைப் பற்றி எஸ்ரா இரண்டு இடங்களில் எழுதுகிறார். ஒன்று தனுஷ்கொடி மற்றொன்று கொற்கை. இரண்டுமே தற்போது அழிவுச் சின்னங்களாகக் காட்சி தருகின்றன. தனுஷ்கொடியில் கட்டிடங்களைத் தவிர எந்த எச்சங்களும் இல்லை அதுபோலவே கொற்கையில் கடல்கூட இல்லாத நிலையில் பல கிலோமீட்டர்கள் பின்வாங்கிய கடலின் எச்சங்களைப் பற்றித் தகவல்களை எஸ்ரா தருகிறார். கடலுக்கு எப்போதுமே ஒரு வசீகரம் இருக்கிறது. சலிப்பற்ற , அலுப்பு தராத ஓர் காட்சிதான் கடல். கடலை வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு விதமாக நம்மால் காணமுடியும் . கும்மிருட்டில் சிறு பிறை வெளிச்சத்தில், நட்சத்திரங்கள் சூழ காத்திரமாக அடித்து அடித்து அடங்கும் அலைகளைக் கொண்ட கடலில் முன்பு நம்மை ஒப்புக் கொடுத்து தனிமையை, வெறுமையை அதனிடம் தந்துவிட வேண்டும். அது மனதினை மயிலிறகால் தீண்டும் ஓர் உன்னதத்தை நமக்குத் தரும். கடலின் பிரம்மாண்டம் மட்டுமே நமக்குத் தெரியும். அதன் அமைதியை சாந்தத்தை யார் அறிவார்..? அறியப் போகிறார். ? கடலிடம் சென்று வெறுமெனக் கால்களை நனைத்துக் கொண்டு ஜோடிகளாகப் படங்களின் பட்டியல்களை நிரப்புவதில் எனக்குத் துளியளவும் உடன்பாடில்லை. அதன் அருகே அமர்ந்து முடிந்தமட்டும் தின்று கழித்துப் பொழுதை பாழாக்குவது அருவருப்பான ஒன்று.

கடலைப் பற்றி மாலுமியின் குறிப்பொன்றை எஸ்ரா தருகிறார் ” கடலோடு பேசவும், கடலை நேசிக்கவும் தெரியாதவனைக் கடல் ஒருபோதும் தன்னுள் அனுமதிப்பதில்லை ” .ஒரு முறை ஒரே ஒருமுறை கடலின் முன் நின்று ஓர் கால் மணிநேரம் எதுவுமே பேசாமல் உங்களை நீங்களைக் கடலிடம் ஒப்புக்கொடுத்துவிடுங்கள். பேரமைதி உங்களைத் தழுவி கொள்ளும்.

அடுத்ததாகப் பின்னிரவைப் பற்றி எஸ்ரா எழுதுகிறார். எல்லோரும் ஆழ்ந்து உறங்கும் நேரமது. இரவும் மனிதர்களை மிக நேர்த்தியாக உறங்க வைக்கும் நேரமது. பின்னிரவு எப்படிபட்டது.? எல்லோரும் விழித்திருக்க நீங்கள் மட்டும் விழித்திருக்கிறீர்கள் எனும் போது யாரிடம் அதைச் சொல்லப் போகிறீர்கள்.? யாரைப் பற்றிய நினைவுகளை அந்தப் பின்னிரவுகளில் அசைபோட போகிறீர்கள்.? எஸ்ரா ஓர் இரயில் பயணத்தில் , ஓர் மலை நகரத்தில், ஓர் பனிப் பிரதேசத்தில் பின்னிரவைப் பற்றி மிக நுட்பமாக எழுதுகிறார். பின்னிரவின் இரயில் பயணத்தில் விழித்துக் கொண்டு காற்றோடு கதைக்கிறார். மலைப் பிரதேசத்துப் பின்னிரவில் தூரத்தில் மலை உச்சியில் எங்கோ வரையப்பட்ட ஓவியம் போலக் காட்சி தரும் ஒற்றை மரத்திடம் பேசுகிறார். பனி கொட்டும் பின்னிரவில் சூரியனை அழைத்துப் பேசிக் கொண்டிருக்கிறார்.

நானும் நிறையப் பின்னிரவுகளில் விழித்திருந்திருக்கிறேன். ஓர் இரயில் பயணத்தில், ஓர் பதற்றமான கலவரச் சூழலில், மரணித்த சிறுவனின் சடலத்தைப் பெற்றுக் கொண்ட பின்னிரவு, அனாதையாய் தொழுகை விரிப்புகளில் கண்ணீர் சிந்தி கையேந்தி நிற்கும் பின்னிரவு எனப் பின்னிரவின் இரகசியம் எனக்குத் தெரியும். அது ஓர் சாந்தத்தை, என்ன வாழ்க்கை வாழுகிறாய் என்று ஓங்கி விடும் அறையை, பெரும் குற்ற உணர்ச்சியை, தாங்குவதற்குக் கரங்கலற்ற தருணத்தில் கண்ணீரை படைத்தவனிடம் ஒப்படைத்தலை என நிறையப் பின்னிரவுகள் என்னிடம் உண்டு. அதனால் தான் நான் அடிக்கடி ” இரவு என்பது வெறுமென உறங்குவதற்கானது மட்டுமல்ல. தலையணை தலைசாய்ப்பதற்கு மட்டுமானதல்ல என்பதைப் போல ” என்று எழுதி வைக்கிறேன்.

இந்த மொத்த புத்தகத்திலும் நான் மிக ரசித்த ஓர் பயணக் கட்டுரை ஒன்று இருக்கிறது அதுதான் “கூட்ஸ் பயணம் ” . நிறைய நேரம் இரயில் நிலையங்களில் இரயிலுக்காகக் காந்திருந்த போதெல்லாம் எனை கடந்து ஏராளமான கூட்ஸ் இரயில் போயிருக்கிறது. அதனைப் பார்ப்பதற்குக் கொஞ்சம் அலுப்பாக இருந்த போதிலும் கூட்ஸ் பெட்டியின் கடைசிப் பெட்டியில் திறந்த வெளியில் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும் அந்த இரயில்வே ஊழியரை விடாமல் பார்த்திருக்கிறேன். அதைப்பற்றியான கட்டுரை தான் கூட்ஸ் பயணம்.

உடலை வருத்திக் கொள்ளாத உழைப்புகளிலெல்லாம், பெரும்பாலும் நேரத்தை எனதாக்கி புத்தகங்களை வாசிப்பதும், கதைகளைக் கேட்பதும் உண்டு. அலுப்பையும் , சலிப்பையும் தரும் கூட்ஸ் வண்டியில் எப்படி ஒரு ஊழியரால் நீண்ட தூரம் பயணிக்க முடிகிறது. எல்லா அதிவிரைவு வண்டிகளுக்கும் வழி விட்டு ஆமை நடைபோடும் கூட்ஸ் வண்டிகளில் அந்த ஊழியர் ஒற்றை மனிதராய் அப்படி என்ன பொழுதை கழிப்பார். எஸ்ராவிற்கு அந்தக் கூட்ஸில் பயணிக்க வேண்டுமெனவும் அதில் மார்கஸிம் கார்க்கியின் இரயில் கதைகளை வாசிக்க வேண்டுமெனத் தோன்றி அந்த ஊழியரின் அனுமதியோடு கூட்ஸில் பயணிக்கத் துவங்குகிறார். பயணத்தின் முடிவில் அலுப்பும், உடலை அப்பிக் கொள்ளும் அழுக்கும்,தூசியும், இரைச்சலும் தான் மிச்சமானது. அவரால் அந்தச் சூழலில் அப்புத்தகத்தை வாசிக்கவே முடியவில்லை. ஆனாலும் ” இன்றும் எங்காவது கூட்ஸ் ரயில் போவதைப் பார்க்கும்போது கடைசிப்பெட்டி மீதே கண்கள் போகின்றன. ஏனோ அந்த வசீகரம் குறையவேயில்லை.” என்று எஸ்ரா எழுதுகிறார்.

நான் வசிக்கும் பழங்குடி கிராமத்திற்கு அருகே 50 கிலோ மீட்டருக்குள்ளே தான் ஒரிசாவின் பழங்குடி கிராமங்கள் தொடங்குகின்றன. கிட்டதட்ட இரு மாநில எல்லைப் பகுதிகளில் உள்ளவர்களும் ஒரிய மொழியைப் பேசக்கூடியவர்களே. எஸ்ரா இப்பழங்குடியினர் குறித்துத் தனது பயணக் கட்டுரைகளில் எழுதுகிறார். அவர்களது வாழ்வியல், அவர்களது அன்றாட வாழ்க்கை, அவர்கள் ஒன்றுகூடும் வாரச் சந்தை என எஸ்ராவின் குறிப்புகளை நேரடியாகக் கண்டிருக்கிறேன். பழங்குடி மக்களைக் கவருவதற்கு ஒவ்வொரு வாரச் சந்தையிலும் நகரங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட மலிவு விலை பிளாஸ்டிக் பொருட்கள் ஏராளமாக விற்கப்படுகிறது. அது குறித்து எஸ்ரா சொல்லும்போது “நகரில் இருந்து கொண்டுவரப்பட்ட எல்லாப் பொருட்களும் டூப்ளிகேட், அதே நேரம் பழங்குடி மக்கள் விற்பனைக்காக வைத்திருப்பவை அத்தனையும் இயற்கையாக விளைந்தவை. தங்களின் உழைப்பால் உருவான அந்தப் பொருட்களை விற்று டூப்ளிகேட் பொருள்களைப் பழங்குடிகள் வாங்கிப்போகின்ற காட்சியைப் பார்த்துக்கொண்டேயிருந்தேன்.மலிவான பிளாஸ்டிக் கலாச்சாரத்தைப் பழங்குடிவரை கொண்டு சேர்த்திருப்பது வருத்தமாக இருந்தது.” என்று எழுதுவார்.

ஒருமுறை வாரச் சந்தைக்காகச் சந்தை நடக்கும் பகுதிக்கு ஆடும் , கோழிகளும் ஏற்றப்பட்ட ஆட்டோவில் சென்றேன். சந்தையில் நானும் பங்கெடுத்திருக்கிறேன். சில பொருட்களை வாங்கியிருக்கிறேன். சிலவற்றை விற்றிருக்கிறேன். ஓர் பழங்குடிக் கிழவர் தான் வளர்த்த நாட்டுக் கோழிகளையும், சேவல்களையும் கால்களைக் கட்டி சந்தையில் கொண்டுவந்து விற்றுக் கொண்டிருந்தார். நாட்டுக் கோழிகளுக்குச் சந்தையில் நல்ல வரவேற்பு உண்டு. சந்தை முடிகின்ற நேரம் அக்கிழவரை பார்த்தேன். ஓர் இறைச்சி கடையில் பிராய்லர் கோழி இறைச்சி 1/2 கிலோ , சில சாராயப் பொட்டலங்களை, காய்கறிகள், மளிகை பொருட்கள் எனத் தனக்குத் தேவையானதை வாங்கிக் கொண்டு தனது ஊரை நோக்கி புறம்படத் துவங்கினார். பிராய்லர் கோழிகள், மேகி நூடுல்ஸ்கள், தலைக்கு அடிக்கும் சாயங்கள், நச்சு மிகுந்த பூச்சிக் கொல்லி மருந்துகள், அழகு சாதன பொருட்கள் என நகரத்து அரக்கர்களின் கரங்கள் எப்போதோ அவர்களை அரவணைக்கத் தொடங்கிவிட்டன.

பயணங்களைப் பற்றிய எழுத்துக்களை ஓர் பயணியால் தான் சொல்ல முடியும். ஓர் பயணியும், தேர்ந்த எழுத்தாளனுமாகிய எஸ்ராவின் எழுத்துப் பணிகள் தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் மென்மேலும் பெருமை சேர்க்கட்டுமாக என வாழ்த்துகிறேன். எஸ்ரா சமகால எழுத்துலகின் சிற்பி என்றால் அது மிகையல்ல.!

புத்தகம் : இலக்கற்ற பயணி

எழுத்தாளர் : எஸ்.ராமகிருஷ்ணன்

பக்கங்கள் : 184 விலை :₹175

பதிப்பகம் : தேசாந்திரி பதிப்பகம்

:

0Shares
0