பரவாயில்லையின் சங்கீதம்

கவிதைக்குள் நம்மை அழைத்துச் செல்ல எப்போதும் ஒரு மௌன ரயில் காத்திருக்கிறது. அது ஒருவர் மட்டுமே செல்லக்கூடியது. மலையின் உச்சியை நோக்கி குகைப் பாதையினுள் செல்லும் பயணமது

வழக்கமான ரயில் பயணத்தில் நமக்கும் புறக்காட்சிக்குமான இடைவெளி குறைவதும் விரிவதுமாக இருக்கும். கவிதையினுள் செல்லும் ரயில் மரங்களை நெருங்கியில்லை மரங்களுக்குள்ளாகவே நம்மை அழைத்துச் சென்றுவிடுகிறது. மரத்தினுள் தண்ணீர் நுழைந்து செல்வது போல ரகசியமாக, மகிழ்ச்சியாக நீங்களும் ஒன்று கலந்துவிடுகிறீர்கள். சில வேளைகளில் இந்த ரயில் பின்னோக்கியும் செல்லக்கூடியது. அப்போது கவிதையின் அகம் புறமாகவும், புறம் அகமாகவும் மாறிவிடுகிறது.

கவிதையின் முதல்வரி என்பது கவிதைக்குள் செல்வதற்கான கதவில்லை. மாறாகக் கவிதையின் எல்லா வரிகளும் எப்போதும் திறந்திருக்கின்றன. பாலைவனத்தின் மணல்வெளியைப் போல. சில நேரம் முதல் வரி வழியாக நாம் ஐந்தாவது வரிக்குச் சென்றுவிடுகிறோம். சில நேரம் கடைசிவரி கவிதையின் முதல்வரிக்கு முந்தியதாகிவிடுகிறது. புதிர்வட்டப்பாதையில் கிளைவிடும் வழிகள் யாவும் ஒன்றோடு ஒன்று இணைந்து எளிதில் வெளியேற விடாமல் செய்வது போன்றதே கவிதை. அந்த வகையில் கவிதை என்பது ஒரு சுழற்புதிர்வட்டம். அதனுள் நுழைவது எளிது. வெளியேறுவது கடினம்

உலகம் மனிதர்களின் குரலுக்கே எப்போதும் முக்கியத்துவம் தருகிறது. ஆயிரமாயிரம் சிறிய பெரிய குரல்கள் இயற்கையிலிருந்தாலும் மனிதனின் குரலே அவற்றை விட முதன்மையாகக் கருதப்படுகிறது. ஆனால் கவிதை மனிதனின் குரலை மட்டும் ஒலிப்பதில்லை. அது உதிரும் இலையின் குரலில் பேசுகிறது. காற்றின் பாடலை முணுமுணுக்கிறது. மௌனமானது என உலகம் நினைக்கும் பொருட்களின் குரலை. துயரை அடையாளம் காட்டுகிறது.

சில்வண்டுகள் துவங்கி குண்டூசி வரை அனைத்தும் கவிதையில் பேசுகின்றன. சந்தோஷத்தையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்கின்றன. சிறுபொருட்களின், சிற்றுயிர்களின் குரலை தொடர்ந்து பதிவு செய்து வருபவர் கவிஞர் தேவதச்சன். அவரது சமீபத்திய கவிதைகள் உயிர்மையில் வெளியாகி இருக்கின்றன.

இந்தக் கவிதைகள் சில தனித்துவமான தருணங்களை, மகிழ்ச்சியைக் குரல்களை, அடையாளம் காட்டுகின்றன. இதில் தண்ணீரைப் பற்றி மூன்று கவிதைகள் வழியே தேவதச்சன் மகத்தான கவித்துவ அனுபவத்தை உருவாக்கியிருக்கிறார்

ஞானக்கூத்தன் பாலம் பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறார்

முன்னாளெல்லாம் பாலம்

தியானித்திருக்கும் நீருக்கு மேலே

 இந்நாளெல்லாம் பாலம்…

நிலத்திலும் உண்டு அதன் முதுகெலும்பு.

ஆதியில் இந்தப் பாலம்

தென்னையாய்ப் பனையாய்க் கிடந்ததென்றாலும்

போகப் போகப் போக

 மூங்கிற் சிம்பும் ஆணியும் விரும்பி

ஒருவாறாகிப் பிறந்தது பூமியில்

என நீள்கிறது இக்கவிதை

தண்ணீரைக் கடந்து செல்லவே ஆரம்பக் காலங்களில் பாலங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் நம் காலத்தில் நிலத்தில் எழுகின்றன பாலங்கள். ஒரே சொல் தான் ஆனால் அது நேற்றும் இன்றும் உணர்த்தும் பொருள் வேறு.

ஞானக்கூத்தன் கவிதையில் பாலம் பேசுகிறது. ஒருகாலத்தில் தென்னையும் பனையும் ஆற்றைக் கடக்கும் பாலமாகப் பயன்பட்டன என்பதை நினைவுபடுத்தும் கவி பாலத்தின் இன்றைய உருமாற்றத்தைச் சுட்டிக்காட்டுகிறார்

கவிதையின் முடிவு இப்படி அமைகிறது.

புறப்படும் பொழுது

என்னைப் பார்த்துப் பாலம்

சிரிப்பில்லாமல் சொல்லிற்று

ஜாக்கிரதையாகப் போய் வா

எங்கும் ஆட்கள் நெரிசல்

உன்னைத் தள்ளி உன்மேல்

நடக்கப் போறார் பார்த்துக் கொள்.

இந்த வரியின் மூலம் பாலம் என்பது ஒரு நிலை. நெருக்கடியான உலகில் நாமே பாலமாகவும் கூடும் எச்சரிக்கை ஏற்படுகிறது. இந்த உபதேசத்தை ஏன் பாலம் சிரிக்காமல் சொல்கிறது, காரணம் அது நடந்துவிடக்கூடிய செயல் என்பதால் தான்.

நம்மைப் பாலமாக்கி யாரோ கடந்து போகிறார்கள் என்று சில வேளைகளில் நாம் உணர்ந்திருக்கிறோம் என்பதே நிஜம்

எந்தப் பாலமும் நிரந்தரமானதில்லை. காலந்தோறும் புதிய பாலங்கள் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன, கடந்து செல்ல மனிதர்கள் எதையும் பாலமாக்கிவிடுவார்கள்.

பெருநகர வாழ்க்கையில் அன்றாடம் சில பாலங்களைக் கடந்து செல்கிறோம். சாலையில் அடையாத ஏதோவொரு உணர்வை, மிதப்பை பாலத்தைக் கடக்கும் போது அடைகிறோம். விண்ணிலிருந்து பாலத்தைக் காணும் ஒருவன் அதை விரிந்திருக்கும் காங்கிரீட் மலர் போலவே கருதுகிறான்.

Created by ImageGear, AccuSoft Corp.

தண்ணீருக்கும் பாலத்திற்குமான உறவு மிக நீண்டது. பாலம் மனிதர்கள் உருவாக்கிய இரும்பு வானவில். தண்ணீர் பாலத்தைக் கண்டு பயம் கொள்வதில்லை. பாலமும் தண்ணீரைக் காதலிப்பதில்லை.அடியில் ஓடும் தண்ணீரைப் பார்த்துப் பாலம் தியானித்திருக்கிறது என்கிறார் ஞானக்கூத்தன். இரவில் பாலத்தைக் காணும் போது இப்படி உணர்ந்திருக்கிறேன்

சிறிய பாலங்கள் தருக்கத்தைப் பெரிய பாலங்கள் தருவதில்லை. அது போலவே ஆற்றுப்பாலத்தின் அழகு தரைப்பாலத்திற்கில்லை. பாலத்தின் அடியில் நீரோடும் வழியைப் பாலத்தின் கண் என்பார்கள். பாலம் கண்கள் கொண்டது என்ற நினைவு இந்தக் கவிதையை வாசிக்கையில் எழுகிறது

குடையால் மழையைத் தடுக்க முடியாது. ஆனால் மழையிடமிருந்து தப்பிக்க முடியும். அது போன்றது தான் பாலமும். படகில்லாமல் ஆற்றைக் கடக்க நினைத்தவன் தான் பாலத்தை உருவாக்கியிருக்கிறான். மன்னர் ஆட்சியில் சில பாலங்களைக் காவலர்கள் இரவுபகலாக பாதுகாத்தார்கள். அது தான் தேசத்தின் நுழைவாயில். சில பாலங்கள் தேசத்தின் பெருமையாக கருதப்படுகின்றன.

இது போலவே பல ஊர்களில் பாலம் தற்கொலை செய்யும் இடமாகயிருக்கிறது. சில தொங்குபாலங்கள் இரண்டு மலைகளை இணைக்கின்றன. பாலத்தின் நடுவில் தனியே நிற்கும் மனிதன் முடிவு எடுக்க முடியாதவனின் அடையாளமாகிறான். இப்படி பாலத்தைப் பற்றி நிஜமாகவும் புனைவாகவும் நிறையவே எழுதப்பட்டிருக்கின்றன.

தேவதச்சனின் என் பாலங்கள் என்ற கவிதை தண்ணீருக்கும் பாலத்திற்குமான உறவை பேசுகிறது.

உடைந்த பாலத்தைப் போலத்

துக்கம் தருவது வேறில்லை

நீர்த்துளியின்

யுத்தத்தில்

தோற்றுப்போய்த் தலை

கவிழ்ந்திருக்கிறது

தண்ணீர் அதன்மேல் ஏறி

ஓடும் போது அவ்வளவு

அவமானமாக இருக்கிறது

தான் எங்கே தப்பு பண்ணினோம் என்று அதற்குத்

தெரியவில்லை

சில வாடிய செடிகள் மட்டும்

பேச்சுத் துணைக்குக் கூட நிற்கின்றன

உடைந்த பாலம் என்பது அழகான உருவகம். கவிதையில் பாலம் பேசுவதில்லை. மாறாகக் கவிஞன் அதன் துயரைப் பேசுகிறான். உடைந்த பாலம் என்பது எதிர்பாராத நிகழ்வின் அடையாளம். உறுதியானவற்றை மென்மையானது வென்றுவிடும் என்பதன் சாட்சியம்.

Created by ImageGear, AccuSoft Corp.

தண்ணீரை வென்றுவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் பாலத்தைச் சட்டென ஒரு நாளில் மழை வென்றுவிடுகிறது. வென்றதன் அடையாளமாக விரிசலையும் ஏற்படுத்திவிடுகிறது. அதை நீர்த்துளிகளின் யுத்தம் என்கிறார் தேவதச்சன். சீறும் மழையின் வேகத்தைக் காணும் போது யுத்தமென்றே தோன்றுகிறது.

நீர்த்துளிகளின் யுத்தம் காலம் காலமாக நடந்து கொண்டேயிருக்கிறது. பலநேரங்களில் மனிதர்கள் ஜெயித்திருக்கிறார்கள். சில நேரங்களில் நீர்த்துளிகள் ஆங்காரமாகப் போரிட்டு மனித வெற்றியை அடையாளமில்லாமல் செய்கின்றன. மழைத்துளிகளின் யுத்தம் ரகசியமானது. நம்மால் தடுத்து நிறுத்த முடியாதது

இந்தக் கவிதையில் தான் எங்கே தப்பு பண்ணிணோம் எனப் பாலத்திற்குத் தெரியவில்லை என்ற வரி அழகானது.

இதை வாசிக்கையில் எதிர்பாராமையைச் சந்தித்துக் கடக்கும் போது நம் மீது குற்றவுணர்வு கொள்ளத் தேவையில்லையோ என்று தோன்றுகிறது.

நடந்த செயலில் பாலத்தின் மீது ஒரு தவறுமில்லை. நீர்த்துளிகள் மனிதனுக்குத் தனது வலிமையை அடையாளம் காட்டுகின்றன.

தண்ணீரால் வெல்லப்பட்டதும் பாலம் ஒரு விளையாட்டுப் பொருள் போலாகிவிடுகிறது. அதை ஊர் மக்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். புகார் சொல்கிறார்கள். இனி பயனில்லை என்று கைவிடுகிறார்கள்.

எந்தப் பாலமும் பூமியில் முளைவிடும் ஒரு சிறுசெடியை போலத் தானே வளர்வதில்லை. அது உருவாக்கப்படுகிறது.

பாலத்தின் மேலேறி தண்ணீர் ஓடும் போது பாலம் அவமானப்படுகிறது. என்ற இடத்தில் கவிதை ஒளிரத்துவங்குகிறது

இதுபோன்ற காட்சியை எத்தனையோ முறை திரையில் பார்த்திருக்கிறோம். சில வேளை நேரில் கண்டிருக்கிறோம். மழைவெள்ளம் பாலத்தைக் கடந்து போகையில் பாலம் அவமானப்படும் என ஒரு போதும் யோசித்ததில்லை. கவிதையில் பாலம் சுய உணர்வு கொண்டதாகிறது. தன்னால் இனி தடுக்கமுடியாது என்ற நிலையில் அது தண்ணீர் கடந்து போக அனுமதிக்கிறது. நெருக்கடிகள் உயரும் போது மனிதன் இந்தப் பாலமாக மாறிவிடுகிறான்.

தன்னிடத்தை விட்டு அகலமுடியாதவனுக்கும் சதா ஓடிக்கொண்டேயிருப்பவனுக்கும் இடையில் போர் நடந்தால் யார் ஜெயிப்பார்கள். அது தான் இங்கே நடக்கிறது.

மிகுமழையின் போது தான் பாலம் தான் ஒரு தற்காலிகம் என்பதை உணருகிறது. தான் ஒரு பழைய ஆள் என்பதைக் கண்டுகொள்கிறது. உறுதியான கால்கள் கொண்டிருந்தாலும் அகல விரிந்த கைகள் கொண்டிருந்தாலும் கால்கள் இல்லாமல் ஓடும் தண்ணீரைத் தடுக்க முடியாது என்ற உண்மையை உணருகிறது.

முடிவில் உடைந்த பாலத்திற்கு ஆறுதலாகச் சில வாடிய செடிகள் மட்டும் துணை நிற்கின்றன. அவ்வளவு தான் மிச்சம்.

நாம் அனைவரும் ஏதோ ஒரு புள்ளியில் உடைந்த பாலமாகிறோம். நமது பயன்பாட்டினை மறந்து உலகம் நம்மைக் கைவிடுகிறது. எத்தனை நூறு ஆண்டுகள் கொண்டதாக இருந்தாலும் நீரைத் தடுக்க இயலாத கணத்தில் அதன் வீழ்ச்சி துவங்கிவிடுகிறது.

இன்னும் உயரமாக இன்னும் அகலமாகப் புதிய பாலத்தை உலகம் உருவாக்கும். புதிய பாலம் எப்போதும் பழைய பாலத்தைக் கேலி செய்தபடியே இருக்கும். பழைய பாலத்தின் மௌனம் என்பது காலத்தின் அமைதி.

என் கண்முன்னே பொருளியல் வெற்றிகளால் அடையாளப்படுத்த சில மனிதர்கள் இது போலவே காலத்தின் பெருவேகத்தில் உடைந்த பாலமானது நினைவிற்கு வருகிறது.

உடைந்த பாலம் தன்னுடைய தரப்பு நியாயத்தைச் சொல்லி என்ன ஆகப்போகிறது. ஆனால் நம்மை மீறி நடக்கிற செயல்களின் போது நாம் அடையும் துயரைப் பகிர்ந்து கொள்ளக் குறைந்த பட்சம் வாடிய செடி போலவாவது பேச்சுத்துணை வேண்டுமில்லையா.

சிறுசெடிகளால் தலைகவிழ்ந்து நிற்கும் பாலத்தின் துயரைக் கேட்டுக் கொள்ள முடியும். நிவர்த்திச் செய்ய இயலாது. பெருமழையின் போது மரங்கள் முறிந்துவிடுகின்றன. சிறுசெடிகள் வழிவிட்டு ஒதுங்கிநிற்கின்றன. மழையின் வேகம் அதனை வாடச்செய்கிறது அவ்வளவே.

வணிக உலகின் தந்திரங்கள். சூழ்ச்சிகள் அறியாமல் தோற்றுப் போன சிறுவணிகனைப் போலிருக்கிறது இந்தப் பாலம். சாலையைப் போல இருபுறமும் மரங்களின் துணையில்லாமல் போனது தான் பாலத்தின் தோல்வியா. புகைப்படங்களில் பழைய பாலங்களைக் காணும் போது பிரியத்துக்குரிய மனிதரைக் காணுவது போலப் பரவசம் ஏற்படுவது எனக்கு மட்டும் தானா,

மழையின் வெற்றி சில நாட்களுக்கு மட்டுமேயானது என்றாலும் பாலத்தின் தோல்வி ஏற்றுக் கொள்ளக்கூடியதில்லை. அடையாம் தான் இந்த நாடகமா.

பாலம் என்பது ஒரு அடையாளம். ஒருவகை இருப்பு நிலை என்பதன் மூலம் ஞானக்கூத்தனின் கவிதையும் தேவதச்சனின் கவிதையும் ஒரு புள்ளியில் இணைந்துவிடுகின்றன.

ஒரே பாடல் ஆண் பெண் என இருகுரலில் ஒலிப்பது போல இந்தப் பாலம் பற்றிய கவிதை ஆண் பெண் என இருகுரலாக ஒலிப்பதும் இருவேறு பொருள் கொள்வதும் விசித்திரமாகயிருக்கிறது.

•••

தேவதச்சனின் பரவாயில்லை என்ற கவிதையில் இதே தண்ணீர் வேறு விதமாக வெளிப்படுகிறது.

நம்மைச் சுற்றிய எல்லா நிகழ்வுகளையும் பொருட்களையும் இசைக்கருவி போலாக்கி மீட்டத்துவங்குகிறார் தேவதச்சன். இந்தக் கவிதையும் அது போன்றதே

••

ஹோட்டலுக்குள் ஆர்வமாய்

நுழைகிறாள்

பிடித்த உணவு இரண்டும்

விலை உயர்ந்த குளிர்பானம்

ஒன்றையும் ஆர்டர் செய்தாள்

பெரிய ஆஸ்பத்திரியில்

சிறப்புச் சிகிட்சை மருத்துவர்

சொல்லிவிட்டார்

இருதயத்தில் கோளாறு ஏதும்

இல்லை

அவளுக்கோ

ஒரு வாரமாய் அதே கவலை

நடைப்பயிற்சி மட்டும் போதும்

என்றும் சொல்லிவிட்டார்

மேஜையில் டம்ளரை வைத்த

பையன் தண்ணீரை

அவள் மேல் தெறித்துவிட்டான்

நிறையச் சிந்தியும் விட்டான்

குளிரும்

புன்னகையோடு

அவன் முகத்தைப் பார்த்தபடியே சொன்னாள்

பரவாயில்லை பரவாயில்லை

மேஜையெங்கும் பரவியது

பரவாயில்லையின் சங்கீதம்

மேஜைகளெங்கும்

••

கவிதையில் வரும் பெண் உணவகத்தினுள் நுழைந்து தனது விருப்பமான உணவினை ஆர்டர் செய்கிறாள். காத்திருக்கிறாள். தன்னைத் தானே மகிழ்ச்சிப்படுத்திக் கொள்ள முயலும் அவளின் இந்தச் செயலுக்கான காரணம் மருத்துவர் அவளது இருதயத்தில் கோளாறு ஏதுமில்லை. நடைப்பயிற்சி போதும் என்று சொல்லிவிட்டார் என்பதே

தன் உடல்குறித்த பயத்திலிருந்து விடுபட்ட அவள் இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்ள உணவகத்தினுள் நுழைகிறாள். நாமாக அது மாலைவேளையாகக் கருதிக் கொள்கிறோம். கவிதையில் அந்த உணவகம் எங்கேயிருக்கிறது என்ற அடையாளமில்லை. நாமாக அது மருத்துவமனையின் அருகிலிருக்கிறது என நினைத்துக் கொள்கிறோம். வழக்கமாக அவள் செல்லும் உணவகம் அதுவல்ல என்பதையும், அவளுடன் துணைக்கு யாரும் வரவில்லை என்பதையும் நாமாக உணர்ந்து கொள்கிறோம்.

அவளைப் போல வேறு தனியாக உள்ள பெண் யாராவது கண்ணில் படுகிறார்களா என அவள் தேடவில்லை. அவள் நடுத்தரவயது. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள், தனியார் மருத்துவமனைகளுக்கு போக பணமில்லாதவள் என்பதைக் கவிதை வரிகளிலிருந்து கண்டு கொள்கிறோம். அவளது பெயரோ, மதமோ, வீடு உள்ள தெருவோ, குடும்பமோ, ஊரோ எதுவும் காட்டப்படவில்லை. காட்ட தேவையுமில்லை. அது தான் கவிதையின் விசேசம்.

அவளது மேஜையில் டம்ளரை வைத்த பையன் தண்ணீரை அவள் மேல் தெறித்துவிட்டான். நிறையச் சிந்தியும் விட்டான். இந்தச் சிறுபிழை அவளுக்குக் கோபத்தை ஏற்படுத்தவில்லை. பரவாயில்லை என்று அவனிடம் குளிர்ந்த புன்னகையுடன் சொல்கிறாள்.

அது பையனின் கவனமின்மையாலோ, தற்செயலாகவோ செய்த தவறு. அதைப் புரிந்து கொண்டவளாகப் பரவாயில்லை என இருமுறை சொல்கிறாள்

இரண்டு முறை சொல்வதன் மூலம் அவள் முழுமனதோடு சொல்வது உணர்த்தப்படுகிறது.

இந்தப் பரவாயில்லை என்ற சொல் சட்டென ஒரு சங்கீதமாக மாறுகிறது. இந்தச் சொற்கள் நிச்சயமாக அந்தப் பையன் காதில் சங்கீதமாகவே ஒலித்திருக்கும். அவள் சிறுசொல்லின் மூலம் பரவாயில்லையின் சங்கீதத்தை வெளிப்படுத்துகிறாள். அது முதலில் அவள் மேஜையில் துவங்குகிறது. பின்பு மேஜைகளெங்கும் விரிவடைகிறது. ஒரு நிமிஷத்தில் அந்தக் உணவகமெங்கும் மகிழ்ச்சி பரவுகிறது.

எளிய தினசரி நிகழ்வு ஒன்றின் வழியே கவிஞர் புதியதொரு சங்கீதத்தை அறிமுகம் செய்கிறார்.

பயத்திலிருந்து நாம் விடுபடும் போது நம்மைச் சுற்றிய உலகம் இனிமையாக மாறிவிடுகிறது. ஒருவேளை இதே பெண் மருத்துமவனைக்குப் போவதற்கு முன்பு இப்படி சர்வர் தண்ணீரைச் சிந்தியிருந்தால் கோபம் கொண்டிருப்பாள். அல்லது தனக்கு மோசமான விஷயம் நடக்கப்போவதன் அடையாளமாக நினைத்திருப்பாள். ஆனால் இப்போது அவள் பயத்திலிருந்து விடுபட்டவள்.

கவலையிலிருந்து , துக்கத்திலிருந்து, அசாதாரண நெருக்கடிகளிலிருந்து நாம் விடுபடும் போது உணவின் மீது கவனம் கூடிவிடுகிறது. அப்போது உணவின் ருசி புதியதாகிறது. எளிய இனிப்புப் பண்டங்கள் கூட அதிகத் தித்திப்புக் கொண்டதாகிவிடுகின்றன. சுவையான, பிடித்த உணவைத் தேடுகிறோம். அதன் மூலம் நமக்குள் உருவான வெறுமையைப் பூர்த்தி செய்து கொள்ள முயலுகிறோம்.

எப்போதெல்லாம் இப்படி விடுபட்ட தருணத்திற்கு பின்பு விரும்பி சாப்பிட்டிருக்கிறோம் என நினைத்துப் பார்த்தால் பட்டியல் விரிவடைகிறது. அவை எளிய நிகழ்வுகளில்லை.

இந்தப் பெண் தனது மகிழ்ச்சியை வீட்டிற்குச் சென்று பகிர்ந்து கொள்ளவில்லை. உடனடியாக தன்னை மகிழ்வித்துக் கொள்ள முயலுகிறாள். ஒருவேளை வீட்டில் இந்தச் செய்தியை யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளமாட்டார்கள். பொருட்படுத்த மாட்டார்கள் என நினைக்கிறாள் தானோ.

கையில் ஸ்கேன் ரிப்போர்ட், லேப் டெஸ்ட்டுகளுடன் மருத்துவமனையில் காத்திருக்கும் போது மெல்லிய காகிதங்கள் கூட எடைகூடி விடுகின்றன. கடிகாரம் மிக மெதுவாக இயங்க ஆரம்பிக்கிறது. மருத்துவமனை இறுக்கம் என்றே ஒன்றுள்ளது. அது நம் நாவை ஒடுக்கிவிடுகிறது. மருத்துவமனையில் நம் தோள்களில் கவலைகள் ஏறி அமர்ந்து நம்மை அழுத்துகின்றன. நாம் கைவிடப்பட்டதாக உணருகிறோம். கவலைப்பட ஒன்றுமில்லை என்ற மருத்துவரின் சொல் தான் நம்மை மீட்கிறது. மருத்துவமனையிலிருந்து வெளியே வரும் போது மழைக்குப் பின்பாக வரும் சூரியனின் மஞ்சள் வெளிச்சம் போல நாம் உணருகிறோம்.

நிஜத்தில் நம்மை மகிழ்ச்சிப் படுத்திக் கொள்ள நமக்குத் தெரியவில்லை. வரையறை செய்யப்பட்ட மகிழ்ச்சியின் பட்டியலிலிருந்து எதையோ தேர்வு செய்து நாமும் அனுபவித்துக் கொள்கிறோம். உண்மையில் இந்தப் பெண் மருத்துவமனையில் நடனமாடியிருக்கலாம். வீதியில் குதித்தோடியிருக்கலாம். அல்லது விருப்பமான பாடலை பாடியபடியே வெளியே வந்திருக்கலாம். அவையெல்லாம் திரை உருவாக்கிய காட்சிகள். இந்தக் கவிதையில் அவள் இருட்டில் மெழுகுவர்த்தியைக் கையில் எடுத்துக் கொண்டு படியேறிய செல்லும் பெண்ணைப் போலவே நடந்து கொள்கிறாள்.

இந்தப் பெண் சொல்வது போல நாமும் சில தருணங்களில் கோபத்தை கடந்து  பரவாயில்லை என சொல்லியிருப்போம். பரவாயில்லையின் சங்கீதம் நம்மிடமிருந்தும் ஒலித்திருக்கும். ஆனால் அதைப்பற்றி கவனம் கொண்டிருக்கமாட்டோம். கவிதையில் பரவாயில்லை என்ற சொல் அழகான வண்ணத்துப்பூச்சி போலப் பறக்கதுவங்குகிறது.

அவளுக்கும் உணவகப் பையனுக்கும் நடுவில் தண்ணீர் தான் விளையாடுகிறது. முந்தைய கவிதையில் பாலத்தை வென்ற அதே தண்ணீர் உணவக மேஜையில் எளிய சிதறலை மேற்கொள்கிறது.

ஈரம் பட்டவுடன் நாம் ஏன் கோபம் கொள்கிறோம். நாம் விரும்பும் நேரத்தில் மட்டுமே தண்ணீருடன் நெருக்கமாக இருக்க விரும்புகிறோம். வேறு தருணங்களில் வேறு இடங்களில் தண்ணீர் நம்மை நனைக்கவோ, நம் உடைகளை ஈரப்படுத்தவோ கூடாது. உணவகப்பையனைப் போலவே தண்ணீரும் அடங்கி நடக்க வேண்டும்.

மழையிடம் கொள்ளும் பரவசத்தை டம்ளர் தண்ணீரிடம் நாம் கொள்வதில்லை. ஆனால் இரண்டும் ஒரே தண்ணீர் தான்.

கைதவறிய டம்ளர் தண்ணீரை அவள் சிறுமழையாக நினைத்துக் கொள்கிறாள். அவளது பரவாயில்லை இதுவும் மழை தான் என்பதன் அடையாளம். இந்த நிகழ்வில் அந்தப் பையன் அவசரமாக மேஜையைத் துடைப்பதைத் தவிர வேறு எதையும் செய்திருக்கமாட்டான். அவன் கோபத்திற்குப் பழகியவன். சிலசெயலால் தனது வேலை பறிபோய்விடும் என அறிந்தவன். பசி எப்போதும் கோபத்தைத் துணைக்கு அழைத்து வரக்கூடியது என்பதை உணர்ந்தவன். பரவாயில்லை என்ற சொல் மூலம் குளிர்ச்சி அவன் மீதும் படிகிறது. அவன் அவளுக்கு எடுத்து வரும் உணவைக் கூடுதல் அக்கறையுடன் கொண்டுவரக்கூடும். அவளுக்காகக் கொஞ்சம் கெட்டி சட்னியும் வைத்துக் கொண்டு வைத்திருப்பான். அவ்வளவு தான் அவனால் முடியும்.

••

நீரைப் பற்றிய மூன்றாவது கவிதை முந்தைய கவிதைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஆழமானது.

தாகங்கள் என்ற கவிதை இப்படித் துவங்குகிறது

உன் வீட்டிற்குத் தாகம் என்று

வருபவர்

தம்ளரில் நீ தரும்

தண்ணீருக்காவா வருகிறார்

அவருக்குள் வற்றவிட்

தண்ணீரைத் தேடி

வருகிறார்

யார் யார்அதை

வற்ற செய்தார்கள்

எப்போ எப்போவெல்லாம் அது

வற்றிப் போனது

நீ தரும் ஒரு மடக்குத் தண்ணீர்

ஒரு பாலம்

அப் பாலத்தில் ஏறி

அவர் அலைச்சலைத் தொடர்கிறார்

தனது நிழல்களை

உன்னிடம் விட்டுவிட்டு உடலும் அவரைத் தொடர்கிறது

இந்தக் கவிதையில் தனக்குள் வற்றிவிட்ட தண்ணீரைத் தேடி அலைகிறோம் என்ற குரலைக் கேட்கிறோம். நமக்குள் இருந்த தண்ணீர் எப்படி மறைந்து போனது. எதனால். அல்லது யாரால் அது வற்றிப் போனது என்ற கேள்வி ஆழமானது.

 நீ தரும் ஒரு மடக்குத் தண்ணீர் ஒரு பாலம்

என்ற வரியில் சட்டென உலகில் இல்லாத ஒரு பாலம் உருவாகிறது. அந்தப் பாலத்தில் ஏறி அவர் அலைச்சலைத் தொடர்கிறார். அவர் விட்டுச் செல்வது தனது நிழல்களை.

நீரால் வெல்லப்படும் பாலம் ஒருபுறம் என்றால் நீரே பாலமாகிறது இந்தக் கவிதையில். அவளுக்கும் பையனுக்கும் நடுவில் தண்ணீர் பாலமாகிறது இன்னொரு கவிதையில். இப்படி நீரின் ரகசியங்களை, புதிரை, எளிமையை, சொல்லும் கவிஞர் தண்ணீருக்குள் நாம் காணாத தண்ணீர் இருக்கிறது என அடையாளம் காட்டுகிறார்.

அறிந்த நீருக்குள் அறியாத நீர் இருக்கிறது போலும்.

நமக்குள் நீர் வற்றிப் போவது என்பது தவிர்க்கவே முடியாத செயலா, நமக்குள் தண்ணீரை நிரப்பிக்கொள்வதன் மூலம் அந்த வெறுமையைத் தீர்க்க முயலுகிறோம் என்பது உண்மையா, நமக்குள் நிறைந்திருந்த நீரும் உலகின் நீரும் ஒன்றில்லையா. இப்படி நம்மை ஆழமாக யோசிக்கவைக்கும் இந்தக் கவிதை மெய்ஞானத்தையும் அன்றாடச் செயலையும் ஒன்றாக்கி காட்டுகிறது.

 எளிய தினசரி நிகழ்வுகளை அசாதாரணமான தளத்திலும் பொருளிலும் உருமாற்றுகின்றன தேவதச்சனின் கவிதைகள். அதுவும் இந்தச் சமீபத்திய கவிதைகளில் மருத்துவமனையில் இருந்து ஆறுதலாக வெளியே வந்த பெண் உணவகத்தில் நடந்து கொள்வது போலவே நடந்து கொள்கிறார். அவரிடமிருந்து பரவாயில்லையின் சங்கீதத்தை நாம் பெறுகிறோம். இதைப் பரவவிட வேண்டும் என்பதே நமக்கிருக்கும் பொறுப்பு

••

0Shares
0