பறக்கும் சுடர்கள்

நூல்வனம் பதிப்பகம் புத்தகத் தயாரிப்பில் முன்னோடியானது. மணிகண்டன் மிகவும் கலை நேர்த்தியாகப் புத்தகங்களை வெளியிட்டு வருகிறார். தொடர்ந்து ரஷ்ய இலக்கியங்களைச் செம்பதிப்பாக வெளியிட்டு வருவது பாராட்டிற்குரியது

அவரது சமீபத்திய வெளியீடு ரூமி கவிதைகள். தமிழில் மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் கவிஞர் க. மோகனரங்கன்.

ஈரோட்டைச் சேர்ந்த க.மோகனரங்கன் சிறந்த கவிஞர், தேர்ந்த மொழி பெயர்ப்பாளர். ஜென் கவிதைகளாக இருந்தாலும் சமகால உலகக் கவிதைகளாக இருந்தாலும் அதனை ஆழ்ந்து புரிந்து கொள்வதுடன் அதே கவித்துவத்தைத் தமிழிலும் கொண்டு வருபவர். அவரது மொழியாக்கத்தில் வெளியாகியுள்ள கவிதைத்தொகுப்புகளை விரும்பி வாசித்திருக்கிறேன்.

கவிதை என்பது நடனம். புனைகதை என்பது நடத்தல் என்கிறார் கவிஞர் பால் வலேரி. ரூமியை வாசிக்கும் போது அந்த நடனத்தை முழுமையாகக் காணுகிறோம். இது ஒரு வகை சூஃபி நடனம். சுழன்றாடுவதன் வழியே பரவசத்தை அடைவது. சொற்களைக் கொண்டு அந்த மாயநடனத்தை நிகழ்த்திக் காட்டுகிறார் ரூமி

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் சத்யமூர்த்தி ரூமி கவிதைகளை மொழிபெயர்ப்புச் செய்து அழகான பதிப்பாக வெளியிட்டிருந்தார். அந்தத் தொகுப்பு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாகவே இந்த நூலைக் காணுகிறேன்.

பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த மௌலானா ஜலாலுத்தீன் ரூமி பாரசீகத்தின் நிகரற்ற கவிஞர். சூஃபி ஞானி. இவரது கவிதைகள் உலகெங்கும் கொண்டாடப்படுகின்றன.

தமிழிலும் ரூமியின் கவிதைகள் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளன. ரூமியின் கவிதைகள் தோற்ற அளவில் எளிமையானவை போலத் தோன்றக்கூடியவை. ஆனால் அந்த எளிமை ஏமாற்றக்கூடியது. அவை ஆழ்ந்த தத்துவார்த்தமும் கவித்துவ உச்சமும் கொண்டவை.

நான் ரூமியின் கவிதைகளைச் சிறகுள்ள சுடர்கள் என்றே சொல்வேன். ரூமி சொற்களைச் சுடர்களாக்குகிறார். கவிதையை வாசிப்பதன் வழியே அந்தச் சுடர்கள் நம் அகவெளியில் பறந்தலைகின்றன.

ரூமி கவிதைகள் நூலிற்குத் துணைத்தலைப்பாக இதயங்களின் உதவியாளர் என்று பொருத்தமாகக் கொடுத்திருக்கிறார் மோகனரங்கன். ரூமி நம் இதயங்களைத் தூய்மைப்படுத்துகிறார். மகிழ்ச்சியால் நிரப்புகிறார். ரூமி தன்னை இதயத்தின் விவசாயி என்றே அழைத்துக் கொள்கிறார்.

இந்த நூலில் ரூமியின் வாழ்வினை விவரிக்கும் அழகான வண்ண ஒவியங்களை இணைத்திருக்கிறார்கள். இது கவிதை நூலிற்குக் கூடுதல் அழகு தருகிறது. அத்தோடு ரூமி வாழ்ந்த காலத்தையும் நினைவு கொள்ள வைக்கிறது.

உடைந்த இதயம்

கடவுள் உற்று நோக்கும் இடம் என்று ஒரு கவிதையில் ரூமி எழுதியிருக்கிறார்.

உடைந்த இதயம் எப்போதும் அமைதியானது. அதன் துயரை கடவுளால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். கடவுளின் வேலை பேரன்பும் கருணையும் கொண்டு உடைந்த இதயத்தைச் சரி செய்வது தானே.

இந்தக் கவிதையை மொழிபெயர்க்கும் போது இகவாழ்வு என்ற சொல்லை மோகனரங்கன் பயன்படுத்தியிருக்கிறார். இந்த ஒரு சொல்லின் வழியே ரூமி தமிழ் மெய்யியல் கவிதைமரபின் தொடர்ச்சியாக மாறிவிடுகிறார். இது தான் சிறந்த மொழிபெயர்ப்பாளரின் அடையாளம்.

மண்டியிட்டு மண்ணை முத்தமிட

நூற்றுக்கும் அதிகமான வழிகள் உண்டு

என்ற ரூமியின் கவிதையினை வாசிக்கும் போது தஸ்தாயெவ்ஸ்கியின் இடியட் நாவலில் வரும் மிஷ்கின் நினைவிற்கு வந்து போகிறான். அவன் மண்ணை முத்தமிட்டு உலகின் பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்கிறான்.  மண்ணை முத்தமிடுவது என்பதை மரணம் என்கிறார்கள். பூமியில் வாழும் போது மனிதன் மண்ணை முத்தமிடுவதில்லை..மரணம் மனிதனையும் ஒரு விதையாக மாற்றுகிறது..

இன்னொரு கவிதையில் பரவசம் என்பதை ஒரு மொழியாக ரூமி குறிப்பிடுகிறார். ஆம், பரவசத்தின் போது சொற்கள் தேவையற்றுப் போகின்றன. பரவசம் உலகை எடையற்றுப் போகச் செய்கிறது. நாம் பரவசத்திற்காக ஏங்கிக் கொண்டேயிருக்கிறோம் பெர்சியாவில் நடைபெறும். சூஃபி  நடனம் பரவசத்தையே மையமாகக் கொண்டது. அந்த நடனத்தின் வழியே ஞானத்தை பெறுகிறார்கள்.

உனக்கொரு கண்ணாடியைக்

கொண்டு வந்துள்ளேன்

உன்னைப் பார்த்து

என்னை நினைவு கொள்

என்கிறது ரூமியின் இன்னொரு கவிதை

கண்ணாடி ரூமி கவிதைகளில் தொடர்ந்து இடம்பெறுகிறது. கண்ணாடியை தரிசனத்தின் அடையாளமாகவும் ஆசையின் வடிவமாகவும் குறிப்பிடுகிறார். தனக்கென நினைவுகள் அற்ற கண்ணாடி தான் மற்றவரை நினைவுபடுத்துகிறது என்பது விசித்திரமே.

நினைவும் மறதியும் ரூமி அடைக்கலமாகும் இடங்கள். நினைவுபடுத்தபடவும் விரும்புகிறார். மறதிக்குள் புதைந்துபோய்விடவும் விரும்புகிறார். இரண்டும் காதலால் மட்டுமே சாத்தியம். முழுக்க முழுக்க உணர்வுநிலையிலிருந்து எழுதப்பட்டவை ரூமியின் கவிதைகள். இந்தக் காதற்பாடல்கள் உடலைத் தாண்டிய காதலைப்பாடுகின்றன.

நமது வாழ்வு மிகச்சிறியது. அர்த்தமற்ற ஆசைகளால் நிரம்பியது. நம் வாழ்வை கடவுளிடம் சரணடையச் செய்வதன் மூலம் சிறப்பாக்கிக் கொள்ள முடியும். அகவிழிப்பே இதற்கான பாதை என்கிறார் ரூமி.

ரோஜாவிடம்

அதன் இதழ்களை மலரச் செய்திட

என்ன சொல்லப்பட்டதோ

அது இங்கே

எனது இதயத்திலும்

என்னிடம் உரைக்கபட்டது

என்கிறார் ரூமி. ரோஜா என்பது நித்யத்துவத்தின் அடையாளம். ரோஜாவை மனிதன் தனது கட்டளையால் மலரச் செய்துவிட முடியாது. கடவுள் சொன்ன ரகசியமே அதை மலரச் செய்கிறது. அந்த ரகசியத்தை அறிவதே ஞானமார்க்கம். அதையே தனது கவிதைகளின் வழியே ரூமி உணர வைக்கிறார்

சூஃபியானவர்

வேட்டைக்காரன் ஒருவனைப் போல

வேட்டையாடுவதைத் தேர்ந்தெடுத்து

மானின் அடிச்சுவடுகளைப் பின்தொடர்கிறார்

அந்தச் சுவடுகளின் வரைபடத்தைக் கொண்டு

அதன் பாதையைக் கண்டறிய

அவர் முனைகிறார்

ஆனால் மெய்யாகவே

அந்த மான் தான்

அவருக்கு வழி காட்டுகிறது

சூஃபி ஞானத்தைச் சிறப்பாக விளக்கும் கவிதையிது.

மானைப் பின்தொடரும் வேட்டைக்காரனைப் போலவே சொற்களைத் துரத்திச் சென்று முடிவில் அதனாலே வழிகாட்டப்படுகிறார் ரூமி. கவிதை என்பது புள்ளிகளை உதிர்த்தபடி செல்லும் மாயமானில்லையா. அதைத் துரத்திச் செல்பவன் ஒரு புள்ளியில் தானும் மானாகிவிடுகிறான் என்பது தான் நிஜமோ.

ரூமியின் கவிதைகளைச் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ள  கவிஞர் க. மோகனரங்கனுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.

•••

0Shares
0