பறக்கும் புத்தகங்கள்

ஆஸ்கார் விருது பெற்ற குறும்படமான THE FANTASTIC FLYING BOOKS OF MR. MORRIS LESSMORE பார்த்தேன். புத்தகங்களின் முக்கியத்துவத்தை இதைவிடச் சிறப்பாக யாரும் சொல்லிவிட முடியாது. இணையத்தில் இந்தப்படம் காணக்கிடைக்கிறது. குழந்தைகள் பெரியவர் என அனைவரும் இந்தக் குறும்படத்தைக் காண வேண்டும்.

படத்தின் துவக்கத்தில் புத்தகத்தை நேசிக்கும் திரு. மோரிஸ் லெஸ்மோர் ஒரு ஹோட்டலின் பால்கனியில் அமர்ந்திருக்கிறார். அவருக்குப் புத்தகங்கள் தான் உலகம். சொற்கள் தான் துணை. ஒவ்வொரு நாளும் தனது வாழ்க்கை நிகழ்வுகளை அவர் குறிப்பேட்டில் தவறாமல் பதிவு செய்து வருகிறார். பால்கனியில் அவரைச்சுற்றிலும் புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன. திடீரென ஒரு புயற்காற்று அடிக்கிறது. அதில் அவரது புத்தகங்கள். எழுதப்பட்ட சொற்கள் யாவும் பறந்து போகின்றன. அவரும் காற்றில் அடித்துச் செல்லப்படுகிறார்.

காற்று அவரை ஒரு இடத்தில் வீசிச் செல்கிறது. அங்கே புத்தகங்களைப் பற்றிக் கொண்டு வானில் பறந்து போகும் ஒரு அழகியைக் காணுகிறார். இந்தக் காட்சி குட்டி இளவரசன் நாவலில் வரும் காட்சியை நினைவுபடுத்தியது. புத்தகங்களைப் பிடித்துக் கொண்டு எப்படிப் பறக்க முடியும் எனத் திகைத்துப் போய்த் தனது பதிவேட்டினை வானை நோக்கி வீசுகிறார். அது பறக்கவில்லை. .

வானில் பறக்கும் அழகி தான் வைத்திருந்த Humpty Dumpty புத்தகத்தை அவருக்குப் பரிசாக அனுப்பி வைக்கிறாள்.

அந்தப் புத்தகத்தின் வழிகாட்டுதலில் அவர் பறக்கும் புத்தகங்களின் மாளிகையைக் கண்டடைகிறார். வெளியே சுற்றிவிட்டுப் புத்தகங்கள் வீடு திரும்பும் காட்சி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அது ஒரு பழைய நூலகம். உலகப் புகழ்பெற்ற நூல்கள் யாவும் இருக்கின்றன.

அந்த மாளிகையில் புத்தகங்கள் நடந்து திரிவதைக் காணுகிறார். ஒரு புத்தகம் ப்யானோ வாசிக்கிறது. அந்த இசையைக் கேட்டு மற்ற புத்தகங்கள் நடனமாடுகின்றன. லெஸ்மோரும் சேர்ந்து நடனமாடுகிறார். ஆடி முடித்தவுடன் புத்தகங்கள் கைதட்டிப் பாராட்டுகின்றன.

லெஸ்மோர் அந்த நூலகத்திலே தங்கிக் கொள்கிறார். ஆசை தீரப்படித்தபடியே புத்தகங்களுடன் வாழத் துவங்குகிறார்.

காலை நேரம் ஒரு புத்தகம் அவரை அலாரம் போல எழுப்பிவிடுகிறது. அவர் புத்தகங்களுக்கு உணவு தயாரித்துத் தருகிறார். உடை மாற்றிவிடுகிறார். புத்தகங்கள் வெளியே கிளம்பிப் போகின்றன.

நோயுற்றிருக்கும் பழைய புத்தகம் ஒன்றை வெளியே எடுத்து அதற்குச் சிகிச்சை செய்ய முயற்சிக்கிறார். அந்தக் காட்சியில் புத்தகத்தின் இதயம் துடிக்கிறது. அதை லெஸ்மோர் உணருகிறார்

இப்படியாகப் புத்தகங்களுடன் வாழத்துவங்கிய பிறகு பறந்து போன சொற்களை மீட்டு மீண்டும் தனது பதிவேட்டில் தனது வாழ்க்கை நிகழ்வுகளை எழுத ஆரம்பிக்கிறார்.

அத்தோடு அந்த நூலகத்தைத் தேடி வருகிறவர்களுக்குப் புத்தகங்களை இரவல் தருகிறார். ஒவ்வொரு நாளும் புத்தகங்கள் கதை சொல்லி அவரைத் தூங்க வைக்கின்றன.

லெஸ்மோர் தனது புத்தகத்தை எழுதி முடித்தாரா. புத்தகங்களுடன் உள்ள அவரது உறவு எப்படி முடிந்தது என்பதைப் படம் பார்த்து நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.

புத்தகங்கள் ஒன்றாக இணைந்து சந்தோஷமாக வாழுவதே நூலகம் என்று படம் நமக்கு அழுத்தமாக உணர்த்துகிறது.

வில்லியம் ஜாய்ஸால் எழுதப்பட்ட கதையை அனிமேஷன் படமாக உருவாக்கியிருக்கிறார்கள். புயற்காற்றில் சொற்கள் பறப்பதும். லெஸ்மோர் புத்தகங்களுடன் நடனமாடுவதும் பழைய புத்தகத்திற்கு வைத்தியம் செய்வதும் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது

பறவைகள் போல வானில் புத்தகங்களும் பறந்து செல்லும் இந்தக் கற்பனையான படம் தரும் சந்தோஷம் எவரையும் வாசிக்கவும் எழுதவும் வைக்கும் என்பதே நிஜம்.

••

0Shares
0