ரெயின்போ பிளவர் என்ற வாலண்டின் கதயேவ் எழுதிய ரஷ்ய சிறார் கதை ஒன்றை பல ஆண்டுகளுக்கு முன்பாக வாசித்தேன். அந்தக் கதையில் வரும் ஒரு காட்சி மனதை விட்டு அகலவேயில்லை. இன்று மீண்டும் அக் கதையைத் திரும்பப் படிக்க வேண்டும் போலத் தோன்றவே இணையத்தில் தேடிக் கண்டுபிடித்து வாசித்தேன்.

அந்தக் கதையில் கேட்டவரம் தரும் ஏழு வண்ணப்பூ ஒன்றை ஒரு சிறுமி பெறுகிறாள். அவள் அந்த இதழ்களை எப்படிப் பயன்படுத்தினாள் என்பதைக் கதை அழகாக விவரிக்கிறது
பறப்பாய், பறப்பாய் பூவிதழே
பறப்பாய் கிழக்கிருந்து மேற்கே
பின் வடக்கிருந்து தெற்கே பறந்திடுவாய்
சுற்றிப் பறந்தே திரும்பிவந்து
தரையை நீயே தொட்டிடுவாய்
நான் கேட்கும் வரத்தைத் தந்திடுவாய்
உலகத்திலுள்ள எல்லா விளையாட்டுச் சாமன்களையும் என்னுடையதாக்கு!
அவள் இப்படிச் சொல்லி முடித்த அக்கணமே எல்லாப் பக்கமிருந்தும் விளையாட்டுச் சாமன்கள் அவளை நோக்கி விரைந்து வரத்தொடங்கின. முதலில் வந்தவை பொம்மைகளே. அவை கண்களைச் சிமிட்டி ‘மா-மா’, ‘மா-மா’ என்று விடாமல் கூறின.
முதலில் ஷேன்யா மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். ஆனால் சில நிமிடங்களிலேயே ஏராளமான விளையாட்டுச் சாமான்கள் வந்து வாசலையும், அவர்களது சிறிய தெருவையும், இரண்டு பெரிய நிழற்சாலைகளையும், இன்னும் பாதியளவு சதுக்கத்தையும் நிறைத்துவிட்டன. யாருமே ஒரு பொம்மையையாவது மிதிக்காமல் நடக்க முடியவில்லை. பொம்மைகள் ‘மா-மா, மா-மா!’ என்று சளசளப்பதையத் தவிர வேறு எதையும் யாருமே கேட்க முடியவில்லை.

ஐம்பது இலட்சம் பேசும் பொம்மைகள் போடும் சத்தத்தை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? குறைந்தபட்சம் அத்தனை பொம்மைகளாவது இருந்தன. இவை மாஸ்கோவிலிருந்த பொம்மைகள் மட்டுமே. லெனின்கிராட், கார்கோவ், கீவ், லிவ்யூ ஆகிய நகரங்களிலிருந்து இனிதான் வரவேண்டும். அவை சோவியத் யூனியனின் ஒவ்வொரு தெருவிலும் கிளிகளைப் போலக் கீச்சிட்டுக் கொண்டிருந்தன.
ஷேன்யா கவலைப்பட ஆரம்பித்தாள். ஆனால் இது வெறும் ஆரம்பம் மட்டுமே. பொம்மைகளை அடுத்து உருண்டோடும் ரப்பர் பந்துகள் வந்தன. பிறகு கோலிகள், ஸ்கூட்டர்கள், மூன்று சக்கரச் சைக்கிள்கள், விளையாடு டிராக்டர்கள் மற்றும் கார்கள். தாண்டும் கயிறுகள் பாம்புபோலத் தரையில் ஊர்ந்து வந்தன. அவை பொம்மைகளின் காலில் சிக்கி, அவற்றைப் பதற்றத்தில் மேலும் பலமாகக் கூக்குரலிடச் செய்தன.
இலட்சக்கணக்கான விளையாட்டு விமானங்களும், ஆகாயக் கப்பல்களும் கிளைடர்களும் ஆகாயத்தில் பறந்துகொண்டிருந்தன. காகித பாராசூட்டுகளோ வானதிலிருந்து இறங்கி தொலைபேசி வயர்களிலும், மரங்களிலும், பனி போலச் சிக்கியிருந்தன. நகரத்தின் போக்குவரத்து முழுவதும் ஸ்தம்பித்துவிட்டது. சாலை சந்திப்புகளில் இருந்த மிலீஷியாக்காரர்கள் பக்கத்து விளக்குக் கம்பத்தில் ஏறிக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்கள்.
‘நிறுத்து, நிறுத்து!’ ஷேன்யா ஓலமிட்டாள். ‘இது போதும்! எனக்கு இதற்கு மேல் எதுவும் வேண்டாம்! எனக்கு இத்தனை விளையாட்டுப் பொருட்கள் தேவையில்லை. நான் சும்மாதான் சொன்னேன். எனக்குப் பயமாயிருக்கிறது…’ அதுசரி, அவள் சொன்னதை யார் கேட்டார்கள்? விளையாட்டுச் சாமான்கள் கொட்டிக்கொண்டே இருந்தன. முழு நகரமும் விளையாட்டுச் சாமான்களால் நிரைந்துவிட்டது. ஷேன்யா மாடிக்கு ஓடினாள்–விளையாட்டுச் சாமான்கள் அவளைத் தொடர்ந்தன. ஷேன்யா பால்கனிக்கு ஓடினாள்–விளையாட்டுச் சாமான்கள் அவளைத் தொடர்ந்தன. ஷேன்யா உப்பரிகைக்குச் சென்றாள்–விளையாட்டுச் சாமான்கள் அங்கும் அவளைத் தொடர்ந்தன. ஷேன்யா கூறைமேல் ஏறி அவசரம் அவசரமாக வயலட் நிற இதழைக் கிள்ளினாள். அதை வீசியெறிந்து சடுதியாகச் சொன்னாள்:
பறப்பாய், பறப்பாய் பூவிதழே
பறப்பாய் கிழக்கிருந்து மேற்கே
பின் வடக்கிருந்து தெற்கே பறந்திடுவாய்
சுற்றிப் பறந்தே திரும்பிவந்து
தரையை நீயே தொட்டிடுவாய்
நான் கேட்கும் வரத்தைத் தந்திடுவாய்
எல்லா விளையாட்டுச் சாமான்களையும் மறுபடி கடைகளுக்கே போகும்படி செய்!
அவள் இப்படிச் சொல்லி முடித்த அக்கணமே அத்தனை விளையாட்டுச் சாமான்களும் மறைந்தன. பின் ஷேன்யா ஏழு நிறப்பூவைப் பார்த்தாள். அதில் ஒரேயொரு இதழ் மட்டுமே மிச்சம் இருந்தது. ‘அடக் கடவுளே!’ அவள் சொன்னாள். ‘ஆறு இதழ்களை ஏற்கனவே உபயோகித்துவிட்டேன்; என்றாலும் அவற்றிலிருந்து ஒரு மகிழ்ச்சியையும் பெறவில்லை. நல்லது, அடுத்தத் தடவை சாமர்த்தியமாக இருப்பேன்.
•••
Thanks
சரவணன்
முழுக்கதையை வாசிக்க