பறவைகளை அழைத்துச் செல்பவன்.

Spread Your Wings என்ற பிரெஞ்சு படத்தைப் பார்த்தேன்.

அழிந்து வரும், காட்டு வாத்து இனம் ஒன்றைக் காப்பாற்ற வேண்டி பறவையியலாளர் கிறிஸ்டியன் ஒரு ஆய்வுத்திட்டத்தைச் சமர்ப்பிக்கிறார். அதை ஏற்றுக் கொள்ளாமல் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் நிராகரிக்கிறது. தனது திட்டத்தைச் செயல்படுத்த விரும்பிய கிறிஸ்டியன் அலுவலக முத்திரையைத் திருடி வந்து தானே ஒரு அரசாணை போல ஒன்றைத் தயார் செய்கிறார்.

அவரது திட்டம், காட்டுவாத்துகளின் முட்டைகளைச் சேகரித்து அந்த வாத்துகள் பிறக்கும் நாளிலிருந்து தானே வளர்த்து அவற்றைப் பிரான்சின் தெற்கிலிருந்து ஆர்டிக் வட்டத்திற்கு நீண்ட தொலைவு பறக்க வைக்க வேண்டும். அப்படி நடந்தால் அந்த வாத்து இனத்தின் நினைவில் புதிய வலசைப்பாதை பதிந்துவிடும். பின்பு அவை இனப்பெருக்கத்திற்காகப் புதிய பாதையில் போய்வரும். ஆகவே பிழைத்துக் கொள்ளும் என்று கருதுகிறார்.

இதற்காகச் செயிண்ட்-ரோமன் பகுதியில் வசிக்கும் கிறிஸ்டியன் தனது வீட்டிலே ஆய்வுப்பணிகளை மேற்கொள்கிறார். அவரது மனைவி பாவோலா கிறிஸ்டியனைப் பிரித்து மகனுடன் தனியே வாழுகிறாள். ஒரு முறை தந்தையைக் காண மகன் தாமஸை அழைத்துக் கொண்டு வருகிறாள். தாமஸின் வயது 14. மூன்று வார காலக் கோடை விடுமுறையைத் தந்தையோடு கழிக்க வேண்டும் என்கிறாள் பாவோலா

வீடியோ கேம் ஆடுவதில் விருப்பம் கொண்ட தாமஸ் நவீன வசதிகள் எதுவுமற்ற தந்தையின் இருப்பிடத்தில் தங்கியிருக்க விரும்பவில்லை. ஆனால் வேறுவழியில்லாமல் தந்தையுடன் நாட்களைக் கழிக்கிறான். Wifi கிடைக்காத இடத்தில் வீடியோ கேம் ஆடுவதற்கு அவன் படும்பாடுகள் மறக்கமுடியாதவை.

அந்த நாட்களில் தந்தை பறவைகளை எவ்வளவு நேசிக்கிறார் என்பதைக் கண்டறிகிறான். அவனுக்கும் பறவைகளின் மீது நேசம் உருவாகிறது. தந்தையும் மகனும் இருபது காட்டுவாத்து முட்டைகளைப் பொறிக்க வைக்கிறார்கள். ஒரு காட்சியில் முட்டையின் மீது தாமஸ் ஹெட்போனை மாட்டி பாட்டுக் கேட்க வைக்கிறான். முட்டையினுள் இருந்த வாத்து இசை கேட்டுத் துடிக்கிறது. இதனால் முட்டை உடைய ஆரம்பிக்கிறது.

பறவைகள் பிறந்தவுடனே யாரைக் காண்கிறதோ அதுவே அதன் பெற்றோர் எனக் கருதக்கூடியவை என்கிறார் கிறிஸ்டியன். ஆகவே காட்டுவாத்துகள் பிறக்கும் போது அதன் எதிரே விசித்திரமான அங்கி அணிந்து தந்தையும் மகனும் நிற்கிறார்கள்

அந்தப் பறவைகளின் குரல் போலவே அவர்களும் ஒலி எழுப்புகிறார்கள். அந்தப் பறவைகளுடன் வானில் பயணம் செய்யச் சிறியதொரு அல்ட்ராலைட் விமானத்தை உருவாக்குகிறார் கிறிஸ்டியன். தந்தையும் மகனும் பறவைகளை வீட்டிலிருந்து வெளியே அழைத்துக் கொண்டு செல்லும் காட்சி அற்புதம்.

பாவோலாவிற்கு கணவனின் பைத்தியக்கார விஷயங்கள் எதுவும் பிடிப்பதில்லை. இதில் தன் பையனை வேறு கெடுக்கிறானே என்று கோபம் கொள்கிறார். ஆனால் தாமஸ் பறவைகளை மிகவும் நேசிக்கிறான். தந்தையோடு பயணிக்க விரும்புகிறான்.

தாமஸ் பறவைகளிடம் காட்டும் நெருக்கமும் அவற்றோடு தண்ணீரில் விளையாடுவதும் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பறவைகளை மற்ற விலங்குகளைப் போலப் பயிற்சி கொடுத்து நடிக்க வைக்க முடியாது. ஆனால் இந்தப்படத்தில் பறவைகள் இயல்பாக இணைந்து பறக்கின்றன. தாமஸோடு சேர்ந்து ஓடுகின்றன. எப்படி இவற்றைப் படமாக்கினார்கள் என்று ஆச்சரியமாகயிருக்கிறது. அற்புதமான பின்னணி இசை. அர்மாண்ட் அமர் இசையமைத்துள்ளார்.

அவர்கள்  இருபது பறவைகளுடன் ஆர்டிக் நோக்கி ஒருவேனில் பயணிக்கிறார்கள். அந்தக் காட்சியில் தந்தைக்கும் மகனுக்குமான உறவும். தொலைவிலிருந்தபடியே தாயுடன் தாமஸ் மேற்கொள்ளும் தொலைபேசி உரையாடல்களும் வீடியோ காட்சிகளும் உணர்ச்சிப்பூர்வமாக அந்தப் பயணத்தைப் பதிவு செய்கின்றன

அவர்கள் நினைத்தது போலப் பறவைகளை அழைத்துக் கொண்டு பறக்கும் திட்டம் எளிதாக இல்லை.  காவல் துறை அதிகாரிகளால்ர புதிய பிரச்சனை உருவாகிறது. அதிலிருந்து கிறிஸ்டியன் மீண்டாரா, அவரது பயணத்திட்டம் என்னவானது. எப்படித் தாமஸ் அதை முன்னெடுத்தான் என்பதே படத்தின் பிற்பகுதிக் கதை

நிக்கோலஸ் வானியர் எழுதிய நாவலை மையமாகக் கொண்டு படமாக்கியிருக்கிறார்கள். அவரே திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார். உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கபட்ட படமிது.

Winged Migration என்றொரு டாகுமெண்டரி திரைப்படத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தேன். அந்தப்படம் மிகச்சிறப்பானது. Spread Your Wings  அதன் தொடர்ச்சி போலவே உள்ளது.

இருபது பறவைகளுடன் சேர்ந்து நாமும் வானில் பறக்கிறோம். கடைசிக்காட்சியில் தாமஸ் தனது வீட்டினை நோக்கி பறவைகளுடன் பறந்து வருகையில் நாமும் கண்ணீர் விடுகிறோம். மறக்கமுடியாத அனுபவத்தைத் தருகிறது இப்படம்.

0Shares
0