ஓல்ஸ் சானின் இயக்கிய உக்ரேனியத் திரைப்படம் The Guide. 2014ல் வெளியானது.
படத்தின் முன்னோட்டத்தைக் காணும் போது Ivan’s Childhood திரைப்படம் ஞாபகம் வந்தது. நேற்று படம் பார்த்து முடித்தபோது தார்கோவெஸ்கியின் பாதிப்பில் உருவான படம் என்பதை நன்றாகவே உணர முடிந்தது.
1930களின் தொடக்கத்தில் படம் நடக்கிறது. உக்ரேனிய வரலாற்றின் முக்கியமான காலகட்டத்தின் கதையைப் படம் சொல்கிறது.
உக்ரேனின் கார்கிவ் நகரில் கூட்டுப்பண்ணை விவசாயத்திற்காகப் புதிய டிராக்டர் தொழிற்சாலை கட்ட முயலுகிறார்கள். இந்தப் பணியில் சோசலிசத்தின் மீது நம்பிக்கை கொண்ட அமெரிக்க என்ஜினியர் மைக்கேல் ஷாம்ராக் இணைந்து கொள்கிறார்.
மைக்கேல் அழகியான நடிகை ஓல்காவைக் காதலிக்கிறார். ஆனால் ராணுவ அதிகாரி விளாடிமிரும் ஒல்காவைக் காதலிக்கிறான். அவள் விளாதிமிரின் காதலை நிராகரித்துவிடுகிறாள் ஆகவே மைக்கேலை ஏதாவது சதிவலையில் சிக்கவைக்க நினைக்கிறான் விளாதிமிர்.
முதல் டிராக்டரின் வெளியீட்டின் போது, உக்ரேனிய குடியரசின் தலைவர்களில் ஒருவர் ஸ்டாலின் அரசால் திட்டமிடப்பட்டுள்ள ரகசிய ஆவணங்களை மைக்கேலிடம் கொடுத்து, மாஸ்கோவில் பணிபுரியும் கரேத் என்ற பிரிட்டிஷ் பத்திரிகையாளரிடம் ஒப்படைக்கும்படி சொல்கிறார். அரசின் அழைப்பினை ஏற்று மாஸ்கோ புறப்படும் மைக்கேல் அதனைப் புத்தகம் ஒன்றில் மறைத்துக் கொண்டு செல்கிறார்.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மைக்கேலை ரயிலில் மடக்கி கொலை செய்கிறான் விளாதிமிர். பத்து வயதான பீட்டர் தந்தையின் கொலைக்குச் சாட்சியாகிறான் மைக்கேல் வைத்திருந்த ரகசிய ஆவணத்தை விளாதிமிர் தேடுகிறான். ஆனால் ரகசிய ஆவணங்களுடன் பீட்டர் தப்பிச் சென்றுவிடுகிறான். துரத்தப்படும் அவனது பயணமே படத்தின் மையக்கதை.
தப்பியோடும் பீட்டர் ரயிலில் உக்ரேனின் பாரம்பரிய இசைக்கருவியான பாண்டுரா வாசிக்கும் பார்வையற்ற இவான் கோச்செர்காவினை சந்திக்கிறான். அவர் பல்வேறு வழிகளில் உதவி செய்கிறார்.
இவான் போலவே நாட்டுப்புற இசைக்கலைஞர்களான கோப்சார்களை ஒடுக்குவதற்காக ஸ்டாலின் அரசு முனைகிறது. அவர்கள் நாடெங்கும் துரத்தப்படுகிறார்கள். இவான் கோச்செர்காவுக்கு வழிகாட்டியாகப் பீட்டர் மாறுகிறான். இருவரும் இணைந்து பயணிக்கிறார்கள். பீட்டரை தேடும் காவலர்கள் அவர்களைத் துரத்துகிறார்கள்.
இவானுக்கும் பீட்டருக்குமான நட்பும், அவர்கள் தப்பிச் செல்லும் பயணமும் சிறப்பாக உள்ளன. குறிப்பாகப் பார்வையில்லாதவர்களின் உலகை பீட்டர் உணர்ந்து கொள்ளும் தருணமும், தன்னைத் தாக்க வரும் முரட்டுப் பையன்களை அவன் எதிர்கொள்ளும் விதமும், சிகரெட் மடித்துத் தரும் காகிதம் ஒன்றில் வெளியாகியுள்ள தந்தை பற்றிய செய்தியை பீட்டர் அறிவதும் சிறப்பான காட்சிகள்.
பிளெமிஷ் ஓவியர் செபாஸ்டியன் விராங்க்ஸ் வரைந்த பார்வையற்றவர்களின் பயணம் பற்றிய ஓவியத்தின் திரைவடிவம் போலவே ஒரு காட்சி உருவாக்கப்பட்டிருக்கிறது.
1934 ஆம் ஆண்டுக் குளிர்காலத்தில், பார்வையற்ற இவான் கோச்செர்கா மற்ற கோப்சார்களுடன் கார்கிவ் அருகே தூக்கிலிடப்படுகிறார். அந்தச் சோக சம்பவங்களுக்குப் பீட்டர் மட்டுமே வாழும் சாட்சியாக இருக்கிறான்.
உக்ரைன் முழுவதிலும் இருந்து உண்மையான பார்வையற்ற கோப்சார்களைப் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள்.
கிழக்கு உக்ரைனின் அற்புதமான நிலப்பரப்பின் வழியே அவர்கள் கடந்து செல்லும் காட்சிகளும் துயர இசையும் மனதைத் தொடுகின்றன
.