பள்ளத்தாக்கின் பேரழகு

பள்ளி வயதில் மெக்கனாஸ் கோல்ட் திரைப்படத்தைப் பார்த்தபோது தங்கம் தேடும் சாகசக்காரர்களின் கதையை விடவும் அவர்கள் குதிரையில் செல்லும் கிராண்ட் கேன்யன் பள்ளத்தாக்கின் பேரழகு என்னை அதிகம் வசீகரித்தது. இயக்குநர் ஜான் ஃபோர்டு இந்தப் பள்ளத்தாக்கினை மறக்கமுடியாத காட்சிகளாகத் தனது திரைப்படங்களில் பதிவு செய்திருக்கிறார். கௌபாய் படங்கள் என்றதும் மனதில் இந்த நிலக்காட்சி தான் ஒளிருகிறது.

அமெரிக்காவின் அரிசோனா பகுதியிலுள்ள கிராண்ட் கேன்யன் மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கு. பூர்வ குடி இந்தியர்கள் வாழ்ந்து வரும் இந்த நிலப்பரப்பினைக் காணுவதற்காக இன்று உலகெங்குமிருந்து மக்கள் வருகிறார்கள். இயற்கையின் அற்புதங்களில் ஒன்றாகக் கேன்யன் கருதப்படுகிறது.

புகைப்படக்கலைஞர் பீட் மெக்பிரைட் அவரது நண்பர் எழுத்தாளர் கெவின் ஃபெடார்கோ இருவரும் இணைந்து கிராண்ட் கேன்யனின் முழுவதையும் நடந்தே கடந்திருக்கிறார்கள். முறையான பாதைகள் இல்லாத இந்தப் பள்ளத்தாக்கினுள் அவர்கள் மேற்கொண்ட சாகசப்பயணத்தை ஒரு ஆவணப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

Into the Canyon என்ற அந்த ஆவணப்படம் 2019ல் வெளியாகியுள்ளது.

இந்த ஆவணப்படத்தின் வழியே நாமும் அந்த நண்பர்களுடன் இணைந்து கிராண்ட் கேன்யனுள் நடக்க ஆரம்பிக்கிறோம். இயற்கையின் பெருங்கரங்கள் செதுக்கி வைத்துள்ள பாறை அடுக்குகளைக் காணுகிறோம். மலையின் நிழல் ஆற்றில் விழுந்தோடுவதைக் காணுகிறோம். எங்கிருந்தோ ஒரு பறவை தனியே மலைமுகட்டைக் கடந்து போகிறது.

வேறுவேறு பருவகாலங்களில் இந்தப் பயணத்தை அவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். காரணம் ஒரே முறையில் இதைக் கடந்து செல்வது இயலாத காரியம். அதற்கான உடற்தகுதி மற்றும் குடிதண்ணீர் தட்டுபாடு. சீதோஷ்ணநிலை காரணமாகப் பயணம் செய்வது மிகவும் கடினம். அவர்களும் முதன்முறையாக அப்படியான ஒரு பயணத்தைத் தான் மேற்கொண்டார்கள். ஆனால் பாதியில் மயங்கி விழுந்து காலில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை செய்தபிறகு இப்படியான ஒரு திட்டத்தை முன்னெடுத்தார்கள்..

கிராண்ட் கேன்யனுள் ஓடும் கொலரோடா ஆற்றில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் வழிகாட்டியாக இருந்தவர் என்பதால் கெவின் அந்தப் பகுதி முழுவதையும் நன்றாக அறிந்திருந்தார்.

ஆனாலும் பாதைகள் இல்லாத பள்ளத்தாக்கினுள் நடந்து போவது பெரும் சாகசமாகவே அமைந்தது.

கிராண்ட் கேன்யனின் வியப்பூட்டும் அழகினையும் பிரம்மாண்டத்தையும் காணும் நாம் அது எப்படி வணிகக் காரணங்களுக்காக அழிக்கப்படும் சூழலில் இருக்கிறது என்பதையும் இதை எதிர்த்து நடக்கும் போராட்டங்களையும் அறிந்து கொள்கிறோம்.

மெக்பிரைட் மற்றும் கெவின் இருவரும் முந்தைய காலங்களில் உலகின் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாகச் சாகசப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குள் இருந்த நட்பும் புரிதலுமே இது போன்ற புதிய தேடுதலுக்குக் காரணமாக இருக்கிறது.

பயணம் மேற்கொள்ளும் முன்பு அவர்கள் தீவிரமாகத் தயாராகிறார்கள். உடலை உறுதியாக வைத்துக் கொள்வது தான் முதற்சவால். இது போலப் பல்வேறு வரைபடங்கள். வழிகாட்டிகளின் உதவியைப் பெற்றுப் பயணத்திட்டத்தை உருவாக்குகிறார்கள்.

750 மைல் நீண்ட இந்தப் பயணத்தில் பலமுறை தவறி விழுந்து அடிபடுகிறார்கள். காயம் அடைகிறார்கள். ஆனால் வலியைப் பொருட்படுத்துவதில்லை. சில இடங்களில் குடிநீர் கிடைக்காமல் அல்லாடுகிறார்கள். வெயிலின் உக்கிரம் தாங்கமுடியாமல் மயங்கிப் போகிறார்கள். குளிரும் பனியும் மிகக் கடுமையாக இருக்கிறது. ஆனால் அவர்கள் தளர்ந்து போகவில்லை. தொடர்ந்து பயணித்துக் கேன்யனை முழுமையாகக் கடந்து போகிறார்கள்.

பயணத்தின் போது ஒரு இடத்தில் இந்த நிலப்பரப்பு நிசப்தத்தின் பெருங்கிண்ணம் போலிருக்கிறது என்று சொல்கிறார் கெவின். அது உண்மையான விஷயம்.. முடிவில்லாத அந்தப் பள்ளத்தாக்கினுள் காற்றின் ஓசையைத் தவிர வேறு சப்தங்களே இல்லை.

பாறைகளுக்குள் கயிறு போட்டு இறங்குவதும் ஏறுவதும் எளிதாகயில்லை. மலையுச்சியில் மிகச்சிறிய பாதையொன்றைக் கடக்கும் போது பாறையில் முளைத்துள்ள புதர்செடியிடம் ஹாய்.. எப்படியிருக்கிறாய் என்று நலம் விசாரிக்கிறார் பீட் மெக்பிரைட்

மலையுச்சியில் கூடாரம் அமைத்துத் தங்குகிறார்கள். பனிக்காற்றின் வேகத்தைத் தாங்க முடியவில்லை. விடிந்து எழுந்து பார்க்கும்போது கூடாரம் முழுவதும் பனி உறைந்திருக்கிறது. அவர்கள் சூரியனைப் பார்த்தவுடன் கைகளை உயர்த்தி வரவேற்று காதலியை அணைப்பது போல வெயிலை அணைத்துக் கொள்கிறார்கள்

இன்னொரு இடத்தில் அவர்கள் பாறை ஒன்றின் மீது இரவு தங்குகிறார்கள். நட்சத்திரங்கள் அடங்கிய வானம் ஒரு போர்வை போல அவர்கள் மீது கவிந்துள்ளது. தங்களின் கடந்த கால நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

உலகில் உருவான மாற்றங்கள் யாவும் மனிதர்கள் நடக்கத் துவங்கியதால் ஏற்பட்டதே என்கிறார் மெக்பிரைட். கிராண்ட் கேன்யன் பள்ளத்தாக்கின் மையப்பகுதி ஒரு மைல் ஆழமாகயிருக்கிறது. அதாவது எம்பயர் ஸ்டேட் பில்டிங் போல நான்கினை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைத்தால் மட்டுமே அதன் விளம்பினை அடைய முடியும் என்கிறார்கள்

ஆற்றின் பாதையை ஒட்டிச் செல்லும் போது ஒரு தவளை அவர்களை ஏறிட்டுப் பார்க்கிறது. யார் இவர்கள். இங்கே என்ன வேலை என்பது போல அதன் பார்வையிருக்கிறது. பிறகு தாவிக் குதித்து மறைந்துவிடுகிறது. அந்தக் காட்சியில் பிரம்மாண்டமான கேன்யனை விடவும் அந்தத் தவளையே பெரியதாகத் தோன்றியது

உணவு தட்டுபாடு காரணமாக அவர்கள் அவதிப்படும் போது யாரோ மலையேற்றம் செய்தவர் விட்டுப் போயிருந்த பாக்ஸில் வெண்ணெய் சாக்லேட் மற்றும் உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்கிறார்கள். என்றோ வரப்போகும் ஒருவருக்காக உணவை விட்டுச் செல்லும் மனிதனின் அன்பை நினைத்து நன்றி சொல்கிறார்கள்

சில இடங்களில் சாடிலைட் போன் வழியாக அவர்கள் புற உலகோடு தொடர்பு கொள்கிறார்கள். கடக்க முடியாத உயரங்களைக் கடக்க வழிகாட்டியின் உதவியை நாடுகிறார்கள். கேமிராவை பல இடங்களில் தன்னை நோக்கி திருப்பிப் பேசும் மெக்பிரைட் மிகக் குறைவான உபகரணங்களை மட்டுமே உடன் கொண்டு சென்றிருக்கிறார். அதை வைத்துக் கொண்டு அற்புதமான காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்.

வேறுவேறு பருவ காலங்களில் கிராண்ட் கேன்யன் எப்படி ஒளிர்கிறது என்பதை அழகாகப் படமாக்கியிருக்கிறார்கள். அவர்கள் பள்ளத்தாக்கின் ஆழத்தில் நடந்து செல்லும் போது இரண்டு பூச்சிகள் போலவே தோற்றமளிக்கிறார்கள்.

வியக்கத்தக்க அந்த நிலப்பரப்பினைக் காணும் போது மனித வாழ்க்கை எவ்வளவு சிறியது என்பதை உணர முடிகிறது.

இந்தப் பயணத்தின் வழியே அவர்களின் நட்பின் பிணைப்பினையும் காலத்தால் அழியாத அழகு கொண்ட இயற்கையின் விந்தையும் ஒரு சேர காணுகிறோம். பூர்வ குடி மக்கள் இந்தப் பள்ளத்தாக்கினை புனிதமான இடமாகக் கருதுகிறார்கள். அதை வணங்குகிறார்கள்.

கேன்யன் பள்ளத்தாக்கின் ஒரு பகுதியில் யுரேனியம் கிடைப்பதாக அறிந்து சுரங்கம் தோண்டுகிறார்கள். அந்தக் கழிவுகள் ஆற்றில் கலந்தோடுகின்றன. நவாஜோ லேண்ட் பகுதியில் சுற்றுலா பயணிகளைக் கவர்ந்து இழுப்பதற்காகப் புதிய திட்டங்கள், தங்கும் விடுதிகள் உருவாக்க முனைகிறார்கள். இதன் காரணமாகக் கேன்யனின் சூழல் பாதிக்கப்படும் எனக் கருதும் நவாஜோ பூர்வ குடி மக்கள் பொது வாக்கெடுப்பு நடத்தி இந்தத் திட்டத்தைத் தோற்கடிக்கிறார்கள்.

ஆனாலும் ஒரு முனையில் மாறி மாறி ஹெலிகாப்டர்கள் வருவதும் போவதுமாக இருக்கின்றன. ஒரு நாளைக்கு ஐநூறுக்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களில் சுற்றுலாப் பயணிகள் வந்து போவதாகச் சொல்கிறார்கள். இதனால் கேன்யனின் இயற்கை அழகும் அமைதியும் கெட்டுவருவதாகச் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

மெக்பிரைட் வெற்றிகரமாகப் பயணத்தை முடித்துக் கொண்டு காரில் ஏறுவதற்கு முன்பு இவ்வளவு கடினமான பயணத்தில் கெவினால் தனக்குச் சிறிய பிரச்சனை கூட வரவில்லை. தன்னை முழுமையாகப் புரிந்து கொண்டதற்கு நன்றி என்கிறார். கெவினும் அப்படியே உணர்வதாகச் சொல்லிக் கட்டிக் கொள்கிறார். உணர்ச்சிப்பூர்வமான தருணமது,

இருவரும் நடப்பதில் ஆனந்தம் கொள்கிறார்கள். அது உடலையும் மனதையும் வலுவாக்குகிறது என்கிறார்கள். அதுவும் கிராண்ட் கேன்யன் போன்ற பள்ளத்தாக்கினை முழுமையாக நடந்து கடந்த்து வாழ்நாளில் கிடைத்த பேறு என்கிறார்கள். அது உண்மையே.

சுற்றுலா பயணியாக வானிலிருந்து இந்தப் பள்ளத்தாக்கினை காணுவது எவருக்கும் எளிதானது. ஆனால் இப்படிக் கடும் சிரமங்களுக்கு இடையே நடந்து கடந்திருப்பது தனித்துவமான சாதனையே.

If we can’t protect the Grand Canyon, what can we protect? என்ற கேள்வியுடன் இந்த ஆவணப்படம் நிறைவு பெறுகிறது. இது கேன்யனுக்கு மட்டுமான கேள்வியில்லை.

0Shares
0