புதிய குறுங்கதை
பூங்காவில் அந்த நபரைப் பார்த்தேன். ஐம்பது வயதிருக்கும். வெளிர் பச்சை நிற கதர் வேஷ்டி. கட்டம் போட்ட சட்டை அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த கண்ணாடியின் இடது பக்கப் பிடி உடைந்திருந்தது. அதை நூலால் கட்டியிருந்தார். வழக்கமாகப் பூங்காவிற்கு வருகிறவராகத் தெரியவில்லை. இன்றைக்குத் தான் முதன்முறையாகப் பார்க்கிறேன்.
அவரது கையில் ஒரு நியூஸ் பேப்பர் இருந்தது. அந்த செய்தித்தாளை விரித்து ஆர்வமாகப் படித்துக் கொண்டிருந்தார். பேப்பரின் முதற்பக்கத்தில் சத்தியவாணி முத்து மரணம் எனத் தலைப்பு செய்தி வெளியாகியிருந்தது. அந்தப் பெயரை எனது சிறுவயதில் கேட்டிருக்கிறேன். அமைச்சராக இருந்தவர்
அவர் இறந்த செய்தி இப்போது ஏன் வெளியாகியுள்ளது எனப்புரியாமல் பூங்காவின் சிமெண்ட் பாதையில் நடந்தேன். இரண்டாம் முறை அவரை நெருங்கி வரும் போது கவனித்தேன். அவர் கையில் வைத்திருந்தது 1999 நவம்பர் 12ம் தேதி பேப்பர்.
ஒரு பழைய பேப்பரை ஏன் இவ்வளவு சுவாரஸ்யமாகப் படித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் பேப்பர் இன்று வெளியானது போல கசங்காமல் இருக்கிறதே என யோசித்தபடியே நடந்தேன்.
என்றோ நடந்து முடிந்த செய்திகளால் இன்று என்ன பயன். பொழுதுபோகாமல் படிக்கிறவர் என்றால், எதற்காக இப்படிப் பழைய நாளிதழைப் படிக்க வேண்டும். குழப்பமாக இருந்தது.
நான்காவது சுற்றின் போது அவர் பேப்பரில் வந்த சினிமா விளம்பரத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். புதுக்குடித்தனம் என்ற சினிமாவிற்கான விளம்பரமது. அப்படி ஒரு படத்தைப் பற்றி நான் கேள்விப்படவேயில்லை.
வழக்கமாக நான் பத்தாயிரம் காலடிகள் நடக்கக் கூடியவன். அத்தனை சுற்று முடியும் வரை அவர் நாளிதழைப் படித்துக் கொண்டேயிருந்தார். எனது கடைசிச் சுற்று நடையின் போது அந்தப் பூங்கா, அங்குள்ள மரங்கள், சிமெண்ட் பெஞ்சுகள் எல்லாமும் இது போல நாற்பது வருஷங்களுக்கு முந்தியவை தானே. அது ஏன் பழையதாகத் தோன்றவில்லை பழைய நியூஸ் பேப்பர் படிப்பது மட்டும் கேலிக்குரியதாகத் தோன்றுகிறது எனத் தோன்றியது.
வீடு திரும்பும் வழியில் அவரைப் பற்றியே நினைத்துக் கொண்டு வந்தேன். ஒருவேளை அவர் இன்றைய செய்திகளை விரும்பாதவராக இருக்கக் கூடும். அல்லது அவருக்கு நினைவாற்றல் மங்கிப் போயிருக்கக் கூடும். எப்படியோ உலகம் கைவிட்ட ஒன்றைக் கையில் எடுத்து ஆசையாகப் படிக்க யாரோ இருக்கிறார்கள் என்பது புரிந்தது.
அதன் மறுநாள் பூங்காவிற்குள் செல்லும் போது எனது கண்கள் அவரைத்தான் முதலில் தேடின. அவர் இன்றைக்கு வேறு ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்தார். இன்று படித்துக் கொண்டிருந்த செய்தித்தாள் 1986ம் ஆண்டின் ஆகஸ்டில் வெளியான செய்தித் தாள். ஆசையாக விரித்துப் படித்துக் கொண்டிருந்தார்.
இதே ஆண்டு வெளியான ஒரு நாவலை அவர் படித்துக் கொண்டிருந்தால் எனக்கு வியப்பாக இருக்காது. செய்தித்தாள் என்பது தான் பிரச்சனையே. அவருக்கு எங்கே இந்தப் பழைய நியூஸ் பேப்பர்கள் கிடைக்கின்றன. அதை ஏன் பொதுவெளியில் வைத்துப் படிக்க நினைக்கிறார்.
என்னுடன் நடைப்பயிற்சிக்கு வரும் செல்வாவிடம் அவரைப் பற்றிச் சொன்ன போது அவர் தீவிரமான குரலில் சொன்னார்.
“அந்த ஆள் சிபிசிஜடியா இருந்தாலும் இருப்பார் சார். நோட்டம் பாக்க வந்திருப்பார்.
v
அதுவும் சாத்தியம் தானே. அப்படி நினைத்தவுடன் அவரை ஏறிட்டுப் பார்ப்பது அச்சம் தருவதாக மாறியது. அவர் பூங்காவில் நடப்பவர்களைப் பற்றிக் கவனம் கொள்ளவேயில்லை.
கடந்தகாலத்தின் படிகளில் இறங்கி என்றோ நடந்துமுடிந்துவிட்ட நிகழ்வுகளில் நீந்திக் கொண்டிருந்தார். உலகிற்குத் தேவையற்றுப் போன செய்திகள் சிலருக்குத் தேவையான செய்தியாக இருக்கின்றன. சிலர் ஒரு காலை கடந்தகாலத்திலும் மறுகாலை எதிர்காலத்திலும் வைத்து நடக்கிறார்கள். அவர்களுக்கு நிகழ்காலம் பொருட்டேயில்லை.
அவர் தன்னோடு மர்மத்தைக் கொண்டு வருகிறார். மர்மத்தை விரித்துப் படிக்கிறார். அவர் யார், எங்கே வீடிருக்கிறது, எதற்காக இவற்றைப் படிக்கிறார் என்ற விடை தெரிந்துவிட்டால் மர்மம் கலைந்துவிடும். அதை நான் விரும்பவில்லை
எங்கேயிருந்து எப்போது வந்தது என அறியாத குயிலின் குரல் இனிமையை நாம் ரசிப்பதில்லையா. அப்படி இந்த மனிதரும் மர்மத்துடன் இருக்கட்டும் என விட்டுவிட்டேன்.
அவர் ஒவ்வொரு நாளும் பழைய நியூஸ் பேப்பர் படிப்பது மாறவில்லை. ஆனால் ஏன் புதிய புதிய பழைய நியூஸ் பேப்பரைப் படிக்கிறார் என்பது தான் புரியவேயில்லை.