அலெக்சாண்டர் கோர்டா தயாரித்து மைக்கேல் பாவல் இயக்கிய The Thief of Bagdad திரைப்படத்தைப் பலமுறை பார்த்திருக்கிறேன். 1940ல் வெளியான இப்படம் இன்றும் சுவாரஸ்யம் மாறாமல் அப்படியே உள்ளது. படத்தில் அபு என்ற கதாபாத்திரமாக எலிஃபண்ட் பாய் திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட்டில் புகழ்பெற்ற இந்திய நடிகர் சாபு நடித்திருக்கிறார்.
1001 அராபிய இரவுக்கதையில் வரும் நிகழ்வுகளை அழகாகக் கோர்த்துத் திரைக்கதையாக்கியிருக்கிறார்கள். அரங்க அமைப்பும் படமாக்கப்பட்ட விதமும் இசையும் அற்புதமானது..
தமிழில் வெளிவந்த பாக்தாத் திருடன். அலிபாபாவும் நாற்பது திருடர்களும், அலாவுதீனும் அற்புத விளக்கும் போன்ற படங்களும் அராபிய கதையிலிருந்து உருவானதே.
இப்படத்தின் கதை பஸ்ராவில் துவங்குகிறது. அஹ்மத் என்ற கண் தெரியாத பிச்சைக்காரன் தனது நாயுடன் வீதியில் அமர்ந்து யாசகம் கேட்கிறான். வணிகர்கள் பிச்சை போடும் நாணயங்களில் எது கள்ள நாணயம் என அவனது நாய் கண்டறிந்து சொல்லிவிடுகிறது.
சந்தையிலிருப்பவர்கள் இந்த அதியசத்தை வியப்போடு காணுகிறார்கள். ஒரு காலத்தில் அந்த நாய் வரிவசூல் செய்யும் அதிகாரியாக இருந்திருக்கக் கூடும் என ஒருவன் கேலி செய்கிறான்
ஒரு வணிகன் இதனை நம்ப முடியாமல் பரிசோதனை செய்தும் பார்க்கிறான். நாய் கள்ள நாணயத்தைக் கண்டுபிடித்துவிடுகிறது.
கண்தெரியாத இந்தப் பிச்சைகாரன் ஒரு காலத்தில் பாக்தாத்தின் இளவரசனாக இருந்தவன். மந்திரவாதி ஜாஃபரால் ஏமாற்றப்பட்டுப் பார்வையை இழந்திருக்கிறான் அது போலவே திருடன் அபு தான் இப்போது நாயாக மாறியிருக்கிறான் என்று கதை அவர்களின் கடந்தகாலத்தை விவரிக்கிறது.
இது போன்று சாபத்தால் உருவமாறியவர்களைப் பற்றிய கதையைக் கேட்டமாத்திரம் மனது பள்ளி வயதிற்குப் போய்விடுகிறது. அந்த வயதில் கேட்ட, படித்த கதைகள் மறப்பதேயில்லை.
ஒரு கதைக்குச் சுவையூட்டும் உப்பு என்பது இது போன்ற மாய நிகழ்வுகளே. அவை அளவாகப் பயன்படுத்தப்படும் போது கதையின் சுவை அதிகரித்துவிடுகிறது.
இந்தப் படத்திலும் நாயாக உள்ள திருடனும். பார்வையிழந்த பிச்சைக்காரனும் மந்திரவாதியால் உருமாற்றப்படுகிறார்கள் மந்திவாதி சர்வ சக்தி படைத்தவன். பேராசை கொண்டவன். மந்திரவாதி ஜாஃபரின் வருகை என்பது லண்டன் நகருக்குள் டிராகுலா வருவதைப் போலிருக்கிறது.
அதிசயங்களால் பின்னப்பட்ட கம்பளம் போன்றதே படத்தின் திரைக்கதை.
இந்தக் கதையில் வரும் அடுத்த அதிசயம் உறங்கிக் கொண்டேயிருக்கும் இளவரசி. அவளை எவராலும் உறக்கத்திலிருந்து எழுப்ப முடியவில்லை. காரணம் மந்திரவாதி அவளை ஆழ்துயிலில் வைத்திருக்கிறான். அந்த இளவரசியின் துயிலைக் கலைத்து அவளை எழுப்புவதற்காகச் செல்கிறான் அஹ்மத். அவள் கனவிற்கும் நனவிற்கும் இடையில் தடுமாறுகிறாள். படத்தின் மிக அழகான காட்சியது. எது நிஜம் என அவளால் அறிய முடியவில்லை. காதலே நிஜத்தை உணர வைக்கிறது.
மூன்றாவது அதிசயம் பறக்கும் இயந்திரக் குதிரை. மந்திரவாதி ஜாஃபர் பஸ்ராவின் சுல்தானுக்குப் பரிசாகப் பறக்கும் இயந்திரக் குதிரை ஒன்றைத் தருகிறான். அந்தக் குதிரையின் மீதேறி நகர் முழுவதும் சுற்றியலைகிறார் சுல்தான். இன்றுள்ள ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுக்கு நிகராக அன்றே இந்த மாயக்காட்சியை உருவாக்கியிருக்கிறார்கள். பறக்கும் குதிரைக்கு ஈடாக அவரது மகளைத் திருமணம் செய்து தர வேண்டும் எனக் கேட்கிறான் ஜாஃபர். சுல்தானும் சம்மதிக்கிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதை இப்பகுதி விவரிக்கிறது.
நான்காவது அதிசயம் சுல்தானைக் கொல்வதற்காக உருவாக்கபட்ட இயந்திர நடனப் பெண். இந்தியக் கடவுள் போல உருவாக்கபட்டிருக்கிறாள்.. அறிவியல்புனைகதைகளில் வருவது போன்ற கதாபாத்திரமது.
ஐந்தாவது அதிசயம் அபு வும் பூதமும் சந்திக்கும் நிகழ்வுகள். அபு பயணம் செய்த கப்பல் புயலில் சிக்கிக் கொண்டு உடைந்து போகிறது. வெறிச்சோடிய கடற்கரையில் அபு தனியாக எழுகிறான். அங்கே பாட்டிலில் அடைக்கபட்ட பூதம் ஒன்றை விடுவிக்கிறான். அந்தப் பூதம் அவனைக் கொல்ல முயலுகிறது. அதனிடமிருந்து எப்படித் தப்புகிறான் என்பதும், அதன் ஊடாக விவரிக்கபடும் சர்வ சக்திகள் கொண்ட மாயக்கண்ணும். அதற்காக மந்திரவாதியும். அஹ்மத்தும் மோதிக் கொள்ளும் நிகழ்வுகளும் விவரிக்கபடுகின்றன. ராட்சத சிலந்திக்கு எதிராகப் போராடும் அபுவின் காட்சி சிலிர்க்க வைக்கிறது
கடைசி அதிசயம் அபு பறக்கும் கம்பளத்தில் பறந்தபடி சாகசப்பயணம் துவங்குவது. அபு யார் என்பதை ஞானிகள் விவரிக்கும் காட்சியும் சிறப்பானது.
The Thief of Bagdad அராபிய இரவுக்கதையில் வரும் நிகழ்வுகளை அப்படியே படமாக்கவில்லை. மாறாகத் தேவையான கதைச்சரடுகளை, கதாபாத்திரங்களைச் தேர்வு செய்து திரைக்கு ஏற்ப மாற்றிப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த மாற்றங்களை மைக்கேல் பாவல் சரியாகக் கையாண்டிருக்கிறார். அதுவே படத்தைக் காலம் தாண்டிய கலைப்படைப்பாக்கியிருக்கிறது.
அதே நேரம் மறைமுகமாகப் படத்தினுள் வெளிப்படும் காலனியப் பார்வையினையும் நாம் கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது.
இதே கதைச்சரடுகள் தமிழில் வேறுவேறு படங்களில் தனித்தனியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. குலேபகாவலி படத்தில் பார்வையின்மையைக் குணப்படுத்தும் குலேப் என்ற மாயமலரைத் தேடிப் போகிறார்கள். இது போலப் பறக்கும் கம்பளத்தின் கதையும் அடிமைபூதம் கதையும் தமிழில் பயன்படுத்தபட்டிருக்கின்றன.
அராபிய இரவுகள் கதையைப் படிக்கும் போது நாம் அடையும் வியப்பை. சுவாரஸ்யத்தை அப்படியே படமும் தருகிறது. இதே அராபிய இரவுகள் கதையினை மையமாகக் கொண்டு வேறு சில படங்கள் ஆங்கிலத்தில் வந்துள்ளன. ஆனால் இந்தப் படத்திற்கு இணையாக இல்லை.
1930 களின் பிற்பகுதியில் பிரிட்டனில் டெக்னிக் கலர் அறிமுகமானது. அதை இப்படம் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது, குறிப்பாக அரண்மனைக் காட்சிகள் மற்றும் பஸ்ரா துறைமுகத்திற்கு மந்திரவாதி ஜாஃபர் வந்து சேரும் காட்சிகள். அதில் துறைமுகத்தின் பல்வேறு இயக்கங்கள் மற்றும் கப்பலில் நடைபெறும் விஷயங்களைப் பேரழகுடன் படமாக்கபட்டிருக்கின்றன. பஸ்ராவில் நாம் காணும் மனிதர்களின் ஆடைகள், தலைப்பாகைகள், கடலில் காணும் விதவிதமான பாய்மரங்கள் மற்றும் வண்ணக் கொடிகள் சிறப்பாக உருவாக்கபட்டுள்ளன, இந்தத் திரைப்படம் 1940 இல் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸிற்கான ஆஸ்கார் விருதை வென்றுள்ளது.
இந்தப்படத்தில் கிடைத்த அனுபவத்திலிருந்து மைக்கேல் பாவல் தனக்கான தனித்துவ திரைமொழியை உருவாக்கிக் கொண்டார். அவரது Black Narcissus திரைப்படத்தில் இமயமலைச்சாரலில் உள்ள மடாலயத்தையும் மன்னரின் மாளிகை போன்ற அரங்க அமைப்பினையும் உருவாக்கியதில் அது சிறப்பாக வெளிப்பட்டது. Black Narcissus உலகின் நூறு சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
புகழ்பெற்ற இயக்குனர்களான பிரான்சிஸ் ஃபோர்டு கோப்போலா மற்றும் மார்ட்டின் ஸ்கோர்செஸி The Thief of Bagdad படத்தை பிரிட்டிஷ் சினிமாவின் காவியம் என்று கொண்டாடுகிறார்கள்.