புதிய குறுங்கதை

வீட்டில் அப்பாவும் அம்மாவும் சண்டை போட்டுக் கொள்ளும் நாளில் அப்பா கட்டாயம் சினிமாவிற்குப் போவார். அது சில நேரம் இரவு செகண்ட் ஷோவாகக் கூட இருக்கக் கூடும். அப்படிச் சினிமாவிற்குப் போகும் போதெல்லாம் அவனையும் அழைத்துக் கொண்டு போவார். ஆகவே அப்பா அம்மாவின் சண்டை சிறுவனான அவனை மகிழ்ச்சிப்படுத்தவே செய்தது.
“என்னை இப்படி விட்டுட்டு நீங்க சினிமாவுக்குப் போனா நான் செத்துப் போயிருவேன் பாத்துக்கோங்க“ என்று அம்மா கத்துவாள்.
அப்பா அதைக் காது கொடுத்துக் கேட்காதவர் போல தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்புவார். அவன் சைக்கிள் கேரியரில் ஏறிக் கொள்வான். அவர்கள் ஊரில் நான்கு திரையரங்குகள் இருந்தன. என்ன படம் ஓடுகிறது என்று கூட அப்பா பார்க்க மாட்டார். அவசரமாக டிக்கெட் எடுத்து உள்ளே நுழைவார். அப்பா சினிமாவிற்குள் எதையோ பார்க்கிறார். அவர் திரையைப் பார்த்து தனக்குத்தானே எதையோ பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டிருக்கிறான். ஒருவர் மீதான கோபத்தைச் சினிமா கரைத்துவிடுமா என்ன. அப்பாவிற்குச் சினிமா என்பது ஒரு அவசரக்குளியல்.
ஒரு போதும் தான் பிரவேசிக்க முடியாத சினிமாவில் வரும் அழகான வீடுகளை அவன் நேசித்தான். குறிப்பாகப் பெரிய உணவு மேஜையை, பளிங்கு குளியல் தொட்டியை ஆசையோடு பார்த்துக் கொண்டிருப்பான். சினிமா பார்க்கும் போது அவனுக்குப் பயங்கரமான பசி ஏற்படும். அது எதனால் என்று புரியாது.
தியேட்டரில் இடைவேளை விட்டவுடன் அப்பா வீட்டிற்குப் போகலாம் என்று அவனை அழைத்துக் கொண்டு கிளம்பிவிடுவார். ஏன் என்று அவன் கேட்டதேயில்லை. இதனால் அவன் நிறையப் படங்களைப் பாதி தான் பார்த்திருக்கிறான். அந்த வருத்தம் ஆழமானது. ஒவ்வொரு வயதும் அதற்குரிய முட்களுடன் தானிருக்கிறது.
அவர்கள் சினிமாவிற்குப் போயிருந்த நேரத்தில், கோபத்தில் அழுத அம்மா வீட்டில் எப்படியிருந்தாள், அவளது கோபம் எப்படி வடிந்தது என்பது அவன் பார்க்காத பாதிச் சினிமாவை விடவும் புதிரானது. வருத்தமளிக்கக் கூடியது.
அதைப் புரிந்து கொண்டபோது அவன் அப்பாவைப் பிடிக்காத இளைஞனாகயிருந்தான்.
**