பாராட்டுகள்

பள்ளி பொதுத் தேர்வுகளில் மதிப்பெண் அடிப்படையிலான ரேங்க் முறை கைவிடப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

கல்வித்துறை வரலாற்றில் இது ஒரு மைல்கல். மிக அவசியமான மாற்றம்.

முதல் மதிப்பெண் பெறவைப்பதற்காகக் கோழிப்பண்ணை போலத் தனியார் பள்ளிகள் பெருகிவந்த சூழலில் இந்த மாற்றம் வரவேற்கவேண்டியது

மதிப்பெண்ணைக் காட்டி மாணவர்களைக் குற்றவுணர்வு கொள்ளச் செய்த முறை ஒழிக்கப்பட்டது சிறப்பானது.

இதற்கு முக்கியக் காரணமாக இருந்த பள்ளிக் கல்வித்துறை செயலர் உதயசந்திரன் ஐஏஎஸ் மிகுந்த பாராட்டிற்குரியவர்

இவர் கல்வித்துறை செயலராகப் பதவியேற்ற பின்பு கல்வித்துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் வியப்பூட்டக்கூடியவை.
முதன்முறையாகப் பாடநூல் குறித்த விவாதங்களில் எழுத்தாளர்கள். பல்துறை ஆளுமைகள் அழைக்கபடுகிறார்கள்.
மாநில அளவில் ஆசிரியர் அலுவலர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அதில் கலந்து கொண்டு உரையாற்ற எழுத்தாளர்கள், கலைஞர்கள், சமூக நல ஆர்வலர்கள் எனப் பலரும் அழைக்கபட்டார்கள்.
தமிழ் ஆசிரியர்களுக்கான சிறப்பு முகாமிற்குத்தமிழறிஞர்கள் , ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் அழைக்கபட்டிருக்கிறார்கள்.
தமிழக அரசின் பாடநூல் நிறுவனம் மீண்டும் உயிரூட்டப்பட்டுக் கல்வி, வரலாறு, பண்பாடு, சமூகம் சார்ந்த பல நூறு முக்கிய நூல்களை வெளியிடவுள்ளது. இத்துடன் பள்ளிகல்வித்துறையே இரண்டு மாத இதழ்களை உருவாக்கி வெளியிடவும் திட்டமிட்டு வருகிறது.
இன்னொரு பக்கம் தமிழகம் முழுவதும் நூலகங்கள் சிறப்பாகச் செயல்படத்துவங்கியிருக்கின்றன. உலகப்புத்தகத் தினத்தன்று எல்லா நூலகங்களிலும் எழுத்தாளர்கள் அழைக்கபட்டுச் சிறப்பிக்கபட்டார்கள். நான் சென்னை கன்னிமாரா நூலகத்தில் உரை நிகழ்த்தினேன். கண்டுகொள்ளப்படாமல் சீரழிந்து போன நிலையிருந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தைச் சீரமைத்து அங்கே தொடர்ந்து இலக்கியக்கூட்டங்கள் ஏற்பாடு செய்து வருவதுடன், பல்லாயிரம் புதிய நூல்கள் வாங்கவும், வாசகர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து கொடுத்திருப்பது மிகுந்த பாராட்டிற்குரியது. மின்புத்தகங்களை உருவாக்குவதல், அரிய தமிழ் நூல்களை ஆவணப்படுத்துதல், பல்கலைகழக வெளியீடுகள் அனைத்தும் பொதுவுரிமைக்குள் கொண்டு வருவது என அடுத்தடுத்த செய்லபாடுகளை நோக்கி முன்னேறி வருவது மிகுந்த சந்தோஷம் அளிக்கிறது.
தமிழகத்திலுள்ள அத்தனை நூலகங்களுக்கும் முக்கியமான ஆங்கில மாத, வார இதழ்களை வாங்குவதற்குச் சிறப்பு நிதி ஒதுக்கியிருப்பதோடு, கன்னிமாரா நூலக நேரத்தை அதிகப்படுத்தியதோடு, சிறப்புக் கண்காட்சிகளை ஏற்பாடு செய்து பொதுமக்கள் பயன்படும் விதமாகச் செய்தது வாழ்த்துக்குரியது.
அடுத்தக் கட்டமாகப் பாடப்புத்தகங்களை மாற்றி எழுதுவதற்காக அமைக்கபட்ட குழுவில் பல்துறை ஆளுமைகள் இடம் பெற்றிருக்கிறார்கள். கல்வித்துறையில் நடந்து வரும் இந்த மாற்றங்கள் புதிய நம்பிக்கையை அளிக்கின்றன.
இச் செயல்களுக்கு மூலகாரணமாக உள்ள உதயசந்திரன் ஐஏஎஸ் அவர்களுக்கு மனம் நிரம்பிய பாராட்டுகள்.
இந்த மாற்றங்களைப் புரிந்து கொண்டு சிறப்பாக செயல்படுத்தும்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு வாழ்த்துகள்
•••
0Shares
0