த டென் கமாண்ட்மெண்ட்ஸ், பென்-ஹர் போன்ற ஹாலிவுட்டின் பிரம்மாண்டமான படங்கள் ஏற்படுத்திய பாதிப்பில் உருவாக்கபட்ட திரைப்படம் பாரோ. போலந்து நாட்டில் தயாரிக்கபட்ட இப்படம் 1966ல் வெளியானது.

மூன்று ஆண்டுகள் பெரும்பொருட்செலவில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். படத்தில் வரும் பாலைவனக் காட்சிகளுக்கு மட்டும் ஆயிரம் பேருக்கும் மேலான துணை நடிகர்கள் பயன்படுத்தபட்டிருக்கிறார்கள
இப்படத்திற்காக கலை இயக்குநர் 3000 விக்குள் மற்றும் 3000 ஜோடி காலணிகள், கிட்டத்தட்ட 9000 ஆயுதங்கள் மற்றும் 600 பாரம்பரிய ஆடைகளை உருவாக்கியிருக்கிறார். அது போலவே 4000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போன்ற ஒரு படகை மறுஉருவாக்கம் செய்திருக்கிறார்கள். கூடுதலாக ஒரு செயற்கை தீவினையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
ஹாலிவுட் படங்கள் போல அரங்கத்திற்குள்ளாகவே படமாக்கப்படாமல் உண்மையான நிலவெளியில் இப்படத்தை உருவாக்கியிருப்பது பாராட்டிற்குரியது.
ஹாலிவுட் பிரம்மாண்டங்களைத் தாண்டிய காட்சியப்படுத்துதல், மற்றும் கேமிரா, நடிப்புப் படத்தைத் தனித்துவமாக்குகிறது. ஜெர்சி கவாலெரோவிச் இதனை இயக்கியுள்ளார். போல்ஸ்லாவ் ப்ரூஸின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. போலந்து சினிமாவில் இப்படம் அடைந்த வெற்றி மற்றும் வசூல் செய்யத் தொகை இந்நாள் வரை முறியடிக்கபடவில்லை.

படத்தின் துவக்க காட்சியின் கண்முன்னே விரியும் பாலைநிலமும் அதில் நடைபெறும் போர்காட்சியும் வரலாற்றில் இப்படிதான் நடந்திருக்கும் என நம்மை நம்ப வைக்கிறது.
எகிப்தின் மன்னரான 13வது ராம்சேயின் கதையைச் சொல்லும் இப்படம் அக் காலத்தில் மதகுருக்கள் எவ்வளவு செல்வாக்குடன் விளங்கினார்கள். மதகுருவை எதிர்த்து மன்னரால் கூட எதுவும் செய்யமுடியாத நிலை எப்படி உருவானது என்பதை விவரிக்கிறது
பண்டைய எகிப்திய ஆட்சியாளர்களான, பாரோக்கள் மன்னராக மட்டுமின்றி மதத் தலைவராகவும் அறியப்பட்டார்கள். கடவுளின் பிரதிநிதியாகவே மக்கள் அவரைக் கருதினார்கள். அவர் எகிப்திய தெய்வங்களுக்குச் செய்ய வேண்டிய சடங்குகளை முன் நின்று நடத்துவது வழக்கம். அவரால் கலந்து கொள்ள முடியாத போது அவரது பிரதிநிதியாக மதகுரு ஒருவரை நியமிப்பது வழக்கம்.. மதகுருக்களுக்கெனத் தனிச் சபையிருந்தது. அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் தலையிடுவார்கள். சுகபோக வாழ்க்கையை மேற்கொண்டார்கள்.
பாலைவனத்தில் சண்டையிடச் சென்ற இளவரசன் ராம்சே தற்செயலாகச் சாரா என்ற அழகான யூதப் பெண்ணைச் சந்திக்கிறான். அவளைக் காதலிக்கிறான். திருமணம் செய்து கொள்கிறான். அதை மன்னர் ஏற்கவில்லை.
இளவரசன் ராம்சே மதகுரு ஹெர்ஹோரின் அதிகாரத்தை எதிர்க்கிறான். தான் மன்னராகப் பதவியேற்றால் மதகுருவின் அதிகாரத்தைப் பறித்துவிடுவேன் என்று வெளிப்படையாக அறிவிக்கிறான். அத்தோடு தனது தந்தை ஹெர்ஹோரின் பேச்சைக் கேட்டு நடப்பதைக் கண்டிக்கிறான்.

ராம்சேயின் காதல் மற்றும் திருமண வாழ்க்கையை விவரிக்கும் படம் அதற்குள் மதம் எப்படிக் குறுக்கிடுகிறது. சதி செய்கிறது என்பதை உண்மையாக விவரித்துள்ளது. குறிப்பாக யூத மனைவிக்குப் பிறந்த குழந்தையை ஏற்க முடியாது என ராம்சேயின் அன்னை வாதிடும் காட்சி மற்றும் ராம்சேயை மயக்க மதகுருக்கள் செய்யும் ஏற்பாடு. வழிபாடு செய்யச் சென்ற ராம்சேயின் முன்னால் தோன்றி மறையும் காமாவின் பிம்பம் எனத் தொடரும் காட்சிகள் சிறப்பாக உள்ளன
தேசத்தின் அனைத்து நிலங்களும் மன்னருக்கே சொந்தமாக இருந்தன. அவர் சட்டங்களை இயற்றினார், வரியை வசூலித்தார் மற்றும் படைத் தளபதியாகப் பணியாற்றினார். அத்தோடு கடவுளின் பிரதிநிதியாகவும் செயல்பட்டார். நைல் நதி விவசாயம் மற்றும் வணிகத்திற்குப் பேருதவியாக இருந்தது. மன்னர்களுக்கு இணையாக வணிகர்கள் விளங்கினார்கள்.
தந்தையின் இறப்பிற்குப் பின்பு மன்னராகப் பதவியேற்கும் ராம்சேயை செயல்பட விடாமல் மதகுருக்கள் தடுக்கிறார்கள். வன்முறையை ஏவிவிடுகிறார்கள். தங்கள் வசமுள்ள பொக்கிஷத்தை தரமறுக்கிறார்கள். இளம் பாரோ ராம்சே எகிப்தில் சீர்திருத்தம் செய்ய நினைக்கிறான். ஆனால் அதை மதகுருக்கள் விரும்பவில்லை. அவர்கள் சதி செய்து அவனை அகற்ற நினைக்கிறார்கள்
பாரோவின் கருவூலம் காலியாக இருக்கும் நேரத்தில் மதகுருக்கள் ரகசிய இடம் ஒன்றில் பெரும் பொக்கிஷங்களை வைத்திருப்பதை ராம்சே அறிந்து கொள்கிறான். அதை மீட்டு மக்களுக்குப் பயன்படுத்த நினைக்கிறான்.ஆனால் கடவுளின் சொத்தை விட்டுதர முடியாது என மதகுருக்கள் மறுக்கிறார்கள்.

இளவரசன் ராம்சே ஃபீனீசிய வணிகர் ஒருவரிடம் கடன் வாங்கும் காட்சி படத்தில் இடம்பெற்றுள்ளது. அந்தக் கால வணிகர்கள் பெற்றிருந்த செல்வாக்கு மற்றும் அவர்கள் மன்னரிடமே வட்டி வசூல் செய்யும் விதம் பற்றிப் படம் உண்மையாகச் சித்தரித்துள்ளது
படத்தில் பயன்படுத்தபட்டுள்ள உடைகள். மற்றும் கலைப்பொருட்கள் யாவும் வரலாற்றுபூர்வமாக ஆராயப்பட்டுச் சரியாகப் பயன்படுத்தபட்டிருக்கின்றன. குறிப்பாக மன்னரின் அரண்மனை, அவரது உடைகள். ராஜசபை. மதகுருக்களின் உடை மற்றும் கோவில்கள் துல்லியமாகச் சித்தரிக்கபட்டிருக்கின்றன. கிசா பிரமிடுகளின் பின்னணியில் சில காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்கள்.
நைல் நதியில் ராம்சே தனது மனைவி சாராவுடன் படகில் செல்லும் காட்சி மிக அழகானது. எகிப்திய ஒவியம் ஒன்று உயிர்பெற்றது போல அந்தக்காட்சி உருவாக்கபட்டிருக்கிறது. வேட்டையின் நடுவில் ராம்சே தனது அன்னையைச் சந்திக்கிறான். மகாராணி வரும் படகு. அதில் நிற்கும் அவளது தோரணை . அவளை எதிர்கொள்ள முடியாமல் சாரா அடையும் குற்றவுணர்வு மிக நேர்த்தியாகப் படமாக்கபட்டுள்ளது. அது போலவே காமா மீதான காதல் மற்றும் அவளது துரோகமும் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது.
புதிதாகக் கட்டப்பட்ட கால்வாயை போர் வீரர்கள் அழிக்கும் போது அதை உருவாக்கியவன் எழுப்பும் ஒலம் மறக்க முடியாதது. அவனால் அதிகாரத்திற்கு எதிராக எதுவும் செய்ய முடியவில்லை. ஆகவே தன்னைப் பலி கொடுத்துக் கொள்கிறான். அந்தக் காட்சி ராம்சேயின் மனதை வேதனைப்படுத்துகிறது.

கிரகணம் ஏற்படுவதை அறிந்த மதகுரு அதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் காட்சி முக்கியமானது. கதாபாத்திரங்களின் கூடவே செல்லும் கேமிரா மிக அழகான கோணத்தில் எதிர்பாராத நகர்வுகளுடன் காட்சியைப் பதிவு செய்துள்ளது.
படத்தில் பலரும் அந்தக் கால வழக்கப்படி இடுப்புத் துணிகளை மட்டுமே அணிந்திருக்கிறார்கள், மதகுருக்கள் மொட்டையடித்த தலையுடன் காணப்படுகிறார்கள். சாண வண்டுகள் மண் உருண்டையை உருட்டிச் செல்லும் துவக்க காட்சி உருவகம் போலக் காட்சியளிக்கிறது.
எகிப்திய அதிகாரப் படிநிலையினையும் அதற்குள் ஏற்படும் மோதல்களையும் படம் மிக நுட்பமாகச் சித்தரித்துள்ளது.

படம் பார்த்துக் கொண்டிருந்த போது நினைவில் மந்திரிகுமாரி திரைப்படம் வந்து போனது. அதிலும் மதகுருவிற்கும் மன்னருக்குமான அதிகார போட்டியே சித்தரிக்கபடுகிறது. மதகுருவாக நடித்துள்ள நம்பியார் பாரோவில் வரும் வில்லன் போலவே மொட்டையடித்த தலையுடன் சித்தரிக்கபட்டுள்ளார். ஆனால் மந்திரிகுமாரி பாரோவிற்கு முன்பாக உருவாக்கபட்ட திரைப்படம். 1950ல் வெளியானது.
ஹாலிவுட் படங்களில் இல்லாத நுண் சித்தரிப்பும் வரலாற்று உண்மையும் போலந்தின் நிகரற்ற படங்களில் ஒன்றாக இதனை வைத்திருக்கிறது.