பால்சாக்கின் சிற்பம்

நவீன சிற்பங்களின் பிதாமகனாகக் கொண்டாடப்படும் சிற்பி ரோடின் பற்றிய Rodin (2017) திரைப்படம் பார்த்தேன். ஒவியர்கள், சிற்பிகள், எழுத்தாளர்கள் எனப் பலரது வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் பிரெஞ்சில் வெளியாகியுள்ளன.

கலையாளுமைகளின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க எடுப்பது தனிப்பிரிவாகவே உள்ளது. உண்மையில் அதுவொரு சவால். ஒரு கலைஞனின் முழுவாழ்க்கையைத் திரையில் காட்டிவிட முடியாது. ஆகவே அவரது வாழ்வின் பிரதான சம்பவம் ஒன்றை மையமாகக் கொண்டே திரைப்படம் உருவாக்கபடுகிறது.

ரோடினுக்கும் அவரது மாணவியும் காதலியுமாக இருந்த கேமிலோ கிளெடலிற்குமான உறவும் காதலையும் ஒரு கிளையாகவும், பால்சாக் சிற்பத்தைச் செய்வதற்காக ரோடின் மேற்கொண்ட முயற்சிகள் பற்றியும் ஏழு ஆண்டுகாலம் அதற்காகச் செலவிட்ட போதும் அச்சிற்பம் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது பற்றியுமே இப்படம் பேசுகிறது.

ரோடின் என்ற மகாசிற்பியின் ஆளுமை படத்தில் சிறப்பாக வெளிப்படுத்த பட்டுள்ளது. குறிப்பாக அவர் தனது கலைத்திறனின் உச்சத்தை அடைவதற்காக மேற்கொள்ளும் எத்தனிப்புகள். அவரது காலகட்டத்தைச் சேர்ந்த ஒவியர்கள். எழுத்தாளர்களுடன் அவருக்கிருந்த நட்பு, காதலில் படும் துயரம் ஆகியவற்றைப் படம் அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது.

ஒரு காட்சியில் ரோடின் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது ஆங்காங்கே நின்று மரங்களின் முண்டுகளை, மேற்பட்டையை வியப்போடு பார்த்து எவ்வளவு நேர்த்தியாக இயற்கை உருவாக்குகிறது எனச் சொல்கிறார். நத்தை கடந்து போன தடத்தைக் கூர்ந்து நோக்கி ஆச்சரியப்படுகிறார். மகத்தான கலைஞர்கள் இயற்கையை தான் தனது போட்டியாளராகக் கருதுகிறார்கள். இயற்கையின் துல்லியத்திற்குத் தாங்கள் ஒருபோதும் இணையாக எந்தப் படைப்பையும் உருவாக்கிமுடியாது என நம்புகிறார்கள். அதே நேரம் இயற்கையோடு நேரடியாகப் போட்டியிடுகிறார்கள்

ஹென்றி மூர் என்ற சிற்பியின் வரலாற்றை வாசிக்கும் போது அவர் இறந்த விலங்குகளின் எலும்புகளைச் சேகரித்து வந்து, அந்த எலும்புமூட்டுகளின் அழகை, கச்சிதமான வடிவநேர்த்தியை நேசித்து அதிலிருந்தே தனது சிற்பங்களை உருவாக்கினார் என்று அறிந்திருக்கிறேன். ரோடினும் அப்படியே தனது படைப்பின் ஆதாரங்களைத் தேடுகிறார். கண்டறிகிறார்.

நிர்வாணம் என்பது கலைஞர்களுக்கு உடலை அறிவதற்கான திறவுகோல். மருத்துவர்கள் உடலை ஆராய்வது போலக் கலைஞர்கள் உடலை ஆராதிக்கிறார்கள். ஒளியில் உடல் கொள்ளும் மாற்றங்களையும் பாதரசம் போல உடல் மின்னும் தருணங்களையும் அடையாளப்படுத்துகிறார்கள். குறிப்பாகச் சிற்பிகள் உடலின் நேர்த்தியான அமைப்பை, ஒழுங்கை, வனப்பை ஆராதிக்கிறார்கள்.

மனித உடல் அற்புதமானதொரு சிற்பம் என்றே ரோடின் கூறுகிறார். தேவாலயத்தில் காணப்படும் சிற்பங்கள் சிற்பிகளின் கனவுகளின் வெளிப்பாடு. குறிப்பாக விலங்குகளையும் தேவலோக காட்சிகளையும் அவர்கள் உருவாக்கியுள்ள விதம் நிகரற்றது. கல்லின் இசையை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். சிற்பம் என்பது காலத்தின் உறைந்த வடிவம். சிற்பத்தின் வழியே அவர்கள் உடலை நிரந்தரப்படுத்துகிறார்கள். நித்யத்தன்மை பெற வைக்கிறார்கள்.

ரோடின் போன்ற மகா கலைஞர்களின் கலைத்திறனே கலையின் உச்சபட்ச சாத்தியங்களை உலகிற்கு அடையாளம் காட்டுகிறது.

கேமிலோவினைத் தனது ஆதர்ச சீடராக மட்டுமின்றிக் காதலியாகவும் ரோடின் தீவிரமாக நேசித்தார். அவள் மீதான மூர்க்கமான காதல் முத்தங்களால் நிரம்பியது. பணியிடத்தில் இருவரும் மாறிமாறி முத்தமிட்டுக் கொள்கிறார்கள். கட்டியணைத்து உறவு கொள்கிறார்கள். அவளது பிரவு அவரை வேதனைப்படுத்துகிறது. கலையின் ஆதாரம் உடல் இச்சை தானோ எனும்படியாக இக்காட்சிகள் உருவாக்கபட்டுள்ளன.

ரோடின் களிமண்ணைக் கையாளும் விதம் கடவுளே சிருஷ்டியில் ஈடுபட்டிருப்பது போன்றிருக்கிறது. வேறு எந்த உலோகத்தையும் விட, கல்லை விடத் தான் களிமண்ணை அதிகம் நேசிப்பதாகவும் அதுவே தன் சிற்பங்களின் ஆதாரம் என்றும் ரோடின் ஒரு காட்சியில் கூறுகிறார்.

தாந்தேயின் நரகத்தைக் காட்சிப்படுத்த முயலும் ரோடின் தாந்தேயின் கவிதைகளை ஆழ்ந்து வாசிக்கிறார். தாந்தே சொற்களைச் செதுக்கி சிற்பங்களை உருவாக்குகிறார் என வியக்கிறார். கவிதையிலிருந்து சிற்பத்தை உருவாக்க முயற்சிக்கும் போது அவர் எதிர்கொள்ளும் சிரமங்கள். போராட்டங்கள் அழகாகக் காட்சிபடுத்தபட்டுள்ளன.

தலையும் உடலும் ஒன்றாக இருந்த போதும் சிற்பிகளுக்குத் தலையே பிரதானம். தனியே தலையைச் செய்துவிட்டு பின்பு உடலை பார்த்துக் கொள்ளலாம் என்றே ரோடின் சொல்கிறார்.

குறிப்பாகப் பால்சாக்கின் தலையை உருவாக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகளின் போது அவர் மேற்கொள்ளும் எத்தனிப்புகளும் நேர்த்தியின் உச்சத்தைச் செய்துகாட்டும் அழகும் பிரமிக்க வைக்கின்றன.

ரோடினின் உதவியாளராக இருந்தவர்களில் பலரும் பெண்கள். தனது மாடல்களை அவர் மயக்கிவிடுகிறார். அவர்களுடன் பாலுறவு கொள்கிறார். அந்தப் பெண்களைச் சிற்பத்தில் தேவதைகளாக உருமாற்றிவிடுகிறார். ரோடினின் கரங்கள் செய்யும் மாயம் வியப்பூட்டுகிறது. அதிலும் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் அவர் மார்பிள் சிற்பம் ஒன்றை ஆராயும் காட்சியில் மார்பிள் எப்படி நிர்வாண உடலின் செழுமையை,, கச்சிதத்தை அப்படியே பிரதிபலிக்கிறது என்பதைக் கவித்துவமாக எடுத்துக்காட்டுகிறார்.

தனது சிற்பங்களுக்குப் பறக்கும் சக்தியிருக்கிறது. அவை குதிங்கால் நுனியில் நின்றபடியே உடலின் மொத்த எடையும் தாங்கிக் கொள்ளக்கூடியது. தேவைப்பட்டால் அந்த நுனியையும் தான் அகற்றிவிடுவேன் என்கிறார் ரோடின்.

தி மேன் வித் தி புரோக்கன் நோஸ்’ என்ற தன்னுடைய முதல் சிற்பத்தை 1864-ல் காட்சிக்கு வைத்தார் ரோடின். அது மிகுந்த வரவேற்பை பெற்றது. பாரீஸ் சென்று பணியாற்றிய அவர் ’தி ஏஜ் ஆஃ பிரான்ஸ்’ என்ற சிற்பத்தை உருவாக்கினார். ரோடின் உருவாக்கிய முத்தம்’ சிற்பத்தில் முத்தமிடும்போது ஆண்-பெண் உடல்களின் தசைகளில் ஏற்படும் அசைவுகள் கூடத் துல்லியமாக வடிக்கப்பட்டிருந்தன

‘கேட்ஸ் ஆஃப் ஹெல்’ சிற்பம், மொத்தம் 186 உருவங்களை உள்ளடக்கி இருந்தது. நரகம் பற்றிய சிற்பங்களுக்கான மாடல்களைத் தேர்வு செய்வதிலும் அதைப் பிளாஸ்டரில் செய்து பார்ப்பதிலுமே ரோடின் நாட்களைச் செலவிடுகிறார். படத்தில் அதுவே மையக்காட்சிகள். ஒரு கவிஞனின் வரிகளைக் காட்சிப்படுத்த அந்தக் கவிஞனின் ஆன்மாவைப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் ரோடின்.

பிரெஞ்சு இலக்கியத்தின் மகத்தான எழுத்தாளர் பால்சாக்கை கொண்டாடும் விதமாக அவரது உருவச்சிலை ஒன்றை செய்ய உத்தரவிடுகிறது பிரெஞ்சு அகாதமி.

இந்தப் பணியை அவருக்குச் சிபாரிசு செய்து பெற்று தந்தவர் எழுத்தாளர் எமிலி ஜோலா. ஒன்றரை ஆண்டுகளுக்குள் செய்து முடித்துத் தருவதாக ஒப்பந்தம் போடப்படுகிறது.

பால்சாக்கை வரவழைத்து அவரது முகத்தைச் சிற்பமாக வடிக்கிறார் ரோடின். பருத்த உடல் அமைப்பு கொண்டவரும் உணவில் மிகுந்த நாட்டம் கொண்டவரும் பாலுறவு பற்றி வெளிப்படையாக எழுதுபவருமான பால்சாக்கை சிற்பமாக வடிக்கும் போது அப்படியே அவரது உருவத்தைச் செய்துவிடக்கூடாது. கையில் பேனாவுடன் ஒரு எழுத்தாளரை சிற்பமாக்குவது அவருக்குச் செய்யப்படும் அவமானம் எனக்கருதுகிறார் ரோடின்.

ஆகவே அவர் பால்சாக்கை ஆழ்ந்து வாசிக்கத் துவங்குகிறார். பால்சாக் பிறந்த ஊருக்குப் போகிறார். அவரது நண்பர்களைச் சந்திக்கிறார். பால்சாக் வழக்கமாகச் செல்லும் மதுவிடுதிகள். இசைக்கூடங்கள் என அலைந்து திரிகிறார். ஏழு ஆண்டுகள் பால்சாக்கினுள் ஆழ்ந்து போய் முடிவில் கர்ப்பிணி பெண் ஒருத்தியை மாடலாக வைத்து பால்சாக்கின் உருவத்தை அவர் சிற்பமாகச் செய்கிறார்.

அதற்கு ரோடின் சொல்லும் காரணம் பால்சாக் வயிற்றில் இன்னமும் எழுதப்பட்டாத பல்லாயிரம் கதாபாத்திரங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே. பால்சாக்கின் நிர்வாணச் சிற்பத்தைப் பிளாஸ்டரில் செய்து முடிக்கிறார். தலை ஒருவிதமாகவும் உடல் ஒருவிதமாகவும் இருக்கிறது. இரண்டிற்கும் ஒருமையில்லை.

உடல் செல்லும் திசையும் தலை செல்லும் திசையும் ஒன்றில்லை என்பதற்காகவே அப்படி உருவாக்கியதாக ரோடின் சொல்கிறார். இந்தச் சிற்பத்தைப் பார்வையிட்ட அகாதமி அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. கூடவே பால்சாக்கை அவர் அவமானப்படுத்தி விட்டதாகக் கண்டிக்கிறது.

எழுத்தாளின் ஆன்மாவை தான் சிற்பமாகச் செய்திருக்கிறேன். உடலை அப்படியே நகல் எடுக்கத் தான் விரும்பவில்லை என்று ரோடின் மறுப்பு சொல்கிறார். அதை அகாதமி உறுப்பினர்கள் ஏற்க மறுக்கிறார்கள். இதனால் சர்ச்சை உருவாகிறது. இதில் ஒவியர் செசான் , எழுத்தாளர் எமிலி ஜோலா உள்ளிட்ட நண்பர்கள் ரோடினை ஆதரிக்கிறார்கள். ஆனால் பால்சாக் சிற்பத்தை அகாதமி நிராகரிக்கிறது.

ஒரு பக்கம் கெமிலேயுடன் ஏற்பட்ட விரிசல். மறுபக்கம் பால்சாக் பிரச்சனை எனச் சிக்கலில் மாட்டிய ரோடின் வேதனைப்படுகிறார். தனது கலையின் ஆற்றலை புரிந்து கொள்ள மறுக்கிறார்களே எனப் புலம்புகிறார்.

பால்சாக் சிற்பம் ரோடின் மறைவிற்குப் பிறகே காட்சிக்கு வைக்கபட்டது. அதன் வெண்கல உருவம் பின்பு நிதிதிரட்டி உருவாக்கபட்டது. தற்போது ஜப்பானின் திறந்த வெளிக்கூடத்தில் நிறுத்தப்பட்டுள்ள பால்சாக் சிற்பத்தைச் சிறார்கள் தொட்டு விளையாடுவதுடன் படம் நிறைவுபெறுகிறது. உண்மையில் ரோடின் பால்சாக்கை அவமானப்படுத்தினாரா அல்லது எழுத்தாளளின் ஆன்மாவை மட்டும் சிற்பம் பிரதிபலிக்கிறதா என்ற விவாதம் இன்றைக்கும் தொடர்கிறது

நிர்வாணமான பால்சாக் சிற்பத்தை மறைப்பதற்காக அவரது அங்கி ஒன்றை அந்தச் சிற்பத்திற்கு அணிய வைத்து பால்சாக்கின் தோற்றத்தை அப்படியே ரோடின் உருவாக்கியிருக்கிறார். பால்சாக் சிற்பத்தை இன்று நாம் காணும் போது நவீன சிற்பம் உடலை அப்படியே நகலெடுப்பதில்லை என்று புரிகிறது. மேலும் செவ்வியல் சிற்பங்களைப் போல உடலை முறுக்கேற்றி காட்டுவதை விட நெகிழ்வாகக் காட்சிப்படுத்தவே விரும்புகிறது என்பதையும் புரிந்து கொள்ளமுடிகிறது

படத்தில் ஒரு காட்சியில் தனது ஒவியங்களை அகாதமி உறுப்பினர்கள் புரிந்து கொள்ளாமல் தன்னை நிராகரிக்கிறார்கள் என்று ஒவியர் செசான் புலம்பும் போது ரோடின் அவருக்கு ஆறுதல் சொல்கிறார்.

நமக்கு மகிழ்ச்சி தரும் கலைப்படைப்பை உலகம் கண்டுகொள்ளாதது பற்றி வருத்தப்படாதே. தொடர்ந்து செயல்படு என்று ரோடின் ஆறுதல் கூறுகிறார். இதைக்கேட்ட செசான் அவர் கைகளைப் பற்றிக் கொண்டு மண்டியிட்டு நன்றி தெரிவிக்கிறார். இதுவே தான் ரோடினுக்குப் பின்னாளில் நடந்தது. அவரும் நிராகரிக்கபடுகிறார். அவரது கலைப்படைப்பும் புரிந்து கொள்ளப்படாமலே போகிறது

படம் ரோடினை பற்றியதாக இருந்தாலும் பெண்சிற்பி கெமிலோவின் படைப்பாற்றல், அவளது மேதமையைத் துல்லியமாக எடுத்துக்காட்டுகிறது. கெமிலோ பற்றி Bruno Nuytten இயக்கத்தில் Camille Claudel என்ற படம் முன்னதாகவே வெளிவந்திருக்கிறது. அப்படம் இதைவிடச்சிறப்பானது

ரோடினிடம் உதவியாளராகச் சில ஆண்டுகள் பணியாற்றினார் கவிஞர் ரில்கே. ரோடினின் கலைஆளுமை குறித்து விரிவான நூல் ஒன்றையும் எழுதியிருக்கிறார். ரில்கேயுடன் ரோடின் தேவாலயம் ஒன்றை பார்வையிடும் காட்சி இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. அதில் ரில்கேயிடம் அவர் காட்டும் அன்பும் ரோடினின் மேதமையை ரில்கே புரிந்து கொண்டவிதமும் சிறப்பாகக் காட்சிப்படுத்தபட்டுள்ளது.

Jacques Doillon படத்தை இயக்கியிருக்கிறார். இவர் முன்னதாகக் கதேயின் காதலின் துயர் குறுநாவலை படமாக்கியவர். Vincent Lindon ரோடினாகச் சிறப்பாக நடித்திருக்கிறார். Izïa Higelin கிளாடேயாக நடித்துக் காதலின் உஷ்ணத்தை அழகாக வெளிப்படுத்துகிறார்

ரோடின் பற்றிய ரில்கேயின் புத்தகத்தை வாசித்திருந்தேன் என்பதால் இப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ரோடின் சிற்பங்கள் யாவும் இணையத்தில் காணக்கிடைக்கின்றன. படம் பார்த்தகையுடன் அவற்றையும் பாருங்கள். அப்போது தான் ரோடினின் மேதமையை முழுமையாகப் புரிந்து கொள்ளமுடியும்.

**

0Shares
0