பால்ய காலத்துச் சித்திரங்கள்

பதின் நாவல் குறித்த விமர்சனம்

கீரனூர் ஜாகிர்ராஜா

••

இனி ஒருபோதும் திரும்பக் கிடைக்காத பால்ய காலத்தை ஏக்கத்தோடு அசைபோட்டபடிதான் பலரும் நடமாடுகிறோம். உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலரும் சிருஷ்டிக்குத் தேவையான ஆதார சுருதியைத் தங்களின் இளம்பிராயத்து நினைவுகளிலிருந்தே கண்டடைகின்றனர்.

உப பாண்டவம், நெடுங்குருதி, யாமம் எனத் தீவிரமான நாவல்களை எழுதிய எஸ்.ராமகிருஷ்ணன் முற்றிலும் பால்ய கால நிகழ்வுகளை அடுக்கிக் கோத்து எழுதியிருக்கும் புதிய நாவல் ‘பதின்’. ‘இதில் வரும் ‘நான்’என்னைக் குறிக்கவில்லை; நம்மைக் குறிக்கிறது’ என்கிறார் அவர். இதன் மூலம், இவை எல்லோருக்குமான அனுபவங்கள் என்று உணர்த்துகிறார். நாவலை வாசிக்கும்போது, நமக்கும் அது துலக்கமாகிறது.

ராமகிருஷ்ணனுக்குக் குழந்தைகள் உலகத்தை எழுதுதுதல் புதிய விஷயமில்லை. கிறுகிறு வானம், கதைக்கம்பளம் என்று ஏற்கெனவே எழுதியிருக்கிறார். அவற்றின் நீட்சியாகக்கூட இந்த நாவலை அடையாளம் காணலாம். ஆனாலும் ‘பதின்’சகல வயதினரும் படித்து, தங்கள் கால்சட்டைக் காலத்தை அசைபோட்டுப் பார்க்கத் தக்க விதத்தில் எழுதப்பட்டுள்ளது.

நாவல்களுக்கான மரபான எழுதுமுறை தவிர்க்கப்பட்டு, ஒரு புதிய உத்தி பரிசோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. முதற்திருட்டு, பள்ளியின் முதல்நாள், பகலை அளப்பது, கூடிக்கலைவது, வயிறு நிரம்ப வாசனை எனத் தனித்தனித் தலைப்புகளில் விருப்பம் போல அவர் கதை சொல்லிச் செல்லும் முறை, வாசகரை வித்தியாசமான அனுபவத்துக்குள் ஆழ்த்துகிறது.

சிறுவர்கள் உலகம்

நவீனத் தமிழ் இலக்கியத்தில், சிறுகதைகள், நாவல்கள் இரண்டிலும் சிறுவர்களுக்கான உலகம் அவ்வப்போது பதிவாகியுள்ளது. அசோகமித்திரன், கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி, ச.தமிழ்ச்செல்வன் போன்றோர் தமது சிறுகதைகளில் ‘சிறு பிராயத்து வாழ்க்கையை’ எழுதியிருக்கின்றனர். கூள மாதாரி, ரத்த உறவு, துருக்கித் தொப்பி போன்ற 2000-க்குப் பிறகான நாவல்களில் சிறுவர் வாழ்க்கை வெவ்வேறு கோணங்களில் சித்தரிப்புப் பெற்றுள்ளது. கணேசன், கிட்டா எனும் இரண்டு சிறுவர்களின் சுமை கூடிய வாழ்வனுபவங்களைத் தனது ‘பசித்த மானிடம்’நாவலில் கரிச்சான் குஞ்சு அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, கஃபூர் குல்யாமின் ‘வீடு திரும்பிய குறும்பன்’மொழிபெயர்ப்பு நாவல் வாசித்த அனுபவத்தை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. அந்நாவலில் வருகின்ற சிறுவன், நண்பர்களுடன் விளையாடத் தன் வீட்டிலேயே திருடி, பிடிபட்டு ஊரை விட்டே ஓடிப்போகிறான். வீட்டைத் துறந்து, உலகத்தைக் கற்றுக்கொள்கிறான். நீண்ட அலைச்சல்களில் அவன் எதிர்கொள்ளும் விதவிதமான மனிதர்கள்தான் அவனுடைய ஆசான்கள். நந்தகோபாலின் அனுபவங்களையும் எஸ்.ராமகிருஷ்ணன் ஏன் அப்படி ஒரு முழுமையான நாவலாக எழுதியிருக்கக் கூடாது என்ற ஆதங்கம் நமக்கு எழாமலில்லை.

நந்தகோபால் எனும் நடுத்தரக் குடும்பத்துச் சிறுவன் ஒருவனின் பதினைந்து வயது வரைக்கு மான அனுபவங்களின் தொகுப்பாக நாவல் விரிகிறது. நந்துவின் அப்பா இரக்கமற்ற கறாரான மனிதர். நந்துவிடம் மட்டுமல்ல,நந்துவின் அம்மா, அக்கா, தம்பி, தங்கை எனக் குடும்பத்தின் சகல உறுப்பினர்களிடமும் அவர் அப்படித்தான் நடந்து கொள்கிறார். இதன் காரணமாகவே நந்து தன் அப்பாவை வெறுக்கிறான்.

ஒருமுறை தன் நண்பன் சங்கரிடம், அப்பா மீது சத்தியம் செய்கிறான் நந்து. “சத்தியம் பண்ணிட்டு மீறினா உங்க அப்பா செத்துப் போயிடுவார் தெரியும்லே?” என்று சங்கர் கேட்க, “செத்துப் போனா போகட்டும்” என்றே நந்து பதிலளிக்கிறான். பிள்ளைகளின் மனப்போக்கை, கனவுகளைப் புரிந்துகொள்ளாத இருபதாம் நூற்றாண்டு அப்பாக்களின் குறியீடு நந்துவின் அப்பா.

நந்துவுக்கு விளங்காத பல விஷயங்களையும் அவனுக்குக் கற்றுத்தரவே அவனுடைய நண்பன் சங்கர் இருக்கிறான். நந்துவும் உறங்கும் நேரம் தவிர்த்து மற்ற எல்லா நேரங்களிலும் சங்கரின் நிழலாகவே செல்கிறான். இவ்விருவரின் தேடல்களாலேயே நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த உலகம் நந்துவுக்குப் புதிராகவும், வியப்பாகவும் இருக்கிறது. புரியாத புதிர்களை எல்லாம் அவிழ்க்க சங்கர் ஒருவனால் மட்டுமே இயலும் என்று நந்து நம்புகிறான். சங்கரும் நந்துவின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யும் சாகஸக்காரனாக, அவனுக்கான நாயக பிம்பமாகவே படைக்கப்பட்டுள்ளான்.

திறக்கும் பால்ய ஜன்னல்கள்

நந்துவுக்குப் பள்ளிக்கூடம் போக முடியவில்லை. மரத்தில் கட்டிப்போடப்பட்ட நிலையிலும் அவனுக்குச் சாப்பாடு ருசியாக இறங்குகிறது. முதல் நாள் இரவில் சாப்பிடத் தவறிய முட்டையை நினைத்து மறுநாள் மனது வேதனைப்படுகிறது. சினிமாவில் கடவுள் பேசுவதும் சிரிப்பதும் வியப்பை ஏற்படுத்துகிறது. “நீ பொம்பளப் பிள்ளைக போடுற வளையலைப் போட்டுப் பாத்தே” என்று நாகக் கன்னி கூற, தூக்கி வாரிப் போடுகிறது. இந்த உலகிலுள்ள வாகனங்களிலேயே மிக அழகானது லாரிதான் என்று முடிவெடுக்க வைக்கிறது. உடல் சுகவீனப்பட்ட நிலையில், போத்தி கடைக்குப் போய் உளுந்த வடை வாங்கிச் சாப்பிட்டு, அதன் ருசி தெரிந்துவிட்டால் உடல் நலமாகிவிட்டது என அர்த்தம் கொள்ள வைக்கிறது. சாலையில் ஆட்கள் கைவீசி நடப்பது படகில் துடுப்புப் போட்டுப் போவது போலத் தோன்றுகிறது. நோயாளித் தம்பி செத்துப்போனால் நமக்கு என்ன என்று யோசிக்கவைக்கிறது. அம்மாவின் நெருக்கத்துக்குள் போக வேண்டும் என்பதற்காகக் காய்ச்சல் வந்தவனைப் போல நடிக்கவைக்கிறது. இப்படியாகச் சொல்லிக்கொண்டே போகலாம். நந்துவின் அனுபவங்களோடு பயணிக்கையில், நம் பால்யத்தின் ஜன்னல்கள் ஒவ்வொன்றாகத் திறந்துகொள்கின்றன.

மத்திய வயதிலிருந்தவாறு பதின் பருவத்தை நினைவுகூர்வது எளிது. ஆனால், அதை அப்படியே எழுத்தில் வார்க்க மிகுந்த பிரயாசைப்பட வேண்டும். இளம் பிராயத்தின் உயிர்ப்பையும் அதில் ஊடாடும் வெகுளித்தனத்தையும் நாவலில் இயல்பாகக் கையாளுகிறார் ராமகிருஷ்ணன். லாஜிக் பார்க்காத, பகுத்தறியாத, பயப்படாத, சாகஸத்தை விரும்புகிற உலகிலிருந்து பார்க்கும்போது எதுவுமே தவறில்லை என்று நம்மை நம்ப வைப்பது அவருடைய எழுத்துக்குக் கிடைத்த வெற்றி. பேப்பர் பியானோ, உண்ட வீடு, மாறிய வீடுகள், வெறும் சுவர் போன்ற அத்தியாயங்கள் சிறுகதைகளாக எழுதப்பட வேண்டியன.

1970-களின் சிறுவர்களுக்கும், 21-ம் நூற்றாண்டுச் சிறுவர்களுக்குமான இடைவெளிகள் அதிகம், 70-களின் சிறுவர்களையே எஸ்.ரா. எழுதியிருக்கிறார். அன்று விஞ்ஞானத்தின் வேகமான பாய்ச்சல்கள் நிகழ்ந்திருக்கவில்லை. கம்ப்யூட்டர் இல்லை. முக்கியமாக நந்துவின், சங்கரின் கைகளில் செல்போன் இல்லை. நகரமயமாக்கலுக்கும், நவீனமயமாக்கலுக்கும் பிறகு கிராமத்துச் சிறுவர்களுக்கு எதுவுமே பிரமிப்பில்லாமல் போய், உலகம் அவர்களின் பாக்கெட்டில் பதுங்கிக்கொண்டது. 70-களின் நந்துவுக்கும் சங்கருக்கும் உலகம் அந்நியமாக இருந்தது. அவர்கள் அதன் ரகசியங்களை அறிந்துகொள்ள நாள் கணக்கில் அலைந்து திரிந்தனர். ஆனால் நந்துவுக்கும் சங்கருக்கும் இந்த விஞ்ஞான யுகத்திலும் புழங்க வாய்த்திருக்கிறது.

நவீன யுகத்தில் பிறந்தவர்களுக்குத்தான் 70-களின் நாட்டுப்புற வாழ்க்கையை அனுபவிக்கக் கொடுப்பினை இல்லை. ‘பழைய சோறு பச்ச மிளகா’ என்று எல்லாவற்றையும் காட்சி ஊடகங்கள்தான் அவர்களுக்குக் கற்றுத் தருகின்றன. நவீன வாழ்க்கையில் நம்முடைய குழந்தைகள் இழந்துவிட்ட ஒவ்வொரு கணத்தையும் எஸ்.ராமகிருஷ்ணன் ‘பதின்’ நாவலில் மீட்டுத் தருகிறார். காட்சி ஊடகங்களால் ஒருபோதும் காட்ட இயலாத கணங்கள் அவை.

••

பதின் (நாவல்)

விலை ரூ 235.00

தேசாந்திரி பதிப்பகம்

0Shares
0