பால் எர்தோ

If there is a God, he’s a great mathematician.  ~Paul Dirac

சில விஞ்ஞானப் புத்தகங்கள் மகத்தான நாவல்களை விட ஆழமாக வாழ்வின் தரிசனங்களை நமக்கு நுட்பமாக அறிமுகப்படுத்தி விடுகின்றன,  குறிப்பாக நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ரிச்சர்ட் பெயின்மெனைப் பற்றி அப்படியான வியப்பு எப்போதுமே எனக்குண்டு, அவரது உரைகள் தத்துவச் செறிவானவை.

பெயின்மேனைப் போலவே அலாதியான மனப்போக்கு கொண்ட  கணித மேதையான பால் எர்தோவின் (Paul Erdos ) வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் The Man Who Loved Only Numbers புத்தகத்தைப் படித்துக்  கொண்டிருந்தேன். அதில் ஒரு நிக்ழ்வு விவரிக்கபடுகிறது

ஒரு தேநீரகத்தில் எர்த்தோவும் அவரது நண்பரான கிரஹமும் பலமணிநேரம் ஒருவார்த்தை கூட பேசாமல் ஏதோ யோசனையில் உட்கார்ந்திருக்கிறார்கள், ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை, நீண்ட நேரத்தின் முடிவில் கிரஹம் ஏதோ முடிவிற்கு வந்தவரைப்போல அது சைபர் இல்லை, ஒன்று தான் என்று சொல்கிறார், எர்தோ வியப்புடன் தலையாட்டுகிறார், இருவரும் சந்தோஷமாக எழுந்து போய்விடுகிறார்கள்,

பார்க்க பைத்தியக்காரத்தனமாகத் தெரியும் இந்த மௌனமான விளையாட்டு தான் கணிதவியல் அறிஞர்களின் இயல்பு வாழ்க்கை, அவர்களின் மனது எங்கே போனாலும் எப்போதும் கணிதம் சார்ந்தே இயங்கிக் கொண்டிருக்கிறது, உலகை முடிவற்ற கணிதவெளியாகவே கருதுகிறது,

இந்த சம்பவம் எனக்கு  ஒரு ஜென் கதையை நினைவுபடுத்தியது, இரண்டு துறவிகள் முப்பது வருசமாக நண்பர்களாக இருந்தார்கள், தினமும் அவர்கள் ஏரி ஒன்றின் கரைக்குப் போய் உட்கார்ந்து கொள்வார்கள், கொக்கு பறப்பதைப் பார்த்தபடியே இருப்பார்கள், ஒவ்வொரு முறையும் ஒரு துறவி மற்றவரிடம் கொக்குகள் எங்கே பறக்கின்றன என்று கேட்பார், மற்றவர் பதில் சொல்லாமல் கொக்கை பார்த்தபடியே பெருமூச்சிடுவார், அது தான் பதில் என்பது போல கேள்விகேட்ட துறவி சாந்தமடைந்துவிடுவார்,

பதில் சொல்லவில்லை என்பதால் அவர்களின் நட்பு கசந்து போகவில்லை, எப்போதும் போல சந்தோஷமாக அவர்கள் வருவதும் போதுவமாகவே இருந்தார்கள், நீண்ட பல வருசங்கள் இப்படியே போயின, பிறகு முதுயேறிய நாளில் அவர்கள் அதே  இடத்தில் அமர்ந்தபடியே கொக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்,

கொக்கு எங்கே போகிறது என்று அந்த துறவி எப்போதும் போலவே கேட்டார்,

மற்ற துறவி பதில் சொல்லவில்லை, தனது கேள்விக்கான பதில் கிடைக்கவில்லை என்று அன்றும் மௌனமாகிவிட்டார், ஏனோ அன்று ஏரியில் இருந்து கிளம்பும் போது மறுபடியும் அதே கேள்வியை துறவி கேட்டார்,

எனக்கு காது கேட்டுக் கொண்டுதானிருக்கிறது, உனக்குத் தான் பதில் புரியவில்லை என்று சொல்லி மற்ற துறவி எழுந்து போய்விட்டார்

இந்தக் கதையில் வரும் துறவிகளை சட்டென நினைவுபடுத்தினார்கள் எர்தோவும் அவரது நண்பரும், பேசாமலிருப்பதும் மௌனமாக இருப்பதும் ஒன்றில்லை தானே.

கணிதவியலாளரின் வாழ்க்கையையில் இவ்வளவு சுவாரஸ்யங்களா என வியந்து சொல்லும்படியிருக்கிறது புத்தகம், குறிப்பாக எர்தோவின் நாடோடித்தனமிக்க வாழ்க்கை, கையில் ஒரு கணிதநோட்டுடன் ஊர் ஊராக அலைந்து சுற்றி அவர் பகிர்ந்து கொண்ட புதிர்கள், நண்பர்களின் வீடுகளில் அவர் செய்த சேஷ்டைகள், நட்பிற்கு அவர் தரும் முக்கியத்துவம், வாழ்வின் ஒவ்வொரு செயலையும் கணிதத்துடன் தொடர்புபடுத்திக் காட்டும் ஞானம் என்று  நம்மை உத்வேகம் கொள்ளச் செய்கிறது இப்புத்தகம்

கணிதம் என்பது கடவுளின் ரகசியங்களை கைப்பற்றும் ஒரு விளையாட்டு என்கிறார் எர்தோ, எவ்வளவு  அசலான சிந்தனை பாருங்கள்

ஒருமுறை ஒரு இளம் கணித ஆய்வாளர் உடல்நலமற்று மருத்துவமனையில் இருந்தார், அவரை உற்சாகப்படுத்த தினசரி அவரை மருத்துவ மனையில் போய் பார்த்து எர்தோ கணிதபுதிர் ஒன்றை போடுகிறார், அதை தீர்த்து வைக்கப்  மூளை போராடினால் உடல் தானே புத்துணர்வு கொண்டுவிடும் என்பது எர்தோவின் திட்டம்

ஆனால் எர்தோவின் கணிதப்புதிர்களுக்கான விடையை அறிய முடியவில்லை, நோய்மையின் காரணமாக தனது கணித அறிவுத்திறன் மங்கிப்போய்விட்டது என்று உணர்ந்த ஆய்வாளர் வருத்தத்துடன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறான்,

கணித அறிவு மறந்து போய்விட்டால் பின்பு வாழ்ந்து ஒரு பிரயோசனமும் இல்லை தானே என்று எர்தோவும் சொல்கிறார், அந்த அளவு கணிதம் ஒரு மனிதனின் வாழ்வில் பிரிக்கமுடியாத அம்சம் என்று எர்தோவின் புத்தகம் விவரிக்கிறது

தன்னைப் பகடி செய்வது கொள்வது கலையின் உச்சநிலை, புத்தகம் முழுவதுமே எர்தோ தன்னைக் கேலி செய்து கொண்டேயிருக்கிறார், அவருக்கு அறுபது வயதான போது தன் பெயருக்கு பின்னால் L.D. என பட்டம் போட்டுக் கொள்கிறார் அதன் அர்த்தம் Living Dead., எழுபது வயதில் L.D. என பட்டம்   அர்த்தம் மாறுகிறது, அதாவது  Legally Dead. எண்பது வயதில் C.D. பட்டம், அதன் பொருள் Counts Dead., இப்படித் தன்னை வெளிப்படையாக கேலி செய்து கொள்வது அவரது இயல்பு,

கணிதமேதை ராமானுஜத்தை உலகின் ஆகச்சிறந்த கணித அறிஞர் என்று தலையில் வைத்துக் கொண்டாடும் எர்தோ திருமணமே செய்து கொள்ளாதவர், பாலின்பத்தை விடவும் கணிதப் புதிர்கள் அதிகமாக கிளர்ச்சியூட்டக்கூடியது என்று வேடிக்கையாக குறிப்பிடுகிறார்

அவரது கணித அறிவிற்கு எது தூண்டுகோல் என்ற கேள்விக்கு அவரது நிரந்தரப் பதில், காபி என்பதே

காபி குடிப்பதில் அதீதமான ஈடுபாடு கொண்ட எர்தோ ,காபியின் வழியே மட்டும் தான் கணித புதிர்களை  தீர்க்கமுடிகிறது என்று சொல்கிறார்

அவர் குடிக்கும் ஸ்ட்ராங் காபியைப் போல மற்றவர்களால் குடிக்கவே முடியாது என்று பெருமை வேறுபேசுகிறார்,

அதிகமான காபி அருந்தி அதற்காக மருத்துவச் சிகிட்சை எடுத்துக் கொள்ளுமளவு அவர் ஒரு காபி அடிக்ட்டாக இருந்திருக்கிறார்

போர்ஹே கணிதத்தை இலக்கியத்திற்குள் கொண்டுவந்தவர் என்றால் எர்தோ இலக்கியத்தை கணிதத்திற்குள் கொண்டுவந்தவர், தஸ்தாயெவ்ஸ்கியை பற்றிய அவரது பதிவுகள் மிக முக்கியமானவை

பால் எர்தோ கடவுளை Supreme  Fascist   (SF). என்றே எப்போதும் அழைக்கிறார், உலகில் உள்ள எல்லாக் கணிதபுதிர்களும் விடை உள்ள மாபெரும் புத்தகம் ஒன்று கடவுளின் கையில் இருக்கிறது, அந்தக் கணித புத்தகத்தில் இருந்து சில பக்கங்களை எப்படியாது தன்வசமாக்கிவிடுவதே கணித ஆய்வாளர்களின் வேலை என்று சொல்லி, தான் அந்த பிரதியெடுக்கும் பணியைத் தான் மேற்கொண்டுவருவதாகக் குறிப்பிடுகிறார்

ஹங்கேரியை சேர்ந்த இந்தக் கணிதமேதை, 511 கணித ஆய்வாளர்களுடன் இணைந்து 1525 கட்டுரைகள் எழுதியிருக்கிறார், இதில் ஒருவருக்கு வயது பதிமூன்று,  சமகால கணித அறிவியலில் இது ஒரு சாதனை.

பால்எர்தோவின் வாழ்வு ஒரு கலைஞனின் வாழ்வாகவே இருக்கிறது

மெய்தேடலின் ஒருவடிவம் தானே கணிதமும், அந்த வகையில் பால் எர்தோவும் ஒரு ஜென் துறவியே.

••

(அறிவியலாளர்களைப் பற்றிய எனது நூலான கலிலியோ மண்டியிடவில்லை -வில் இருந்து ஒரு பகுதி, இந்தப் புத்தகம் உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது .)

0Shares
0