பால் காகின்


I shut my eyes in order to see. – Paul Gauguin



1891 ஆண்டு ஒஷியானிக் என்ற கப்பல் ஆஸ்திரேலியா வழியாக பிரெஞ்சு காலனிகளில் ஒன்றான நியூ கலோடோனியாவை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தது. கப்பலில் மூன்று அடுக்குகள் இருந்தன. குடியும் கொண்டாட்டமும் கூக்குரலுமாக நீளும் அந்த கடற்பயணத்தில் ஒரேயொரு ஆள் மட்டும் கப்பலின் மேல்தளத்தில் நின்றபடியே கண்ணெதிரில் விரிந்து கிடக்கும் தொலைவை வெறித்து பார்த்தபடியே வந்தான்.



அவன் கண்களில் கடலின் நீலமும் தொலைதுôர ஆகாசத்தின் நிறமாற்றமும் படிந்து கொண்டிருந்தது. மூன்றாவது வகுப்பு பயணி என்பதால் அவனுக்கு அடிப்படை வசதிகைள தவிர வேறு எதுவும் கப்பலில் தரப்படுவதில்லை.



கடற்காற்று அவன் முகத்தை இறுக்கமடைய செய்திருந்தது. அவன் கண்கள் சிறுத்தையின் விழிகளைப் போல எதையோ தேடிக் கொண்டிருந்தன. கப்பலில் இருந்தவர்கள் எவரும் அவனை கண்டு கொள்ளவேயில்லை. அறுபத்தி மூன்று நாட்கள் தொடர்ந்த கடற்பயணம் அவனை சோர்வுக்குள்ளாக்கியிருந்தது.



தாஹிதி தீவு எப்போது வரும் என்று அவனின் கண்கள் தேடிக் கொண்டிருந்தன. அந்த மனிதன் பால் காகின். (Paul Gauguin ) அலுத்து போன ஐரோப்பிய கலைச்சந்தையிலிருந்து விலகி தனக்கென தனியானதொரு ஒவியப்பாணியை உருவாக்கி கொள்ளவேண்டும் என்ற உத்வேகமும் நகரநாகரீகத்தின் கறைபடியாத இயற்கையோடு இணைந்த வாழ்க்கை கொண்ட ஆதி இனமக்களை சந்தித்து அவர்களின் வண்ணதேர்வுகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கை அவனுக்குள் மேலோங்கியிருந்தது.



பாரீஸீல் இம்பிரஷினிய ஒவியர்களில் ஒருவராக அங்கீகரிக்கபட்டிருந்த காகினுக்கு நகரவாழ்வின் போலிமைகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கலைரசனை என்றபெயரில் பெருநகரங்களில் நடப்பவை யாவும் வணிகதந்திரங்கள். அத்தோடு நகலெடுக்கும் வேலையை பிரக்ஞையுள்ள ஒவியர்கள் செய்ய இயலாது என்று ஆத்திரமும் கோபமும் பீறிட்டு கொண்டிருந்தது. தனக்கான ஒரு உலகை தேடி பால்காகின் பயணம் செய்ய துவங்கினான்.



பிரெஞ்சு காலனிகளில் ஒன்றாகயிருந்தது டாஹிதி தீவு (Tahiti ). இயற்கை எழில் நிரம்பியது. அதன் தலைநகரான பபேடேவிற்கு (Papeete) ஐரோப்பியர்கள் உல்லாச கேளிக்கைகளுக்காக வருகை தருவதுண்டு.  பபேடேயிலிருந்து இருபத்தைந்து கிலோமீட்டர் தொலைவில் காட்டுக் குடில் ஒன்றில் தங்கி கொண்டார் காகின். அவரது தினப்படியான வேலைகளை கவனித்து கொள்வதற்காக பதிமூன்று வயதான பூர்வகுடி பணிப்பெண் ஒருத்தியிருந்தாள். கானகவாசிகளை போலவே உடையணிந்து கொண்டு மீன்பிடிப்பதும், ஒவியம் வரைவதுமாக அவரது நாட்கள் நீண்டன.



டாஹிதி தீவு மிக அமைதியானது. பறவைகளும் இலைகளின் சப்தமும் இன்றி  வேறு இரைச்சல்கள் கிடையாது. எளிய உணவும் அழகான பெண்களும் விதவிதமான மதுவும் காகினிற்கு சொர்க்கலோகத்திற்குள் பிரவேசம் செய்தது போன்ற உணர்வை உருவாக்கியது. கானகவாசிகள் அவரை நம்பினார்கள். மிக இணக்கத்துடனும் நட்போடும் அவரோடு பழகினார்கள்.  மதமாற்றம் என்ற பெயரில் பூர்வகுடிகளின் கலாச்சாரம் அழிக்கபட்டிருந்ததை காகின் தன் கண்முன்னால் கண்டார். புராதன நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளை ஆய்து அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்களுடன் சேர்ந்து வாழ துவங்கினார்.



தாஹிதி தீவின் பெண்கள் மிக அழகானவர்கள். அங்கே ஆண் பெண் என்ற பேதமில்லை. இருவருமே கடுமையான உடல் உழைப்பாளர்கள். ஆதலால் அவர்களுக்குள் உழைப்பு சார்ந்த பிரிவைத் தவிர வேறு பிரிவுகள் இல்லை. உடல் வேட்கை வெகு இயல்பாக அங்கீகரிக்கபட்டிருந்தது. ஒரு பெண்ணோடு கூடுவதும் அவரவர் விருப்பம் மட்டுமே சார்ந்ததாகயிருந்தது.



அத்தோடு விரும்பிய பெண்ணோடு வாழ்வதற்கு எவ்விதமான தடைகளும் இல்லை. பால்காகினும் தாஹிதி தீவு பெண்களில் ஒருத்தியை திருமணம் செய்து கொண்டார். அவளுக்காக தாஹிதி மொழியை கற்றுக் கொண்டார். ஆனால் பூர்வகுடிப்பெண்களின் அணைப்பில் இருந்த வலிமை அவருக்குள் பயத்தை உருவாக்கியது. தன்னோடு சேர்ந்து வாழ்ந்த பூர்வ குடிப்பெண்ணை பற்றி குறிப்பிடும் காகின் அவன் உறங்கும் போது ஒய்வெடுக்கும் புலியே நினைவில் வருகிறது என்கிறார்.



மரவெட்டி போலும் காட்டு இடையன் போலவும் அலைந்து அவர் கண்டவை யாவும் தீவில் மனிதன் அறியாத இயற்கையின் வனப்பும் திகட்டும் வெளிச்சமும். தன்வீட்டின் முன்னே உள்ள குடும்பங்களை , தான் அறிந்த பெண்களை, தனது மனைவியை அவளது உறவினர்களை என அந்த தீவின் சுய அடையாளங்களை தனது ஒவியத்தின் வழியே உருவாக்க துவங்கினார்.



காகினின் ஒவிய முயற்சிகளில் முன்னில்லாத மாற்றங்கள் உருவாகின. நிறங்களை தேர்வு செய்வதில் துவங்கி வெளிப்பாடுவரை அவர் புதிய முறையை உருவாக்கினார்.  நீலம், எமரால்டு பச்சை மற்றும் அடர் சிவப்பு, மிகு மஞ்சள், மற்றும் காவி நிறங்களை அதிகம்பயன்படுத்த துவங்கினார். தனித்த நிறங்களை விடவும் நிறங்களின் கலவையின் மீதே அவரது ஈடுபாடு அதிகமிருந்தது. இந்த நிறத்தேர்வு அவரது ஒவியங்களுக்கு கனவுத்தன்மையை உருவாக்கியது



பயிற்சியின் வழியாக அதுவரை மனதில் படிந்திருந்த நிறங்களை முற்றிலும் விலக்கிய புதியதொரு வண்ணத்தேர்வு அவருக்குள் உருவாக துவங்கியது. அது போலவே தீவுவாசிகள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள், பலிச்சடங்குகள் போன்றவற்றை ஒவியமாக வரைய துவங்கினார் காகின். வான்கோவை போல காண்வுலகின் காட்சிகளை மனஉந்துதலின் வழியே ஒவியம் தீட்டும் முறைக்கு மாறாக ஒவியம் வரையப்போகின்ற பொருளை முழுமையாக அவதானித்து அதன்பிறகு மிக நுண்மையான விபரங்களை உள்வாங்கி கொண்டு நினைவிலிருந்து அதை வரைவது என்ற முறையே காகினிற்கு கை வந்திருந்தது.



இயற்கை எதையும் நகலெடுப்பதில்லை. ஒவ்வொரு சிறு செடிக்கும் இலைகளுக்கும் பூக்களும் அது தனித்தவமான நிறங்களையே கொண்டிருக்கிறது. கானகம் என்பது நிமிசத்துக்கு நிமிசம் உருமாறிக் கொண்டேயிருக்கும் இயற்கையின் மாபெரும் ஒவியம். இங்கே வெளிச்சமும் நிறங்களும் நாம் முன்னறியாதபடியே முயங்கியும் திரிந்தும் விலகியும் மாயம் செய்கின்றன. மனிதர்கள் இயற்கையிலிருந்து கற்றுக் கொண்டது மிகக்குறைவு.
அறியப்படாத ஒரு கதை எல்லா வண்ணங்களின் பின்னாலும் ஒளிந்திருக்கிறது. அதை கேட்டு அறிவது எளிதானதில்லை.  இயற்கையை நெருங்கி சென்று அதனோடு கலந்துவிடுவதும் கொண்டாடுவதும் அதன் உன்மதத்தை ஏற்றுக் கொள்வதுமே ஒரு நவீன ஒவியனின் பிரதான பணி என்று பால்காகின் தனது குறிப்பேடு ஒன்றில் தெரிவிக்கிறார்.



நியோ இம்பிரசனிச ஒவியர் என்று வகைப்படுத்தப்படும் பால்காகின் ஒவியங்கள் இன்று உலகின் முக்கிய கலைக்கூடங்கள் யாவிலும் போற்றி பாதுகாக்கபட்டு வருகின்றன. ஒவியங்களை விடவும் அதிகம் சர்சைக்கும் கவனத்துக்கும் உள்ளானது பால்காகினின் வாழ்வு. அதற்கு முக்கிய காரணம் இடையுறாத தேடலின் பகுதியாக அவர் அலைந்து கொண்டேயிருந்தது. மற்றும் வான்கோவோடு அவருக்கு இருந்த நட்பு தன்னுடைய ஒவியங்களை விற்பனை செய்தவற்காக வான்கோவின் சகோதரனும் கலைபொருள் விற்பனைகூடம் வைத்திருந்தவனுமான தியோவை காகின் தொடர்பு கொண்ட காலத்தில் வான்கோ புகழ்பெற்ற ஒவியராக அறியப்படவில்லை.


 தியோவிற்கு காகினின் மீது உருவான நட்பின் காரணமாக தனது சகோதரன் வான்கோவை அறிமுகம் செய்து வைத்தார். வான்கோவிற்கு பால்காகினின் ஒவியங்களும் அவரது முரட்டு சுபாவமும் பிடித்து போய்விடவே இருவருமே ஒன்றாக ஒரே பொருளை ஒவியம் தீட்டுமளவு நண்பர்களானார்கள். ஒருவரையொருவர் ஒவியம் தீட்டிக் கொண்டார்கள்



வான்கோ தனது புகழ்பெற்ற சூரியகாந்திபூக்கள் ஒவியம் தீட்டுவதை காகின் ஒரு ஒவியமாக வரைந்திருக்கிறார். அந்த ஒவியத்தில் காணப்படும் வான்கோவின் முகத்தில் வலியும் வெறியும் ஒன்று கலந்து மிளிர்வதை காணமுடிகிறது. அது போலவே பால்காகினை வான்கோ ஒவியம் தீட்டியிருக்கிறார். காகினின் ஒவியத்தில் இருந்த வான்கோவின் சித்திரம் குறித்து இருவருக்குள்ளும் முரண் உருவானது. தன்னை ஒரு பைத்தியக்காரனை போல சித்திரித்து உள்ளதாக வான்கோ வெளிப்படையாகவே குற்றம்சாட்டினார்.



ஆனால் அதை காகின் விளையாட்டாகவே எடுத்துக் கொண்டார். இருவரும் ஒன்றாக குடிக்க சென்றார்கள். குடிபோதையில் தன்னுடைய மதுப்புட்டியை உடைத்து காகினை கொல்வதற்காக வான்கோ வெறியோடு கத்தினார். காகினால் வான்கோவின் மூர்க்கத்தை தடுக்க முடியவில்லை. தனது கோபம் அடங்காத வான்கோ சவரக்கத்தி ஒன்றால் காகினை கொலை செய்ய பாய்ந்ததும் நடந்தது. ஆனால் காகின் தப்பிவிட்டதோடு வான்கோவிடமிருந்து மெல்ல விலகவும் துவங்கினார்.


இந்த சம்பவத்தின் சில நாட்களுக்கு பிறகு வான்கோ தனது காதுகளை அறுத்து ஒரு வேசைக்கு பரிசளித்த சம்பவம் நடைபெற்றது. வான்கோ மனசஞ்சலம்  கொண்டிருந்த நாட்களில் காகினுக்கு எழுதிய கடிதங்கள் மிக முக்கியமானவை. அவை தொகுக்கபட்டு தனி நுôலாக வெளியாகி உள்ளன.



காகின் தனது சுய விருப்பத்தின் காரணமாக ஒவியரானவர். அவரது அப்பா ஒரு பத்திரிக்கையாளர்.. அரசியல் காரணங்களுக்காக காகின் குடும்பம் பெருநாட்டின் லிமா நகருக்கு இடம்பெற முனைந்தது. அந்த கப்பல் பயணத்தில் காகினின் அப்பா இறந்து போனார். மூன்று வயதான காகினையும் குடும்பத்தவரையும் அவரது அம்மாவே வளர்த்து வந்தார்.  தனது பதினேழவாது வயதில் கடற்படையில் பயிற்சிபெற சென்றார் காகின். இரண்டு வருடம் அதில் பணியாற்றிய பிறகு அதிலிருந்து விலகி வந்தார். பங்குசந்தையின் தரகராக தன்னை பதிவு செய்து கொண்டு பாரீஸீல் வேலை செய்ய துவங்கி ஷோபி என்ற பெண்ணையும் திருமணம்செய்து கொண்டார். நான்கு  குழந்தைகள் பிறக்கும் வரை அவரது ஆர்வம் பங்குசந்தை மீதே குவிந்திருந்தது.



ஆனால் உள்ளோடியிருந்த ஒவியம் வரைவதில் ஆர்வம் மெல்ல வெளிக்கிளம்பியது. அவர் தன் திறமைகளை மெல்ல வளர்த்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார். அப்போது பாரீஸில் பிரபலமாக இருந்த ஒவியரான கேமிலோ பிசாரோவின் நட்பு காகினுக்கு கிடைத்தது. (இஹம்ண்ப்ப்ங் டண்ள்ள்ஹழ்ழ்ர்,) பிசாரோவை தனது ஆசான் என்று குறிப்பிடும் காகின் அவரிடமிருந்து ஒவிய நுணுக்கங்களை கற்று தேர்ந்து கொண்டார். அதுபோலவே பால்செசானின் நட்பும் அவருக்குள் இருந்த ஒவியத்திறமையை வெளிப்பட வைத்தன.



முழுநேர ஒவியராக பணியாற்றுவது என்று தனது பங்குசந்தை தொழிலை விட்டுவிலகி தொடர்ந்து ஒவியம் தீட்டத்துவங்கினார். இவரது ஒவியங்கள் கண்காட்சியில் இடம்பெற்றன. ஆனால் உரிய அங்கீகாரம் கிடைக்கவேயில்லை. அதன் காரணமாக தனது பாணியை முற்றிலும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற விருப்பமே அவரை தாஹிதி தீவை நோக்கி கொண்டுசென்றது. அங்கு அவர் வரைந்த ஒவியங்கள் பாரீஸில் அவருக்கு புதிய அந்தஸ்தை உருவாக்கி தந்தது. காகினை போல தீவுகளை தேடி போய் ஒவியம் வரைய வேண்டும் என்ற உத்வேகம் இளந்தலைமுறை ஒவியர்களிடம் உருவானது.



எதிர்பாரமல் கிடைத்த குடும்ப சொத்தின் காரணமாக கையில் கிடைத்த பணத்தை கொண்டு தாஹிதி தீவில் ஒரு ஸ்டுடியோ அமைத்து கொண்டு தொடர்ந்து ஒவியங்கள் வரைய துவங்கினார்.



தனது தீவு வாழ்க்கை குறித்து NOA NOA  என்ற புத்தகத்தையும் எழுதினார். ஒரு கடலோடியின் சாகசவாழ்வை போல பால்காகினின் வாழ்க்கை எண்ணிக்கையற்ற சுவாரஸ்யங்களால் நிரம்பியிருந்தது. அத்தோடு நவீன ஒவியம் குறித்த புதிய சொல்லாடல்களை உருவாக்குவதாகவும் இருந்தது. அவரது ஒவியங்களின் பிரிக்கமுடியாதபடியே இயற்கை கரைந்து போயிருந்தது. மலர்களும் கிளைகளும் நீரோடைகளும் கள்ளமற்ற பூர்வகுடிவாசிகளும் அவர்களது கனவும் மொழியற்ற அவர்களது ஆசைகளும் காகின் படத்தில் உயிர் பெற்று ததும்பின. காகின் தாஹிதி மக்களின் அகநம்பிக்கைகளை தனது ஒவியத்தின் அடித்தளமாக கொண்டார். அவர்கள் இழந்து போன சொர்க்கத்தை தனது ஒவியங்கள் மீட்டு தரும் என்று நம்பினார்



பூர்வகுடிமக்களின் உரிமைகள் மதத்தின் பெயரால் பறிக்கபடுவதை கண்டு அதை தாங்கமுடியாமல் எதிர்த்த காரணத்திற்காக அதிகாரத்தால் கைது செய்யப்பட்டு சிறைதண்டனை விதிக்கபட்டார் காகின். தொடர்ந்த அலைச்சல் மற்றும் அதீத பெண் உறவு அவரை கொஞ்சம் கொஞ்சமாக நோயின் பிடியில் தள்ளியது. மேகநோய்க்கு ஆளான பால்காகின் அதற்கான உரிய மருத்துவம் செய்ய அக்கறையற்று வாழ துவங்கினார். நோய் முற்றிய போது அங்கிருந்து வெளியேறி சில மாதங்கள் மருத்துவகாப்பகத்தில்தங்கி சிகிட்சை பெற்றார்.



ஆனால் தாஹிதிக்கு திரும்பி வந்த பிறகு மேகநோய் மீண்டும் பற்றிக் கொண்டதோடு அவரை வீழ்த்தவும் செய்தது. தனது 54வது வயதில் இறந்து போன காகின் தாஹிதியின் அடர்ந்த தனிமையில் புதைக்கபட்ட காகின் மீது காற்றும் வெயிலும் மட்டுமே ஊர்ந்து சென்றன. நீண்ட காலத்திற்கு காகின் எங்கே புதைக்கபட்டார் என்ற இடம் கூட அடையாளம் தெரியாமல் இருந்தது. சமீபமாக அவரது புதைமேடு கண்டுபிடிக்கபட்டு அதிலிருந்த எலும்புகள் சேகரிக்கபட்டு அவரது நினைவுகாப்பகத்தில் வைக்கபட்டிருக்கின்றன.



காகினின் வரவு தாஹிதி தீவினை கலைஉலகின் அழியாத காட்சிபடிமங்களாக உருவாக்கியிருக்கின்றது. இன்றும் சுற்றுலா பயணங்கள் தங்களது உல்லாச கேளிக்கைகளுடன் பூர்வகுடி மக்களின் நினைவுகளை காகினோடு பகிர்ந்து கொள்கிறார்கள்



காகின் வாழ்க்கை அவரது சமகால ஒவியர்களில் இருந்து மாறுப்பட்ட சாகசதன்மை கொண்டிருந்த காரணத்தால் அதை படமாக்குவதற்கு பலருக்கும் விருப்பம் உண்டானது. பிரபல எழுத்தாளரான சாமர்செட் மாம் காகின் தீவுப்பயணத்தை மையமாக கொண்டுThe Moon and Sixpence.  என்ற நாவலை எழுதியுள்ளார். அது போலவே லத்தீன் அமெரிக்க நாவலாசிரியரான மரியோ வர்கஸ் லோசா காகின் வாழ்வை The Way to Paradise  என்ற நாவலை எழுதியிருக்கிறார்
வான்கோவின் வாழ்வை விவரிக்கும் லஸ்ட் பார் லைப்  (Lust for Life,) ,) என்ற படத்தில் ஆண்டனி குயின் காகினாக நடித்திருக்கிறார். அது வான்கோவின் வாழ்வை விவரிக்க கூடிய படம் என்பதால் காகின் முக்கியபாத்திரமாக அமையவில்லை. ஆனால்   2003 வெளியான ஆஸ்திரேலிய திரைப்படமான Paradise Found  காகின் வாழ்வை நுட்பமாக விவரிக்கிறது. இப்படத்தை   Kiefer Sutherland இயக்கியுள்ளார். Kiefer Sutherland  இதில் பால் காகினாக நடித்திருக்கிறார்.Paul Gauguin – The Savage Dream  திரைப்படம் காகின் ஒவியங்களின் வழியே தாஹிதி தீவு மக்களின் வாழ்வை விவரிக்கிறது.



காகின் வாழ்வு நவீன ஒவியத்திற்கான ஆதாரங்கள் பெருநகரங்களின் குளிர்சாதன அறைக்களுக்குள் இல்லை என்பதை திரும்ப திரும்ப சொல்கின்றன. இடையுறாத தேடுதலும் எளிய மக்களோடு கூடிய வாழ்வும் இயற்கையை புரிந்து கொள்ளும் விதமும் கட்டுபாடற்ற கற்பனையுமே ஒருவனை ஒவியனாக்குகின்றன என்கிறார் காகின். அது தான் என்றைக்குமான உண்மை.


 

0Shares
0