பாஸ்டர்நாக்கின் ஜன்னல்.

1958ம் ஆண்டுத் தனக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கும் செய்தியை கேள்விப்பட்டபோது போரிஸ் பாஸ்டர்நாக் மாஸ்கோவிற்கு அருகிலிருந்த எழுத்தாளர்களுக்கான கிராமமான பெரெடெல்கினோவில் இருந்தார். அங்கே அவருக்கு ஒரு வீடு ஒதுக்கப்பட்டிருந்தது

மாக்சிம் கார்க்கியின் ஆலோசனைப் படி ஸ்டாலின் எழுத்தாளர்களுக்கான கிராமத்தினை உருவாக்கியிருந்தார். இயற்கையான சூழலில் நதிக்கரை ஓரமாக 250 ஏக்கர் பரப்பளவில் அந்தக் கிராமம் உருவாக்கப்பட்டு அதில் ஐம்பது எழுத்தாளர்களுக்குத் தனிவீடு ஒதுக்கப்பட்டிருந்தது. அந்தக் குடியிருப்பின் பின்புறமாக எளிய மரவீடுகளில் விவசாயிகள் குடியிருந்தார்கள். அங்கே விவசாயப் பணிகள் நடைபெற்றன.

நோபல் பரிசு பெற்ற செய்தி அறிந்த நண்பர்கள் அவருக்கு வாழ்த்து சொல்ல அவரது வீட்டில் ஒன்றுகூடினார்கள். அந்தக் குடியிருப்பின் நிர்வாகியும் கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருப்பவருமான கான்ஸ்டான்டின் ஃபெடின் அவரைச் சந்தித்து நோபல் பரிசை அவர் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று கட்சி முடிவு செய்திருக்கிறது. சோவியத் பண்பாட்டு அமைச்சர் மிகைலோவ் அதனை அறிவித்துள்ளார். ஆகவே அவர் தனது தரப்பை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தனது நீண்டகாலக் கனவை அடைந்தது போல மகிழ்ச்சியில் திளைத்த பாஸ்டர்நாக்கிற்கு இந்த எச்சரிக்கை பயத்தை உருவாக்கியது. அதற்குக் காரணம் அவரது அண்டை வீட்டில் வசித்த எழுத்தாளர் பில்னியாக் கைது செய்யப்பட்டு முறையான விசாரணையின்றிக் கொல்லப்பட்டதாகும். ஆகவே பாஸ்டர்நாக் தான் விருதைப் பெறப்போவதில்லை என்று ஃபெடினிடம் தெரிவித்தார்.

நோபல் பரிசிற்குக் காரணமாக இருந்த டாக்டர் ஷிவாகோ நாவல் அப்போது வரை ரஷ்யாவில் வெளியாகவில்லை. அதன் முதற்பதிப்பு இத்தாலியில் வெளியானது

இரண்டு நாட்களின் பின்பு நோபல் கமிட்டி அவருக்கு அனுப்பிய தந்தி தாமதமாகவே அவரை வந்து சேர்ந்தது. விருது கொடுத்ததிற்கு நன்றி என்று தனது மகிழ்ச்சியை இன்னொரு தந்தி மூலம் பாஸ்டர்நாக் தெரிவித்தார். ஆனால் தன்னால் நிச்சயமாக நோபல் பரிசை பெற நேரில் செல்ல முடியாது என்பதை உணர்ந்திருந்தார். அத்தோடு நோபல் பரிசை ஏற்றுக் கொள்வதன் வழியே அரசின் எதிர்ப்பை சந்திக்க வேண்டியது வரும். அது சிறைவாசமோ, மரணதண்டனையிலோ முடியும் என்பதையும்

டாக்டர் ஷிவாகோ நாவலை பாஸ்டர்நாக் பத்து ஆண்டுகள் எழுதியிருக்கிறார். அது அவரது உண்மைக்கதை. சொந்த வாழ்வில் நடந்தவற்றையும் சமகால அரசியல் நெருக்கடிகளையும் கலந்து இதனை எழுதினார். அந்தக் கால ரஷ்யாவில் எழுத்தாளர்கள் தங்களின் படைப்புகளைத் தணிக்கை அலுவலகத்திற்கு அனுப்பி அவர்களின் அனுமதி பெற்ற பின்பே வெளியிட வேண்டும். ஆகவே தணிக்கை துறை தனது நாவலை வெளியிட அனுமதிக்காது என்று பாஸ்டர்நாக் நன்றாக உணர்ந்திருந்தார்.

இந்தச் சூழலில் ஒரு நாள் இத்தாலியிலிருந்து டி’ஏஞ்சலோ என்ற ரேடியோ நிருபர் அவரைச் சந்திக்க வந்திருந்தார். இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி ரோமில் ஒரு புத்தகக் கடை நடத்தி வந்தது. கட்சி விசுவாசியான ஃபெல்ட்ரினெல்லி தனியே பதிப்பகம் ஒன்றையும் நடத்தி வந்தார். அந்தப் பதிப்பகம் மூலம் புதிய நூல்களை வெளியிட்டார்கள். அந்த வரிசையில் பாஸ்டர்நாக்கின் புதிய புத்தகம் ஏதாவது வெளியிட முடியுமா எனக் கேட்பதற்காகவே ஏஞ்சலோ வந்திருந்தார்.

அவருடனான உரையாடலின் போது டாக்டர் ஷிவாகோ நாவலைப் பற்றித் தெரிவித்தார் பாஸ்டர்நாக். டி ஏஞ்சலோ தன்னால் இத்தாலியில் அந்த நாவலை வெளியிட முடியும் என்று சொல்லி கையெழுத்துப் பிரதியைப் பெற்றுக் கொண்டார். அப்படித் தான் இந்த நாவல் இத்தாலியில் வெளியானது.

நோபல் பரிசு கிடைத்தவுடன் பாஸ்டர்நாக் பெரிய சதித்திட்டத்தோடு தனது நாவலை வெளிநாட்டிற்கு அனுப்பி வெளியிடச் செய்துள்ளார். அவர் ஒரு தேசத்துரோகி என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.

பாஸ்டர்நாக்கை பாராட்டியதோடு அவர் நோபல் பரிசு பெற ஸ்வீடன் செல்ல ரஷ்ய அரசு அனுமதிக்க வேண்டும் என்று இந்தியாவிலிருந்து பிரதமர் நேரு கடிதம் அனுப்பினார். அவரைப் போலவே ஹெமிங்வே பாஸ்டர்நாக் விருது பெற ரஷ்யா அனுமதிக்க வேண்டும் என்று எழுதினார். உலகெங்கும் பாஸ்டர்நாக்கிற்கு ஆதரவாகக் குரல்கள் எழுந்தன. ஆனால் ரஷ்ய அரசு பிடிவாதமாக அவர் விருது பெறுவதைத் தடை செய்தது. நோபல் பரிசு பெற பாஸ்டர்நாக் ஸ்வீடன் செல்லவில்லை. அவர் தொடர்ந்து அரசின் கண்காணிப்பு வலையில் இருந்து வந்தார். அவரது காதலி ஒல்கா கைது செய்யப்பட்டுச் சிறையில் கடுமையான தண்டனைகளை அனுபவித்தார். ஒல்காவை தான் டாக்டர் ஷிவாகோ நாவலில் லாரா என்ற கதாபாத்திரமாக உருவாக்கியிருக்கிறார் பாஸ்டர்நாக்.

பாஸ்டர்நாக்கின் வெளிநாட்டுத் தொடர்புகள். மற்றும் கையெழுத்துப்பிரதி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து ஒல்காவிடம் தொடர்விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர் கடுமையான சித்ரவதைகளை அனுபவித்தார். தன்னை நேரடியாக விசாரணை செய்யாமல் ஒல்காவை இப்படிச் சித்ரவதை செய்கிறார்களே என்ற குற்றவுணர்வில் பாஸ்டர்நாக் மிகவும் மனவேதனை அடைந்தார்.

1958 இல், பிரஸ்ஸல்ஸில் நடந்த உலகப் புத்தகக் கண்காட்சியில், டாக்டர் ஷிவாகோ நாவலின் ரஷ்ய மொழி பதிப்பு அமெரிக்காவின் சிஐஏ ஆதரவில் வெளியிடப்பட்டது. பாஸ்டர்நாக்கை பயன்படுத்திச் சோவியத் எதிர்ப்பினை உருவாக்க முயன்றது அமெரிக்கா. இரு நாடுகளின் அரசியல் போட்டியின் நடுவே பாஸ்டர்நாக் பகடையாகச் சிக்கிக் கொண்டார்.

••

பாஸ்டர்நாக்கின் தந்தை லியோனிட் புகழ்பெற்ற ஓவியர். அவர் டால்ஸ்டாயின் நெருக்கமான நண்பராக இருந்தார். டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு நாவல் தொடராக வந்த போது அதற்குச் சித்திரங்கள் வரைந்திருக்கிறார். தன்னைவிடவும் டால்ஸ்டாய் சிறந்த யூதராக விளங்கினார் என்கிறார் லியோனிட்.

ஒடெசாவில் உள்ள யூத குடும்பத்தில் பிறந்தவர் லியோனிட் . சிறுவயது முதலே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டிருந்தார்.. மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்ற லியோனிட் பின்பு ம்யூனிச்சிலுள்ள ராயல் அகாடமி ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸில் கல்வி பயின்று பட்டம் பெற்றார். , ரஷ்ய இராணுவத்தில் இரண்டு ஆண்டுகள் கட்டாயப் பணியாற்றியபின்பு முழுநேர ஓவியராக வாழத்துவங்கினார்.

1889 ஆம் ஆண்டில், பியானோ இசைக்கலைஞரான ரோசா இசிடோரோவ்னாவை மணந்தார், இவர்களின் முதல் பிள்ளை தான் போரிஸ் பாஸ்டர்நாக்.

புத்துயிர்ப்பு நாவலின் களமாக நீதிமன்றம் இருப்பதால் லியோனிட் தானே நேரில் நீதிமன்றத்திற்குச் சென்று நீதிமன்ற அறைகள், சிறைச்சாலை காட்சிகளை மாதிரியாக வரைந்து கொண்டு வருவது வழக்கம். அவரது ஓவியங்களை டால்ஸ்டாய் பார்த்து ஏற்றுக் கொண்டபின்பே பத்திரிக்கைக்கு அனுப்பி வைப்பார்கள்.

பாஸ்டர்நாக்கின் வீடு மாஸ்கோவின் கலாச்சார மையங்களில் ஒன்றாக மாறியது, அங்குக் கலைஞர்களும் இசைக்கலைஞர்களும் ஒன்றுகூடினார்கள்.

லியோனிட் தனது குடும்பத்துடன் பல வாரங்கள் டால்ஸ்டாயின் யஸ்னயா பாலியானா பண்ணையில் தங்கியிருக்கிறார். ஆகவே டால்ஸ்டாய் குடும்பத்தில் அவருக்குத் தனியிடம் இருந்தது. ரோசாவின் இசையைப் பாராட்டி டால்ஸ்டாய் கடிதம் எழுதியிருக்கிறார். மாஸ்கோவில் இருந்த பாஸ்டர்நாக் வீட்டிற்கு டால்ஸ்டாய் வருகை தந்திருக்கிறார். அவர்கள் வீட்டின் ஹாலில் டால்ஸ்டாயின் சித்திரம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது. தங்களின் ஆன்மீக வழிகாட்டி டால்ஸ்டாய் என்று லியோனிட் கூறிவந்தார்.

தனது இறுதி நாட்களில் வீட்டைவிட்டு வெளியேறிய டால்ஸ்டாய் அஸ்தபோவ் ரயில்நிலையத்தில் மரணப்படுக்கையில் இருந்த போது லியோனிட்டிற்குத் தந்தி கொடுத்து வரவழைத்தார்கள். அப்போது சிறுவனான பாஸ்டர்நாக் உடன் சென்றிருந்தார். டால்ஸ்டாயின் கடைசி நிமிஷத்தை லியோனிட் ஓவியமாக வரைந்திருக்கிறார். பாஸ்டர்நாக் தனது நினைவுக்குறிப்பில் டால்ஸ்டாயின் இறுதி ஊர்வலம் எவ்வளவு பிரம்மாண்டமாக நடந்தேறியது என்பதைப் பற்றி எழுதியிருக்கிறார்.

கலைக்குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதால் ஆரம்பம் முதலே பாஸ்டர்நாக் இசையிலும் கவிதையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இசைக்கலைஞராகவே கனவு கண்டார். ஆனால் அதற்கான தொடர் பயிற்சிகளைப் பெற முடியவில்லை. அவரது இலக்கிய ஈடுபாடு அன்று எழுதிக் கொண்டிருந்த இளம்படைப்பாளிகள் பலருடன் நட்பாக உருவானது. அன்னா அக்மதேவா, ஒசிப் மாண்டெல்சம், பிளாக், குலியேவ், மரினா என இளம் பட்டாளமே கவிஞர்களின் குழுவாகச் செயல்பட்டது.

இரண்டாம் உலகப் போர் முடிந்ததும், பாஸ்டெர்னக் ஜினைடாவை திருமணம் செய்து கொண்டார். ஜினைடாவிற்கு இலக்கிய ஆர்வம் கிடையாது. ஆனால் வீட்டையும் அவரையும் நன்றாகக் கவனித்துக் கொண்டார். நிறையக் காதல் அனுபவங்கள் கொண்ட பாஸ்டர்நாக் கலையை நேசிக்கும் பெண்ணிற்காக ஏங்கினார். அந்தத் தருணத்தில் தான் ஒல்காவின் அறிமுகம் கிடைத்தது. நோவி மிர் பத்திரிக்கையில் வேலை செய்த ஒல்கா அவரது வாசகியாக இருந்தார். அவர் இரண்டு முறை திருமணமானவர். பெண் குழந்தையின் அம்மாவாக இருந்தார். பாஸ்டர்நாக்கிற்கு அவளது தோழமை பிடித்திருந்தது. இருவரும் நெருக்கமாகப் பழகினார்கள். அப்போது பாஸ்டர்நாக்கின் வயது 56.

இது ஜினைடாவிற்குத் தெரியவந்த போது அவர்களுக்குள் பிரச்சனை உருவானது.. ஒல்காவை நேரில் சந்தித்துப் பாஸ்டர்நாக்கை தன்னை விட்டுப் பிரித்துவிட வேண்டாம் என்று மன்றாடினார். இதன் காரணமாக ஒல்கா பாஸ்டர்நாக்கை விட்டு விலகிப் போக ஆரம்பித்தாள். ஆனால் பாஸ்டர்நாக்கிற்காக அவள் சிறைப்பட்டு வேதனைகளை அனுபவித்த நிகழ்வுகளை அறிந்த பின்பு ஜினைடாவே அவளைப் பாஸ்டர்நாக்கின் உதவியாளராகச் செயல்பட அனுமதித்தாள்.

ஒலகாவுடன்

ஒல்காவின் மூலம் வெளியுலகத் தொடர்புகளை மேற்கொண்டு வந்தார் பாஸ்டர்நாக். குறிப்பாக நோபல் பரிசு மூலம் அவருக்குக் கிடைத்த பணத்தைப் பெறுவதற்காகக் கடிதங்கள் எழுதினார். அந்தப் பணத்தை லண்டனில் வசித்த சகோதரி மூலம் பெற்றுக் கொண்டார். யார் யாருக்கு எவ்வளவு பணம் பிரித்துத் தர வேண்டும் என்று விரிவாகக் கடிதம் எழுதியிருக்கிறார். அதில் அவரது மொழிபெயர்ப்பாளர்கள் அனைவருக்கும் பணம் தந்த விபரம் உள்ளது. இந்தப் பணவிவகாரம் பற்றி அறிந்த ரஷ்ய அரசு ஒல்காவை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தது.

முதன்முறையாக ஒல்கா கைது செய்யப்பட்டபோது கர்ப்பிணியாக இருந்தார் என்றும் சிறையிலே அவரது கர்ப்பம் கலைந்து போனது என்றும் பாஸ்டர்நாக் கேள்விப்பட்ட போது தாளமுடியாத வேதனை அடைந்தார். 1958 ஆம் ஆண்டு. ஜனவரியில் பாஸ்டர்நாக் சிறுநீர்ப்பையில் அடைப்பு. காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் தேசத்துரோகியாகக் கருதப்பட்டதால் போதுமான மருத்துவ உதவிகளைச் செய்ய மறுத்தார்கள்.

எழுத்தாளர் சுகோவ்ஸ்கி அவருக்காக மன்றாட மாஸ்கோவிற்குச் சென்றார், அரசிடம் மன்றாடினார். பின்பு அவரை மாஸ்கோ மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அறுவைசிகிச்சை நடந்தது. அவர் முழுமையாகக் குணமடைய இரண்டு மாதங்கள் ஆனது

1946 இல் தனது கவிதைத் தொகுப்பிற்காகப் பாஸ்டர்நாக் நோபல் பரிசிற்குப் பரிந்துரைக்கப்பட்டார், அப்போது நோபல் கமிட்டி அவர் குறித்து அன்டன் கார்ல்கிரென் என்ற விமர்சகரிடம் அபிப்ராயம் கேட்டது. ரஷ்யாவின் முதல்தரமான கவிஞர். மிக முக்கியமானவர் என்று கார்ல்கிரென் தெரிவித்தார். ஆனால் அந்த ஆண்டு அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை. முன்னதாக ரஷ்ய எழுத்தாளர் இவான் புனின் 1933 இல் நோபல் பரிசை வென்றார், அவர் தாயகம் திரும்பி கம்யூனிஸ்ட் அரசை ஏற்றுக் கொள்ள இயலாது என வாழ்நாள் முழுவதும் வெளிநாட்டிலே வசித்து வந்தார்..

1950. மற்றும் 1954 இல் பாஸ்டர்நாக் மீண்டும் நோபல் பரிசிற்குப் பரிந்துரைக்கப்பட்டார்- 1957 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் காம்யூ நோபல் விருது பெற்ற போது அதன் இறுதி பட்டியலில் இருந்தவர் பாஸ்டர்நாக். இது பற்றி ஆல்பெர் காம்யூவே வெளிப்படையாக எழுதியிருக்கிறார்

1958 ல் ஹார்வர்ட் பல்கலைகழகப் பேராசிரியர்கள் எர்னஸ்ட் ரெனாடோ, மற்றும் ஹாரி லெவின், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சிம்மன்ஸ். மூவரும் டாக்டர் ஷிவாகோவிற்காகப் பாஸ்டர்நாக்கிற்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தார்கள். அந்த ஆண்டு அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

டாக்டர் ஷிவாகோவின் பிரெஞ்சு பதிப்பு 1958 ஜூனில் வெளியிடப்பட்டது.அந்த நூலைப் பெற்றுக் கொண்ட பாஸ்டர்நாக் கண்ணீர் விட்டு அழுதார். பிரெஞ்சில் தனது நாவல் வெளியாக வேண்டும் என்பது நீண்டநாள் கனவு என்று தெரிவித்தார்.

அமெரிக்காவில் டாக்டர் ஷிவாகோ பெரும் அலையை உருவாக்கியது. பல வாரங்கள் நாவல் விற்பனை பட்டியலில் முதலிடம் பெற்றுவந்தது. குறுகிய காலத்தில் நாவல் எட்டு லட்சம் பிரதிகள் விற்பனையாகி சாதனைபடைத்தது. நாவல் அடைந்த வெற்றியை உடனடியாகப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த ஹாலிவுட் அதனைப் படமாக்கும் உரிமையைப் பெற்றது. டேவிட் லீன் இயக்குநராக நியமிக்கப்பட்டார். பிரபல திரைக்கதையாசிரியர் ராபர்ட் போல்ட் இதற்கான திரைக்கதையை எழுதினார்

டாக்டர் ஷிவாகோ நாவலை விடவும் திரைக்கதை அபாரமாக எழுதப்பட்டிருக்கிறது. குறிப்பாகப் படத்தின் துவக்ககாட்சிகள் நாவலின் கடைசியில் இடம்பெறுபவை. அது போலவே லாராவின் சந்திப்பு யூரல் நோக்கிய பயணம். அங்கு ஷிவாகோவின் வாழ்க்கை. பனிப்புயலின் நடுவே தனியே பயணம் செய்வது. லாராவின் மகளைத் தேடும் முயற்சி எனத் திரைக்கதை மிக அழகாகக் கண்ணிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. டேவிட் லீன் இதனைக் காவியமாக எடுத்திருக்கிறார். பனியில் ரயில் செல்லும் காட்சியும் ஆள் அற்ற வீட்டிற்கு ஷிவாகோ திரும்பி செல்வதும் அவனது இறுதிக்காட்சியும் மறக்க முடியாதவை.

டாக்டர் ஷிவாகோவின் துவக்கக் காட்சியில் அம்மாவின் இசைக்கருவியை யூரியிடம் ஒப்படைக்கிறார்கள். அவன் தனக்கு இசைக்கருவியை வாசிக்கத் தெரியாது என்கிறான். படத்தின் முடிவில் லாராவின் மகள் அதே இசைக்கருவியை வாசித்தபடியே செல்கிறாள். திரைக்கதை எழுதுவதில் ராபர்ட் போல்ட் எவ்வளவு திறமைசாலி என்பதற்கு இந்த இணைப்பு ஒரு உதாரணம்.

அந்தக் காலத்தில் ரஷ்யாவில் கவிஞர்கள் மிகவும் புகழ்பெற்றிருந்தார்கள். கவிதை நூல்கள் வெளியான சில தினங்களிலே ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. கவிதை வாசிப்பு நிகழ்ச்சிகளுக்குப் பெரிய விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டன. கவிஞர்களைச் சந்தித்து உரையாடும் நிகழ்விற்கு வாசகர்கள் கூட்டம் அலைமோதின.. இசைநட்சத்திரங்களைப் போலக் கவிஞர்கள் கொண்டாடப்பட்டார்கள். அவ்வளவு புகழ் கொண்ட கவிஞராகவே போரிஸ் பாஸ்டர்நாக் இருந்தார். அவரது கவிதைகளை இளைஞர்கள் ஒன்று கூடி வாசித்துக் கொண்டாடினார்கள்.

1934ம் ஆண்டுப் பாஸ்டர்நாக் தனது தந்தையிடம் தான் ஒரு நாவல் எழுதப்போவதாகத் தெரிவித்தார். எனக்குக் கவிதை போதுமானதாகயில்லை. டிக்கன்ஸ் நாவல்களைப் போல விரிவாக, உண்மையாக ஒரு நாவலை எழுத வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. அந்த ஆசையின் வடிவமாகவே டாக்டர் ஷிவாகோவை எழுதினார்.

டாக்டர் ஷிவாகோ அடிப்படையில் ஒரு காதல்கதை. மருத்துவரான யூரி ஷிவாகோ லாரா என்ற நர்ஸைக் காதலிக்கிறார். அந்தக் காதலின் தீவிரத்தையும் பிரிவின் வலியினையும் நாவல் விரிவாகப் பதிவு செய்திருக்கிறது

 தாய் தந்தையில்லாத டாக்டர் ஷிவாகோ அம்மாவின் உறவினர் நிகோலாய் நிகோலாவிச் வேடென்யாபின் குடும்பத்தால் வளர்க்கப்படுகிறார். மருத்துவம் படிக்கிறார். சிறந்த மருத்துவராகிறார். அதே மாஸ்கோவில் தந்தை இல்லாத இளம்பெண் லாரா கோமரோவ்ஸ்கி என்ற வணிகரின் கட்டுப்பாட்டில் இருக்கிறாள். அவள் புரட்சிகர எண்ணம் கொண்ட பாஷாவை காதலிக்கிறாள்.

ஆனால் கோம்ரோவ்ஸ்கி லாராவை கட்டாயப்படுத்தி ஆசைநாயகியாக வைத்திருக்கிறார். அவரது பிடியிலிருந்து விடுபட முடியவில்லை. பாஷா அரசு எதிர்ப்பு பிரச்சார ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் காயம்படுகிறான். அவனைக் கோம்ரோவ்ஸ்கிக்கு பிடிக்கவில்லை. ஆகவே அவர்களின் காதலை நிராகரிக்கிறார். இந்தச் சூழ்நிலையில் கிறிஸ்துமஸ் விருந்திற்கு வரும் லாரா துப்பாக்கியால் கோம்ரோவ்ஸ்கியை சுட்டுவிடுகிறாள். அந்த நடனமண்டபத்திலிருந்த ஷிவாகோ அவளைக் காணுகிறார். அதற்கு முன்பு உடல்நலமற்ற அவளது அம்மாவிற்குச் சிகிச்சை தர வந்த ஷிவாகோ அவளைக் கண்டிருக்கிறார், லாராவின் அழகு மற்றும் துணிச்சல் அவரைக் கவருகிறது. அதன்பிறகு ஷிவாகோ தான்யாவை திருமணம் செய்து கொள்கிறார். அவர்களுக்கு ஒரு மகன் பிறக்கிறான்.

இந்த நிலையில் இராணுவ மருத்துவராகப் பணியாற்றும் ஷிவாகோ மெலியுசீவோ நகரில் உள்ள மருத்துவ முகாமிற்கு அனுப்பப்படுகிறார், அங்கு லாரா நர்ஸாகப் பணியாற்றுகிறாள். அங்கே அவர்களுக்குள் நட்பு உருவாகிறது. நாளடைவில் அது வளர்ந்து காதலாகிறது.

யுத்த பணிகள் முடிவுறவே அவள் யூரியாட்டினுக்கும் ஷிவாகோ மாஸ்கோவிற்கும் பிரிந்து செல்கிறார்கள். லாராவை மறந்து வாழுகிறார்.

அக்டோபர் புரட்சி மற்றும் அடுத்தடுத்த ரஷ்ய உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து, ஷிவாகோவும் அவரது குடும்பத்தினரும் ரயிலில் யூரல் மலைகளில் உள்ள யூரியாடின் நகருக்கு அருகில் அமைந்துள்ள டோனியா குடும்பத்திற்குச் சொந்தமான தோட்டத்திற்குத் தப்பிச் செல்ல முடிவு செய்கிறார். கடுங்குளிரில் மோசமான ரயில் பெட்டியில் பயணம் செய்கிறார்கள். பயணத்தின் போது இராணுவ தளபதி ஸ்ட்ரெல்னிகோவை தற்செயலாகச் சந்திக்கிறார் ஷிவாகோ, அவர் கைப்பற்றப்பட்ட வெண்படையினர் மற்றும் கிராமத்தினர்களைத் தூக்கிலிட்டுக் கொன்றதை அறிந்து கொள்கிறார்

ஷிவாகோவும் அவரது குடும்பத்தினரும் கைவிடப்பட்ட வீடு ஒன்றில் குடியேறுகிறார்கள். குளிர்காலம் மிக மோசமாக இருக்கிறது. தாங்க முடியாத குளிர். ஷிவாகோ வீட்டில் புத்தகம் படித்தபடி நாட்களைக் கடத்துகிறார்.. வசந்த காலம் வருகிறது, குடும்பம் விவசாய வேலைக்குத் தயாராகிறது. ஷிவாகோ புத்தகங்கள் வாங்குவதற்காக யூரியாட்டின் பொது நூலகத்திற்குச் செல்கிறார். அங்கே மீண்டும், லாராவை சந்திக்கிறார். அவரது காதல் துளிர்விடுகிறது. தனது மகளுடன் வசிக்கும் லாராவின் வீட்டினைத் தேடிப் போகிறார். அவளுடன் நெருக்கமாகிறார். மனைவிக்குத் தெரியாமல் அவளைத் தேடி வந்து இரவைக் கழிக்கிறார்.

பின்பு ஒரு நாள் எதிர்பாராத விதமாக ஷிவாகோ போல்ஷ்விக் படைத் தளபதி லைபீரியஸ் ஆட்களால் கடத்தப்படுகிறார். அவர்களுடன் இரண்டு வருடங்களுக்கும் மேலாகச் செலவிடுகிறார், பின்னர் இறுதியாகத் தப்பித்துச் செல்கிறார்.. பனியில் நடந்தே யூரியாட்டினுக்குத் திரும்புகிறார். அங்கே அவரது குடும்பத்தினரைக் காண முடியவில்லை. கைவிடப்பட்ட நிலையிலுள்ள வீட்டினை காணுகிறார்.

லாராவைத் தேடிச் சென்று காணுகிறார் குளிர்காலத்தில், லாராவும் யூரியும் வாரிகினோவில் உள்ள தோட்டத்திற்குத் திரும்பிச் செல்கிறார்கள், அங்கு ஒவ்வொரு இரவும் வாசலில் ஓநாய்கள் ஊளையிடுகின்றன. அந்த நாட்களில் லாராவை பற்றிக் கவிதைகள் எழுதுகிறார். லாராவால் சுடப்பட்ட கோமரோவ்ஸ்கியை மீண்டும் சந்திக்கிறார்கள். அவர் பொய் சொல்லி லாராவை நாட்டினை விட்டு அவசரமாக வெளியேறும்படி செய்கிறார். அவரது பொய்யை நம்பிய ஷிவாகோ லாராவை கோமரோவ்ஸ்கியுடன் அனுப்பி வைக்கிறார்

மாஸ்கோவிற்குத் திரும்பிய பிறகு, ஷிவாகோவின் உடல்நலம் குறைகிறது; தனது குடும்பத்தைத் தேடி அலையும் ஷிவாகோ அவர்கள் பாரீஸிற்குத் தப்பிச் சென்றுவிட்டதையும் தனக்கு ஒரு மகள் பிறந்திருப்பதையும் அறிந்து கொள்கிறார். காலம் ஓடுகிறது. மீண்டும் அவர் மருத்துவராகப் பணியாற்றத் துவங்குகிறார். ஒரு நாள் டிராமில் பயணம் செய்யும் போது தற்செயலாக லாரா சாலையில் செல்வதைக் காணுகிறார். அவளைச் சந்திக்க அவசரமாக இறங்கி ஓடுகிறார். பாதி வழியிலே மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விடுகிறார்.

அவரது இறுதிச்சடங்கில் லாரா கலந்து கொள்கிறாள் ஷிவாகோவின் ஒன்றுவிட்ட சகோதரன் ,ஜெனரல் யெவ்கிராஃப் மூலம் தன்னால் கைவிடப்பட்ட மகளைத் தேடுகிறாள். யெவ்கிராப் தனது ஆட்களின் மூலம் நாடு முழுவதும் லாராவின் மகளைத் தேடுகிறார். முடிவில் லாரா என்ன ஆனாள் என்று தெரியாமல் மறைந்துவிடுகிறாள். ஒரு வேளை அவள் கைது செய்யப்பட்டுக் குலாக்கில் இறந்துபோயிருக்கக்கூடும் என்று நம்புகிறார்கள்.

இரண்டாம் உலகப் போரின் போது, ஷிவாகோவின் பழைய நண்பர்களான நிகா டுடோரோவ் மற்றும் மிஷா கார்டன் ஒரு பெண்ணை அடையாளம் காணுகிறார்கள். அது லாராவின் மகளாக இருக்கக்கூடும் எனச் சந்தேகம் கொண்டு விசாரிக்கிறார்கள். தான்யா என்ற அந்தப் பெண் லாராவின் மகள் தான் என அறிந்து கொள்கிறார்கள். வெகு காலத்திற்குப் பிறகு யூரி ஷிவாகோவின் கவிதைத் தொகுப்பு லாரா வெளியாகிறது. அது லாராவின் அழியாத நினைவுகளின் பாடலாக ஒலிக்கிறது.

டாக்டர் ஷிவாகோவின் வாழ்க்கையும் பாஸ்டர்நாக்கின் வாழ்க்கையும் வேறுவேறில்லை. ஒல்காவோடு அவர் கொண்டிருந்த காதலே இந்த நாவலில் வெளிப்படுகிறது. பாஸ்டர்நாக்கும் இது போல யூரல் மலை பகுதிக்குச் சென்று பணியாற்றியிருக்கிறார்.

டாக்டர் ஷிவாகோ நாவலில் விமர்சிக்கப்படும் அரசியல் கருத்துகள் குறைவே. அவர் போல்ஷ்விக் படை யூரல் மலைபகுதி மக்களை மிக மோசமாக நடத்தியது. கொடுமைப்படுத்தியது என்பதையே முதன்மையான குற்றச்சாட்டாக முன்வைக்கிறார். நாவலில் இருந்து படம் நிறைய இடங்களில் வேறுபட்டிருக்கிறது. டாக்டர் ஷிவாகோவை சுற்றியே எல்லா நிகழ்வுகளும் படத்தில் நடந்தேறுகின்றன. நாவலில் அப்படியில்லை. அது போலவே இத்தனை நாடகப்பூர்வமாக ஷிவாகோ மரணம் நாவலில் நடப்பதில்லை. திரைக்கு ஏற்ப அந்தக் காட்சிகளை அழகாக உருவாக்கியிருக்கிறார்கள். அந்த வகையில் நாவலை விடவும் சில காட்சிகள் திரையில் அழுத்தமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன.

நோபல் பரிசு ஒரு அலையைப் போலப் பாஸ்டர்நாக்கை சுருட்டிக் கொண்டது. அவரால் அந்த மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நாவலின் பாதிப்பில் தான் டாக்டர் ஷிவாகோ எழுதப்பட்டிருக்கிறது என்று விமர்சகர்கள் சொல்கிறார்கள். ஆனால் ஒரு கூட்டத்தில் நிவா என்ற இளம்பெண் அந்த நாவல் ஆன்டன் செகாவின் பாதிப்பில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னதைப் பாஸ்டர்நாக் ஏற்றுக் கொண்டதோடு ஷிவாகோவிற்குள் ஆன்டன் செகாவ் இருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார்.

ஆழ்ந்து வாசிக்கையில் அதை நாமே உணர முடிகிறது. ஆன்டன் செகாவைப் போலவே ஷிவாகோவும் மருத்துவர். எளிதாகக் காதல் வசப்படுகிறவர். பொதுச்சேவையில் நாட்டம் கொண்டவர். சைபீரியாவிற்குப் பயணம் செய்து கைதிகளின் வாழ்க்கையை ஆராய்ந்திருக்கிறார். டாக்டர் ஷிவாகோவின் முடிவு லியோ டால்ஸ்டாய் வாழ்க்கையின் இறுதி நாட்களை நினைவுபடுத்துகிறது

டேவிட்லீன் படத்தில் அதை மிக அழகாகச் சித்தரித்திருப்பார். சாலையில் லாராவை திரும்பக் காணும் ஷிவாகோ டிராமிலிருந்து இறங்கி அவளை நோக்கி ஒடி சாலையிலே விழுந்து இறந்து போகிறார். அவர்களுக்கு இடையேயான அந்த இடைவெளி நிரந்தரமாகிவிடுகிறது.

நோபல் பரிசு காரணமாக ஏற்பட்ட பிரச்சனைகள் பாஸ்டர்நாக்கினை வீட்டிலே முடக்கியது. ஆழ்ந்த கவலையும் வேதனையும் கொண்ட பாஸ்டர்நாக் நோயுற்றார். இரண்டு நுரையீரல்களிலும் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் வைத்துச் சிகிச்சை பெற்ற போதும் உடல்நலம் தேறவில்லை. முடிவில் அவரது வீட்டிற்கே மருத்துவ உபகரணங்கள் கொண்டுவரப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் தனது சகோதரி லிடியாவைப் பார்க்க விரும்பினார். லிடியாவிற்குத் தந்தி அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் அவளுக்கு சோவியத் அரசு விசா வழங்க மறுத்தது. நீண்ட போராட்டத்தின் பின்பு அவளுக்கு விசா வழங்கப்பட்டது. ஆனால் லிடியா வருவதற்கு முன்பாக மே 30 இரவு 11:20 மணிக்கு பாஸ்டர்நாக் மரணமடைந்தார். நாளை ஜன்னலைத் திறக்க மறக்காதீர் என்பது தான் அவர் பேசிய கடைசி வார்த்தைகள். என்ன ஜன்னலது. ஏன் இத்தனை நாள் சாத்திவைக்க பட்டிருந்தது என்பது அவரது வாழ்க்கையை அறிந்தவர்களுக்கு நன்றாகப் புரியும்.

பாஸ்டர்நாக் இறந்த துயரசெய்தி உலகம் முழுவதும் பரவியது. எழுத்தாளர்கள். பல்வேறு நாட்டின் பிரதமர்கள். பத்திரிக்கைகள். மற்றும் வாசகர்கள் தங்கள் இரங்கல் செய்தியை அனுப்பினார்கள். ஆனால் சோவியத் பத்திரிகைகள் எதிலும் அவரது மரணம் பற்றிய செய்தி வெளியிடப்படவில்லை இறுதியாக, ஜூன் 1 அன்று, ஒரு சிறிய அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டது. அதில் பாஸ்டர்நாக்கின் மரணத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக ஒரு வரி கூட இடம்பெறவில்லை.

1989 இல் ஸ்வீடிஷ் அகாதமி போரிஸ் பாஸ்டர்நாக்கின் மகன் யெவ்ஜெனி பாஸ்டெர்னக்கை அழைத்தது, தனது மனைவி யெலினாவுடன் சென்ற யெவ்ஜெனி தந்தையின் சார்பில் நோபல் பரிசை ஏற்றுக் கொண்டார்.

ஒருவேளை பாஸ்டர்நாக்கிற்கு நோபல் பரிசு வழங்கப்படாமல் போயிருந்தால் நிச்சயம் இவ்வளவு துன்பங்களை அனுபவித்திருக்க மாட்டார் என்று சொல்கிறார் கவிஞர் சுகோவ். அது உண்மையே. மகிழ்ச்சி கூட தண்டனையாகிவிடும் என்பது விசித்திரமாகயிருக்கிறது.

உங்கள் வாழ்க்கையை வாழ்வது என்பது ஒரு வயலைக் கடப்பது போல் எளிதானது அல்ல என்று பாஸ்டர்நாக் ஒரு கவிதையில் குறிப்பிடுகிறார். அவரது வாழ்க்கையே அதற்கான சாட்சியமாக மாறிவிட்டது தான் துயரம்.

***

0Shares
0