பிஸ்மார்க்கைத் தேடி

Sink the Bismarck என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் புகழ்பெற்ற போர்க்கப்பலான பிஸ்மார்க்கை எப்படிப் பிரிட்டிஷ் கடற்படை வீழ்த்தினார்கள் என்பதை விவரிக்கும் திரைப்படம். பொதுவாக யுத்த பின்புலம் கொண்ட திரைப்படங்களின் திரைக்கதை விறுவிறுப்பாக இருக்கும். காரணம் கதையின் மையம் ஏதுவென முதலில் சுட்டிக்காட்டப்படுவதால் அதை நோக்கியே கதை நகரும். அப்படியான ஒரு திரைக்கதை தான் Sink the Bismarck படத்திலும் உள்ளது.

இதில் கென்னத் மோர் மற்றும் டானா வின்டர் ஆகியோர் நடித்துள்ளனர், படத்தை லூயிஸ் கில்பர்ட் இயக்கியுள்ளார்.

1939 ஆம் ஆண்டுப் பிப்ரவரி 14 ஆம் தேதி கதை துவங்குகிறது. உண்மையான ஜெர்மன் நியூஸ் ரீல் காட்சிகள் திரையில் ஒளிருகின்றன.

நாஜி ஜெர்மனியின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த போர்க்கப்பலான பிஸ்மார்க் அறிமுகம் செய்யப்படும் விழாவில் ஹிட்லர் கலந்து கொள்கிறார். பிஸ்மார்க்கின் மூலம் ஜெர்மன் கடற்படையின் புதிய சகாப்தம் துவங்குவதாக அறிவிக்கிறார்.

கடலில் ஒரு ராட்சசன் போலப் பிஸ்மார்க் பிரிட்டிஷ் கப்பல்களைக் குண்டுவீசித் தாக்கி அழிக்கிறது. இதனால் பிரிட்டிஷ் கப்பற்படை பெரும் பாதிப்பிற்கு உள்ளாகிறது.

இந்நிலையில் பிஸ்மார்க் செல்லும் திசை. அது தாக்கப்போகும் கப்பல் பற்றிய செய்திகள் உளவாளிகள் மூலம் திரட்டப்படுகின்றன. பிரிட்டிஷ் ராயல் நேவி பிஸ்மார்க்கை தொடர்ந்து கண்காணிக்கிறது.

நார்வேயில் ஒரு உளவாளி பிஸ்மார்க்கையும் அதன் துணைக்கப்பலையும் கடற்பகுதியில் கண்டறிந்து தகவல் தருகிறார். முழுமையான தகவல் கிடைப்பதற்குள் உளவாளி கொல்லப்படுகிறார். உடனடியாகப் பிரிட்டிஷ் கடற்படை எச்சரிக்கை செய்யப்படுகிறது

பிஸ்மார்க்கை தடுத்து நிறுத்தி அழிப்பதற்குப் பிரிட்டிஷ் கடற்படையினர் மேற்கொள்ளும் முயற்சிகள் மிகவும் பரபரப்பாகக் காட்டப்படுகின்றன.

குறிப்பாக லண்டனில் உள்ள பிரிட்டிஷ் கடற்படை தலைமையகத்திற்குள் அமர்ந்தபடியே கடற்படை மேற்கொள்ள வேண்டிய சகல நடவடிக்கைகளையும் செயல்படுத்துவதிலும். பிஸ்மார்க்கை கண்டறிந்து அதைப் பின்தொடரச் செய்து தாக்குதலைத் திட்டமிடுவதிலும் கேப்டன் ஜோனதன் ஷெப்பர்ட் மிக அழகாகச் செயல்படுகிறார்.

யுத்தத்தில் விமானத் தாக்குதலில் தனது மனைவியை இழந்தவர் கேப்டன் ஷெப்பர்ட். அவரது மகனும் கடற்படை விமானியாக இருக்கிறான். அவனும் பிஸ்மார்க்கை மூழ்கடிக்கும் தாக்குதலில் ஈடுபடுகிறான்.

பிஸ்மார்க்கை அழிக்க முடியாது என்று பிரிட்டிஷ் கடற்படையைச் சேர்ந்த அதிகாரிகள் பலரும் நினைக்கிறார்கள். பிஸ்மார்க்கின் தாக்குதல் வேகத்தைக் கண்டு பயப்படுகிறார்கள். ஆனால் ஷெப்பர்ட் உறுதியாகத் தன்னால் பிஸ்மார்க்கை வீழ்த்த முடியும் என்று நினைக்கிறார். அதற்கேற்ப பகலிரவாகத் திட்டமிடுகிறார்.

பிஸ்மார்க் கப்பலில் கடற்படைத் தளபதியாக லாட்ஜென்ஸ் இருப்பதை ஷெப்பர்ட் கண்டுபிடிக்கிறார். அவரது முந்தைய அனுபவங்களும், லுட்ஜென்ஸைப் பற்றிய அவரது புரிதலும் பிஸ்மார்க்கின் இயக்கத்தைத் துல்லியமாகக் கணிக்க உதவி செய்கிறது

நெருக்கடியான சூழ்நிலையின் போதும் கேப்டன் ஷெப்பர்ட் தனது சக அதிகாரிகளிடம் கோபத்தைக் காட்டுவதில்லை. பதற்றம் கொள்வதில்லை. அமைதியாகத் தனது முடிவுகளைச் செயல்படுத்துகிறார். படத்தின் ஒரு காட்சியில் வின்சென்ட் சர்ச்சில் தொலைப்பேசியில் பேசுகிறார். அப்போதும் ஷெப்பர்ட் அமைதியாகவே இருக்கிறார்.

ஷெப்பர்ட்டின் உதவியாளராக வரும் அன்னா டேவிஸ் அவரைப் புரிந்து கொண்டு தேவையான உதவிகளைச் செய்கிறாள். ஆலோசனைகள் தருகிறாள். அவர்களின் நட்பு அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

திட்டமிட்டபடியே பிஸ்மார்க் தனது அதிரடி தாக்குதலை மேற்கொள்கிறது. ஷெப்பர்ட்டின் திட்டத்தின்படி பதில் தாக்குதல் கடல்வழியாகவும் விமானம் மூலமும் நடத்தப்படுகிறது. தீவிரமான கடற்போரின் முடிவில் பிஸ்மார்க் பலத்த சேதமடைகிறது. படத்தின் வழியே நாம் உண்மையான கடற்போரை அருகிலிருந்து காணுகிறோம்.

பிஸ்மார்க்கை வீழ்த்தும் நெருக்கடிகளுக்கு இடையில் கடற்தாக்குதலில் ஷெப்பர்ட்டின் மகன் காணாமல் போய்விடுகிறான். அவன் உயிருடன் இருக்கிறானா, கொல்லப்பட்டானா என்ற தெரியாத தவிப்புடன் இருக்கிறார் ஷெப்பர்ட், மகன் மீட்கப்பட்டவுடன் தனியே அவர் கண்ணீர் விடுவது அழகான காட்சி.

பிஸ்மார்க்கின் தாக்குதலைக் காணும் போது மெல்வில் எழுதிய மோபிடிக் தான் நினைவிற்கு வந்தது. மோபிடிக்கை வேட்டையாடும் கேப்டன் ஆகாப் போலவே தான் ஷெப்பர்ட் செயல்படுகிறார்.

இறுதிக்காட்சியில் ஷெப்பர்ட் அன்னா டேவிஸை இரவு உணவிற்கு வெளியே போகலாம் என்று அழைக்கிறார். அவள் அப்போது காலை ஒன்பது மணி என்று தெரிவிக்கிறாள். காலநேரம் மறந்து அவர் வேலையில் மூழ்கிப்போயிருந்ததை அப்போது தான் உணருகிறார். அவர்கள் மகிழ்ச்சியாகக் காலை உணவிற்காக வெளியே வருகிறார்கள். படம் நிறைவு பெறுகிறது

ஒரு அறைக்குள்ளாகவே இத்தனை வேகமாகச் செல்லும் காட்சிகளுடன் ஒரு திரைக்கதையை எழுத முடியுமா என்பது வியப்பாகவே இருக்கிறது.

படத்தில் பிரிட்டிஷ் கடற்படையின் திட்டமிடுதல் மிக நுணுக்கமாகக் காட்டப்படுகின்றன. இது போலவே கடற்போர் காட்சிகளை மிகவும் துல்லியமாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன.

கடலில் மூழ்கடிக்கப்பட்ட பிஸ்மார்க்கைத் தேடி கண்டறியும் பணியினை இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொண்டார். நேஷனல் ஜியாகிரபி சேனல் இதனை ஒளிபரப்பு செய்தது. பிஸ்மார்க்கின் தாக்குதல்கள் பற்றி விரிவான ஆவணப்படங்களும் வெளியாகியுள்ளன.

••••

0Shares
0