பி.விஜயலெட்சுமியின் சிகிட்சை குறிப்புகள்

சிறுகதை


இரண்டு வருடங்களுக்கு முன்பாக வெளியான என்னுடைய இந்த கதையை வாசிப்பதற்கு தேடுவதாக அமெரிக்காவில் இருந்து சிவசங்கரன் என்ற நண்பர் மின்னஞ்சல் அனுப்பி கேட்டிருந்தார். இது போன்று கடந்த நாலு மாதங்களில் ஆறேழு நண்பர்கள் இக்கதையை வாசிப்பதற்காக கேட்டிருந்தார்கள். அவர்களின் விருப்பத்திற்கு இணங்கி இக் கதையை இங்கே மறுபிரசுரம் செய்திருக்கிறேன்.


**


ஆனங்குளத்தில் உள்ள ராமவர்மா வைத்தியசாலைக்கு சிகிட்சைக்காக கொண்டு வரப்பட்ட போது பி. விஜயலட்சுமி முப்பத்தியாறு கிலோ எடையுள்ளவளாக இருந்தாள். அவளுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் முடிந்திருந்தன. சிகிட்சை அளிக்கப்பட்ட காலம் நாற்பது வாரம். அந்த நாட்களில் அவளோடு ஆர்யமாலா என்ற பணிப்பெண் மட்டுமே உடனிருந்தார். பி. விஜயலட்சுமிக்கு அளிக்கபட்ட சிகிட்சை பற்றி அவளது பெற்றோருக்கு எதுவும் தெரியாது. அவளது கணவரான வைகுந்தராமன் மட்டும் மாதம் இரண்டாவது ஞாயிற்று கிழமையில்  அவளை பார்ப்பதற்கு அனுமதிக்கபட்டிருந்தார்; ஆனால் அவர் பெரும்பாலும் வருவதேயில்லை. மருத்துவசெலவிற்கான தொகை மட்டும் மருத்துவமனை பெயருக்கே காசோலையாக அனுப்பபட்டு வந்தது.


சிகிட்சைக்கு கொண்டு வரப்பட்ட நாள்:


ஆனங்குளத்தில் உள்ள ராமவர்மா வைத்தியசாலையில் பி. விஜயலட்சுமி 21.4. 2003 அன்று பின்னிரவில் நாலு மணிக்கு  உள்நோயாளியாக அனுமதிக்கபட்டாள். அன்று அவள் டி.என்.3792 என்ற டாக்சியில் ஏற்றி கொண்டு வரப்பட்டிருந்தாள். அவள் வந்த இரவு கொச்சினை சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்துகொண்டிருந்தால் காரின் ஒட்டுனர் வழி தவறி நெடுங்காடு என்ற இடத்திற்கு சென்று சுற்றியலைந்து விசாரித்த போது அது போல ராமவர்மா வைத்தியசாலை இங்கே இல்லை என்றும் அது அடுத்த ஊரான சர்ப்பக்காவில் இருக்க கூடும் என்றார்கள்.


வயல்வெளிகளில் கார் ஊர்ந்து போய்க்கொண்டிருந்த போது பின்சீட்டில் சுருண்டுகிடந்தாள் பி. விஜயலட்சுமி. அவளது காலில் லேசாக குளிர்காற்று உரசிக்கொண்டிருந்தது. தலைமயிர் சுற்றிய பித்தளை வளையம் ஒன்று அவளது இடதுகாலை கவ்விபிடித்தபடியிருந்தது. பித்தவெடிப்பேறிய அவளது பாதங்களை மடக்கிவிட்டு அருகில் உட்கார்ந்திருந்தாள் பரிமளம். யாரோ கதவை தட்டுவது போல மழை காரின் மீது தன் விரல்களால் தட்டியபடியே வந்தது. அவளை மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக விஜயலட்சுமியின் மாமனார் வரதராஜ பெருமாள் மட்டுமே வந்திருந்தார்.அவரும் சக்கரைநோயாளி என்பதால் உறக்கத்தை கட்டுப்படுத்துவது இயலாததாக இருந்தது. கார் புனலுர் தாண்டும் போதே உறங்கியிருந்தார்.


காரை ஒட்டிவந்த சுப்பு மட்டும் எப்போதாவது பின்சீட்டில் இருந்த விஜயலட்சுமியை பார்த்து கொண்டே வந்தான். ஒரு சாயலில் அவன் குடியிருந்த லயன் வீட்டில் இருந்த கணபதி புலவரின் மகளை போலவே அவள் இருந்தாள். பி. விஜயலட்சுமியின் தோற்றம் உருக்குலைந்திருந்தது.அவளது தலைமயிர் எண்ணெய் வைக்கபடாமல் சிடுக்கேறியிருந்தது. நெற்றி ஏறிப்போய் கழுத்து எலும்புகள் வெளியே துருத்திக் கொண்டிருந்தன. அவளது வலதுகையில் பெரிய காயம் ஒன்று சீல்வடிந்து கொண்டிருந்தது. தண்ணீருக்குள் விழுந்த பஞ்சை போல அவள் உடம்பு சுருங்கிப்போயிருந்தது. அவளது கண்கள் மஞ்சளேறியிருந்தன. இமைகள் பருத்து வீங்கி அவள் பல நாட்களாக உறங்காமலேயிருக்கிறாள் என்பது பார்த்த நிமிசத்திலே தெரிந்தது.


சர்ப்பக்காவில் உள்ள வைத்தியசாலையை தேடி டாக்சியில் சென்று சேர்ந்தபோது வெளிவாசலை மூடியிருந்தார்கள். மழைக்குள்ளாகவும் ஏதோவொரு மூலிகை செடியின் வாசனை கமந்து கொண்டிருந்தது. நோயாளியை உள்ளே கூட்டிக் கொண்டு போய்விடலாமா என தெரியாமல் டிரைவர் வெளியில் இருந்தபடியே ஹார்ன் அடித்து கொண்டிருந்தான். யாரும் வரவில்லை. மழைசப்தத்தில் கேட்காமலிருக்க கூடும் போலிருந்தது. பாதி உறக்கத்தில் இருந்த வரதராஜ பெருமாள் ஹார்ன் சப்தத்தில் விழித்து கொண்டு உள்ளே போய் கேட்டுவரச் சொன்னார்


டிரைவர் மழைக்குள் இறங்கி ஒடத்துவங்கிய போது பி. விஜயலட்சுமி மழைக்குள் அசைந்தபடியே இருக்கும் ஒரு கேந்திபூச்செடியை பார்த்து கொண்டேயிருந்தாள். மழையின் வேகத்தை தாங்கமுடியாமல் கேந்திச்செடி வளைந்து கொண்டிருந்தது. டிரைவர் உள்ளே ஒடியபோது ஒரேயொரு எண்ணெய் விளக்கு மட்டுமே எரிந்து கொண்டிருந்தது. அவன் பலத்த குரலில் சப்தமிட்டான். உள்ளிருந்து அறுபது வயதை கடந்த ஒரு ஆள் வெறும்மேலோடு வெளியே வந்து நின்று யார் வேணும் என்று மலையாளத்தில் கேட்டார். சங்கரன்கோவிலில் இருந்து தான் வருவதாகவும் நோயாளியை கொண்டு வந்திருப்பதாகவும் சொன்னான். ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்று கேட்டதற்கு அதைபற்றி தனக்கு தெரியாது என்றும் நோயாளி ஒரு பெண் என்றும் சொன்னான். அந்த ஆள் உள்ளேயிருந்த லைட்டை போட்டு பெரிய பேரேடு ஒன்றை புரட்டி பார்த்து கொண்டிருந்தபோது அறையின் மூலையில் வைக்கபட்டிருந்த பாடம் பண்ணப்பட்டிருந்த முதலை ஒன்றை கண்டான். அறையில் ஆள் உயர விளக்கு ஒன்று இருந்தது. சுவரில் நடனமாடும் பெண்ணின்  சித்திரம் ஒன்று தீட்டப்பட்டிருந்தது.


மருத்துவமனை ஆள் பொண்ணுக்கு என்ன கோளாறு என்று கேட்டான். டிரைவர் தயங்கியபடியே சித்தபிரம்மை என்று சொன்னதும் அதுக்கு வைத்தியசாலை ஆள் ஆனங்குளம் வைத்தியசாலைக்கு இல்லே நீங்கள் போகணும் என்றான். டிரைவர் அது எங்கேயிருக்கிறது என்று கேட்டதும் நீங்கள் வழி தவறி வந்துவிட்டீர்கள். இப்படியே நாற்பது கிலோ மீட்டர் கிழக்காக போனால் மெயின்ரோடு வந்து சேரும். அங்கிருந்து மேற்காக பனிரெண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது என்று சொல்லிவிட்டு எரிந்து கொண்டிருந்த லைட்டை அணைத்தான்.


டிரைவர் மழைக்குள்ளாகவே வாசலுக்கு வந்தபோது காரின் பின்கதவு திறந்து கிடந்தது. பின்சீட்டில் இருந்த பரிமளம் கிழே இறங்கி போய் ஒரு செடியின் மறைவில் குத்துகாலிட்டு உட்கார்ந்து மூத்திரம் பெய்து கொண்டிருந்தாள். அவளது முதுகில் மழை பெய்து கொண்டிருந்தது. பி. விஜயலட்சுமி அந்த கேந்தி செடியை விட்டு கண்ணை விலக்கவேயில்லை. தலையில் விழுந்த மழைத்துளியை தட்டிவிட்டபடியே பரிமளம் காரில் ஏறிக் கொண்டு என்னப்பா ஆச்சு என்றாள். அந்த ஆஸ்பத்திரி வேற எங்கயோ இருக்காம் என்றபடியே காரை எடுத்தான் டிரைவர்.


பரிமளம் தனது பருத்த கையால் பி. விஜயலட்சுமியின் தலையில் ஒரு அடி கொடுத்தபடியே இந்த எழவை கட்டி இழுக்குறத்துக்குள்ளே என் தாலி அறுந்து போகுது என்றாள். பி. விஜயலட்சுமியின் கவனம் அப்போதும் அந்த செடியின் மீதே இருந்தது. மழையின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க துவங்கியிருந்தது.


மிக மெதுவாக கார் ஊர்ந்து சென்றது. ஒரு செக்போஸ்டில் கார் நின்றபோது வரதராஜ பெருமாள் தனக்கு பசிக்கிறது என்றார். டாக்சி டிரைவரும் அவரும் இறங்கி சாலையோர உணவகத்தில் பிஸ்கட் சாப்பிட்டார்கள். ஆனங்குளத்தை தேடி அவர்கள் போய் சேர்ந்த போது மழை பெய்து முடித்திருந்தது.


வைத்தியசாலை நூற்று நாற்பது ஏக்கர் பரப்பில் மிகப்பெரியதாக இருந்தது. நுழைவாயிலில் யானை சிலை ஒன்றிருந்தது. இரவெல்லாம் பெய்த மழையில் நனைந்து அந்த சிலை நிஜ யானையை போன்றேயிருந்தது. தாழ்வான ஒடு வேய்ந்த கட்டிடங்கள். சிறியதும் பெரியதுமான குடியிருப்புகள். செதுக்கி வளர்க்கட்டிருந்த பெரிய புல்தரை, வளைந்து செல்லும் மரங்கள் அடர்ந்த சாலைகள் என அது ஒரு தனி உலகமாக இருந்தது. கார் உள்ளே சென்ற போது இரவு பணியாளர்கள் விழித்திருந்தனர். ஏதோ தைல எண்ணெய் காய்ச்சிக் கொண்டிருப்பது போல மணம் கமழ்ந்து வந்து கொண்டிருந்தது. வரதராஜ பெருமாள் அவர்கள் நீட்டிய பேரேடுகளில் கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தார்.


முண்டு அணிந்த ஒரு வயதான பெண் காரின் கதவை திறந்து பி. விஜயலட்சுமியை எழுப்பிய போது அவள் அங்கிருந்த கல்வாழையின் இலை அசைவதை  பார்க்க துவங்கியிருந்தாள். முண்டு அணிந்தவள் பரிமளத்திடம் நீங்கள் அவளது அம்மாவா என்று கேட்டாள். அதற்கு பரிமளம் எரிச்சலுடன் அந்த நாய்கள் தன்வேலை முடிச்சிருச்சினு எங்க தலையில கட்டிட்டு போயிட்டாங்க. நாங்க தான் உசிரை கொடுக்கிறோம் என எரிச்சல் அடைந்தபடியே நான் இவ அத்தை என்றாள். முண்டு அணிந்தவள் விஜியை கைகொடுத்து துக்கிய போது ஒரு பள்ளி சிறுமியை துக்குவது போலவே இருந்தது.ஒரே ஜாக்கெட்டை பலமாதமாக அணிந்திருந்த காரணத்தால் அவளது முதுகில் பட்டை போல தடம் விழுந்திருந்தது.பி. விஜயலெட்சுமியின் பொருட்கள் என்று ஒரு பழைய வயர்கூடையில் அடைத்து எடுத்து வரப்பட்டிருந்த பொருட்களை பரிமளம் தன் கையில் எடுத்து கொண்டாள்.


முண்டு அணிந்தவள் மழை தண்ணீர் தேங்கியிருந்த பாதையில் விஜயலட்சுமியை தன்னோடு சாய்த்து கொண்டு நடந்த போது விஜயலட்சுமிக்கு நடக்கவே கால் கூசுவதை உணர்ந்தாள். உடம்பில் பிசுபிசுப்பும் துர்நாற்றமும் வந்து கொண்டிருந்தது. கிழக்கு பார்த்த ஒரு அறையின் கதவை திறந்து உள்ளே விஜயலட்சுமியை படுக்கையில் உட்கார வைத்த போது பரிமளம் பெருமூச்சுவிட்டபடியே கதவை மூட வேண்டாம் அவ துங்கவே மாட்டா . நிலை குத்தினது மாதிரி உட்கார்ந்தே இருப்பா. என்றாள். முண்டு அணிந்தவள் தலையசைத்தபடியே அறையின் பூட்டை மேஜையின் மீது வைத்து விட்டு வெளியேறினாள்.


வரதராஜ பெருமாள் அந்த அறைக்கு வந்து சேர்ந்தபோது விஜயலட்சுமி சுவரை பார்த்தபடியே ஒட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். பரிமளம் இரவிலே கிளம்பி போய்விடுவதா இல்லை காலையில் புறப்படலாமா என்று கேட்டாள். இருவரும் அதைப்பற்றி பேசிக் கொண்டேயிருந்தார்கள். முன்பு வந்த அதே முண்டு அணிந்த பெண் இப்போது ஒரு பிளாஸ்டிக் வாளியும் கொசுவர்த்தி சுருள் ஒன்றும் கொண்டு வந்து வைத்தபடியே ஆம்பளைகள் இங்கே தங்குவதற்கு அனுமதியில்லை என்றாள். வரதராஜ பெருமாள் தாங்கள் இரவிலே கிளம்பவுதாக சொல்லியபடியே இரண்டு நாட்களுக்குள் அவளுக்கு துணையாக யாராவது ஒரு ஆளை ஊரிலிருந்து அனுப்பி வைப்பதாக சொன்னார். முண்டு கட்டியவள் அதைக் கேட்டு கொண்டதாகவே தெரியவில்லை. வரத ராஜ பெருமாள் கிளம்பும் போது அந்த பணிப்பெண்ணிடம் இவளுக்கு பச்சைதண்ணி ஆகாது.. குளிக்க வச்சா கத்துவா என்று சொல்லியபடியே டாக்சியை நோக்கி நடந்தார்.


மழைக்கு பிந்திய இரவு என்பதால் வானில் நட்சத்திரங்களே இல்லை. டிரைவர் அந்த வைத்தியசாலையை விட்டு வெளியே வந்த போது வரதராஜ பெருமாள் இதுக்கு மாசம் ரெண்டாயிரம் ஆகும். இந்த சனியனை கட்டிகிட்டு வந்ததுக்கு என்னவெல்லாம் தொரட்டை அடைய வேண்டியதிருக்கு பாரு என்றார். பரிமளம் பின்சீட்டில் தனி ஆளாக சாய்ந்து படுத்தபடியே மூளைக்கோளாறு ரொம்ப நாளாவே இருந்திருக்கணும். நம்ம தலையில கெட்டி வச்சிட்டாங்க இனிமே இவ செத்தாலும் பிழைச்சாலும் நமக்கென்ன விடு என்றாள்.


கார் பிரதான சாலைக்கு வந்த போது விடிய துவங்கியிருந்தது. வரதராஜ பெருமாளுக்கு திரும்பவும் பசிக்க துவங்கியிருந்தது. அவர் ஏதாவது சாப்பிடவேண்டும் என்று ஹோட்டலில் நிறுத்த சொன்னார். டிரைவர் ஆற்று பாலத்தை கடந்து போன போது அப்படியே வண்டியை நிறுத்திவிட்டு குளித்து ஒரு துக்கம் போடலாம் என்று நினைத்தான். காரில் இருந்த இரண்டு பேரும் உறங்கியிருந்தார்கள். சாலை ஈரத்தில் நனைந்து கிடந்தது. ஏனோ அவனுக்கு பி. விஜயலட்சுமியை பற்றிய வருத்தம் உண்டானது. அவன் பாதி துக்கமும் மனதில் வலியுமாக வண்டியை சங்கரன்கோவிலை நோக்கி ஒட்டி போய் கொண்டிருந்தான்


நோய் குறிகள்


பி. விஜயலட்சுமி கடந்த ஒரு வருட காலமாக உளவியல் மருத்துவர் டாக்டர் செல்வமகேந்திரனிடம் சிகிட்சை பெற்றிருக்கிறாள். அவரது மருத்துவகுறிப்பின்படி அவளுக்கு ஏற்பட்டிருப்பது அதீத பயம் மற்றும் மனசிதைவு. இதற்கான காரணங்களாக அவர் கருதுபவை
1) விஜயலட்சுமி திருமணம் நடந்த நாளில் இருந்து ஒரு மாதகாலம் பகலிரவு என பேதமில்லாமல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கபட்டிருக்கிறாள். அதனால் அவளது பால்உறுப்பு அழற்சி அடைந்திருக்கின்றது. அத்தோடு அவளது உடலில் பதினோரு இடங்களில் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. முன்பல்லில் ஒன்று பாதி உடைபட்டிருக்கிறது
2) விஜயலட்சுமி கடந்த 11.7.2002 முதல் தொடர்ந்து நாற்பத்திரெண்டு நாட்கள் துங்காமல்  இருந்திருக்கிறாள். ஆரம்ப நாட்களில் அவள் படுக்கையில் கிடந்தபடியே உறக்கம் வராமல் புரண்டு படுத்திருக்கிறாள். அதன்பிறகு அவள் படுத்துக்கொள்வதேயில்லை. சுவர் ஒரமாகவே இரவு முழுவதும் நின்று கொண்டேயிருந்திருக்கிறாள். யாராவது அவளை அழுத்தி உட்கார வைத்தால் கூட தானா எழுந்து நின்று கொண்டு விட்டிருக்கிறாள்.  இதற்காக அரசு பொதுமருத்துவனையில் மூன்று நாட்கள் சிகிட்சை அளிக்கபட்டபிறகு அவள் எழுந்து நிற்பதில்லை. மாறாக கர்ப்பசிசுவை போல கைகால்களை ஒடுக்கி கொண்டு உட்காந்திருந்திருக்கிறாள்
3) 2002ம் வருட ஆகஸ்டு மாதத்தில் ஒரு முறை அவளை திருவந்தியம் கோவிலுக்கு அழைத்து போயிருந்த போது அவள் இடைவிடாமல் மூத்திரம் பெய்தபடியே இருந்திருக்கிறாள். அதனால் ஆத்திரமாகி அவளை அடித்ததில் இடதுதொடையில் பெரிய காயம் ஏற்பட்டிருக்கிறது
4) பி. விஜயலெட்சுமி திருமணமாகி வந்த இரண்டு மாதங்களில் நாலைந்து முறை  கணவனோடு சண்டையிட்டிருக்கிறாள். ஒவ்வொரு சண்டையின் முடிவிலும் அவளை கணவனோ அல்லது அவனது வீட்டு ஆட்களோ தாக்கியிருக்கிறார்கள். ஒரு முறை அவளை வீட்டில் உள்ள ஒரு ஆண் ( யார் என்று தெரியவில்லை) தனது ஆண் உறுப்பை அவளது முகத்தில் தேய்த்திருக்கிறார். அன்று அவள் தற்கொலை செய்ய முயற்சி செய்து கண்டுபிடிக்கபட்டு சமையல்பொருட்கள் போட்டு வைக்கும் அறையில் மூன்று நாட்கள் அடைத்து வைக்கபட்டிருக்கிறாள்.
5) இரண்டு முறை அவளுக்கு கர்ப்பசிதைவு ஏற்பட்டிருக்கிறது. முதல்முறை திருமணமான நாற்பதாவது நாளும் இரண்டாவதுமுறை கரு வளர்ந்து 95 நாட்கள் ஆன பிறகும் ஏற்பட்டிருக்கிறது. அந்த நாட்களில் அவள் வீட்டில் இருந்தவர்கள் எல்லோரையும் கடுமையாக திட்டியிருக்கிறாள். சில நேரங்களில் அவள் அழுவது நாள் கணக்கில் நீடித்திருக்கிறது
6) 2002ம் ஆண்டின் மேமாதத்தில் அவள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள தனது பதிவு எண்ணை நீடிப்பதற்காக சென்னை செல்ல வேண்டும் என்று சொல்லியிருக்கிறாள். அதை அனுமதிக்க மறுத்ததோடு அவள் தானே கிளம்பி போய்விடக்கூடும் என்று அவளது சான்றிதழ்களை யாவையும் எரித்து விட்டார்கள் என்றும் அன்றிரவு அவள் திரும்புவம் தற்கொலை செய்ய முயன்று காப்பாற்றபட்டு தயாளன் ஆர்எம்பி என்ற மருத்துவரிடம் சிகிட்சைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறாள். அந்த சிகிட்சை முடிந்து வந்த சில வாரங்களுக்கு பிறகு அவளது உடலில் ஆங்காங்கே காரணமில்லாமல் பருத்து வீங்க துவங்கியிருந்தது. இதற்கான சிகிட்சை அளிக்கபடவேயில்லை
7) துக்கமின்மை. நடந்த விசயங்களை திரும்ப திரும்ப சொல்வது. கற்பனையாக பயம் மற்றும் தான் இறந்து போய்விட்டதாக நம்புவது உள்ளிட்ட பல நோய்கூறுகள் அவளிடம் துல்லியமாக வெளிப்படுகின்றன


உளவியில் மருத்துவரின் இந்த நோய்கூறுகள் பற்றிய அவதானிப்புகளை போல அவளது கணவன், மாமனார், மாமியார், சின்ன அத்தை மற்றும் அந்த வீட்டின்  வேலைக்காரி  ஆகியோர் அவதானித்த அவளது நோய் குறிப்புகள்


1) விஜயலட்சுமிக்கு திருமணத்தின் போது இருபத்தைந்து வயது முடிந்திருக்கிறது. ஆனால் அதை பெண் வீட்டில் இருபது என்று பொய் சொல்லியிருக்கிறார்கள். இதை அவளது கணவன் வைகுந்தராமன் சான்றிதழ்களில் இருந்து கண்டுபிடித்தான். அதைபற்றி விஜயலட்சுமியிடம் கேட்டபோது வைகுந்த ராமனுக்குகூட முப்பத்தைந்துவயது முடிந்து விட்டிருக்கிறது, ஆனால் பொய் சொல்லிதானே கல்யாணம் செய்திருக்கிறான் என்று வீண்வாதம் செய்தாள். இதனால் அவளை வைகுந்தராமன்  கண்டிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அன்றிரவு இந்த சண்டை காரணமாக அவள் உடலுறவு கொள்வதற்கு அனுமதி மறுக்கவே வைகுந்தராமன் அவளை கட்டிலில் இருந்து கிழே தள்ளி வன்புணர்ச்சி மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போது அவள் பிடித்து தள்ளியதில் வைகுந்தராமனின் முந்நுறு ரூபாய் பெறுமானமுள்ள ஆல்வோ கடிகாரத்தின் கண்ணாடி உடைந்து போனது குறிப்பிட்டதக்கது.
2) விஜயலட்சுமி வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாமல் தபாலில் எம்ஏ படிக்க முயன்றிருக்கிறாள். அப்படி அவளுக்கு வந்த பாடப்புத்தகங்களை அவள் ஒளித்து வைப்பதற்கு இடமில்லாமல் படுக்கையின் அடியில் வைத்திருந்தை தற்செயலாக அவளது மாமனார் வரதராஜ பெருமாள் கண்டுபிடித்து விசாரித்த போது அவள் படிப்பது தவறு ஒன்றும் இல்லையே என்று வார்த்தைக்கு வார்த்தை எதிர்வாதம் செய்த போது அவர் வழியில்லாமல் அவளது செவுளில் இரண்டு அடி தரவேண்டியதாகியது. அன்றிரவும் விஜயலட்சுமி வன்புணர்ச்சிக்கு உள்ளாகினாள். ஆனால் அவள் மற்ற நாட்களை போல இல்லாமல் ஆடைகளே இல்லாமல் வீட்டின் ஹாலுக்கு வந்து தனது மாமனார் முன் நின்றபடியே நீதானடா சொல்லி குடுக்குறே. என்று மரியாதையின்றி கத்தியிருக்கிறாள்.
3) விஜயலட்சுமியின் தம்பி விடுமுறைக்கு வந்த நாளில் அக்காவின் கட்டிலில் ஒரு மதியம் உறங்கி கொண்டிருந்ததை கண்டு வைகுந்தராமன் அவனை அடித்து எழுப்பி விரட்டவே அந்த பிரச்சனையை விஜி பெரிதாக எடுத்து கொண்டு கத்தியிருக்கிறாள். அப்போது அவளை வைகுந்தராமன் அடிக்க முற்பட அதை விஜியின் தம்பி தடுத்திருக்கிறான் வேறு வழியில்லாமல் அந்த பையன் கழுத்தை பிடித்து தள்ளி இனிமேல் அவனோ, அவளது வீட்டு ஆட்களோ அவளை தேடி வரக்கூடாது என்று விரட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது
4) விஜயலட்சுமிக்கு சினிமா பாட்டுகளை கேட்பதும் பாடுவதுமான பழக்க மிருந்திருக்கிறது. எப்போதும் ஏதாவது ஒரு சினிமா பாடலை பாடிக் கொண்டேயிருந்ததால் அதை தடுப்பதற்கு வேறு வழியில்லாமல் அவளது உதட்டில் சூடு போட வேண்டிய நிர்ப்ந்தம் வீட்டில் உள்ளவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது
5) விஜயலட்சுமி கணவனையும் மற்றவர்களையும் சிறைக்கு அனுப்ப திட்டம் போட்டு  தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது அதை தடுத்து அவளை பொதுமருத்துவமயில் சேர்த்து மின்சார சிகிட்சை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த வகையில் செலவு மட்டும் பனிரெண்டாயிரம் ஆனது. அதை மாமனார் வீட்டில் வைகுந்தராமன் பெருந்தன்மையாக கேட்கவேயில்லை


6) கணவரை உடல் உறவில் திருப்தி படுத்த முடியாத தன்மையும், வீட்டில் வேலைகள் செய்யாமல் கற்பனையில் முழ்கி கிடப்பதும் புத்தகம் படிப்பதும் அவளது முக்கிய நோய்குறிகள்.


பி. விஜயலட்சுமியின் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள்


2002ம் வருடம் மார்ச் மாதம் 8 ம் தேதி செய்துங்கநல்லுர் பெத்தையா- செல்லம்மாள் தம்பதியின் குமாரத்தியான பி. விஜயலெட்சுமி என்ற விஜயாள் பி.ஏவிற்கும், சங்கரன்கோவில் பூவிளங்கும் பெருமாள் பேரனும் வரதராஜ பெருமாளின் சிரேஷ்ட பையனும் கூட்டுறவு வங்கியில் உதவி மேலாளராக பணிபுரியும் வைகுந்தராமன் பி.காம். டி.கோப் அவர்களுக்கும் சுந்தரேஸ்வரர் திருமண மண்டபத்தில் காலை 9 முதல் 10.30 வரையான முகூர்த்ததில் திருமணம் நடைபெற்றது. அந்த விழாவில் வைகுந்தராமனின் நண்பர்கள் நுற்றுக்கும் மேற்பட்டவர்களும் விஜயலெட்சுமியோடு படித்த கண்மணி , விமலா என்ற இருவர் மட்டும் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. விஜயலட்சுமியின் திருமணத்திற்காக நாற்பது பவுன் நகையும் 50 ஆயிரம் ரொக்க பணமும் ஒரு யமஹா பைக்கும் வாங்கி தருவது என்று நிச்சயக்கப்பட்டிருந்த வண்ணம் யாவும் இனிதாக நிறைவேற்றி வைக்கபட்டது. விருந்தில் விஜயலட்சுமி இன்னொரு அப்பளம் கேட்டபோது வைகுந்தராமன் ஏண்டி சாப்பாட்டுக்கு அலையுறே என்றதும் அவனது குடும்பமே சிரித்தது.
 
திருமணநாளின் மதியத்தில் விஜயலட்சுமியும் வைகுந்தராமனும் புது தலையணை, போர்வை சகிதமாக ஒரு அறையில் தங்க வைக்கபட்டபோது வைகுந்தராமன் அவளிடம் தான் பத்து நாட்களாக ஜிம்மிற்கு போய் உடம்பை தயார் செய்து வைத்திருப்பதாகவும் அதனால் இன்றிரவு அவள் பலமுறை உடல்உறவுக்கு தயராக இருக்க வேண்டும் என்றும் கூறினான். அவள் பதிலே சொல்லவில்லை.


இரவு அவள் படுக்கைக்கு சென்ற போது அவளது வலதுகையை முறுக்கியபடியே அவன் ஒரே கடியில் முழு ஆப்பிள் ஒன்றை தின்றபோது அவளுக்கு பயமாக இருந்தது. அவளின் விருப்பம் கூடுவதற்குள் அவன் தனது செயலை முடித்துவிட்டு தட்டில் வைத்திருந்த பழங்கள் யாவையும் தின்று தீர்கக துவங்கினான். அவள் எழுந்து மூத்திரம் பெய்துவிட்டு வர விரும்பினாள். அதற்கு கதவை திறந்து வெளியே போக வேண்டும். உள்ளே வருதற்குள் போய்விட்டு வந்திருந்தால் என்ன என்று அவன் கத்தினான். அவள் சுருண்டு படுத்து கொண்டாள்.  விடிந்து எழுந்த போது அவளது உடலில் நாலைந்து சிறு காயங்களிருந்தன. அதை விடவும் அவன் பாதி கடித்து போட்டிருந்த ஆப்பிள்சதைகள் ஆங்காங்கே கிடந்தை காணும் போது அருவருப்பாக இருந்தது. அவள் துக்க கலக்கத்தோடு அவசரமாக மூத்திரம் பெய்வதற்காக வெளியே சென்றாள்.


**
திருமணமான பத்து நாட்களுக்கு பிறகு அவர்கள் வைகுந்தராமனின் பாட்டி ஊருக்கு சென்றிருந்தார்கள். அந்த வீடு மிக சிறியது. உள்ளே ஒரு நார்கட்டில் போட்டிருந்தார்கள். அதில் இருவர் படுக்க முடியாது. ஆனாலும் அவனது கட்டாயத்தால் அவள் அதில் ஒட்டிக் கொண்டு படுக்க வேண்டியதாகியது. இரவில் அவனது ஆத்திரத்தால் அவளது கால்முட்டியில் கட்டில் குத்தி ரத்தம் கொட்டியது. இந்த கிராமத்தில் எந்த டாக்டரை பார்ப்பது என்று அவன் திட்டியதோடு அப்படியே விட்டுவிட்டான் . அங்கிருந்த மூன்று நாட்களும் அவளால் வலது காலை அசைக்கவே முடியவில்லை.  ஊருக்கு வந்ததுமே அவளுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. அவன் ஆத்திரத்தில் அவள் காய்ச்சலை பற்றி பொருட்படுத்தாமல் அவளோடு உறவு கொண்டான். மறுநாள் அவள் மருத்துவரிடம் காட்டியபோது அவர் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கும் படியாக சொன்னார். வைகுந்தராமன் அவளை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு ஊருக்கு போன் செய்து அவளது அப்பாவை வரச்சொல்லிவிட்டு தனக்கு அலுவலக வேலை இருப்பதாக சென்னைக்கு கிளம்பி சென்றான்


**
வீட்டு பிரச்சனைகளில் இருந்து மனதை திசைதிருப்புவதற்காக விஜயலட்சுமி  வாடகை நுலகம் ஒன்றில் உறுப்பினராக சேர்ந்தாள். அங்கே உள்ள புத்தகத்திலே மிக அதிகமான பக்கங்கள் கொண்ட ஏதாவது ஒரு புத்தகத்தை வீட்டிற்கு எடுத்து வந்து வாரக்கணக்கில் படித்து கொண்டிருப்பாள். அப்படி ஒரு நாள் அவள் யாருக்காக மணி ஒலிக்கிறது என்ற புத்தகத்தை எடுத்து வந்து வாசித்து கொண்டிருந்த போது  வீட்டு பெண்களை போல அவள் வேலைகள் செய்யாமல் எதற்கு படித்துக் கொண்டேயிருக்கிறாள் என்று ஆத்திரமாக கத்திய வைகுந்தராமன் உடனடியாக அந்த நாவலை பிடுங்கி கிழித்து அடுப்பில் போட்ட போது அவள் வேண்டும் என்றே தனது தலையை சுவரில் பலம் கொண்ட மட்டும் முட்டிக் கொண்டாள். ஆனால் அப்போதும் அவளது மண்டை உடையவேயில்லை அத்தோடு அவளது ஆத்திரமும் தீரவில்லை.


**
ஒரு நாள் மதியம் சாப்பாடு போடும்போது தட்டில் ஒரு தலைமயிர் ஒட்டிக் கொண்டிருந்ததை காரணம் காட்டி விஜயலட்சுமியின் மாமனார் வரதராஜ பெருமாள் அன்றிலிருந்து அவள் தரையில் போட்டு சாப்பிட வேண்டும் என்று கத்தினார். அதை வைகுந்தராமனும் ஆமோதித்ததோடு அப்போதே அவள் தரையில் போட்டு சாப்பிட வேண்டும் என்றான். அன்றிலிருந்து விஜயலட்சுமி தானாகவே தரையில் சாப்பிட துவங்கினாள். அதை பின்நாட்களில் ஒருவரும் தடுக்கவேயில்லை


**
வைகுந்தராமன் அலுவலகத்திலிருந்து வரும்வரை இரவில் அவள் படுக்கையில் சும்மா உட்கார்ந்து கொண்டு ஸ்ரீராமஜெயம் எழுதிக்கொண்டிருக்கிறாள் என்பதால் தேவையற்ற மின்சார செலவு ஏற்படுகிறது என்று மின்விளக்குகளை அணைக்க சொல்லி சண்டையிட்ட பிறகு அவள் தனது அறையில் எப்போதுமே விளக்கு போடாமல் இருட்டிலே இருக்க பழகத்துவங்கினாள். இந்த பழக்கம் பகலிலும் நீண்டுவிடவே அவளாக வீட்டு ஜன்னல்களை ஆணி வைத்து அடித்து ஒரு போதும் திறக்க முடியாதபடி மூடிவிட்டாள்.


**
துணி துவைக்கும் சோப்பு மற்றும் அவளுக்கான எண்ணெய், பவுடர், சீப்பு போன்றவற்றை அவர்கள் தங்களது அலமாரியில் வைத்து பூட்டிக் கொண்ட நாளில் இருந்து அவள் ஒரே உடையில் நாள் கணக்கில் இருக்கவும் குளிப்பதற்கு மறுக்கவும் துவங்கினாள்


***
ஒவ்வொரு முறை கர்ப்பம் கூடி கலைந்த போதும் அவள் தனது பிறக்காத குழந்தைக்கு ஒரு பெயரிட்டு அதை தான் வளர்ப்பது போன்று கற்பனையாக செயல்பட துவங்கினாள். இதற்காகவே அவள் அடிவாங்கியதும் சிலமுறை நடந்தேறியிருக்கிறது.


வைத்தியசாலையில் சில  தினங்கள்


விஜயலட்சுமி வைத்தியசாலைக்கு வந்த நாலு வாரங்கள் யாரோடும் பேசவேயில்லை. ஒரு இரவு அவள் தனது அறையினுள் வந்துவிட்ட தவளை ஒன்றை இரவு முழுவதும் அருகில் உட்கார்ந்து பார்த்து கொண்டேயிருந்தாள். தவளை கண்ணை மூடுவதும் திறப்பதையும் காண்பது வசீகரமாக இருந்தது. விடிகாலையில் அந்த தவளை அறையை விட்டு படியில் தாவி குதித்தது. அப்போது அவளும் படிக்கு வந்து நின்றாள். தவளை இன்னொரு குதி குதித்து செடிக்குள் மறைந்த போது அவள் சந்தோஷத்துடன் கைதட்டினாள்


**
ஒரு நாளிரவு அறையின் ஜன்னல் வழியாக நிலா வெளிச்சம் தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. விஜயலட்சுமி தனது கைகளை அந்த வெளிச்சத்தில் காட்டினாள். நிலா வெளிச்சம் கைகளில் ஊர்ந்து போக துவங்கியது. நிலா அறையில் நகர நகர அவளும் தன் கைகளை நீட்டிக் கொண்டேயிருந்தாள். அன்று இரவு அவள் உடலில் நடுக்கம் அதிகமானது.


**
ஒரேயொரு முறை அவள் எண்ணெய் குளியல் செய்வதற்காக அழைத்து போகபட்டபோது வழியில் கிடந்த சிவப்பு துணியை காட்டி இது பாம்பில்லை துணி என்ற ஒரேயொரு வார்த்தை பேசினாள். அதன்பிறகு பலவாரங்கள் பேசவேயில்லை.
**
பலாமரத்தில் ஒரு நாளைக்கு எத்தனை எறும்புகள் ஏறுகின்றன எத்தனை எறும்புகள் இறங்குகின்றன என்று  பகல் முழுவதும் எண்ணிக்கொண்டேயிருந்தாள். ஏறிய எறும்புகளில் பத்துக்கும் மேற்பட்டவை கிழே இறங்கவேயில்லை என்பது அவளுக்கு வருத்தம் தருவதாக இருந்தது
**
கூட்டு பிரார்த்தனைக்காக அழைத்து போகப்பட்ட போது அவள் மனம் உருகி தான் ஒரு கொசுவாக மாறிவிட்டால் மற்றவர்களின் ரத்தத்தை உறிஞ்சி வாழலாம் என்று பிரார்த்தனை செய்தாள்.
**
இருளிலிருந்து வெளிச்சத்திற்கும் மௌனத்திலிருந்து பேச்சிற்கும் அவள் நகர்ந்து வருவதற்கு ஆறு மாதங்களுக்கும் மேலானது. ஆனாலும் அவளது உடலில் உள்ள தழும்புகளை கண்ணாடியில் கண்டதும் அவள் முகம் வெளிறி ஒடுங்கி போவதை ராஜ வைத்தியத்தாலும் குணப்படுத்த முடியவேயில்லை


**
பின்குறிப்பு : 21.12.2003 மதியம் இரண்டு மணிக்கு ஆனங்குளத்தில் உள்ள வைத்தியசாலைக்கு வந்து சேர்ந்த ஐம்பது வயதை தாண்டிய நபர் நரைத்த தலைமயிரும் கவலை தோய்ந்த முகமும் கொண்டிருந்தார். அவரது கண்களில் துக்கம் படிந்திருந்தது. நடுங்கும் குரலில் தான் விஜயலட்சுமியின் தகப்பன் என்றும் தங்களிடம் விஜயலட்சுமி படிப்பதற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கபட்டிருப்பதாக வைகுந்தராமன் சொல்லி ஏமாற்றிவிட்டான் என்றும் அவளை தான் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று சொன்னார். வைத்திசாலை ஆட்கள் அதற்கு அனுமதி தர மறுத்துவிட்டார்கள். அந்த வயசாளி தன்னை மீறி அழுதபடியே என் பொண்ணுய்யா என்று கத்தினார்.


வழியில்லாமல் ஒரு முறை அவளை பார்ப்பதற்கு அனுமதித்தார்கள். அவர் பார்த்தபோது சிறிய பச்சைநிற அங்கி அணிந்தபடியே அவள் படியில் உட்கார்ந்திருந்தாள். அவளது தலைமயிர் கொட்டி போயிருந்தது. அவள் தன் அப்பாவை பார்த்ததும் பலவீனமான குரலில் நீயும் இங்கே வந்துட்டயாப்பா என்று கேட்டாள். அவர் பதில் சொல்லமுடியாமல் கதறிஅழுதார்.


அன்றிரவு வைத்தியசாலையில் இருந்த பணிப்பெண்ணிற்கு பணம் கொடுத்து யாரும் அறியாமல் தன் பெண்ணை அவர் அங்கிருந்து கூட்டிப் போய்விட்டார் என்றும் ஒருவேளை அவர்கள் ஆந்திராவில் உள்ள மதனபள்ளியிலோ, கர்நாடகாவில் உள்ள கொல்லுரிலோ. மஹாராஷ்டிராவில் உள்ள சீரடியிலோ  காணக்கூடும் என்கிறார்கள்.


உங்கள் பயணங்களில் தலைமயிர் கழிந்த, வெறித்த பார்வை கொண்ட ஒரு பெண்ணையும் அப்பாவையும் நீங்கள் சந்திக்க கூடுமாயின் தயவு செய்து அவர்களை கடந்து போய்விடுங்கள். அவர்கள் யாவரிடமிருந்து விலகி இருக்க விரும்புகிறார்கள். அல்லது சாவைத் தேடி நடந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே அவர்கள் நமது நற்குடும்பத்தின் சந்தோஷ வாழ்வை எவ்விதத்திலும் தொல்லை செய்யமாட்டார்கள். அவர்கள் போகட்டும் விட்டுவிடுங்கள்.


**
– உயிர்மை இதழில் வெளியானது.


 

0Shares
0