பீட்டர் புருக் மகாபாரதம்

பீட்டர் புருக் (Peter Brook) ஒன்பது மணிநேர நாடகமாகத் தயாரித்த மகாபாரதம் நான்கு மணி நேரங்களுக்கு ஒடும் திரைப்படமாகவும் வந்திருக்கிறது, நம் மனதில் மரபாகப் பதிந்து போய்விட்ட கிருஷ்ணன் பீஷ்மர் கர்ணன் பாண்டவர்களைப் பற்றிய சித்திரங்களை முழுமையாக மாற்றியமைக்கிறது இந்தப்படம்,

இதை முழுமையான மகாபாரதம் என்று சொல்லமுடியாது , மாறாக மகாபாரதக் கதையைப் பீட்டர் புருக் எப்படிப் புரிந்து வைத்திருக்கிறார் என்பதன் வெளிப்படாகவே எடுத்துக் கொள்ள முடிகிறது, இதற்கான திரைக்கதையை எழுதியவர் உலகப்புகழ்பெற்ற திரைக்கதையாசிரியர் ஜீன் கிளாடே கேரியர் ,

மகாபாரதம் குறித்த அவரது நேர்காணலின் சிறிய பகுதி.

•••

கேள்வி : இந்தியாவின் புனித நூலாகக் கருதப்படும் மகாபாரதத்தை  ஒரு வெளிநாட்டவராக புரிந்து கொள்வதில் உங்களும் பீட்டர் புருக்கிற்கும் என்னவிதமான சிரமங்கள், தடைகள் இருந்தன. எப்படி இந்திய ஆன்மாவை உணர்ந்தீர்கள் ?

நாங்கள் இந்தியாவிற்கு வந்த நோக்கமே மகாபாரத்தைக் காண வேண்டும்  அதை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது தான். ஆகவே நாங்கள் இந்தியாவில் மகாபாரதம் எப்படி உள்வாங்கபட்டிருக்கிறது, எப்படி நிகழ்த்தபடுகிறது என்பதை முதலில் அறிந்து கொள்ள விரும்பினோம். இதற்காக பல்வேறு ஊர்களில் உள்ள நாடக்க்கலைஞர்களை தேடிச் சென்று அவர்களுடன் உரையாடினோம்.

இந்தத் தேடுதலில் ஒரு உண்மை புரிந்தது. மகாபாரதம் என்பது வெறும் புத்தகம் அல்ல. அது இந்திய மக்களின் தினசரி வாழ்வின் ஒரு பகுதி என்று. பல்வேறு சந்தர்பங்களில் மக்கள் மகாபாரதத்தையே உதாரணமாகச் சொல்கிறார்கள். பேசிக் கொள்கிறார்கள்.

ஆகவே நாங்கள் மக்களைத் தேடிச்செல்வது, அதுவும் உண்மையான கிராமப்புற இந்திய மக்களைத் தேடிச் சென்று பார்ப்பது என்று முடிவு செய்தோம். உண்மையில் அங்கிருந்து தான் மகாபாரதம் தொடர்பான எங்கள் புரிதல் துவங்கியது.

கே : மகாபாரதத்தின் எந்த அம்சங்களை நாடகம் மற்றும் திரைக்கதை ஆக்கத்தில் பிரதானமாக எடுத்து கொண்டீர்கள் எதை விலக்கினீர்கள்?

நாங்கள் மகாபாரதத்தைக் கையில் எடுத்த போதே அதை இந்தியாவில் மரபாக நிகழ்த்துவது போல நாடகமாக்கப் போவதில்லை என்று முடிவு செய்து கொண்டோம். அதை பிரெஞ்சு மக்களுக்கானதாக மாற்றி  நாடகமாக்க முயற்சித்தோம்.

பிரெஞ்சு மக்கள் எந்த அளவு இந்திய இதிகாசத்தைப் புரிந்து வைத்திருப்பார்கள் என்பதில் பல  சிக்கல்கள் உருவானது. குறிப்பாக கிளைக்கதைகள் மற்றும் குறியீட்டு பாத்திரங்களை எப்படி அணுகுவது என்ற சிக்கல் அது. பிரெஞ்சு நடிகர்களையும் தொழில்முறை சார்ந்த நாடக நடிகரகளையும் நாங்கள் பயன்படுத்த முயன்றதால் இந்திய மனது மகாபாரத கதாபாத்திரங்களை  கற்பனை செய்வதிலிருந்து முற்றிலும் நாங்கள் மாறுபடத் துவங்கினோம். ஒருவகையில் நாங்கள் பிரெஞ்சில் மகாபாரத்தை மறுபடியும் எழுதினோம் என்றே சொல்லவேண்டும்.

கே : மகாபாரதம் குறித்த தேடுதலில் என்ன கண்டுகொண்டீர்கள்

இந்தியாவின் ஒரு பகுதியான வங்காளத்திற்கும் இன்னொரு பகுதியான தமிழகத்திற்கும் முற்றிலும் வேறுபட்ட உடை உணவு கலாச்சார பழக்கவழக்கங்கள் என எவ்வளவோ வேறுபாடுகள் உள்ளன. ஆனால் அந்த இரண்டு இடங்களிலும் மகாபாரதம்  மக்களின் மனதில் அழியாத நினைவாக  உள்ளது. அது அவர்களை ஒன்றிணைக்கிறது. இது தான் எங்களை வியப்பில் ஆழ்த்தியது.

மாறுபட்ட கலாச்சாரச் கூறுகள் கொண்ட நிலப்பரப்பினை ஒன்று சேர்க்கும் ஒரு பிணைப்பாக மகாபாரதம் உள்ளது. இதில் எங்களை மேலதிகாக ஆச்சரியப்பட வைத்தது இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களும் மகாபாரதம் மீது முழுமையான ஈடுபாடு காட்டி அதை வாசித்து வருவதே. இப்படி ஐரோப்பாவை இணைக்கும் எந்தப் பிரதியும் கிடையாது

கே ; மகாபாரதத்தை புரிந்து கொள்வதில் தனிப்பட்டு உங்களுக்குள் என்ன விவாதங்கள் நடைபெற்றது

எனக்கும் பீட்டருக்கும் ஆரம்பம் முதலில் ஏற்பட்ட விவாதம் நிலம் சார்ந்து ஏன் தங்களுக்கு இரண்டு குடும்பங்கள் இவ்வளவு மூர்க்கமாக சண்டையிட்டுக் கொள்ள வேண்டும். அது உண்மையான காரணமாக இருக்குமா. அல்லது வேறு மறைமுக காரணம் ஏதாவது உள்ளதா என்பதே. அது போலவே கௌரவர்கள் பாண்டவர்கள் இருவருமே கடவுளின் அருள் பெற்றவர்கள். தவம் செய்து வரம் பெற்றவர்கள். ஆயுதங்கள், ஆசிகள் என்று கடவுள்களின் கருணை அவர்கள் மீது உள்ளது. என்றால் கடவுள்கள் இந்தச் சண்டையை ஏன் உருவாக்கினார்கள். கிரேக்கப் புராணம் போல இதில் கடவுள்களுக்குள் ஏதாவது உள்காரணங்கள் இருக்கின்றதா என்பதைப் பற்றி தொடர்ந்து விவாதம் செய்தோம்.

கே : மகாபாரதத்தை ஒரு சமகால பிரதியாக நீங்கள் பார்க்கிறீர்களா ?

நிச்சயமாக மகாபாரதம் கலியுகம் பற்றி பேசுகிறது. அது போலவே மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் பாசுபதம் போன்ற  அஸ்திரம் இன்றைய அணு ஆயுதம் போன்றதே. இரண்டுமே உலகை அழித்துவிடக்கூடியது. நிறைய விதங்களில் மகாபாரதம் நவீன வாழ்வின் சிக்கல்களை, பிரச்சனைகளைப் பேசுகிறது.

கே : பகவத்கீதையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் ?

மகாபாரதம் அறிமுகம் ஆவதற்கு முன்பதாகவே பகவத்கீதையை வாசித்திருக்கிறேன். புரிந்து கொள்வதில் நிறைய சிக்கல்கள் இருந்தன. மகாபாரதம் வாசிக்கத் துவங்கிய பிறகு கீதையே மகாபாரத்தின் மையம் என்பது புரிந்தது. அதை நாடகத்தில் பயன்படுத்திக் கொள்வது எளிதில்லை என்பதை உணர்ந்தோம். கீதை சொல்லும் கர்மா மற்றும் யோக மார்க்கங்கள் அற்புதமானவை. கேரளாவில் உள்ள நாட்டார்கலைகளில் கீதை மிக எளிமையாக அறிமுகப்படுத்தபடுகிறது. அது எங்களுக்கு பிடித்திருந்தது.

யுத்த முடிவில் அர்ஜுனன் மீண்டும் கிருஷ்ணனிடம் தனக்கு முன்பு அவன் உபதேசம் செய்த விஷயங்களைத் திரும்பச் சொல்லும்படி கேட்கிறான். அதற்கு கிருஷ்ணன் தான் ஒரு முறை சொல்லியதை மறுமுறை திரும்பச் சொல்வதில்லை என்று மறுத்துவிடுகிறான் என்று படித்தேன். அது என்னை வசீகரித்தது.

கே : பல ஆண்டுகாலம் ஆகியும் மகாபாரதம் உங்களுக்குள்ளே இருப்பதாக உங்களது ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். அது பற்றி விளக்கமாக சொல்லமுடியுமா?

அது உண்மை. மகாபாரதம் என்னுடைய மனதின் பிரிக்க முடியாத பகுதியாகிவிட்டிருக்கிறது.  என் சிந்தனையில் மகாபாரதம் ஆழ்ந்தபாதிப்பை உருவாக்கிவிட்டது. இந்தியாவும் மக்களும், அதன் மாறுபட்ட கலாச்சாரங்களும் மெய்த் தேடுதலும் இந்தியாவை நோக்கி என்னை வரவழைத்தபடியே இருக்கின்றன. குறிப்பாக மாற்றங்களைப் புரிந்து கொள்வதிலும் ஏற்றுக் கொள்வதிலும் இந்திய மனது காட்டும் வழி தனித்துவமானது. அதை தான் மகாபாரதமும் சுட்டிக்காட்டுகிறது,

•••

0Shares
0