புகலிடம் தேடி.

ஜான் ஸ்டீன்பெக்கின் Of Mice and Men திரைப்படத்தைப் பார்த்தேன்.. 1937 வெளியான ஸ்டீன்பெக்கின் நாவலை மையமாகக் கொண்ட படமிது.

புலம்பெயர்ந்த பண்ணைத் தொழிலாளர் இருவரது வாழ்க்கைக் கதையே இப்படம். கேரி சினிஸ் இப்படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார்.

படத்தில் துவக்கக் காட்சியில் ஜார்ஜ் மில்டன் மற்றும் லென்னி இருவரும் பண்ணை ஒன்றிலிருந்து தப்பியோடுகிறார்கள். அவர்களைப் பண்ணை உரிமையாளர்கள் துரத்துகிறார்கள். பரபரப்பான அந்தக் காட்சியின் முடிவில் அவர்கள் ரயிலில் தப்பிவிடுகிறார்கள்.

எதற்காக அவர்கள் தப்பியோடுகிறார்கள் என்பது பின்பகுதியில் தான் விளக்கப்படுகிறது.

ஜார்ஜ். மற்றும் லென்னி இருவரும் புதிய வேலையைத் தேடி பயணம் செய்கிறார்கள். அவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் பாதி வழியில் இறக்கிவிட்டுப் போகிறது. தாங்கள் போக வேண்டிய பண்ணைக்கு நடந்து போகிறார்கள்.

அந்தப் பண்ணை உரிமையாளர் அப்பாவியும் கடின உழைப்பாளியுமான லென்னி முட்டாள் போலத் தோற்றம் கொண்டிருப்பதைக் கண்டு விசாரிக்கும் போது ஜார்ஜ் தனது உறவினர் என்று பொய் சொல்லுகிறான். அவர்கள் இருவருக்குமான அன்பும் நட்பும் மிக அழகாகப் படத்தில் வெளிப்படுகிறது

ஜான் மல்கோவிச் லென்னியாக நடித்திருக்கிறார். அவரது உடல்மொழியும் பேச்சும் செயல்களும் மிகச்சிறந்த நடிப்பின் அடையாளம். குறிப்பாக நாய்க்குட்டியைக் கொஞ்சி அணைத்துக் கொள்வதும், கடைசிக்காட்சியில் ஜார்ஜ் உடன் பேசுவதும் மறக்கமுடியாதவை.

லென்னி அன்பிற்காக ஏங்குகிறான். அன்பின் மிகுதியில் அவன் தன்னை அறியாமல் வன்முறையை கையாளுகிறான். அது தெரிந்து நடப்பதில்லை. அன்பின் உச்சமது.  குறிப்பாக இளம்பெண்களுடன் லென்னி நடந்து கொள்வது தீராத ஏக்கத்தின் அடையாளம்.

ஆனால் ஜார்ஜ் அதை உண்மையாகப் புரிந்து கொண்டிருக்கிறான். ஆகவே அவன் லென்னியை காப்பாற்றுவதில் எப்போதும் கவனமாக இருக்கிறான். லென்னி இரண்டு உலகங்களில் வாழுகிறான். ஒன்று அவனது பண்ணை வேலை. மற்றொன்று கனவு. அந்த இரண்டு உலகமும் சில நேரம் சந்திக்கும் போது அவன் நிலைதடுமாறிவிடுகிறான்.

பயணவழியில் அவர்கள் இரவு தங்கும்போது குளிர்காய நெருப்பு மூட்டுகிறார்கள். அப்போது லென்னி அப்பாவியாக முயல் வளர்ப்பது பற்றியும் தனது கனவினை விவரிக்கிறான். ஜார்ஜ் பொறுப்பாகப் பதில் சொல்லுகிறான். அந்த இடம் படத்தின் கடைசிக்காட்சியில் வேறுவிதமாக மாறும் போது நம்மை அறியாமல் அவர்களின் கடந்தகாலச் சந்தோஷத்தை நாம் நினைவு கொள்கிறோம்.

பண்ணை வேலையில் லென்னி தன்னை மறந்து ஈடுபடுகிறான். இரண்டு பேர் செய்யும் வேலையை ஒரே ஆளாகச் செய்கிறான். திடீரென நாய்க்குட்டி வளர்க்க வேண்டும் என்ற ஆசை உருவாகிறது. இதன் காரணமாகப் பண்ணையில் குட்டி போட்டுள்ள ஒரு நாயிடமிருந்து வெள்ளை நிற குட்டியை எடுத்துக் கொள்கிறான்.

ஜார்ஜ் பண்ணையில் நல்லபெயரைப் பெறுகிறான். ஆனால் லென்னி மீது காரணமேயில்லாமல் பண்ணை முதலாளியின் மகன் கோபம் கொள்கிறான். அடிக்கிறான். இதனால் அவனைக் கண்டாலே லென்னி பயப்படுகிறான்.

கடினமாக உழைத்துச் சம்பாதித்து ஒரு சிறிய பண்ணையை உருவாக்க வேண்டும் என்பதே ஜார்ஜின் கனவு. இதற்காகப் பணம் சேர்க்கிறான் ஆனால் அவர்கள் கனவு நிறைவேற வில்லை. எதிர்பாராமல் நடக்கும் ஒரு சம்பவம் அவர்கள் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது

பண்ணை வாழ்க்கையை மிக நேர்த்தியாக, நுட்பமாகப் படம் பதிவு செய்துள்ளது. அதிலும் பண்ணையில் நீண்டகாலம் வேலை செய்யும் கேண்டி என்ற கிழவர் தனது நாயைக் கொன்றது போல ஒரு நாள் தன்னையும் அவர்கள் கொன்றுவிடுவார்கள் என்று பயப்படுவதும் ஜார்ஜ் உடன் இணைந்து பண்ணை ஒன்றை வாங்கப் பணம் தருவதாகச் சொல்வதும் அற்புதம். கேண்டி மறக்கமுடியாத கதாபாத்திரம்.

க்ரூக்ஸ் என்ற கறுப்பின மனிதர் தனிமையால் பீடிக்கப்பட்டவர். அவருக்கும் லென்னிக்குமான உரையாடல் காட்சியும் முக்கியமானது.

கர்லியின் மனைவி இன்னொரு முக்கியமான கதாபாத்திரம். அவள் ஜார்ஜ் உடன் நட்பாகப் பழக முற்படுகிறாள். அவனோ விலகி விலகிப் போகிறான். இந்த நிலையில் தான் கர்லியை லென்னி தான் அடித்தான் என்பதை அறிந்து கொண்டு லென்னியை தேடிப் போகிறாள். அந்தக் காட்சியில் லென்னியும் அவளும் பேசிக் கொள்வதும் அவளை லென்னி ஆசையாக அணைப்பதும் தனித்துவமிக்கக் காட்சி.

தனது சொந்த அனுபவத்திலிருந்தே ஸ்டீன்பெக் இந்த நாவலை எழுதியிருக்கிறார். நாவலின் சில பக்கங்கள் மிக ஆபாசமாக எழுதப்பட்டிருப்பதாகக் கடுமையான விமர்சனத்தை ஸ்டீன்பெக் எதிர்கொண்டார். நாவல் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்தத் திரைப்படமும் கான்ஸ் திரைப்படவிழாவின் விருதுக்காகப் போட்டியிட்டது. ஆனால் விருதை வெல்லவில்லை.

லென்னி ஜார்ஜ் இருவருக்குமான  நட்பு அபூர்வமானது. அதைப் படம் மிக யதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறது.

0Shares
0