புகைப்படம் சொல்லும் உண்மை

ஒரு புகைப்படத்தால் உலகத்தையே தன் பக்கம் திருப்ப முடியும்.

சிறந்த புகைப்படக்கலைஞர்கள் சமகாலப் பிரச்சனைகளை உலகின் கவனத்திற்குக் கொண்டு வந்ததில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்கள்.

குறிப்பாக உலகப்போர் மற்றும் நாஜி இனப்படுகொலையின் குரூரங்களையும் ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சின் பாதிப்புகளையும் உலகமறியச் செய்ததில் புகைப்படக்கலைஞர்களின் பங்கு முக்கியமானது.

இன்றும் அழிந்து வரும் கானுயிர் வாழ்க்கை மற்றும் பற்றி எரியும் சமூகப்பிரச்சினைகளைத் தேடிப் புகைப்படக்கலைஞர்கள் பல்வேறு நாடுகளுக்குப் பயணிக்கிறார்கள். தனது புகைப்படத்தின் வழியே பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமையை மீட்டுத்தருகிறார்கள்.

புகைப்படம் பொய் சொல்லாது என்பார்கள். ஆனால் இன்றைய தொழில்நுட்ப உலகில் புகைப்படங்கள் தேவைக்கு ஏற்ப உருமாற்றம் அடைகின்றன. அதன் வழியே விரும்பும் பிம்பங்கள் கட்டமைக்கப்படுகின்றன.

அதே நேரம் சிறந்த புகைப்படக்கலைஞர்கள் இன்றும் நிகரற்ற புகைப்படங்களை எடுப்பதன் மூலம் அக்கலையின் மேன்மையை, தனித்துவத்தைக் காப்பாற்றி வருகிறார்கள். அவர்கள் கேமிராவின் வழியே உண்மையைப் பதிவு செய்கிறார்கள். மறைக்கப்பட்ட, உலகம் அறியாத நிஜத்தைக் கவனப்படுத்துகிறார்கள். காட்சிப்பொருளாக மாற்றுகிறார்கள்.

இந்த நூற்றாண்டின் முக்கியப் போராட்டங்கள் அத்தனையும் புகைப்படக்கலைஞர்களின் உறுதுணையோடு தான் வெற்றி பெற்றன. காட்சி ஊடகங்களின் வலிமை என்பது இந்த நூற்றாண்டின் தனித்துவம்.

ஒரு புகைப்படக்கலைஞரின் சமூகப் பொறுப்புணர்வினை விவரிக்கிறது Minamata திரைப்படம். உண்மை நிகழ்ச்சிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட படமிது.

அமெரிக்கப் புகைப்படக்கலைஞரான டபிள்யூ. யூஜின் ஸ்மித் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஜானி டெப் புகைப்படக்கலைஞராக நடித்திருக்கிறார். ஆண்ட்ரூ லெவிடாஸ் இயக்கி 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமிது

மினாமாட்டாவின் கதை 1970 களில் நடைபெறுகிறது

இரண்டாம் உலகப் போரின் போது யூஜின் ஸ்மித் எடுத்த புகைப்படங்கள் மிகுந்த புகழ்பெற்றன. ஆனால் போரின் குரூரத்தை நேரில் கண்டு மனச்சோர்வு கொண்ட ஸ்மித் வெளி உலகத்துடன் தனது தொடர்புகளைத் துண்டித்துவிட்டுத் தனி அறையில் வாழ்ந்து வருகிறார். அவரிடம் படச்சுருள் ஒன்றின் விளம்பரத்திற்காக வரும் அய்லின் மினாமாடா பிரச்சனையில் உதவி செய்யும்படி கேட்கிறாள்.

ஜப்பானின் மினாமாட்டா பகுதியிலுள்ள சிசோ என்ற வேதியியல் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளில் பாதரச நச்சுத்தன்மை அதிகமிருப்பதால் மினாமாட்டா விரிகுடா முழுவதும் சீர்கேடு ஏற்படுகிறது. இங்குள்ள தண்ணீர் மற்றும் மீன்களைப் பயன்படுத்திய மக்கள் முடக்குவாதம் மற்றும் மோசான உடற்பாதிப்புகளை அடைகிறார்கள்.

கை கால்களில் உணர்வின்மை உடற்சிதைவு. பார்வை இழப்பு, மற்றும் செவிப்புலன் இழப்பு ஏற்படுகிறது. நோய் முற்றிய நிலையில் பலரும் இறந்து போகிறார்கள். இந்த நோய் கருப்பையில் உள்ள சிசுவையும் பாதிக்கும் என்பதால் பிறக்கும் போதே குழந்தைகள் குறைபாடு உள்ளவர்களாகப் பிறக்கிறார்கள். இந்தப் பாதிப்பினை மினாமாட்டா நோய் என்று அழைக்கிறார்கள்.

1932 முதல் 1968 வரை, சிசோ நிறுவனம், கடலில் கலந்த கழிவுகள் காரணமாக ஒட்டுமொத்த விரிகுடா பகுதியும் பாதிக்கப்படுகிறது.

சிசோ தொழிற்சாலைக்கு எதிராக உள்ளூர் மக்கள் ஒன்று திரண்டு போராடிய போதும் எதுவும் நடக்கவில்லை. இந்தக் கொடுமையைப் பற்றி உலகம் அறிய வேண்டும் என்பதற்காகவே யூஜின் ஸ்மித்தை ஜப்பானுக்கு வரவழைக்கிறார்கள்.

அவர் லைப் இதழின் முக்கியப் புகைப்படக்கலைஞர். சிறந்த புகைப்படங்களுக்காக விருதுகளைப் பெற்றவர்.

ஜப்பானுக்குச் செல்லும் ஸ்மித் பாதரசக் கழிவினால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரடியாகக் காணுகிறார். அதை எதிர்த்துப் போராடுகிறவர்கள் எவ்வாறு அமைதி வழியில் தங்கள் எதிர்ப்பினைக் காட்டுகிறார்கள் என்பதைக் கண்டறிகிறார். தொழிற்சாலை நிர்வாகம் காவல்துறையின் ஒத்துழைப்போடு போராட்டக்காரர்களை ஒடுக்குகிறது. அவர்களின் கோரிக்கைகளைப் புறக்கணிக்கிறது.

இந்த நிலையில் பாதரச நச்சுத்தன்மையால் கைகால்கள் செயலற்று மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றவர்களை ரகசியமாக உள்ளே சென்று படமெடுக்கிறார் ஸ்மித். உடற்சிதைவால் பாதிக்கப்பட்டவர்களை நேரடியாகச் சந்தித்துப் புகைப்படம் எடுக்கிறார். மெல்லப் பிரச்சனையின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளத் துவங்குகிறார்

அவர் ஜப்பானுக்கு வருகை தரும் முதற்காட்சியில் மதுவும் பணமும் தான் அவருக்கு முதன்மையாகத் தோன்றுகிறது. ஆனால் பாதிப்பில் மக்கள் படும் துயரைக் கண்டதும் மனது மாறிவிடுகிறது.

தொழிற்சாலை உரிமையாளர் அவரை அழைத்து நீங்கள் புகைப்படம் எடுப்பதற்குக் கூட எங்கள் நிறுவனத்தின் இரசாயனம் தான் தேவை. ஆகவே போராட்டக்காரர்களை விடுத்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள், தேவையான வசதிகளைச் செய்து தருகிறோம் என்று பெரிய தொகையை லஞ்சமாகத் தர முன்வருகிறார்.

ஆனால் ஸ்மித் போராடும் மக்களுக்கு உறுதுணையாகவே நிற்கிறார். இதனால் நிறைய நெருக்கடிகளை சந்திக்கிறார். காவலர்களால் தாக்கப்படுகிறார். ஆனால் அவரது களச்செயல்பாடுகளை எந்த நெருக்கடியாலும் முடக்க இயலவில்லை.

படத்தில் ஸ்மித்தின் தனது கேமிராவை ஆயுதமாகப் பயன்படுத்துகிறார். அதன் வலிமையைக் கொண்டு கார்ப்பரேட் நிறுவனத்தை அடிபணிய வைக்கிறார். அவரது புகைப்படங்களில் வெளிப்படும் உண்மை உலகின் கவனத்தை ஈர்க்கிறது

ஸ்மித்திற்கும் கைகால்கள் பாதிப்புக் கொண்ட ஒரு பதின்வயது பையனுக்கும் ஏற்படும் நட்பு அழகாக விவரிக்கப்பட்டிருக்கிறது. அவனால் விளையாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை. மைதானத்தில் அமர்ந்தபடியே ஏக்கத்துடன் வேடிக்கை பார்க்கிறான். அவனது கையில் தனது கேமிராவை கொடுத்து விரும்பியதை எடுக்கும்படி சொல்கிறார் ஸ்மித். அவன் கேமிராவை ஆசையோடு இயக்குவது அழகான காட்சி.

கார்ப்பரேட் நிறுவனத்தின் மிரட்டலைக் கண்டு ஸ்மித் பயப்படவில்லை. உண்மையை அவர்களின் முகத்திற்கு எதிராகவே சொல்கிறார். ஒரு டாகுமெண்டரி போலவே திரைப்படம் பிரச்சனையின் மீதே குவிந்து செல்கிறது. நுட்பமாகப் போராட்டத்தின் வலிமையை உணர்த்துகிறது.

பெரிய ஸ்டுடியோ தயாரிக்கும் படங்களிலிருந்து விலகிச் செல்வதைத் தனது செயல்பாடாகக் கொண்டவர் நடிகர் ஜானி டெப், அந்தத் துணிச்சலின் அடுத்த கட்டமாக அவரே இந்தப் படத்தைத் தயாரித்து நடித்திருக்கிறார்.

ஸ்மித் அதி நவீன கேமிராவைப் பயன்படுத்துவதில்லை. தனக்குக் கிடைத்த எளிய கேமிராவைக் கொண்டு உன்னதமான புகைப்படங்களை எடுக்கிறார். ஒரு காட்சியில் ஊர்மக்கள் அனைவரும் அவரவர் கேமிராக்களைக் கொண்டு வந்து மேஜையில் போடுகிறார்கள். எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளச் சொல்கிறார்கள். என்ன கேமிரா என்பதை விடவும் அதை எப்படிக் கையாளப்போகிறோம். எதைப் படமாக்கப்போகிறோம் ஏன் என்பது முக்கியமானது என்பதை ஸ்மித் உணர்த்துகிறார்.

புகைப்படத்தில் பதிவாகும் தருணங்கள் உலகிலிருந்து விடைபெற்றுவிடக்கூடியவை. ஆனால் புகைப்படம் அதற்கு ஒரு நித்யதன்மையை அளிக்கிறது. அழகு என்பது காணும் கோணங்களின் வழியே உருவாகக்கூடியது என்பதைப் புரிய வைக்கிறது.

சுற்றுச்சூழல் பேரழிவுகளுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களையும் அவர்களின் போராட்ட வழிமுறைகளையும் படம் மிகவும் உண்மையாகச் சித்தரிக்கிறது. அந்த வகையில் இது முக்கியமான படமென்பேன்.

0Shares
0