புதுமைப்பித்தன் களஞ்சியம் வெளியீட்டு விழா

சிறந்த ஆய்வாளரும், சாகித்ய அகாதமி விருது பெற்றவருமான ஆ.இரா. வேங்கடாசலபதி தொகுத்துள்ள புதுமைப்பித்தன் களஞ்சியம் நூலின் வெளியீட்டு விழா நாளை நடைபெறுகிறது

அதில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.

சென்னை அடையாறில் உள்ள எம்ஐடிஎஸ் அரங்கில் நாளை பிற்பகல் மூன்று மணிக்கு (30.6.25) இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

புதுமைப்பித்தன் நினைவு நாளில் இந்த விழா நடப்பது மிகவும் பொருத்தமானது.

இந்த நிகழ்வில் கமலா விருத்தாசலம் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நூலான நினைவுத் தீ, மற்றும் தினகரி சொக்கலிங்கம் எழுதிய எந்தையும் தாயும் நூலும் வெளியிடப்படுகின்றன.

காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள புதுமைப்பித்தன் களஞ்சியம் நூல் புதுமைப்பித்தன் மறைவிற்குப் பின்பு அவர் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகள். அஞ்சலிகள் மற்றும் புதுமைப்பித்தன் குடும்ப நிதி குறித்த தகவல்கள். சுந்தர ராமசாமி தொகுத்த புதுமைப்பித்தன் நினைவு மலர். சிங்கப்பூரில் வெளியான புதுமைப்பித்தன் குறித்த விமர்சனக் கட்டுரைகள். மலேயாவில் வெளியான புதுமைப்பித்தன் நினைவு மலர், புதுமைப்பித்தனின் கவிதைகள் குறித்த விவாதங்கள். இடதுசாரிகளின் விமர்சனப் பார்வைகள், கமலா விருத்தாசலம் எழுதிய நினைவுக்குறிப்புகள், புதுமைப்பித்தனோடு பழகியவர்களின் நினைவுப்பதிவுகள் என விரிவான தகவல்களை, அரிய ஆவணங்களைக் கொண்டிருக்கிறது.

புதுமைப்பித்தனின் சிறுகதைகளைச் செம்பதிப்பாக கொண்டு வந்து சிறப்பித்த ஆ. இரா. வேங்கடாசலபதி தனது அயராத உழைப்பு மற்றும் தேடலின் விளைவாக இந்த பெருந்தொகுப்பினைக் கொண்டு வந்துள்ளார். 1167 பக்கங்களைக் கொண்டிருக்கிறது.

அவருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.

0Shares
0