புத்தகக் கண்காட்சியில் நேற்று

புத்தகக் கண்காட்சியில் நேற்றுமாலை காலந்தோறும் கதைகள் என்ற தலைப்பில் உரையாற்றினேன், நல்ல கூட்டம்,  கூட்டம் முடிந்து ஒரு மணி நேரம் நிறைய இளைஞர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன், புத்தக வாசிப்பு எந்த அளவு விரிவடைந்திருக்கிறது என்பதற்கு உதாரணமாக இருந்தது நேற்றைய மாலைச் சந்திப்பு

கடந்த வாரத்தில் தமிழகத்தில் அகழ்வாய்வுகள் நடைபெற்ற அரிய இடங்களைப் பார்வையிட நண்பர்களுடன் ஒரு பயணம் மேற்கொண்டேன், தமிழக வரலாற்றுச் சின்னங்கள் எந்த அளவு கண்டுகொள்ளப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றன என்பதைக் கண்கூடாக உணர முடிந்தது,

என்னுடன் நண்பர்கள்  பாலகிருஷ்ணன், துளசிதாசன் இருவரும் வந்திருந்தார்கள், தமிழக வரலாற்றை, விடுபடல்களை, மறைக்கபட்ட சரித்திர உண்மைகளை  நினைவுகூர்ந்து பல்வேறு விஷயங்களை விவாதித்தபடியே கடந்தது இப்பயணம்

இதில் கொற்கைப் பயணம் என்னைப் மிகவும் பரவசப்படுத்தியது, அது குறித்து விரிவாக எழுத இருக்கிறேன்,

இப்பயணத்தில் சேர்வலாறு பகுதியில் உள்ள காணிகளின் குடியிருப்பிற்குச் சென்று அந்த மக்களைச் சந்தித்துப் பேசியதும், கொடமாடி என்ற மலையின் அடர்ந்த, உச்சிப்பகுதிக்கு சென்று சேர்வலாற்றின் முகத்துவாரத்தில் குளித்து வந்ததும் மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது,

பயணத்தில் செல்போன் டவர் இல்லாத இடங்களில் தங்கியதால்  உலகில் இருந்து முற்றிலும் துண்டிக்கபட்டது போன்ற அற்புதமான தனிமையும் ஏகாந்தமும் கிடைத்தது,

புத்தகக் கண்காட்சியினை ஒட்டி சன்நியூஸ் தொலைக்காட்சியில் நான் ஒருங்கிணைப்பு செய்த புத்தகக் கண்ணாடி நிகழ்ச்சி நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது, இது குறித்த நிறைய மின்னஞ்சல்கள், தொலைபேசி வாழ்த்துகள் வந்தன.

தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்து பேசுவது எளிதானதாகயில்லை, நான் அந்தப் பணியை தட்டுத்தடுமாறித்தான் செய்தேன், புத்தக உலகம் குறித்த விவாத உரையாடல்கள் என்பதால் ஒரளவு சமாளிக்க முடிந்தது,

தொழில்முறை அறிவிப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் பணியின் சிரமத்தினை அப்போது தான் புரிந்து கொண்டேன், ஆனாலும் தொலைக்காட்சிக்காக ஒரு நிகழ்ச்சியைத் தயாரிக்கும் போது ஏற்படும் அனுபவங்கள் ஒரு புத்தகம் எழுதுமளவிற்கு சுவாரஸ்யமாக இருக்கின்றன

•••

சென்னைப் புத்தகக் கண்காட்சி மிகப் பிரம்மாண்டமாக உள்ளது, நந்தனம் மைதானம் பெரியது, அதன் உள்ளே தனியொரு உலகம் போல அமைந்திருக்கிறது புத்தகக் கண்காட்சி, அரங்க அமைப்பு மற்றும் ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளன, ஆனால் உள்ளே கடைகள் அளவில் மிகச்சிறியதாக இருப்பது முக்கியமான குறை, அதிக மக்கள் நெருக்கி அடித்து வருவதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டுவிடுகிறது,

பல்பொருள் அங்காடிகளில் உள்ள டிராலி போல புத்தகங்களை வாங்கி எடுத்துச் செல்லும் தள்ளுவண்டிகள் அறிமுகம் செய்யப்பட்டால் எளிதாக இருக்க கூடும்.

கடந்த ஆண்டுகளில் அமைக்கபட்டது போல கடைகளுக்கு இரண்டு வழிகள் கிடையாது, ஆகவே எந்தப் புத்தக கடையின் முன்பும் இருக்கைகள் போட முடியாத நெருக்கடி உள்ளது, மேலும் வாசகர்கள் எழுத்தாளர்களைச் சந்தித்து பேசுவதற்கோ, வாசகர்களுக்கு  எழுத்தாளர்கள் கையெழுத்துப் போட்டு தருவதற்கோ வசதிகள் எதுவுமில்லை.

தேர்திருவிழாவில் மக்கள் ஒருவரையொருவர் இடித்துத் தள்ளி இழுத்துக் கொண்டு போவதைப் போல புத்தக அரங்கின் உள்ளே இழுத்துக் கொண்டு போய், தானே வெளியே தள்ளிவிடுகிறார்கள்,

நேற்று குறைவான புத்தகக் கடைகளைத் தான் பார்வையிட முடிந்தது,

இதில் நான் வாங்கிய முக்கியமான புத்தகங்கள் இவை

 1. சினிமா- சட்டகமும் சாளரமும் / சொர்ணவேல், டாகுமெண்டரி படங்கள் குறித்த அரிய நூல், நிழல் வெளியீடு
 2. டான் குவிக்ஸாட் / செர்வான்டிஸ் முதல்பாகம், உலகப்புகழ்பெற்ற நாவலின் மொழியாக்கம், சந்தியா பதிப்பகம்
 3. அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு /பில்பிரைசன் சிறந்த அறிவியல் கட்டுரைகள்,  அரிய வரலாற்று தேடுதல்கள் கொண்ட நூல், பாரதி புத்தகாலயம்
 4. வலசை / சிறந்த இலக்கியச் சிற்றிதழ், வலசை வெளியீடு
 5. மாற்றுவெளி /காலின் மெக்கன்சி சிறப்பிதழ் , மாற்று வெளியீடு
 6. பெரிய சிறகுடைய ஒரு வயோதிக மனிதன்,/  கூத்தின் பனுவல், போதிவனம் வெளியீடு
 7. அம்பர்தோ ஈகோ /நேர்காணல்கள்  அகம்புறம் பதிப்பகம்
 8. பாம்பும் கயிறும் / ராஜா ராவ்/  சிறந்த இந்திய நாவல் / சாகித்ய அகாதமிவெளியீடு
 9. குழந்தை மொழியும் ஆசிரியரும் / ஒரு கையேடு, கிருஷ்ணகுமார், நேஷனல் புக் டிரஸ்ட்
 10. ஜெயம்/ மகாபாரதம் ஒரு மறுபார்வை / தேவ்தத் பட்நாயக்/ விகடன் பிரசுரம்
 11. மகாபாரத மனிதர்கள் காட்டும் மகத்தான வாழ்க்கை/ குர்சரண் தாஸ்/ விகடன் பிரசுரம் வெளியீடு
 12. உள்ளம் நெகிழும் ஒரியக்கதைகள் / தொகுப்பு  கோபிநாத் மொகந்தி, /சாகித்ய அகாதமிவெளியீடு

•••

0Shares
0