புத்தகக் கண்காட்சியில் -1

நேற்று மாலை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். நல்ல கூட்டம். வாகன நெரிசலில் உள்ளே நுழைய முடியவில்லை. மிக நெருக்கமாக அரங்கு அமைத்துள்ளார்கள். ஆட்கள் இடித்துக் கொண்டு போகுமளவு நடைபாதை மிக குறுகலாக உள்ளது. எந்தக் கடை எங்கே உள்ளது எனக் கண்டுபிடிப்பது மிகச் சவாலான வேலை. வழக்கமாக இதற்கு ஒரு வரைபடம் தருவார்கள். அது இன்னும் தயாராகவில்லை என்றார்கள்.

தேசாந்திரி பதிப்ப அரங்கில் நிறைய வாசகர்களைச் சந்தித்தேன். அதில் சிலர் ஒவ்வொரு ஆண்டும் எனது அரங்கிற்கு வந்து பைநிறைய புத்தகங்களை வாங்கிக் கையெழுத்துப் பெற்றுக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொள்பவர்கள். இவர்கள் அன்பிற்குக் கைமாறே கிடையாது.

தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ள உலகப்புகழ் பெற்ற முறிந்தபாலம் நாவலை வாங்க வேண்டும் என்பதற்காகவே ஒரு வாசகர் வந்திருந்தார். கோவையில் நான் உரையாற்றியபோது இந்த நாவலைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதை நினைவுவைத்திருந்து எனது அரங்கைத் தேடி வந்து நாவலைப் பெற்றுக் கொண்டார்.

முறிந்தபாலம் – Thorton Wilder’s The Bridge Of San Luis Rey  நாவலின் தமிழாக்கம் . உலகப் புகழ்பெற்ற இந்த நாவல் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது

0Shares
0