புத்தகக் காட்சி தினங்கள் 1

நேற்று மாலை 4 மணிக்கு சென்னை புத்தகக் காட்சிக்குச் சென்றிருந்தேன்.

சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும் என்பதால் வழக்கத்தை விட மிக அகலமான, பெரிய நடைபாதைகளை அமைத்திருக்கிறார்கள். கண்காட்சி அரங்குகள் சிறப்பாக அமைக்கபட்டிருந்தன.

புத்தகக் கண்காட்சிக்கு சென்று வாசகர்களைச் சந்தித்து உரையாடுவது என்பது பேட்டரியை ரீசார்ஜ் செய்து கொள்வது போன்றது. வாசகர்களின் தீராத அன்பும் பாராட்டும் ,எழுத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையுமே என்னைத் தொடர்ந்து இயங்கச் செய்கிறது. எத்தனை விதமான வாசகர்கள். அவர்களுடன் உரையாடவும் அவர்களின் பல்வேறு வகை கேள்விகளுக்குப் பதில் சொல்லவும் கிடைக்கும் இந்தச் சந்தர்ப்பம் முக்கியமானது.

குறிப்பாக இப்போது தான் எழுதத் துவங்கியுள்ள இளைஞர்கள் பலரைச் சந்திக்க முடிவதும், வாசிப்பில் தீவிரம் கொண்டுள்ள இளைஞர்களுடன் உரையாடுவதும் இனிமையான அனுபவம்.

சிலர் என்னோடு ஒரு செல்பி எடுத்துக் கொள்வதோடு சரி, புத்தகங்கள் வாங்க மாட்டார்கள். ஆனாலும் அவர்களின் வேண்டுகோளை நான் ஒரு போதும் மறுப்பதில்லை. மகிழ்ச்சியின் அடையாளமாக நினைக்கிறார்கள். அப்படியே இருக்கட்டுமே

ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சிக்கு வந்து எனது புத்தகங்களை வாங்கி அதில் கையெழுத்து பெற்றுக் கொண்டு கூடவே ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்கிறவர்கள் நிறைய இருக்கிறார்கள்.

நேற்றும் ஒரு நண்பர் அப்படி எட்டு வருஷங்களில் எடுத்த புகைப்படங்களைக் காட்டினார். தன் வீட்டின் புத்தக அலமாரியில் இரண்டு வரிசைகள் முழுவதும் எனது புத்தகங்கள் மட்டுமே இருப்பதாகச் சொன்னார். இந்த அன்பு தான் எழுத்தில் நான் சம்பாதித்த சொத்து.

காவல்துறையில் பணியாற்றும் ஒரு வாசகர் கைநிறைய எனது புத்தகங்களை வாங்கிக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு கம்பீரமாக ஒரு சல்யூட் அடித்துச் சென்றார்.

ஒரு சிறுமி என்னிடம் வந்து எங்கம்மா உங்க ரீடர். அவங்க உங்களோட ஒரு போட்டோ எடுத்துக்கிடலாமா என்று கேட்டாள். மகிழ்ச்சியோடு அவர்களை அருகில் அழைத்தேன். குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.

அந்தப் பெண்ணின் கணவர் தனக்குப் புத்தகம் படிக்கிற பழக்கமில்லை. ஆனால் தன் மனைவி நிறைய படிக்க கூடியவர். அவருக்காகவே புத்தகக் கண்காட்சிக்கு வந்தோம் என்றார். பெரம்பூரில் வசிக்கும் நடுத்தர வர்க்கக் குடும்பம். ஆண்டிற்கு ஒரு முறை புத்தகக் கண்காட்சிக்கு வந்து தேவையான அத்தனை புத்தகங்களையும் வாங்கிக் கொண்டுவிடுவதாக அந்தப் பெண் சொன்னார். அத்தோடு வீட்டில் சமைக்கும் நேரம் யூடியூப்பில் எனது இலக்கிய உரைகளை கேட்பதாகவும் சொன்னார்.

உங்கள் சமையல் அறை வரை தஸ்தாயெவ்ஸ்கியும் செகாவும் வந்துவிட்டார்கள் என்பது சந்தோஷமாக இருக்கிறது என்றேன். அந்தப் பெண் புன்சிரிப்புடன் எங்க வீட்டுக்கு ஒரு நாள் வருவீர்களா என்று கேட்டார். நேரம் கிடைக்கும் போது அவசியம் வருகிறேன் என்று சொன்னேன்.

இரண்டு பை நிறையப் புத்தகங்களுடன் அவர்கள் நடந்து போவதைக் காண அத்தனை சந்தோஷமாக இருந்தது.

ஸ்ருதி டிவி கபிலன் மற்றும் சுரேஷ் தேசாந்திரி அரங்கில் சிறிய நேரலை நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார்கள். இலக்கியத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அவரது பணி மிகுந்த நன்றிக்குரியது

நியூஸ் 7, ஜெயா டிவி மற்றும் இரண்டு யூடியூப் சேனல்கள் புத்தகக் கண்காட்சி குறித்த எனது கருத்துகளைப் பதிவு செய்தார்கள்.

எழுத்தாளர் உத்தமசோழனின் மகன் என்னைச் சந்தித்து தனது தந்தை எழுதிய ‘சுந்தரவல்லி சொல்லாத கதை’ எனும் புதிய நாவலைக் கொடுத்தார். ஆயிரம் பக்கங்களுக்கும் மேலுள்ள நாவல். கீழத்தஞ்சை மாவட்டத்தின் தென்பகுதியிலுள்ள விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் வாழ்க்கையை எழுதியிருக்கிறார். உத்தமசோழன் இனிய நண்பர். அவரது நலத்தை விசாரித்தேன்.

நேற்று புத்தகக் கண்காட்சிக்கு போய் திரும்பும் போது தான் இயல்பு வாழ்க்கை துவங்கியிருப்பதாக உணரத் துவங்கினேன்.

••

0Shares
0