புத்தகக் காட்சி தினங்கள் -3

சனிக்கிழமை இருந்த கூட்டத்தைப் போல நேற்று இரண்டு மடங்கு அதிக கூட்டமிருந்தது. எனது கார் உள்ளே செல்ல இயலவில்லை. நீண்ட நேரம் காத்திருந்து உள்ளே சென்றேன். திருவிழாக் கூட்டம். இத்தனை பேர் புத்தகங்களை ஆசையாக வாங்குகிறார்கள் என்பது சந்தோஷம் அளித்தது

நீண்ட நேரம் முகக் கவசம் அணிந்து கொண்டு இருப்பது மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது. மேலும் புகைப்படம் எடுக்கும் அனைவரும் முகக்கவசத்தை நீக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆகவே கண்காட்சியில் நிறைய நேரம் முகக்கவசம் அணிய இயலவில்லை. சானிடைசர் வைத்து கைகளைச் சுத்தம் செய்து கொள்கிறேன்.

நேற்று மாலை வானம் பதிப்பகம் மணிகண்டன் அவர்களின் மகன் ரமணாவின் புத்தக வெளியீடு. சிம்பாவின் சுற்றுலா என்ற சிறார் கதை. ரமணா ஆறு வயதான இளம் எழுத்தாளர். அவரது நூலை வெளியிட்டு வாழ்த்தினேன். எட்டு வயது, பத்து வயதில் என சுற்றிலும் நிறைய சிறார் எழுத்தாளர்கள். இத்தனை சிறுவர்கள் கதை எழுத வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை உருவாக்கியது.

தனது நூலிற்கான ராயல்டி தொகையாக ஆயிரம் ரூபாயை விழா அரங்கில் ரமணா பெற்றுக் கொண்டான். போராடாமல் ராயல்டி பெறும் அதிர்ஷடசாலியான எழுத்தாளர் என்று கேலியாகச் சொன்னேன். நிகழ்வினை எழுத்தாளர் அகரமுதல்வன் தொகுத்து வழங்கினார்.

நேற்று என்னிடம் கையெழுத்துப் பெற வந்த ஒரு வாசகர் புத்தகத்தின் 11 வது பக்கத்தில் கையெழுத்துப் போடச்சொன்னார். இது என்ன புது பழக்கம் எனக்கேட்டேன். நான் எல்லா நூலிலும் 11 வது பக்கத்தில் தான் கையெழுத்து வாங்குவேன் என்றார். எழுத்தாளர்களை விடவும் வாசகர்கள் விசித்திரமானவர்கள்

ஆன்டன் செகாவைப் பற்றிய எனது உரைகளைக் கேட்டு. அவரது சிறுகதைகளை வாசித்த ஒரு இளம்வாசகர் செகாவ் மீதான அபிமானத்தால் 2018ம் ஆண்டு ரஷ்யாவிற்கு பயணம் செய்து செகாவ் நினைவில்லத்தையும், ரஷ்ய எழுத்தாளர்கள்களின் நினைவகங்களையும் பார்த்து திரும்பியிருக்கிறார். நிஜமாகவா என வியப்புடன் கேட்டேன். அவர் தன் செல்போனில் இருந்த புகைப்படங்களைக் காட்டினார். தான் சேமித்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு திடீரென ரஷ்யப்பயணம் புறப்பட்டு விட்டதாகவும் செகாவ் பற்றிய எனது உரையே இதற்கான தூண்டுதல் என்று சொன்னார். எப்படி எல்லாம் வாசகர்கள் நடந்து கொள்கிறார்கள் பாருங்கள்.

கதாவிலாசம் நூலின் ஒரு பிரதியை ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் வாங்கிச் செல்லும் ஒரு வாசகர் நேற்று வந்திருந்தார். அந்த நூல் வெளியானது முதல் ஆண்டு தோறும் அதன் ஒரு பிரதியை வாங்கிப் போகிறேன். பிடித்த சினிமாவை திரும்பத் திரும்ப பார்ப்பது போல எனக்கு இந்தப் புத்தகத்தை திரும்ப திரும்ப படிக்கப் பிடிக்கும். அட்டை கிழிந்து போகும் அளவு படித்துவிடுவேன். அதனால் ஆண்டுக்கு ஒருமுறை புத்தகக் கண்காட்சியில் புதிய பிரதி ஒன்றை வாங்கிக் கொண்டு விடுகிறேன் என்றார். இப்படியான வாசகர்கள் இருப்பது பெரும் அதிர்ஷ்டம்

எம். ஓ. பி வைணவ மகளிர் கல்லூரி மாணவிகள் பத்து பேர் நேற்று என்னைச் சந்தித்து கேள்விபதில் நிகழ்ச்சி ஒன்றினைப் பதிவு செய்தார்கள். நல்ல கேள்விகளை கேட்டார்கள். வாசிப்பின் மீது மாணவிகள் கொண்டுள்ள ஈடுபாட்டினை பெரிதும் பாராட்டினேன்

சென்னை ஒவியக்கல்லூரி மாணவர்கள் நேற்று தேசாந்திரி அரங்கிற்கு வருகை தந்து பிகாசோவின் கோடுகள். சித்திரங்களின் விசித்திரங்கள். ஆயிரம் வண்ணங்கள் என்ற எனது ஒவியம் குறித்த நூல்களை வாங்கிக் கொண்டு போனார்கள். ஒவியக்கல்லூரிக்கு ஒரு நாள் வந்து உரையாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்கள். அவசியம் வருவதாகச் சொன்னேன்.

கடலூர் சீனு தனது நண்பர்களுடன் அரங்கிற்கு வருகை தந்து உரையாடினார். இனிமையான சந்திப்பு.

சென்னையும் நானும் காணொளித் தொடரின் இரண்டாவது சீசனை வெளியிடுங்கள் என்று இரண்டு இளைஞர்கள் கோரிக்கை வைத்தார்கள். அந்தக் காணொளித் தொடர் நிறையப் பேருக்குப் பிடித்திருப்பது சந்தோஷம் தருகிறது.

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவர் தனது பிள்ளைகளுடன் வந்திருந்தார். நியை நூல்களை வாங்கினார். எனது இடக்கை நாவல் குறித்து மருத்துவ நண்பர்கள் ஒரு இணையவழி உரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளதாகச் சொன்னார். நேரமிருந்தால் அவசியம் கலந்து கொள்வதாகச் சொன்னேன்.

எனது ஏழு நாள் உலக இலக்கியச் சொற்பொழிகளையும் கேட்ட ஒரு வாசகர் அந்த நூல்களை புத்தகக் கண்காட்சியில் வாங்கிக் கொண்டு வந்து அதில் எனது கையெழுத்தினைப் பெற்றுக் கொண்டு போனார். உங்கள் உரையை கேட்டதும் அவற்றை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது என்றார்.

வித்தியாசமான வாசகர்களைச் சந்திப்பதும் அவர்களுடன் உரையாடுவதும் மகிழ்ச்சியான அனுபவமாகவே இருக்கிறது. புத்தகக் கண்காட்சி இல்லாவிட்டால் இதற்கான சந்தர்ப்பமேயில்லாமல் போய்விடும்.

••

0Shares
0