.
புத்தகங்களின் எதிர்காலம் எப்படியிருக்கும்.? என்ற கேள்வி பொதுவெளியில் தொடர்ந்து எழுப்பபட்டு வருகிறது
அச்சுப் புத்தகங்கள் வெளியிடுவது குறைந்துவிடும். மின் புத்தகங்களே (EBOOKS) அதிகம் வெளியிடப்படும் என்று சொல்கிறார்கள். அப்படியில்லை. அச்சுப் புத்தகங்களுக்கான வாசகர்கள் எப்போதும் இருப்பார்கள். மின் புத்தகம் இன்னொரு வடிவம் மட்டுமே. அதனால் பதிப்புத் தொழில் விரிவடையுமே அன்றி முடிவிற்கு வந்துவிடாது என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.
பதிப்புத்துறையின் இன்றைய சவால்களைப் பற்றி விவாதிக்கும் படமாக ஆலிவர் அஸ்ஸாயஸ் (Olivier Assayas )இயக்கிய Non-Fiction வெளிவந்துள்ளது. படம் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், விமர்சகர்கள் என மூவருக்குமான உறவைப் பேசுகிறது. சமீபத்தில் பார்த்த படங்களில் என்னை மிகவும் கவர்ந்த படமிது.
எல்லாத் துறைகளிலும் ஏற்பட்டு வரும் மாற்றத்தைப் போலவே பதிப்புத் துறையிலும் டிஜிட்டல் மயமாக்கம் வேகமாக நடைபெறுகிறது. இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்வதா, வேண்டாமா. அல்லது எவ்வளவு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி பதிப்பாளர்கள் தீவிரமாக யோசிக்கிறார்கள். சிலர் உடனடியாக மாற்றத்தை ஏற்றுக் கொண்டு நடைமுறைப் படுத்துகிறார்கள். சிலர் மரபாக அச்சுப் புத்தகம் வெளியிடுவது மட்டுமே போதும் என நிறுத்திக் கொள்கிறார்கள். இதில் பதிப்பாளர் எடுக்கும் முடிவே இறுதியானது.
படத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள் பிரெஞ்சு பதிப்புத்துறைக்கு மட்டுமின்றி நம் அனைவருக்கும் பொதுவானதே,
படத்தின் ஒரு காட்சியில் பதிப்புத்துறை குறித்த விவாதமேடை நடைபெறுகிறது. அதில் எக்ஸ்பிரஸோ காபி இயந்திரம் போல நாளை புத்தகம் தயாரிக்கும் இயந்திரம் வந்துவிடும். அதைப் புத்தகக் கடையில் நிறுவி விடுவார்கள். நீங்கள் எந்தப் புத்தகம் கேட்டாலும் இயந்திரம் ஐந்து நிமிஷத்தில் புத்தகத்தை அச்சிட்டுத் தந்துவிடும். அதுவும் எது போன்ற பதிப்பு வேண்டும் என்று தேர்வு செய்தால் அதே பதிப்பை அச்சிட்டுத் தந்துவிடும். சுடச்சுடப் புத்தகத்தை வாங்கிக் கொள்ள முடியும் என்று ஒரு பெண் சொல்கிறார்கள். அது சாத்தியமே
இன்றே அமேசான் அச்சில் இல்லாத ஆங்கிலப் புத்தகங்களை உங்களுக்கென ஒரு பிரதி மட்டுமே அச்சிட்டுத் தருகிறது. விலை அதிகம்.
தற்போதைய POD எனப்படும் print on demand தொழில்நுட்பம் அதைச் சாத்தியப்படுத்திவிட்டது. POD இயந்திரத்தின் விலை ஜெராக்ஸ் மெஷின் அளவிற்குக் குறையும் போது படத்தில் சொல்லப்படுவது போன்ற எக்ஸ்பிரஸோ மெஷின் வந்துவிடும்.
புத்தகங்களுக்கு அதிக விலை வைக்கப்படுவதைக் குற்றச்சாட்டாக ஒருவர் சொல்லும் போது, பதிப்பாளர் அதை மறுத்து நீங்கள் குடிக்கும் காபியிலிருந்து, அணியும் உடை வரை எத்தனை மடங்கு விலை கூடியிருக்கிறது என்று ஒப்பிட்டுப் பாருங்கள். என்கிறார். அத்தோடு விலை மலிவாகக் கிடைப்பதால் மட்டும் அனைவரும் புத்தகங்களை வாங்கிவிட மாட்டார்கள். இது ஒரு போலியான குற்றச்சாட்டு என்றும் பதில் தருகிறார்.
செல்போனிலும், ஐபேடிலும் சினிமா பார்க்கும் நம் காலத்திலும் திரையரங்கங்கள் அழிந்துவிடவில்லை. மாறாகப் பெருந்திரளாக மக்கள் அரங்கிற்குச் சென்றே படம் பார்க்கிறார்கள். அச்சுப்புத்தகங்களுக்கும் அப்படியான நிலை தான் இருக்கும் என்று படத்தின் நாயகன் சொல்கிறார்.
அத்தோடு உலகெங்கும் நடைபெறும் புத்தகச் சந்தைகள் புதிய வாசகர்களின் எண்ணிக்கை பெருகியிருப்பதைக் காட்டுகிறது. என்றும் சொல்கிறார்
பிரான்சில் பொதுவாகப் புத்தக விற்பனை குறைந்து வருகிறது. மக்கள் புத்தகங்களை வாங்குவதை விடப் பிரபலமான எழுத்தாளர்களின் வலைப்பதிவுகள், டிவிட்டர்களை அதிகம் படிக்கிறார்கள். பின்தொடருகிறார்கள். ஆகவே புகழ்பெற்ற எழுத்தாளருக்கும் கூடப் புத்தகம் எழுதுவது மட்டும் போதுமானதாகயில்லை. அவர் சமூக ஊடகங்களில், இணையத்தில் தீவிரமாக இயங்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
புத்தக விமர்சகர்களால் இனி எந்தப் புத்தகத்தினையும் டிரெண்ட் செட் செய்ய இயலாது. வாசகர்களே புத்தகங்களை அறிமுகம் மற்றும் விமசர்னம் செய்யத் துவங்கி விட்டார்கள். ஆகவே விமர்சகரின் இடமும் மதிப்பும் குறைந்து வருகிறது. மக்கள் நல்ல மதிப்புரைகளைப் படிப்பதற்குப் பதிலாக எத்தனை ஸ்டார் பெற்றுள்ளது என்பதையே அதிகம் கவனிக்கிறார்கள். நவீன கால ஹைக்கூவாக இருப்பது இன்று எழுதப்படும் டுவீட்டுகளே. எனப் படத்தில் குறிப்பிடுகிறார்கள்.
மின்புத்தகங்களை எவ்வளவு வேண்டுமானாலும் எளிதாகக் கொண்டு போகலாம் என ஒரு காட்சியில் ஒருவர் சொல்கிறார். அதற்கு ஒரு பெண் உங்கள் பயணத்திற்குத் தேவை ஒன்று அல்லது இரண்டு புத்தகங்கள் தானே, எதற்கு ஒரு நூலகத்தையே தூக்கிக் கொண்டு போக ஆசைப்படுகிறீர்கள். இத்தனை ஆண்டுகள் ஒரு புத்தகத்துடன் தான் பயணம் செய்தேன். இப்போதும் அதைத் தொடரவே விரும்புகிறேன் என்கிறார்.
அவர் சொல்வது நிஜம். நான் பயணத்தின் போது ஒன்றோ இரண்டோ புத்தகங்களைத் தான் கொண்டு செல்வேன். படித்து முடித்துவிட்டால் போகிற இடத்தில் புதிதாக ஒன்றோ இரண்டோ புத்தகம் வாங்கிக் கொள்வேன்.
இன்று உலகின் மிகப்பெரிய நூலகம் கூகுள் உருவாக்கியுள்ள இணைய நூலகம் தான். அதில் கோடிக்கணக்கில் புத்தகங்கள் கொட்டிக்கிடக்கின்றன .ஆகவே உள்ளூர் நூலகங்களைத் தேடி இனி நாம் போக வேண்டியதில்லை. நமது கையருகே இணைய நூலகம் விரிந்திருக்கிறது என்று படத்தின் வேறு காட்சியில் ஒரு கதாபாத்திரம் சொல்கிறது.
அது உண்மையே ஆனால் நிஜமான நூலகத்திற்குச் செல்லும் அனுபவம் அதில் கிடைக்காதே என்று மற்றொரு கதாபாத்திரம் மறுப்புத் தெரிவிக்கிறது. நல்லதொரு உரையாடலது.
கள்ளத்தனமாகப் புத்தகங்களை அச்சிட்டு விற்பதைப் பற்றி விவாதிக்கும் போது இசை, சினிமா போலப் புத்தகங்கள் அதிகம் திருடப்படுவதில்லை. அதை இளைஞர்கள் அதிகம் விரும்புவதில்லை என்பதே காரணம் என இன்னொரு காட்சியில் சொல்கிறார்கள்.
எழுத்தாளர்கள் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சியில் நடத்தப்படும் விதம், எழுத்தாளர்களுக்கும் பதிப்பகத்தினருக்குமான உறவு. தனது புத்தகத்தை வெளியிட எழுத்தாளன் மேற்கொள்ளும் போராட்டங்கள் எனப் பதிப்புலகை நிஜமாக, நுண்மையாகப் படம் விவரித்துள்ளது.
தகவல்தொடர்பு சாதனங்களின் அதிவேக வளர்ச்சியானது கலாச்சார அடையாளத்தின் மீது என்ன வகையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது? என்ற கேள்வியை எழுப்புகிறார் இயக்குநர்.
மாற்றத்தை ஒருவர் எப்படி எதிர்கொள்வது எனப் படம் எழுப்பும் கேள்வி பதிப்புத் துறைக்கானது மட்டுமில்லை. இன்றைய வாழ்க்கை முறைக்கும், அது விஸ்வரூபமாக விரித்திருக்கும் நுகர்வு பண்பாட்டிற்கும் பொருந்தக்கூடியதே