சென்னை புத்தகக் காட்சியில் இரண்டு நாட்களாக மாலை வேளைகளில் நிறைய புதிய வாசகர்களைச் சந்திக்க முடிந்தது, துயில் நாவலை நிறைய இளம் மருத்துவர்கள் வாங்கிப் படித்து ஆழமாக விவாதித்தது சந்தோஷம் தருவதாக இருந்தது
சென்னை புத்தகக் காட்சியில் நான் பரிந்துரைக்கும் முக்கியப்புத்தகங்கள் இவை.
1) இதற்கு முன்பும் இதற்குப் பின்பும்
மனுஷ்யபுத்திரனின் சமீபத்திய கவிதை தொகுப்பு. சமீபத்தில் நான் வாசித்த ஆகச்சிறந்த கவிதைகள் இதில் உள்ளன, நவீன தமிழ்கவிதையில் புதிய பாய்ச்சலை உருவாக்கியுள்ள இந்தக் கவிதை தொகுப்பு மிக முக்கியமானது, நிராகரிப்பும் அவமதிப்பும் கொண்ட வாழ்வை கவிஞன் எதிர்கொள்ளும் சவாலை இந்த கவிதைகள் நுட்பமாக அடையாளம் காட்டுகின்றன.
உயிர்மை பதிப்பகம் விலை ரூ 190
2) அசையும் படம்
சினிமா கலை ரசனை இயக்கம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகம் ஒரு முழுமையான ஒளிப்பதிவு கையேடு, இதை எழுதியிருப்பவர் ஒளிப்பதிவாளர் சி, ஜெ, ராஜ்குமார். இவர் கனவு மெய்ப்பட வேண்டும், மண், பெரியார் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார், இந்தப் புத்தகம் ஒளிப்பதிவின் வரலாற்றை துல்லியமாக விவரிப்பதோடு சினிமா எப்படி உருவாகிறது என்று அதன் அத்தனை தொழில் நுட்ப அம்சங்களையும் விரிவாக, எளிமையாக விவரிக்கிறது, முதன்முறையாக இது போன்ற புத்தகம் தமிழில் வெளியாகி உள்ளது, திரைக்கலை பயிலும் மாணவர்களும். உதவி இயக்குனர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகமிது,
விஜயா புத்தக கடையில் கிடைக்கிறது, விலை ரூ 150
3) மனம் கொத்திப் பறவை
நண்பர் சாருநிவேதிதா ஆனந்தவிகடனில் தொடராக எழுதிய மனம் கொத்திப்பறவை விகடனில் நேர்த்தியான புத்தகமாக வெளியாகி உள்ளது, சமகால உலக இலக்கியம், உலகசினிமா, அரசியல் என பல தளங்களில் ஆழ்ந்த வாசிப்பு அனுபவமும். கேலியும் தார்மீக கோபமும் பரபரப்பும். கொண்டதாக எழுதப்பட்ட இந்தப் புத்தகம் வாசிப்பில் புதிய எழுச்சி தருகிறது
விகடன் பிரசுரம் விலை ரூ 85
4) லா.ச.ராமாமிருதம் கதைகள்
தமிழ் சிறுகதையில் கவித்துவ எழுத்துமுறையை உருவாக்கிய முன்னோடி ஆளுமையான லா.ச.ராவின் மொத்த சிறுகதைகள் நான்கு தொகுதிகளாக உயிர்மை பதிப்பகம் தேர்ந்த பதிப்பாக வெளியிட்டுள்ளது ஒரு சேர லா.ச.ராவை வாசிப்பது உன்னதமான அனுபவம்,
உயிர்மை பதிப்பகம் ஒரு தொகுதியின் விலை ரூ 300
5) போர்க்கலை
புகழ்பெற்ற சீன யுத்தக்கலை நூலான The Art of War தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது, இதனை மொழிபெயர்ப்பு செய்துள்ளவர் பொன் சின்னதம்பி முருகேசன், சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது, சன்ஸீ எழுதிய இந்த நூல் இன்று உலகின் பல்வேறு பல்கலைகழகங்களில் எம்பிஏ மாணவர்களுக்குப் பாடமாக உள்ளது, இது வெறும் போர்க்கலை நூல் மட்டுமில்லை மாறாக வாழ்வுண்மைகளை. சுயதிட்டமிடுதலைப்பற்றிய அருமையான புத்தகம்
சந்தியாபதிப்பகம் விலை ரூ 60
6) கடல்
புக்கர் பரிசு பெற்ற நாவலான ஜான் பான்வில்லின் கடல் தமிழில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. ஐரீஷ் எழுத்தாளரான ஜான் பான்வில் சமகால உலக இலக்கியத்தில் முக்கியமானவர். இந்த நாவலை தமிழாக்கம் செய்திருப்பவர் ஜி குப்புசாமி. சிறந்த மொழிபெயர்ப்பாளரான இவர் முன்னதாக நோபல்பரிசு பெற்ற நாவலான ஒரான் பாமுக்கின் என் பெயர் சிவப்பு நாவலை மொழியாக்கம் செய்து பாராட்டு பெற்றவர்
காலச்சுவடு பதிப்பகம் விலை ரூ 125
7) அர்ச்சுன்ன் தபசு
சா.பாலுசாமி எழுதியுள்ள இந்த புத்தகம் மாமல்லபுரத்து கலைப்பற்றி வெளிவந்த தமிழ் நூல்களில் மிகவும் சிறப்பு மிக்கது.மாமல்லபுர சிற்பத்தொகுதியை நுட்பமாக ஆராய்ந்து விரிவாக எழுதப்பட்டுள்ளது சிற்பக்கலை குறித்து இவ்வளவு விரிவான புத்தகம் தமிழில் வெளியாவது இதுவே முதல்முறை.
காலச்சுவடு பதிப்பகம் விலை ரூ 300
8) சோழர்கால ஒவியங்கள்
தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சோழர்கால ஒவியங்கள் குறித்து வண்ணப்படங்களுடன் வெளியாகி உள்ள மிக முக்கியமான புத்தகமிது, தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது, மாதிரி கோட்டு சித்தரங்களுட்ன மூல ஒவியங்கள் அச்சிடப்பட்டுள்ளது 156 பக்கம் உள்ள ரூ 500 விலை உள்ள இந்த புத்தகம் கண்காட்சியில் சலுகை விலையில் ரூ.375க்கு கிடைக்கிறது
தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம் ரூ.375
9) அந்தரத்தில் நின்ற நீர்
நவீன கன்னட சிறுகதைகளில் முக்கிய எழுத்தாளர் எஸ் திவாகர் இவரது கதைகளின் மொழியாக்கம் இது. தி.சு, சதாசிவம் மொழியாக்கம் செய்துள்ளார் சென்னைவாழ்க்கையை பற்றி கன்னடத்தில் எழுதியிருப்பதே இதன் கூடுதல் சிறப்பு. திவாகர் மிகைபுனைவு கதைகள் எழுதுவதில் சிறப்பானவர். இவரது கதைகள் ஆங்கிலம் பிரெஞ்சு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி உள்ளது, உலகப்புகழ்பெற்ற ஒரு நவீன சிறுகதை எழுத்தாளரது முக்கிய சிறுகதைகள் தமிழில் வெளியாகி ஐந்து ஆண்டுகளாக ஆகிவிட்டன ஆனாலும் சரியான கவனம் கிடைக்கவில்லை. அவசியம் வாசிக்கப்பட வேண்டிய புத்தகமிது
சந்தியா பதிப்பகம் விலை ரூ.90
10) முத்துக்குளித்துறையில் போர்த்துகீசியர்
போர்த்துகீசியர் காலத்தில் தமிழகத்தில் நடைபெற்ற முத்துக்குளிப்பு பற்றிய ஆய்வேடு, நுட்பமான தகவல்கள். சரித்திர சான்றுகளுடன் எழுதப்பட்டுள்ளது, நியு செஞ்சரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது
நியு செஞ்சரி பதிப்பகம் விலை ரூ. 75
••