புத்தக பரிந்துரை


கடந்த நான்கு நாட்களாக புத்தக கண்காட்சிக்கு சென்று வருகிறேன். புத்தகம் வாங்குவதில் இளைஞர்கள் காட்டும் ஆர்வம் மிக சந்தோஷமாக இருக்கிறது.  வலைபக்கங்களில் எழுதும் நண்பர்கள் பலரையும் சந்தித்தது கூடுதல் மகிழ்ச்சி தருவதாக இருந்தது


என் பார்வையில் பட்ட சில மொழிபெயர்ப்பு புத்தகங்களை உங்களுக்கு  சிபாரிசு செய்கிறேன்.  இவை முதன்முறையாக தமிழில் வெளியாகி உள்ளன.  இலக்கியம் சார்ந்த அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் இந்த நூல்களை வாங்க வேண்டும் என்பதே எனது விருப்பம்



எண்ணும் மனிதன்  – மல்பா தஹான் அகல்  வெளியீடு. விலை. ரூ.120. 



போர்த்துகீசிய மொழியில் வெளியான இந்நூல் கணித புதிர்கள் வழியாக ஒரு கதையை விவரிக்கிறது. ஆயிரத்தோறு அற்புத இரவுகளின் கதை சொல்லல் போன்றது. இதனை தமிழாக்கம் செய்திருப்பவர் கயல்விழி.


என் பெயர் சிவப்பு ஒரான் பாமுக் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரின் நாவல். காலச்சுவடு பதிப்பகம். விலை. ரூ.350.



கடந்த பத்தாண்டுகளில் வெளியான உலக நாவல்களில் மிக முக்கியமானது. நோபல் பரிசு மற்றும் டப்ளின் விருது பெற்றது. சிறப்பாக இதை தமிழாக்கம் செய்திருப்பவர் ஜி. குப்புசாமி.


இறுதி சுவாசம். சுயசரிதை – லூயி புனுவல் வம்சி வெளியீடு.



உலகப்புகழ்பெற்ற திரைப்பட இயக்குனரான லூயி புனுவலின் வாழ்க்கை மற்றும் திரைப்பட அனுபவங்கள் பற்றியது. தமிழாக்கம் செய்திருப்பவர் சா.தேவதாஸ்



மனநல மருத்துவர். மச்சடோ டி ஆசீஸ். வெளியீடு. சந்தியா பதிப்பகம். விலை.ரூ.70



பிரேசிலின் முக்கிய படைப்பாளி மச்சடோ டி ஆசீஸ். அவரது குறுநாவல் இது. தமிழாக்கம் செய்திருப்பவர் ராஜகோபால்.


சூன்ய புள்ளியில் பெண்  – நவ்வல் எல் ஸதவி.  எகிப்திய நூல். தமிழாக்கம் – லதா ராமகிருஷ்ணன். உன்னதம் வெளியீடு. விலை. ரூ.90.



சிறையில் அடைக்கப்பட்ட பெண்ணின் நெருக்கடிகளை விவரிக்கும் தீவிரமான எழுத்து.



யானைக்கூட்டம் ஜே. ஹெச். வில்லியம்ஸ். மொழிபெயர்ப்பு – சண்முக சுந்தரம். அகல் வெளியீடு. விலை. ரூ.80.



பர்மீய காடுகளில் யானையுடன் தான் பழகிவாழ்ந்த நாட்களை. யானைகளின் இயல்புலகம் பற்றிய அழகான சித்திரத்தை எழுத்தாக்கியிருக்கிறார் கர்னல் வில்லியம்ஸ்.



இந்திய வரலாறு காந்திக்கு பிறகு ராமச்சந்திர குஹா. தமிழில்.  ஆர்.பி.சாரதி.  கிழக்கு பதிப்பகம். விலை. ரூ.250.



காந்திக்கு பிறகான இந்தியாவின் வரலாற்றை விவரிக்கும் புகழ்பெற்ற நூலின் முதற்பாகம். சிறப்பான தமிழாக்கத்துடன் வெளியாகி உள்ளது.



யுவான்சுவாங் தமிழில். சரவணன்.  சந்தியா பதிப்பகம்.



உலகப்புகழ்பெற்ற யுவான்சுவாங் பயணக்குறிப்புகள் தமிழில் வெளியாகி உள்ளது. பௌத்தகால இந்தியாவை பற்றிய சித்திரங்களை இதில் இருந்து துல்லியமாக அறிந்து கொள்ள முடிகிறது.

0Shares
0