ஜப்பானில் மட்டும் ஏன் காமிக்ஸ் அதிகம் படிக்கிறார்கள் என்ற கேள்விக்கு ஜப்பானியர்கள் சொல்லும் பதில், ஜப்பானில் மட்டும் தான் ஒசாமு டெசூகா (Osamu Tezuka) இருக்கிறார், இவரது சித்திரக்கதைகளை ஒரு முறை வாசித்தால் போதும் பிறகு வாழ்க்கை முழுதுவம் நீங்கள் மாங்கா வாசிப்பவராகி விடுவீர்கள் என்கிறார்கள், அது உண்மை தான்
ஒசாமு டெசூகாவை மாங்காவின் கடவுள் என்று சொல்கிறார்கள்.
மாங்கா என்பது ஜப்பானிய காமிக்ஸ், ஐந்து முதல் ஐம்பது வரை ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்றவகையில் காமிக்ஸ் புத்தகங்கள் ஜப்பானில் கிடைக்கின்றன, இதில் ஷேக்ஸ்பியர், டிக்கன்ஸ், டால்ஸ்டாய் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளும் கூட படக்கதைகளாக வெளியிடப்பட்டிருக்கினறன,
மாங்கா வாசிப்பது சினிமா பார்ப்பதற்கு நிகரான ஒன்று, மாங்கா காமிக்ஸின் இரண்டு முக்கிய அம்சங்கள் ஒன்று dramatic மற்றது action-filled, ஆகவே விறுவிறுப்பான கதை சொல்லல் காரணமாக கையில் எடுத்த புத்தகத்தை கிழே வைக்கவே முடியாது, குறிப்பாக க்ளோஸ்அப் காட்சிகளாக வரையப்படும் படங்கள் கதையின் உணர்ச்சிநிலையைத் துல்லியமாக வெளிப்படுத்துகின்றன
மாங்காவில் economic manga, erotic manga, violent manga, sports manga, romance manga, literary manga, historical manga, joke manga. Information manga, என பலவிதங்கள் உள்ளன, இதில் சாமுராய் கதைகள் துவங்கி அறிவியல் அறிஞர்கள், தத்துவ ஆளுமைகள், உலகப்புகழ்பெற்ற கலைஞர்கள் என பலரது வாழ்க்கையும் மாங்காவாக வெளியிடப்பட்டிருக்கினறன, இது போலவே மிதமிஞ்சிய பாலியல் அம்சங்களை கொண்ட XXX மாங்கா காமிக்ஸ்களும் வயது வந்தோருக்காக வெளியிடப்படுகின்றன
ஜப்பானிய சித்திரக்கதை மரபில் முன்னோடி ஒவியர் டெசூகா. இவர் ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் ஒவியங்களை வரைந்து 700 மாங்கா காமிக்ஸ் புத்தகங்களாக உருவாக்கியிருக்கிறார், இது மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக இரண்டு லட்சம் ஒவியங்கள் வரைந்து 500 எபிசோட் அனிமேஷன் படங்களை உருவாக்கியிருக்கிறார்,
புத்தரின் வாழ்க்கையை ஒசாமு டெசூகா எட்டு தொகுதிகளாக மாங்கா காமிக்ஸ் வடிவில் வெளியிட்டிருக்கிறார், அதில் முதல்பகுதி தற்போது திரைப்படமாக்கபட்டிருக்கிறது
அவரது புத்தர் பற்றிய படக்கதையில் வரும் சித்திரங்களும் கதை சொல்லும் முறையும் அலாதியானது, டெசூகா தேர்ந்த அனிமேஷன் கலைஞர், ஆஸ்ட்ரோ பாய் இவரது உருவாக்கமே
மருத்துவரான இவர் ஒவியம் வரைவதையே வாழ்க்கையை கொண்டிருந்தார், தீவிர சினிமா ரசிகரான ஒசாமு மாறுபட்ட காட்சிக் கோணங்களை வரையக்கூடியவர், பாலின்ப காட்சிகளை ஒளிவுமறைவின்றி வரைகிறார் என்ற குற்றசாட்டு இருந்த போதும் அந்த ஒவியங்கள் காமத்தின் பற்றி எரியும் உயிர்ப்பான கோடுகளாக இருக்கின்றன,
சிறுவயது முதலே ஒவியத்தில் ஆர்வமான இவர் யுத்தகாலத்தில் கையில் கிடைக்கிற டாய்லெட் பேப்பர்களில் கூட ஒவியம் வரைந்திருக்கிறார்,
புத்தரின் வாழ்க்கையை சுவாரஸ்யமான புனைவோடு இணைந்து டெசூகா உருவாக்கியிருக்கிறார், 1972ல் Phoenix இதழில் தொடராக வெளியாகிய இந்த படக்கதை 11 வருஷங்கள் நீண்டு சென்று 1983ல் நிறைவு பெற்றது, அதன்பிறகு இவை எட்டு தனித்தொகுதியாக வெளிவந்து மிகுந்த முக்கியத்துவம் பெற்றது,
முதல்பகுதி கபிலவஸ்து, இதில் புத்த வாழ்வோடு இணைந்த ஐதீகங்கள், நிகழ்வுகள் விவரிக்கபடுகின்றன, புத்தரின் பிறப்பிற்கு முந்திய நிகழ்வுகள் விரிவாக இடம்பெற்றுள்ளன, கோடுகளின் வலிமை தான் இப்படக்கதையின் சிறப்பு
பனியில் விழுந்துகிடக்கும் ஒரு துறவிக்கு உதவி செய்ய ஒரு முயல் ஒரு நரி ஒரு கரடி ஆகியவை முயலுகின்றன, மரக்கட்டைகளை சேகரித்துவந்து நெருப்பு மூட்டி குளிரைப் போக்க உதவுகின்றன, ஆனால் அந்த துறவியின் பசிக்கு உணவில்லை, அதற்காக முயல் நெருப்பில் விழுந்து தன்னைத் தானே பலியிட்டுக் கொள்கிறது, தனக்காக உயிர்தியாகம் செய்த முயலின் உடலை வானை நோக்கி உயர்த்திகாட்டுகிறான் துறவி, முயலின் ஆன்மா வானில் ஒரு ஜோதியாக கரைகிறது, இப்படி தான் துவங்குகிறது ஒசாமுவின் புத்தர் படக்கதை
இரண்டாவது பகுதி The Four Encounters , மூன்றாவது பகுதி Devadatta, நான்காவது பகுதி The Forest of Uruvela ,ஐந்தாவது பகுதி Deer Park ,ஆறாவது பகுதி Ananda ,ஏழாவது பகுதி Prince Ajatasattu ,எட்டாவது பகுதி Jetavana.
முழுநீள வடிவில் புத்தரின் வாழ்வை சினிமாவாக பார்ப்பது போன்ற உயர்ந்த அனுபவத்தை தருகிறது இப்படக்கதை
டெசூகா வண்டுகளை வரைவதில் அதிக ஆர்வம் கொண்டவர், அவரது அனிமேஷன் நிறுவனத்தின் பெயரான Mushi Productions கூட ஒரு வண்டின் பெயரில் இருந்து உருவாக்கப்பட்டதே, புத்தர் படக்கதை வரிசையில் அவர் பௌத்த மரபுகதைகளை முதன்மைபடுத்துகிறார், வனத்தை வரைகளில் அவரது கோடுகளின் வீச்சு அற்புதமாக உள்ளது, கதை சொல்லும் முறையில் பௌத்த ஜாதக கதைகளின் சாயல் அதிகமாக உள்ளது
வழக்கமான காமிக்ஸ் படச்சட்டகத்தை முற்றிலும் உருமாற்றி மாறுபட்ட சித்திரத் துண்டுகளைக் கொண்டு கதை சொல்பவர் டெசூகா, சண்டையை அவர் வரையும் விதத்தில் நாம் காட்சிகளின் தாவல்களை, விசையோடு மோதிக்கொள்ளும் ஆவேசத்தை, சித்திரங்களாக காண முடிகிறது,
அதிசாகசங்களும்,மிகை கற்பனையில் உருவான மிருகங்களும், மாற்றுலோகங்களும் ஒன்று கலந்த இந்தக் கதையாடல் புத்தரை பற்றி நமக்குள் இருந்த வழக்கமான படிமத்தை முற்றிலும் உருமாற்றி விடுகிறது
இக் காமிக்ஸ் தொடரில் இடம்பெற்றுள்ள மரத்தின் அடியில் அமர்ந்த புத்தரின் சித்திரம் ஒப்பற்ற ஒன்று, மரத்தின் பிரம்மாண்டமும் நிழல் உருவம் போல புத்தர் அமர்ந்துள்ள விதமும் ஏதேதோ மனமயக்கத்தை உண்டுபண்ணியபடியே உள்ளது
புத்தரை விரும்புகின்றவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய படக்கதையிது
•••