புத்தரின் சொற்கள்.

தீக நிகாயம் என்ற பௌத்த மறைநூலை மு.கு.ஜகந்நாத ராஜா மொழியாக்கம் செய்திருக்கிறார். திரிபிடகங்களில் ஒன்றான சுத்தபீடகத்திலுள்ள தீக நிகாயம் புத்தரின் போதனைகளை விரிவாக உணர்த்துகிறது.

இராஜபாளையத்தில் வசித்து வந்த மு.கு.ஜகந்நாத ராஜா அவர்களை நேரில் சந்தித்துப் பழகியிருக்கிறேன். அவரது நூலகத்திற்குச் சென்று பௌத்தம் தொடர்பான நூல்களை வாசித்திருக்கிறேன். மணிமேகலை மன்றம் அமைப்பை நடத்தி வந்த மு.கு.ஜகந்நாத ராஜா சமஸ்கிருதம், பிராகிருதம். பாலி மொழிகளைக் கற்றவர். மணிமேகலையை ஆழ்ந்து படிப்பதற்காகவே தான் பாலி மொழியினைக் கற்றுக் கொண்டதாகக் கூறினார்.

ஆந்திர நாட்டு அகநானூறு எனப்படும் கதாசப்தகதியிலிருந்து தேர்வு செய்த பாடல்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். அமுக்தமால்யதா என்ற தெலுங்கு கவிதைகளின் நூலினையும் இவர் மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார். பௌத்தம் தொடர்பாக அவரது நூலகத்திலிருந்த அளவிற்கு அரிய நூல்களை நான் வேறு எங்கும் கண்டதில்லை. தேடித்தேடி படித்து ஆய்வுகள் செய்தவர். இவரைச் சந்திப்பதற்காகவே ராஜபாளையம் செல்வேன். அவரிடம் பேசிக் கொண்டிருந்தால் அருவியாகக் கொட்டுவார். ஆழ்ந்த படிப்பாளி.

பழகுவதற்கு மிகவும் எளிமையானவர். மிக அரிய நூல்களைச் சேகரித்து வைத்திருந்தவர். அவரது மறைவிற்குப் பின்பு மு.கு.ஜகந்நாத ராஜா இலக்கிய, தத்துவ ஆய்வு மற்றும் மொழிபெயர்ப்பு நிறுவன அறக்கட்டளை’என்ற பெயரில் தற்போதும் இந்த நூலகம் ராஜபாளையத்தில் இயங்கிவருகிறது.

பிடகம் என்றால் கூடை என்று பொருள். ஞானத்தை ஒரு தலைமுறையினரிடமிருந்து இன்னொரு தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கும் நூல்கள் என்பதால் இதனைப் பிடகம் என்று குறிப்பிடுகிறார்கள்.

தென்மொழிகளில் தமிழில் தான் புத்த நூல்கள் அதிகமுள்ளன என்றொரு குறிப்பை ஜகந்நாதராஜா முகவுரையில் குறிப்பிடுகிறார்.

புத்தரைச் சந்திக்கும் மகத மன்னன் அஜாதசத்ரு துறவியாவதால் ``இந்த உலகியல் வாழ்க்கையில் என்ன நன்மை கிடைக்கிறது என்ன பலன் கிடைக்கிறது“ என்ற கேள்வியைக் கேட்கிறான். அதற்குப் புத்தர் “இந்தக் கேள்வியை இதற்கு முன்னர் நீ ஏதாவது ஒரு துறவியிடம் கேட்டிருக்கிறாயா“ என்று வினவுகிறார்.

“நான் பலரிடம் கேட்டிருக்கிறேன். அவர்கள் சொன்ன பதில் ஏற்புடையதாக இல்லை. மா மரத்தைப் பற்றிக் கேட்டால் பலா மரத்தைப் பற்றிச் சொல்வதைப் போலிருக்கிறது. நீங்கள் என் சந்தேகத்தை விளக்க முடியுமா“ என்று கேட்கிறான் அஜாதசத்ரு.

இதற்குப் புத்தர் “நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். முதலில் அதற்குப் பதில் சொல். உன்னிடத்தில் வேலைக்காரனாக உள்ள ஒருவன் உனக்கு முன்னால் எழுந்து உனக்குத் தேவையான எல்லாப் பணிவிடைகளும் செய்து நீ உறங்கிய பிறகு உறங்குகிறான். அவன் ஒரு நாள் நீயும் மனிதன் நானும் மனிதன். நீ அரசனாக இருக்கிறாய். நான் ஏன் வேலைக்காரனாகக் கஷ்டப்படுகிறேன் என நினைத்து தன் வேலையைத் துறந்து வனத்திற்குச் சென்று துறவியாகிவிடுகிறான். அவன் நீ திரும்பச் சந்திக்க வேண்டியது வந்தால் துறவி என மதிப்பாயா அல்லது உன் பழைய வேலைக்காரன் தான் என்று நினைப்பாயா“ என்று கேட்கிறார்.

இதைக் கேட்ட அஜாதசத்ரு“ நிச்சயம் அவனைக் கௌரவமாக நடத்துவேன். எழுந்து மரியாதை செய்து சம ஆசனத்தில் அமரச்செய்வேன். அவனைப் பாதுகாக்கவும் ஏற்பாடு செய்வேன்“ என்றான்

இதைக் கேட்ட புத்தர் சொன்னார்

“துறவியாதலினால் இவ்வுலகில் கிடைக்கும் முதல் பயன் இதுவாகும். துறவியானவன் எல்லா நியமங்களையும் கடைப்பிடித்து ஒழுக்கமுடையவனாக, நீக்கவேண்டியவற்றை நீக்கி உடலாலும் உள்ளத்தாலும் தூயவனாக வாழுகிறான். அவன் உயிர்க்கொலை புரிவதில்லை. ஆயுதம் எடுப்பதில்லை. இரக்கமுள்ளவனாக இருக்கிறான். பொய், களவு சூது தவிர்த்து சத்திய சந்தனாக வாழுகிறான். வன்சொல் பேசுவது கிடையாது. வீண் பேச்சுகளைத் தவிர்த்துவிடுகிறான்.

ஒரு வேளை மட்டுமே உண்ணுகிறான். பறவைக்குப் பறக்கும் போது இறக்கைகள் தேவைப்படுவது போலத் துறவு வாழ்க்கைக்கு அடிப்படையாக உள்ள துறவாடை, திருவோடு கொண்டவனாக இருக்கிறான். ஆசைகள் அற்ற மனதைக் கொண்ட அவன் ஊற்றிலிருந்து நீர் வற்றாமல் சுரப்பது போலத் தியானத்தின் வழியே அன்பினைச் சுரக்கச் செய்கிறான். புலன்களை ஒடுக்கி எது துக்கம் என்ற மெய்ப்பொருளை அறிகிறான். துக்க ஆதார நிலையை அறிகிறான்.துக்கம் வராமல் தடுப்பதைப் பற்றி யோசிக்கிறான். அவனிடம் ஞானம் பிறக்கிறது. இவை துறவியாதலின் தெளிவான பயன்கள்“ என்கிறார் புத்தர்.

ஞானமொழியைக் கேட்ட அஜாதசத்ரு தன் தந்தையைத் தான் கொன்றது பாவம் என்பதை உணருகிறான்.

புத்தர் பல்வேறு ஊர்களில் ஆற்றிய உரைகளையும் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளையும் சந்தேகங்களையும் விளக்குகிறது இந்நூல். புத்தர் தன் காலத்தில் எவ்வாறு பழிக்கப்பட்டார். கேலி பேசப்பட்டார். அவரையும் அவரது புத்த சங்கத்தையும் எப்படி நடத்தினார்கள் என்பதை விரிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் புத்தரை இழிவுபடுத்தும் கடுஞ்சொல்லை எப்படி எதிர்கொள்வது என்று அவரது சீடர்கள் கேட்கிறார்கள். புத்தர் அவற்றைக் கண்டுகொள்ள வேண்டாம். அவர்களுக்கு எதிராகக் கோபம் கொண்டு நம் மனதையும் உடலையும் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்கிறார். புத்தரின் போதனைகளில் எளிய உதாரணங்களை அவர் மேற்கோளாகக் காட்டுகிறார்.

தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதிலைத் தருவதை விடவும் கூடுதலாகக் கேள்விகளைக் கேட்டு அவர்களின் மூலமே பதிலைக் கண்டடையச் செய்கிறார்.

புத்தர் புளியமரங்களுக்கு நடுவிலும், மாமரங்களுக்கு நடுவிலும் தங்கியிருந்திருக்கிறார். அயராமல் நடந்து அலைந்திருக்கிறார் என்பதை இதிலுள்ள குறிப்புகள் தெளிவாகக் காட்டுகின்றன.

தீக நிகாயத்தில் சேதோ விமுக்தி, பிரக்ஞா விமுக்தி என இருவகையான முக்திநிலைகளை  புத்தர் விவரித்துச் சொல்கிறார்

 ஐநூறு சீடர்களுடன் அவர் பயணம் செய்யும் காட்சியினை மிக அழகாக விவரித்திருக்கிறார்கள். புத்தரின் இறப்பும் அதையொட்டி நடந்த இறுதி நிகழ்வுகளும் மகா பரிநிர்வாண சூத்திரம் என்ற பகுதியில் மிகச் சிறப்பாக விவரிக்கபட்டிருக்கிறது.

பன்மொழிப்புலவர் மு.கு.ஜகந்நாத ராஜாவின் மொழிபெயர்ப்பு படிப்பதற்கு அத்தனை சரளமாகவும் தெளிவாகவுமிருக்கிறது. அரிய நூல்களை மொழிபெயர்ப்பதிலும் ஆய்வு செய்வதிலும் அவர் காட்டிய அக்கறையும் ஈடுபாடும் என்றும் போற்றப்பட வேண்டியதாகும்

••

0Shares
0